ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

திசைகள் அ.வெற்றிவேல்தமிழ் ஊடகங்கள்(?) மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் “சிவாஜி” வெளிவந்து வெற்றிகரமாக தமிழகம் மட்டுமின்றி,உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.இந்திய அளவில் அதிக விலைக்குப் போன முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையுடன் ஊடகங்களின் துணையுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் “சிவாஜி”,இதுவரை வந்த தகவலின் படி 50 விழுக்காடு மட்டுமே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தள்ளதாக பார்வையாளர்கள் கருத்து சொல்கிறார்கள்.neither a rajini nor a shankar movie என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது. தமிழக மக்கள் இந்தப் படத்தை இன்னுமொரு ரஜினி படம் அல்லது இன்னுமொரு ஷங்கர் படம் என்ற அளவில் தான் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்கள்.ஆனால் தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம் அல்லவா..இதே எதிர்பார்ப்புகளுடன் விட்டால் தான் எதிர் பார்த்த அளவுக்கு அதிகமான லாபத்தை அடைய முடியாது என்ற நோக்கத்தில்,ஷங்கர் படத்தை முடித்துக் கொடுத்த போதும் வேறு வேறு காரணங்கள் கூறி தள்ளிவைத்து ,ஊடகங்கள் உதவியுடன் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அந்தப் பின்னணியில் வியாபாரம் பார்த்துள்ளனர் ஏ.வி.எம். நிறுவனத்தினர்.

தமிழகத்தில் மட்டும் 115 கோடிக்கு விற்றதாக தினமலர் இணையதளம் கூறுகிறது.மதுரை,திருநெல்வேலி மாவட்டங்களுக்கு
மட்டும் 7.5 கோடிக்கு விநியோக உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒரு திரையரங்குக்கு 30-60 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.மொத்த தொகையும் கொடுத்தால் தான் படப்பெட்டி என்று ஜூன் 15 க்கு முன்னரே விநியோகஸ்தர்கள்
வசூலித்துக் கொண்டார்கள்.இப்பொழுது அதை வசூலிக்கும் பொறுப்பு என்ற கத்தி திரையரங்கு உரிமையாளர்கள் தலையில்..

இந்த 30-60 லட்சம் வசூலிக்க முடியுமா? என்று பைத்தியம் பிடித்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள்.தமிழ்த் திரைப்பட
வரலாற்றில் “சந்திரமுகி”க்கு ஒரு தனி இடம் உண்டு.அதனது வசூலை இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்ப்புகளை ஊடகத்தின்
உதவியுடன் திட்டமிட்டு வளர்த்தெடுத்து அதற்கேற்ப அறுவடை செய்துள்ளார்கள் ஏ.வி.எம்.அவர்கள்.கடந்த நான்கு ஐந்து நாட்களில் வந்துள்ள நிலவரப்படி வசூலில் சந்திரமுகிக்குப் பக்கத்தில் வந்தாலே அதுவே இப்படத்தின் சாதனையாக இருக்கும் என்கிறார்கள்
திரையரங்கு உரிமையாளர்கள்.

மாவட்டத் தலைநகரில் உள்ள திரையரங்குகளுக்கு 30 முதல் 45 வரை வியாபாரம் ஆகியுள்ளது.மதுரையில் ஒரு திரையரங்கு
60 லட்சம் கொடுத்து இப்படம் வாங்கியுள்ளது.மதுரையில் 5 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.சந்திரமுகிக்கு வந்த பெண் ரசிகைகளின் கூட்டம் இப்படத்திற்கு இருக்கப் போவதில்லை என்றும் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஒரு மாவட்டத் தலைநகரில் வெளியாகி 100 நாட்களில் சந்திரமுகிக்கு கிடைத்தது 25 லட்சம் தான். சந்திரமுகிக்கே அந்த நிலை என்றால்..சிவாஜி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்களை கூடிய சீக்கிரம் ஏர்வாடி,குணசீலங்களில் பார்க்கலாம்.

நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமையாகி,கடனுக்கு எல்லாவற்றையும் வாங்கிப் போட்டு,கடைசியில் தலையில் முக்காடு போட்டுக்
கொண்ட குடும்பத் தலைவன் நிலைதான் இன்று “சிவாஜி “எடுத்த திரையரங்கு உரிமையாளர்களின் நிலை.உள்ளூர் தொழில் போட்டி,
பொறாமை, மற்றும் சிவாஜி படம் வெளியிட்ட திரையரங்கு என்ற கிரீடத்திற்கு ஆசைப்பட்டு தலையைக் கொடுத்துள்ளார்கள் பல
திரையரங்கு உரிமையாளர்கள்.இதிலிருந்து தப்பிக்க திரையரங்குகள் செய்கிற முதல் வேலை பார்வையாளர்களின் கட்டணத்தை உயர்த்துவதுதான்.அது தான் தமிழகமெங்கும் இப்பொது நடக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் சிவாஜி வாங்கியுள்ளார்கள் என்ற செய்தி இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல்,அரசு நிர்வாகத்தை செயலிழக்கச் செயதுள்ளது.அரசும் கண்துடைப்பிற்காக ஒரு அறிக்கை வெளியிட்டு தனது கடமையில் இருந்து விலகிக் கொண்டுள்ளது.இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கப் போவதாச் சொன்ன விஜய.டி.ராஜேந்தர் மற்றும் பா.ம.க நிர்வாகிகள்என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.அரசு ஒரு சட்டம் போடுவதும் பின்னர் அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் அரசே அலட்சியம் செய்வதும்..இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

தினமலர் இணையதளத்தில் சிவாஜி பட செலவுப் பட்டியலில், ரஜினிக்கு 20 கோடியும்,லாபத்தில் 10 விழுக்காடு என்றும் ஷங்கருக்கு
5 கோடி,ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1 கோடி என்ற வகையில் 50 கோடியும் மற்ற செலவுகள் 5 முதல் 10 கோடியும் மொத்த செலவு 60 கோடி
என்றும் எழுதியுள்ளார்கள்.மற்ற 5 கோடி.ஊடகங்களூக்கு செலவு செய்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஊடகங்கள் எல்லாமே
இப்படத்தால் தமிழகத்தில் ஒரு பெரும் புரட்சி வரப்போவது போல் நினைத்துகொண்டு எழுதி பக்கத்தை நிரப்பிவைத்தார்கள்.நடிப்படதற்கு 20 கோடி என்றும் ,வசூலில் 10 விழுக்காடு என்றதும், கடந்த 10 வருடங்களில் தான் நடித்த படங்களிலே இது தான் “பெஸ்ட்” என்று ரஜினியின் பேட்டி வேறு குங்குமம் இதழில்.குங்குமம் ஏன் வெளியிட்டது என்றால், அன்றைய நிலவரப்படி சன் தொலைக்காட்சி இப்படத்தை வாங்க வேண்டியது.சன் தொலைக்காட்சிக்கு இப்படம் வரும் என்ற நிலை இருந்த வரையில் தொடர்ந்து வாரவாரம் சிவாஜி படம் பற்றிய செய்திதான்.அது கலைஞர் தொலைக்காட்சிக்கு கை மாறியவுடன் விஜய்,அசின்,சூர்யா என்று அடுத்த வியாபாரத்திற்குப் போய்விட்டார்கள்.

ஒரு படத்தின் வெற்றி அப்படம் வெளியான நாளில் எப்படி தெரிய வரும்? படம் நன்றாக இல்லை என்றால் ரஜினியே ஆனாலும்
“பாபா”வைப் போல் தோல்வியடைச் செய்துவிடுவார்கள் தமிழக மக்கள்.திரும்ப திரும்ப ரசிகர்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக
“சந்திரமுகி”க்கு வந்தது மாதிரி திரையரங்கு நோக்கி வந்தால், திரையரங்கு உரிமையாளர்களும் தான் செலவழித்ததைவிட லாபம்
பார்த்தால் தான் இப்படம் வெற்றி என்று சொல்லவேண்டும்.

அதுவரை இந்த வசூல் சாதனை ஏ.வி.எம் நிறுவனத்தின் வியாபார தந்திரங்களுக்கும் உத்திகளுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான்
எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்படம் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை 50 தினங்களுக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்களிடம் விசாரித்துப் பின்னர் எழுதுகிறேன்.

பின் குறிப்பு 1: இப்படம் கறுப்புப்பணம் பற்றியதாம். அரசியல்வாதிகளின் கறுப்புப்பணத்தை மட்டுமே கேள்விக்குள்ளாக்குகிறார்களா?
அல்லது ரஜினி,ஷங்கர்,ஏ.வி.எம் போன்ற திரையுலக பிரபலங்களின் கறுப்புபணத்தையும் வெளிக்கொணர வழி
சொல்லியுள்ளார்களா?

பின் குறிப்பு 2: கர்ணனாக,வீரபாண்டிய கட்டபொம்மனாக,வ.உ.சியாக, நெற்றிக்கண் காட்டும் சிவனாக,தமிழக பராம்பரியக் கலையின்
நாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக,பிரிஸ்டிஜ் பத்மனாபனாக,பாரிஸ்டர் ரஜினிகாந்தாக,முதல் மரியாதை பெரிசாக
திரையில் வாழ்ந்து காட்டிய அந்த மகாகலைஞனுக்கு, ஏதாவது ஒரு விஷயத்திலாவது இப்படம் மரியாதை
செலுத்தியுள்ளதா? அல்லது வெறும் கவர்ச்சிக்காக அவரது பெயர் பயன்படுத்த்ப் பட்டுள்ளதா என அறிய ஆவலுடன் உள்ளேன்.

இவண்
திசைகள் அ.வெற்றிவேல்


vetrivel@nsc-ksa.com

Series Navigation

திசைகள் அ.வெற்றிவேல்

திசைகள் அ.வெற்றிவேல்