ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ராஜபாண்டியன்


ரவி சீனிவாஸ் எழுதிய குறிப்பை வைத்து ஒரு சிறு கருத்து . அது பேராசிரியர்களை சொல்லியிருந்தமையால் இதை எழுதுகிறேன். மற்றபடி இது அர்த்தமற்ற சண்டை . அவரை ஒத்துக் கொள்வதில் பேராசிரியர்களுக்கு சங்கடம் இருப்பதற்குக் காரணம் அவரது அறிதல்முறை தர்க்க முறை ஆகியவை இரண்டுமே காலாவதியகிவிட்டன என்பதுதான். பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இங்கே இருந்த , ரவி சீனிவாஸ் பழகிய அணுகுமுறையை ‘ தகவல் சர்ந்த ஆயவணுகுமுறை ‘ [டாட்டா ஓரியண்டட் ரிசர்ச் ] என்று சொல்லலாம். தகவல்கைளை முழுமையாக சேர்ப்பதே அன்றெல்லாம் ஆய்வின் முக்கிய வேலையாக இருந்தது. அதுவே ஆய்வேட்டின் முக்கிய தகுதியாகவும் பார்க்கப்பட்டது. இப்போது அப்படி அல்ல , ‘ கோட்பாடு சார்ந்த ஆய்வணுகுமுறை ‘ [தியரி ஓரொயண்டட் ரிசர்ச் ] இன்று உள்ளது . கோட்பாடு அசலாக சுயமாக செய்யப்பட்டுள்ளதா என்பதே முக்கிய வினா. தகவல் சரிபார்க்கப்படலாம்.

ஆகவே விவாதங்களும் மாறிவிட்டன. ஒரு கருத்துமீது தகவல்ப் பிழைகளை சொல்லுதல் இன்று ஒரு விவாதமாகவே கருதப்படுவது இல்லை. ஓரிரு தகவல்பிழைகளின் அடிப்படையில் ஒரு கோட்பாட்டை மறுப்பதற்கும் மதிப்பு இல்லை . தகவல் சார்ந்த மாற்றுக்கருத்துக்கு சில அடிப்படைகள் உண்டு. முதலில் அத்தகவல் முதற்கட்ட தகவலா இரண்டாம்கட்ட தகவலா என்ற கேள்வி முக்கியமானது. அதாவது மானுடவியலில் அல்லது குறியியலில் ஒரு தகவல் ஆசிரியரால் நேரடியாக கள ஆய்வு மூலம் பெறப்பட்டிருந்தால் அது முதல்கட்ட தகவல். நூலில் இருந்து எடுத்தாளப்பட்டிருந்தால் இரண்டாம்கட்ட தகவல். முதல்கட்டதகவலின் முக்கியத்துவம் இரண்டாம்கட்ட தகவலுக்கு இல்லை. அவற்றை மறுப்பதன் கோட்பாட்டு மதிப்பும் அப்படித்தான் . இரண்டாவதாக அத்தகவல் அடிப்படைத் தகவலா மேற்தளத் தகவலா என்ற வினா வருகிறது. ஒரு கோட்பாடு எதன் அடிப்படையில் நிறுவப் பட்டுள்ளதோ அதுவே அடிப்படைத் தகவல். அதன் விவாதத்தின் விளைவுகளை ஒட்டி வரும் தகவல் மேற்தளத் தகவல்.

ஆகவே தகவல்களை எப்படி மறுப்பது ? அதற்கும் வழிகள் உள்ளன. முதல் கட்டத் தகவலை இன்னொரு முதல்கட்ட தகவலாலேதான் மறுக்க முடியும். நெல்லை மாவட்ட நாடார்கள் குடுமி வைத்திருந்தனர் என்று ஒரு கள ஆய்வு சொன்னால் அதை கால்டுவெல் நூலை கட்டி மறுக்க முடியாது. இன்னொரு கள ஆய்வே மறுக்க முடியும். அதேபோல அக்கருத்து ஆசிரியனின் அசலான வாசிப்பு சார்ந்த அவதானிப்பு என்றால் மறுப்பவன் தன் வாசிப்பு அவதானிப்பை வைத்து அதை மறுக்கவேண்டும். இரண்டாம்கட்ட தகவலை மறுக்கவும் ஒரு நியதி உள்ளது. அத்தகவல் அந்தக் கோட்பாட்டு சட்டகத்துக்குள் பயன்படுத்தப்பட்ட தளத்தில் ஏன் எப்படி தவறானது என்றே சொல்லவேண்டும். அந்த விவாத தளத்துக்கு வெளியே இருந்து தகவல்களை மறுக்க கூடாது.

அடிப்படைத்தகவல்களை மறுக்கும்போது முழுமையான ஆதாரம் காட்டவேண்டும். அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. எல்லா அடிப்படைத்தகவல்களும் குறிப்பிட்ட கருத்தியல் அடிப்படை கொண்டவையே. அறிவியல் அல்லாத துறைகளில் கருத்தியல் பின்புலம் இல்லாத ‘ தூய ‘ தகவல் என்பது இல்லை.[ சமூகவியல் ஆட்களைகேட்டால் அறிவியல் கருத்தும்கூட கருத்தியல் அடிப்படை கொண்டதே என்பார்கள் ] ஆகவே அடிப்படைத் தகவல் மறுக்கப்படும்போது அது எந்தக் கருத்துநிலையில் நின்று மறுக்கப்படுகிறது என்று பார்ப்பது மிக முக்கியமானது. பிற தகவல்கள் எளிய திருத்தங்கள் மட்டுமே.

இன்று சமூகவியல், மானுடவியல் , மொழியியல் தளங்களிலே பல்லாயிரம் பக்கங்கள் வருடம் தோறும் அச்சாகிவருகின்றன. ஒரு நல்ல நூலகத்தில் ‘தாய்வழிச்சமூக கோட்பாடு குறித்து மட்டுமெ 1000 நூல்கள் இருக்க வாய்ப்புண்டு. இணையதளங்கள் வேறு. அவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து அனைத்தையும் சொல்லி குறிப்பிட்டு ஒரு கட்டுரையை இன்று எழுதமுடியாது. சொல்லபட்ட தகவல்களைவிட சொல்லப்படாத தகவலே அதிகம் இருக்கும். குறைந்தது எல்லா கோட்பாடுகளையும் சொல்லி மறுத்துகூட முன்னகர முடியாது. தகவல், பிற கோட்பாடுகள் ஆகிய இரண்டுமே ஆசிரியன் தன் கோட்பாட்டை உருவாக்க பயன்படுத்திக் கொள்ளும் விசயங்கள்தான். எழுதப்பட்ட கட்டுரையில் இல்லாத ஒரு தகவலை அந்நூல்களில் இருந்து எடுத்துக் கொண்டு அதை அறியாத அந்த கட்டுரையாளர் முட்டாள் என்று விவாதிப்பதற்கும் இன்று இடமில்லை. அதைத்தான் ரவி சீனிவாஸ் செய்கிறார் . அவரை கல்வியாளர்கள் வேடிக்கையாகவே எண்ணுவார்கள் .

ஆகவே தகவலை மறுப்பது இன்று ஒரு விவாதமே அல்ல. மாற்று தகவல்கள் மூலம் அந்த கோட்பாட்டுக்கு மாற்றுக் கோட்பாட்டை உருவாக்கி அளிக்கவேண்டும். அப்படி அளிக்கும்போது மட்டுமே அது உண்மையான மறுப்பாகும். சமூக அறிவியலிலே எந்த மறுப்பும் நிராகரிப்பு / தவ்றாக நிரூபித்தல் ஆக கருதப்படாது. அது மறு தரப்பு. எல்லா கோட்பாட்டுக்கும் ஏராளமான மாற்றுதரப்புகள் உண்டு. அந்த மாற்றுதரப்புகளின் நெசவு [டெக்ஸ்ச்சர்] மூலமே ஒரு காலகட்டத்தில் ஒரு விசயத்தைப் பற்றிய பொதுவான புரிதல் உருவாகிறது.

ரவி சீனிவாஸ் இம்மாதிரி எளிய அடிப்படைகளைக்கூட தெரிந்திருப்பதகா தெரியவில்லை . நான் ஏற்கனவே சொன்னதுபோல ஒருவகை ‘பாதிக்கப்பட்ட தன்னகங்காரம் ‘ மூலமே அவர் செயல்படுகிறார். ‘எல்லாரும் முட்டாள்கள் ‘ என்ற அவரது குக்குரலில் அதுவே தெரிகிறது. எந்த ஒரு கோட்பாட்டுக்கும் சுயமாக ஒரு மாற்றுக் கோட்பாட்டை அவரால் இதுவரை இந்த இணையதளத்தில் சொல்லமுடியவில்லை . ஆதைப்போல எந்த முதல்கட்ட தகவலையும் அவரால் சொல்ல முடியவலில்லை .அவர் சொல்வதெல்லாம் நூலாசிரியர் சொல்லாத, கவனிக்காத ஒரு தகவலை எங்கிருந்தாவது தேடி எடுத்து சொல்வதுதான். அப்படி பல ஆயிரம் தகவல்களை எதைப்பற்றியும் சொல்ல முடியும். அவை ஏதும் கூறப்படும் கோட்பாட்டை / நிலைபாட்டை மறுக்காது என்ற எளிய தெளிவு அவரிடம் இல்லை . காலச்சுவடு சம்பந்தமான சர்ச்சையிலே அதைக் காணலாம்.

இரண்டாவதாக அவர் உண்மையிலேயே தர்க்கம் மூலம் விஷயங்கள் ‘நிரூபிக்க ‘ப்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறார். அப்படி நம்பப்பட்ட காலம் வெகுவாக மாறிவிட்டது. அறிவியலிலே எப்படியோ தெரியாது பிறதுறைகளிலே தர்க்கம் ஒரு விஷயத்தை வகுக்கவும், முன்வைக்கவும் , விவாதிக்கவும் மட்டுமே உதவும். ஆகவே எல்லா கருத்துக்கும் மாற்றுக்கருத்து இருக்கும். எந்த ஒரு கருத்தும் இல்லாமலும் ஆகாது. அது ‘சொல்லாடலின் ‘[டிஸ்கோர்ஸ்] ஒரு பகுதி அவ்வளவுதான் . நீங்கள் எதைச்சொன்னாலும் அச்சொல்லாடலின் ஒரு கண்ணியை கூட்டுகிறிர்கள் அவ்வளவுதான். ‘நீ சொன்னதற்கு என்னிடம் மாற்றுத்தரப்பு உள்ளது ‘ என்பது தான் இன்றைய மனநிலை . ‘நீ சொல்வது தப்பு நான் சொல்வது சரி ‘ என்ற நிலைபாடு அனலிடிகல் லிங்குஸ்டிக்ஸ் வந்தபோதே மாறி விட்டது.

அதேபோல ஒரு மறுப்பு அல்லது மாற்றுக் கருத்து என்பது ஒரு கருத்தியலின் பிரதிநிதியும்கூட. நேரு இந்தியாவை கண்டடைதல் என்று நூலை எழுதினார். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ஜின்னா போன்ற பலர் மறுத்துள்ளனர். ஆகவே நேரு மறுக்கப்பட்டுவிட்டார், அந்நூல் பொய்யாக ஆகிவிட்டதா என்ன ?

ரவி சீனிவாஸுக்கு தெரியுமோ என்னவோ எங்கல்ஸின் சமூகவியல் கோட்பாடுகள் மட்டுமல்ல மறுக்கப்பட்டது . அக்கோட்பாட்டின் அடிப்படையக உள்ள மார்க்ஸிய வரலாற்றுப்பார்வை மிக விரிவாக அமைப்பியலாளர்களால் மறுக்கப்பட்டு விட்டது. வரலாற்றுவாதமே[ ஹிஸ்டாரிசிசம் ] முழுக்க விரிவாக மறுக்கப்பட்டாகிவிட்டது. அதற்கடுத்த நவ வரலாற்றுவாதம் = அதாவது வரலாற்றை ஒரு சொல்லாடலாக கண்டு சொல்லாடலின் ஒழுங்கைமட்டுமே வரலாற்றின் ஒழுங்காக காணக் கூடிய நோக்கு = வந்துவிட்டது . ஏன் அதுவும் மறுக்கப்பட்டுவிடது. ஆகவே எங்கல்ஸே ஒரு வரலாற்று பெயர் மட்டும்தானா ? இல்லை . இன்றும் எங்கல்சின் நோக்கு வலுவாகவே மானுடவியலில் உள்ளது, உலகமெங்கும். மனித சமூக வரலாற்றை பரிணாம விதிகளைக் கொண்டு விளக்குவது அது. மொழிக்கட்டுமான விதிகளின்படி விளக்கும் அமைப்பியல் கோட்பாடும் பக்கத்திலேயே உள்ளது . பின் நவீனத்துவ காலகட்டத்திலும் ஃபினமினாலஜியும் சாராம்சவாதமும் இருந்தன. வரலாற்றுவாதம் இருந்தது. சொல்லபோனால் மார்க்சியம் வளர்ந்தது. எந்த சர்ச்சையும் நாம் நாம் இவை எதிலிருந்தும் தொடங்கலாம். நாம் என்ன சொல்கிறோம், நமது அசல் கோட்பாடு என்ன என்பதே முக்கியமானதாகும்.

அப்படியானால் எது தவறு ? எங்கல்ஸையோ அல்லது வேறு ஒருவரையோ ‘அத்தாரிட்டியாக ‘ கருதுவதுதான். அதைமட்டும் ஒட்டி முடிவுகளை அடைவதுதான். ஆனால் அதை அசலான கோட்பாட்டாளர் யாருமே செய்வது இல்லை . ஆனால் ஒருவகையில் ரவி சீனிவாஸ் செய்வதும் அதுதான். சுயசிந்தனை இல்லாத நிலையில் எது ஆகப் புதிதோ அதை ‘அதாரிட்டி ‘ யாக கொள்ளமுயற்சி செய்கிறார் . சரி எவருமே மறுக்காத ஒரு கோட்பாடு உண்டு என்று வைத்துக் கொள்வோ. 2003 டிசம்பர் 21 ஆம் தேதி வந்த ஒரு கோட்பாடு அப்படி இருக்கமுடியும். அது உண்மையா என்ன ? இல்லை அது ஒரு உண்மை. சொல்லாடலின் ஒரு கண்ணிதான் அது .

ரவி சீனிவாஸுக்கு ஒரு வேண்டுகோள். படியுங்கள். ஆனால் படித்ததை இணைத்து சிந்தித்து கோட்பாடுகளை முன்வையுங்கள். மறுக்கும்போதும் கோட்பாடுகளாக மறுக்கமுயலுங்கள். மறுப்பு என்பது ஒரு சொல்லாடலின் ஒரு தரப்பு மட்டுமே என்றும் நீங்கள் சொல்வதும் உடனடியாக மறுக்கப்படும் என்றும் உணருங்கள் . விவாதங்களில் செயல்படும் ஒருதரப்பாக உங்களை உருவகித்துக் கொள்ளுங்கள். விவாதங்களை ‘சரி செய்யும் ‘ மேதையாக உருவகித்துக் கொண்டு கேலிச்சித்திரமாக ஆகவேண்டாம். ஒரு காலகட்ட சிந்தனை என்பது அக்கால சொல்லாடல்களின் சமன்நிலை மூலம் உருவகிக்கப்படுவதுமட்டுமே. ஆகவே ‘அவன் சொல்வது மூடத்தனம். ‘ ‘ இது முற்றிலும் தப்பு — ஒண்ணும் ஒண்ணும் மூன்று என்பதுபோல ‘ என்ரெல்லாம் நம்பும் அபத்த நிலைபாட்டை கைவிடுங்கள். இவ்வளவு தகவல்களை தேடுபவர் அடிப்படை மனநிலைகளை, கோட்பாடுகளை, பார்வைகளை எப்படி சுத்தமாக தெரியாமலேயே இருக்கிறீர்கள் ?

அவ்வளவுதான் இதற்குமேல் என்ன சொல்ல

——————————————————————–

rajapandiansksmdu@rediffmail.com

Series Navigation

ராஜபாண்டியன்

ராஜபாண்டியன்