மோந்தோ -5 (1)

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணாகோடை நெருங்கிக்கொண்டிருந்ததால் மலைகளில் தீவிபத்தென்பது அன்றாட நிகழ்வாகிவியிருந்தது. பகல் வேளைகளில் வானத்தைக் கறைபடுத்துவதற்கென்றே தூண்கள்போல வெண்ணிறத்தில் புகைமண்டலம் எழும், இரவுவேளைகளில் சிகரெட் கங்குவினைப்போல எங்களை அச்சுறுத்தும்வகையில் கனிந்தபடியிருக்கும் கனலைப்பார்க்கலாம். கடற்கரை பகுதிகளில் இருக்கும்போதுஞ் சரி, தீ-ச்சின் வீட்டிற்குப் போகவேண்டி படிகளில் மலைகளூடே ஏறிப்போகும்போதும் சரி, மோந்தோவின் கவனம் முழுக்க மலைகளில் தீவிபத்துநடக்கிற திசையில் தானிருக்கும். ஒரு நாள் அப்படித்தான் பிற்பகல்நேரம் வழக்கத்திற்கு மாறாக வேளையாய் தி-ச்சின் வீட்டிற் வந்திருக்கிறான். அவளுடைய வீட்டைச் சுற்றி மண்டிக்கிடக்கிற புற்களை அகற்றிக் கொண்டிருத்திருக்கிறான். தி-ச்சின் அவனிடம், என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று வினவியிருக்கிறாள், ‘தீயை இங்கு வரவிடாமற் தடுக்கவேண்டுமில்லையா? அதற்காக புற்களைஎடுக்கிறேன்’, என்றானாம்.

பொன்னொளி வீட்டின் அறிமுகத்திற்குப் பிறகு இரவுநேரங்களில் மோந்தோ உறங்குவதென்பது அந்த வீட்டிலோ அல்லது அந்த வீட்டுத் தோட்டத்திலோ என்றானது. அதற்குக் காரணமிருந்தது. தி-ச்சினுக்குச் சொந்தமான வீட்டில் பிள்ளைகளைப் பிடித்துச் செல்வதாகச் சொல்லப்படும் சாம்பல் நிற சியாப்பாகன் வாகனம் பற்றிய கவலையில்லை. கடற்கரை பகுதிகளில் அணைபக்கமிருந்த நகராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான மறைவிடங்களில் தேடிச்சென்று இரவைக் கழிப்பதும் அதன் பிறகு இல்லை. பொழுது புலர்ந்ததோ இல்லையோ பொன்னொளி வீட்டிலிருந்து புறப்பட்டு நேராக கடற்கரைக்கு வந்துவிடுவான், அவனுக்குக் காலையில் கடலில் இறங்கி நீந்தவேண்டும். தவிர காலை நேரத்து கடல் நீர் தெளிவும், நீரில் மூழ்குகிறபோதெல்லாம் கேட்கிற அலைகள் எழுப்பும் விநோதமான ஓசையும் அவனுக்குப் பிடித்திருந்தது. அங்கிருந்து சுமை தூக்கவும், கடைகாரர்கள் விட்டுப்போகிற பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை பொறுக்கிவரவுமென்று பின்னர் சந்தைப் பகுதிக்குப் புறப்பட்டுச் செல்வான். கிடைக்கின்ற பழங்களும் காய்கறிகளும் இரவு உணவுக்கென்று தி-ச்சென் வீட்டிற்கு வந்து சேரும்.

பிற்பகலில், ழித்தானிடம் சிறிதுநேரம் உரையாடிவிட்டு வரலாமென்று செல்வான். மோந்தோ தேடிச்செல்கிறபோதெல்லாம் அவன் தனது வாகனத்து படிகளில் அமர்ந்து கற்பனையில் மிதப்பான். இருவரும் அதிகம் பேசிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும், ழித்தானுக்கு மோந்தோவைக் காண்பதில் மகிழ்ச்சி. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறபோது கொஸாக் மதுபோத்தலுடன் அவ்விடம் வருவான். குடிபோதையிலிருக்கும் அவன், உரத்த குரலில்:- ‘ஏய் மோந்தோ, நண்பனே!’ என சத்தமிடுவான். பிறகு அவ்விடம் உருண்டை முகமும், நிர்மலமான கண்களுமாக குண்டுப் பெண்மணியொருத்தி எப்போதாவது வருவாள், வழியில் போகிறவர்களின் கைப்பிடித்து ஆருடம் சொல்கிறவள், மோந்தோவுக்கு அவளைக்கண்டால் ஆகாதென்பதால் அவள் வந்தவுடன் அங்கிருப்பதில்லை புறப்பட்டுவிடுவான்.

பிறகு கிழவர் ததியைத் தேடிக்கொண்டு போவான். அம்மனிதரைக் கண்டுபிடிப்பது அத்தனைச் சுலபமல்ல, ஏனெனில் கிழவர் அடிக்கடி தம் ஜாகையை மாற்றிக்கொள்கிறவர். மோந்தோ அவரைத் தேடிச் சென்றபோது, தினசரியொன்றை விரித்து அதன் மீது அமர்ந்திருந்தார், அவருடைய ஓட்டை மஞ்சள் பெட்டி அருகிலிருந்தது. அவ்வழியாகப் போனவர்கள், அவரை பிச்சை எடுத்து பிழைப்பவர் என நினைக்கக்கூடும். பொதுவாக மோந்தோ அவரை தேவாலயத்தில் எதிரிலே பார்ப்பது வழக்கம். மோந்தோ அவரருகில் அமர்ந்துகொள்வான். அவர் பேச்சு மோந்தோவுக்கு விருப்பமானது. அப்பேச்சில் தவிட்டுப்புறாக்கள், வெண்புறாக்கள் பற்றிய கதைகளிருக்கும். அப்பறவைகளின் நாடுகளைக் குறித்தும் சொல்வார். ஒரு முறை அவ்வாறான நாடொன்றின் மரங்கள், அமைதியான நதிகள், பசுமையான வயல்கள், அழகிய வானம் என்பது பற்றிப் பேசினார். வீடுகளுக்கு அருகாமையிலேயே நெடிய கோபுரங்கள் உண்டென்றும், சிவப்பும் பச்சையுமான ஓடுகளைக்கொண்டு அவற்றுக்குக் கூரை வேய்ந்திருப்பார்களென்றும், எல்லாவிதமான புறாக்களுக்கும் அங்குதான் இருப்பிடமென்றும் சொல்வார். அத்தனை கதையையும் முதியவர் ரொம்ப நிதானமாகத்தான் சொல்வார், அவர் பேச்சு வானத்தில் பறக்கின்ற பறவையானது நேராக பறந்து செல்ல தயங்கி, திரும்பத் திரும்பக் கிராமங்களைச் சுற்றிவருவதுபோல இருக்கும். மோந்தோ அன்றி வேறொருவரிடம் கிழவர் அக்கதைகளை சொல்வதில்லை.

மோந்தோ தேவாலயத்து வாசலில் முதியவருடன் அமர்ந்திருக்கிறபொழுது, அவ்வழியாக போகிறவர்களுக்கு கொஞ்சம் வியப்பாக இருக்கும், அவர்கள் நின்று கிழவரையும், பக்கத்திலமர்ந்திருக்கும் சிறுவனையும், வெண்புறாக்களையும் சிறிது நேரம் பார்ப்பார்கள், இரக்கப்பட்டு கைவசமிருக்கிற நாணயங்களைச் சிறிது கூடுதலாகவே கொடுப்பதுண்டு. ஆனால் அவரோடு இருந்துகொண்டு பிச்சைஎடுப்பதையெல்லாம் மோந்தோ விரும்புவதில்லை, உடனே புறப்படுவிடுவான். அதுவும் தவிர கேள்விகேட்பதற்கென்று ஒன்றிரண்டு பெண்மணிகள் சிலசமயம் வந்துவிடுவார்கள், அத்தகையப் பெண்களைக்கண்டால் மோந்தோவுக்கு ஆகாது, அதற்காகவும் அங்கிருந்து புறப்பட்டு விடுவான். பிறகு சியாப்பாகான் வாகனத்திடமும் எச்சரிக்கையாய் அவன் இருக்க வேண்டும். சாம்பல் வண்ண வாகனம் அவ்வழியாக வருமென்றால், கண்டிப்பாக சீருடையிலிருக்கும் நகரசபை ஊழியர்கள், வாகனத்திலிருந்து இறங்கிவந்து அவனை பிடித்துக்கொண்டுப் போகக்கூடும். அது போதாதென்று முதியவர் ததியையும் அவருடைய இரண்டு புறாக்களையுங்கூட அவனுடன் சேர்த்து கொண்டுபோகலாம்.

ஒரு நாள் நன்றாக காற்று வீசிக்கொண்டிருந்தது. ழித்தான் மோந்தோவிடம், – புறப்படு, காற்றாடி சண்டையைப் பார்த்துவரலாம், என்றான்.

குறிப்பாக நன்கு காற்று வீசுகிற ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மட்டுமே காற்றாடி சண்டைகளுக்கான பாக்கியம் கிட்டும். இருவரும் கடற்கரைக்கு உரிய நேரத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால் பையன்கள் இவர்களுக்கு முன்பே அவரவர் காற்றாடிகளுடன் வந்திருந்தார்கள். விதவிதமான பட்டங்கள்: சதுரம், நீள் சதுரம், கூம்பு ஒற்றை முகம், இரட்டை முகம் என்றிருந்தன. ஒருசிலவற்றில் விலங்குகளின் தலைகள் வரையப்பட்டு, பல்வேறு வண்ணங்களில் இருந்தன. மிகவும் அழகானதொரு காற்றாடி என்று சொன்னால் ஐம்பத்திரண்டு வயது மதிக்கத் தக்க மனிதனொருவரின் காற்றாடியை சொல்லவேண்டும், அவர் கடற்கரையின் மறுகோடியில் இருப்பார். அவரது காற்றாடி பெரிய இறக்கைகளைக்கொண்ட மஞ்சளும் கறுப்புநிறமுங்கொண்ட பட்டாம்பூச்சிபோல இருந்தது. பொருளுக்குச் சொந்தக்காரர், அதனைக் காற்றில் விட்டபொழுது, எல்லோருடைய கண்களும் அதன்மீதுதானிருந்தன. ஒருவர் கூட அசையவில்லை, பிரம்மித்து நின்றார்கள். கடலுக்குமேலே மஞ்சளும் கறுப்புமாகவிருந்த அக்காற்றாடி ஒரு சில மீட்டர்கள் உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் தாமதமின்றி அந்த மனிதர் பின்புறம் நடந்தவண்ணம் நூலை இழுப்பதும் விடுவதுமாக இருந்தார். பட்டாம் பூச்சி வடிவிலான அக்காற்றாடி தனது இறக்கைகொள்ள காற்றை வாங்கி மேலே ஏறத்தொடங்கியது. காற்றாடி இப்பொழுது கடலுக்கு மேலே வானத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருக்கிறது. வீசும் காற்றில் இறக்கைகளிரண்டும் படபடவென்று அடித்துக்கொண்டன. காற்றாடியைப் பிடித்திருந்த மனிதர் கரையில் அசைவின்றி இருந்தார். ராட்டையிலிருந்து நூலை சிறிது சிறிதாக விட்டுக்கொண்டிருந்தார், அவரது பார்வை முழுக்க கடலுக்கு மேலே ஆட்டம்போட்டுக்கொண்டிருக்கிற மஞ்சளும் கறுப்புமான காற்றாடியின் மீதிருந்தது. அவ்வப்போது நூலை இழுத்து ராட்டையில் சுற்ற பட்டம் இன்னும் உயரத்திற்குப்போனது. அங்குபறந்த எல்லா காற்றாடிகளையும் விட அம்மனிதரின் காற்றாடி அதிக உயரத்தில், கடலுக்கு மேலே, இறக்கைகள் இரண்டையும் பரத்திக்கொண்டு, அசைவின்றி நின்று, வேகமாக வீசும் காற்றுக்கு ஈடுகொடுத்து, பூமிக்கு வெகுதூரத்தில், நூலைப் பிடித்திருப்பதுகூட தெரியாமல் பறந்தது.

மோந்தோவும் ழித்தானும் நெருங்கிய மறுகணமே, பட்டத்தையும் நூல்கண்டையும் மோந்தோவிடம் கொடுத்துவிட்டு அம்மனிதர் ஒதுங்கிக்கொண்டார்.

– நன்றாகப் பிடி, விட்டுடப்போற, எச்சரித்தார். பிறகு ஒரு ஓரமாக அமர்ந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்தார்.

காற்றுடன் தாக்குபிடிப்பது மோந்தோவுக்குச் சிரமமாக இருந்தது.

ரொம்ப இழுக்கிறதென்றால், நூலைக் கொஞ்சம் விட்டுப்பிடிக்கணும், பிறகு வேண்டுமானால் நூலை சுற்றிக்கொள்ளலாம்.

மோந்தோ, ழித்தான், காற்றாடிக்குச் சொந்தக்காரனென மூவரும் மாற்றிமாற்றி, காற்றாடியின் நூலை, அங்கிருந்த மற்றகாற்றாடிவிடுபவர்கள் களைத்து நீரில் விழும்வரை, பிடித்தபடி இருந்தார்கள். எல்லோருடைய கவனமும் மஞ்சளும் கறுப்பமாக இருந்த பட்டாம் பூச்சி வடிவ காற்றாடியின் மீதே இருந்தது. அன்றைக்குப் பறந்த காற்றாடிகளுள் அதுதான் நன்றாக உயரத்தில் பறந்தது. அங்கு வந்திருந்த ஒருவருக்கும், அவ்வளவு உயரத்திற்கு பட்டத்தைக் கொண்டுபோகவும் தெரியவில்லை, அதிக அளவு நேரம் வானில் பறக்கவைக்கவும் போதவில்லை.

கடைசியில் மனிதர் மெதுமெதுவாக, மிகப்பெரிய அப்பெரிய பட்டாம்பூச்சியை கீழே இறக்கினார். பட்டம் காற்றில் மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக இருந்தது. பட்டத்தின் மீது காற்று மோதுகிறபோதெல்லாம் படபடவென்று சப்தம், நூலிலிருந்து சீழ்க்கையொலி. மிகவும் ஆபத்தான கட்டம், இழுவிசையால் நூல் அறுபடவும் கூடும், எனவே மனிதர், நூலைச் சுற்றியபடி முன்நோக்கி வருகிறார். கரைக்குமேலே வெகு அருகில் பட்டம் வந்ததும், மனிதர் பக்கவாட்டிற் சென்று, விசுக்கென்று இழுத்து பிடித்திருந்த நூலை தளர்த்தியதும், பரவிக் கடந்த கூழாங்கற்களில் சேதமின்றி ஒரு விமானத்தைப்போல மெல்ல தரை இறங்கியது.

மூவருமே களைத்திருந்ததால், கடற்கரை மணலில் உட்கார்ந்தவர்கள் எழுவதற்கு விருப்பமில்லாமலிருந்தனர். ழித்தான் இறைச்சிவைத்த ரொட்டியை வாங்கிவந்தான். கடலைப்பார்த்தவண்ணம் மூவரும் தின்றனர். காற்றாடி மனிதர் பட்டங்களின் வால்களில் பிளேடுகளை வைத்து துருக்கிக் கடற்கரையில் நடத்தப்படும் சண்டைகள்பற்றி சொன்னார்.

– மிக உயரத்தில் பறக்கிறபொழுது அடுத்தவர் பட்டங்களை அறுக்கவேண்டி, ஒருவர் மற்றவர் பட்டத்தின் மீது விடுவார், வாலிலுள்ள பிளேடுகள் எதிரியின் பட்டத்தைக் கிழித்துவிடும். அப்படித்தான் ஒருமுறை நூலை அறுக்கப்போக பட்டம் சருகைப்போல காற்றில் பறந்தது, பிறகு போனது போனதுதான். பட்டம் விட ஏதுவாக காற்று வீசும் நாட்களில், சிறுவர்கள் நூற்றுக்கணக்கான பட்டங்கள் விடுவதையும், விதவிதமான நிறத்தாலான பட்டங்களால் வானம் மூடப்பட்டிருப்பதையும் காணலாம். – என்றார்.

– கண்டிப்பா அந்தக் காட்சி மிகவும் அழகாக இருக்கணும்- மோந்தோ

– ஆமாம், அது ஒருக் காலம், இப்போதெல்லாம் ஒருவருக்கும் அதிலே ஆர்வமில்லை- என்ற காற்றாடி மனிதர், தனது கறுப்பு மஞ்சளுமான பெரிய பட்டாம் பூச்சியை பிளாஸ்டிக் தாளொன்றில் வைத்து பத்திரபடுத்தினார்.

– அடுத்தமுறை ஒரு நல்ல பட்டம் செய்வதெப்படியென உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன்- செப்டம்பர் மாதம் அதற்கு ஏற்றது, நம்மை சிரமப்படுத்தாமல் ஒரு பறவையைப் போல பட்டம் காற்றில் மேலெழும்பும் காலம் அது.’- என்றார்.

எனது பட்டம் கடல் நாரைபோல வெள்ளை நிறத்திலிருக்கும், – மோந்தோ தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அவ்வப்போது மோந்தோ சந்திக்கவேண்டிய வேறு சிலரும் இருக்கத்தான் செய்தனர். அவர்களில் ‘ஒக்ஸித்தோன்’ என்ற படகுமொன்று. பிற்பகலொன்றில் சுமார் இரண்டுமணி அளவில், சூரியனின் தாக்குதலுக்கு துறைமுகம் உள்ளாகியிருந்த நேரத்தில் முதன் முறையாக அதனைக் காண நேர்ந்தது. துறையையொட்டி நிறுத்தப்பட்டிருந்த அநேக படகுகளில் அதுவுமொன்றாய் நீரினால் தாலாட்டப்பட்டுக்கொண்டிருந்தது. பிற படகுகளில் உள்ள சுராமீன் தலை அலங்காரம் அதற்கில்லை. பெரிய வெள்ளைப் படுதாவை பாய்மரமாகக் கொண்டிருக்கும் படகுகளைப்போல அது பெரியதுமல்ல. சிறிய பாய்மரங்கொண்ட வயிறுபெருத்த ஒரு குட்டிப் படகு அவ்வளவுதான், அதற்குமேல் பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கண்டதும் அவனுக்குப் பிடித்துப்போயிற்று. துறைமுகப்பகுதியில் வேலைசெய்துகொண்டிருந்த ஒருவனிடம் குட்டிப்படகின் பெயரை கேட்டான், படகின் பெயரும் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அதன் பிறகு, அது துறை பிடித்திருக்கிற இடங்களிலெல்லாம் சென்று பார்த்து வந்தான். துறையை ஒட்டி சிறிது நேரம் நின்றான், அதன் பெயரை மெல்ல சொல்லிப்பார்த்துக்கொண்டான். திடீரென்று உரத்தக் குரலில் பாடுவதுபோல திரும்பத் திருப்ப அப்பெயர் சொல்லி அழைத்தான்.

– ஒ·சித்தோன்.. ஒ·சித்தோன்!

ஒ·சித்தோன் இழுபட்டது, துறையில் முட்டி பின்னர் விலகிக்சென்றது, படகின் மிதவை நீலம், சிவப்பென்று வண்ணம் பூசப்பட்டிருக்க, அதன் விளிம்பு வெள்ளை நிறத்திலிருந்தது. துறையில் படகு கட்ட உதவும் வளையத்தின் அருகே மோந்தோ அமர்ந்தான் ஆரஞ்சு பழமொன்றை தின்றபடி ஒக்ஸித்தோன் என்ற பெயர்கொண்ட படகை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். நீரில் தெரியும் சூரியனும், படகுகளைத் தாலாட்டும் சிறு அலைகளுங்கூட இடைக்கிடை மோந்தோவின் கவனத்தைப் பெற்றன. தன்னிடம் அக்கறைகொள்ள ஒருவரும் இல்லை என்ற வருத்தம் ஒக்ஸித்தோனுக்கு இருக்கவேண்டும். அதனைப் புரிந்துகொண்டவன்போல மோந்தோ படகுக்குள் குதித்தான். படகிலிருந்த பலகையில் அமர்ந்தான், அலைகளின் அசைவை அனுபவிப்பதற்காகக் காத்திருந்தான், படகு மெல்ல அசைந்துகொடுத்தது, அதன் பிணையிலிருந்து கரக்முரக்கென்று சத்தம், இலேசாகத் திரும்பியது. ஒக்ஸித்தான் படகில் இன்னதிசையென்றில்லாமல் புறப்பட்டுப்போக அவனுக்கு விருப்பமுண்டு, அப்படி போகிறபோது மீனவன் ழிரோதானை உடன் அழைத்துக்கொள்ளலாம், அம்மீனவனுக்கு விருப்பமான செங்கடல் பக்கங்கூட போய்வரலாம்.

நீரில் தெரியும் சூரியனின் பிரதியையும், சிறியதொரு மீன் கூட்டமொன்று அசைந்தசைந்து நீர்ல் முன்னேறி செல்வதையும் வெகு நேரம் வேடிக்கைபார்த்தபடி படகில் அமர்ந்திருந்தான். சிலவேளைகளில் படகுக்கென்று அவனால் கட்டப்பட்ட பாடலைப் பாடுவான்

-ஒக்ஸித்தொன்.. ஒக்ஸித்தோன்.. ஒக்ஸித்தோன்
வலையெடுத்து போவோமா
மீன் பிடித்து வருவோமா
அயளை, இறால், சூரை
மீன் பிடித்து வருவோமா…
வலையெடுத்து போவோமா…

அதன் பிறகு சரக்கேற்றும் கப்பல்கள் துறைபிடித்துள்ள பகுதிகளில் சிறிது நடந்தான். அங்கே சரக்கேற்றி இறக்கும் எந்திரத்தை இயக்கும் பெண்ணொருத்தி அவனுக்கு சிநேகிதம். ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள இடங்களைப் பொதுவாக மோந்தோ விரும்புவதில்லை. நின்று வெகுதொலைவில் பார்வையைச் செலுத்த உதவக்கூடிய திறந்தவெளிகள் அவனுக்குப் பிடித்தமானவை. திடல்கள், மைதானம், கடலுக்குள் நீண்டிருக்கும் துறைகள், நகரத்தின் சரக்கு வாகனங்களின் உபயோகத்திலிருக்கிற நீண்ட பெரிய சாலைகள் இவைகளெல்லாங்கூட அவனுக்கு மகிழ்ச்சியைத் தருபவை. அவனுக்கு விருப்பமான இதுபோன்ற இடங்களிற்றான், ‘- என்னைத் தத்து எடுத்தீப்பீங்களா?’,- என்று வினவுவதற்கான மனிதர்களையும் அவன் சந்திக்க முடியும். அவர்கள் கனவுலகில் மிதக்கிற மனிதர்கள், கைகளைப் பின்புறம் கட்டிக்கொண்டு, சிந்தனையை எங்கோ வைத்து நடப்பவர்கள். அவர்களில் வானியலறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், சுங்க அலுவலர்கள் என்று எல்லோருமுண்டு. சிறியதொரு இருக்கையிலமர்ந்து படகுகள், மரங்கள், கதிரவன் மறைவு என்று சித்திரம் தீட்டுகிற ஞாயிற்றுக் கிழமை ஓவியர் ஒருவர்கூட மேற்கண்ட அவனது சந்திப்பு நண்பர்கள் பட்டியலில் இருந்தார். ஒருமுறை, அவர் தீட்டிய ஓவியத்தை பார்ப்பதெற்கென்று அவரருகில் சிறிது நேரம் அமர்ந்தான். அவனது திசைக்காய் திரும்பிய ஓவியர், ‘படம் உனக்குப் பிடித்திருக்கிறதா?’,- என்று கேட்டார்.

மோந்தோ ஆமாம் என்ற பொருளில் தலையை ஆட்டினான். ஓவியரிடம், சற்று தூரத்தில் நாயை அழைத்துக்கொண்டு நடந்து சென்ற மனிதரைக் சுட்டிக்காட்டி, ‘அவர்களையும் வரைவீர்களா? என்றான்.

– உனக்கு விருப்பமென்றால் வரைவேன் தம்மிடம் இருந்த மிக மெல்லிய தூரிகை ஒன்றினால், கறுப்பு வண்ணத்தில் மிக சிறிய உருவமொன்றைத் தீட்டினார், தோற்றத்தில் அதுவொரு பூச்சிபோல இருந்தது. மோந்தோ சிறிது நேரம் யோசித்தவன்: ‘வானத்தை சித்திரமாக எழுத உங்களுக்கு வருமா?’ – என்று கேட்டான்.

ஓவியர் தாம் வரைந்துகொண்டிருந்ததை அப்படியே நிறுத்திவிட்டு, இவன் பக்கம் திரும்பினார், அவர் முகத்தில் வியப்பு.

– வானமா?

– ஆமாம் வானம். மேகங்கள், சூரியன் எல்லாம் அதிலிருக்கணும். ரொம்ப அழகாக இருக்கும் இல்லைங்களா?

ஓவியருக்கு அப்படியொரு யோசனை எப்போதும் வந்ததில்லை. தலையை உயர்த்தி மேலே பார்த்தார். புன்னகைத்தார்.

– அதற்கென்ன என்னுடைய அடுத்த ஓவியம் வானமாக இருக்கும், என்றார்.

– அதிலே மேகங்கள், சூரியன் எல்லாம் இருக்குமில்லையா?

– ம்.. நிறைய மேகங்கள், பிரகாசிக்கிற சூரியனென்று எல்லாவற்றையும் தீட்டுவேன்.

– பார்க்க நன்றாக இருக்கும், – ஆமோதித்த மோந்தோ, ‘ எனக்கு அந்த ஓவியத்தை உடனே பார்த்தாகணும்போல இருக்கிறது.’ – என்றான்.

ஓவியரின் பார்வை வானத்தைப் பார்த்தது.

– வானம் நாளைக்குத் தெளிவாக இருக்குமென்று நினைக்கிறேன். நீ விரும்பியதுபோல நாளைக்கு படம் வரைந்து தருகிறேன்.

– ஆமாம் நாளைய பொழுது நன்றாகத்தானிருக்கும். இன்றைக்கு இருப்பதைக்காட்டிலும், வானம் நாளைக்கு அழகாகவே இருக்கணும். என்பது மோந்தோவினுடைய பதில், காலநிலையைக் கணிக்கத் தெரிந்தவன் என்பதுபோல பதில் வெளிப்பட்டது.

பிறகு நாற்காலிகளுக்கு ஒயர் பின்னும் நபர் ஒருவரையும் அவன் தெரிந்து வைத்திருந்தான். அவரைப் பொதுவாகப் பிற்பகல் நேரங்களில் பார்ப்பது வழக்கம். அவர் பழைய கட்டிடமொன்றின் கூடத்தில் முடைந்து கொண்டிருப்பார் அருகிலேயே பிப்போ, அவரதுபேரன், தொம்பை போன்றதொரு ஜாக்கெட்டுடன் இருப்பான். நாற்காலிகளை பின்னுகிறபோது, குறுக்கும் நெடுக்குமாக கோரைகளை கொண்டு செல்வதும், முடிச்சிடுவதுமாக மனிதரின் விரல்கள் செய்யும் ஜாலங்களை வெகுவாக மோந்தோ ரசிப்பான். ஜாக்கெட்டை ஓவர்கோட் போல அணிந்து அமைதியாக உட்கார்ந்திருக்கிற அவரது பேரனிடம் மோந்தோ சீண்டி விளையாடுவான். பையனுக்கென்று கடற்கரையோரம் கிடக்கிற விநோதமான கூழாங்கற்கள், கடற்பாசிகள், சிப்பிகள், உடைந்து கடல் நீரினால் பளபளவென்றிருக்கிற பச்சை, நீல நிற ஓடுகள் ஆகியவற்றை மோந்தோ கொண்டுவருவான். பிப்போ மோந்தோ தரும் கற்களை சிறிது நேரம் அவதானித்துவிட்டு தனது ஜாக்கெட் பைக்குள் பத்திரப்படுத்திக்கொள்வான். அவனுக்குப் பேசவராது, இருந்தபோதிலும் பெரியவர் அருகே அமைதியாக, சீனர் அங்கியைப் போன்றதொரு அளவிற்பெரிய சாம்பல் நிற ஜாக்கெட்டில் அவன் அமர்ந்திருக்கும் அழகை மோந்தோ ரசித்திருக்கிறான், அதனால் அவனை விரும்பவும் செய்தான். பேச்செதுவுமின்றி, ஓரிடமாக அமர்ந்து, கொஞ்சம் கனவுகளுடனான கண்களுடன் வெயில்காயும் மனிதர்களையும் மோந்தோவுக்குப் பிடித்திருந்தது.

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா