யமுனா தீரத்து நந்தக்குமாரன்….

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

மீராவாணிகற்றடத்தில்
கனலியாய்
தகித்திருந்ததொருப்
பொழுதில்..
மாமுகில்ளைத் திரட்டி
மழையென பொழிந்திட
செய்திருந்தாய்!
முன்பொரு சமயம்
உன் நீலத்தைப் பிரித்து..
வானுக்கும் கடலுக்கும்
வண்ணம் தந்திருந்தாய்!
மானும் மீனுமாய்
மனம் உன்னுடனான
காதலில் துள்ளிட
புல்லாங்குழலை
நீ.. எனக்கெனவே வாசித்திருந்தாய்!
சூரியப்பிரகாசப் புன்னகைச்
சாயலில்…
காய் கனியானதும்
முல்லை மொட்டாவிழ்ந்ததும்
நிலவு தவழ்திருந்ததும்
குழல் இசைந்திருந்ததுமாய்
ஒருசேர…
என்னுயிரையும்
கொய்து நின்றிருந்தாய்!
சதங்கையணிந்த
உன் பாதச்சிரடிகள்
பதிந்த வனமெங்கும்
நவரத்தின மலர்களிடையே
நற்மணம் வீசிட
பணித்திருந்தாய்!
உன்னிரு பேசும் விழிகளுக்காக
இரவையும் தினம்
பொழுதையும் யான்
யாசிக்க..
மீராவின் கோபாலனாய்
வென்றிருந்தாய் என்னை…!

-மீராவாணி

4/28/2010

Series Navigation