பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா
எங்கள் நகரத்தில் மோந்தோ பலரையும் தெரிந்து வைத்திருந்தான் ஆனால் அவர்களெல்லாம் அவனுக்கு நண்பர்களா என்றால் இல்லை. அவன் சந்திக்க விரும்பும் மனிதர்களுக்கென குறைந்த பட்ச விதியொன்றுண்டு. அவர்கள் பார்வையில் ஒளி இருக்கவேண்டும், அடுத்தவரை பார்க்கிறபொழுது, தங்கள் மனம் மகிழ்ச்சிகொள்கிறது என்பதைப் புன்னகைத்துத் தெரிவிக்கிற முகமும் அவர்களுக்கு வேண்டும். அப்படியான ஆசாமிகளில் ஒருவர் எதிர்ப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், மோந்தோ மேற்கொண்டு நடப்பதில்லை, அவரிடம் சிறிது நேரம் உரையாடுவான், ஒரு சில கேள்விகளும் அவனிடம் வரும். அக்கேள்விகள் கடல், வானம், பறவைகள் பற்றியதாக இருக்கும். அம்மனிதர்கள் அவனைவிட்டு நீங்குகிறபோது அக்கேள்விகளின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பார்கள். கடினமான எதையும் அவன் கேட்பதுண்டா என்றால், இல்லையென்றுதான் சொல்லவேண்டும், வெகுகாலத்திற்கு முன்னேரே மனிதர்களால் கைவிடப்பட்டவை அவை. மனிதரினம் மறந்து போனதைத்தான் அவன் நினைவு படுத்துகிறான். எதனால் போத்தல்கள் பச்சையாக இருக்கின்றன? நட்சத்திரங்களில் எரிநட்சத்திரங்களென்று இருப்பது எதனால்? போன்ற கேள்விகளை அதற்கு உதாரணப்படுத்த முடியும். ஏதோ வெகு காலமாக மனிதர்கள் சுருக்கமான சொற்களைக் கொண்ட இது போன்ற உரையாடலுக்கு காத்திருப்பதுபோலவும், தெருக்களின் சந்திப்பில் தடுத்து நிறுத்தி அவற்றை சொல்கிறபோது அவர்கள் கேட்பதற்கு தயாராக இருப்பதுபோலவும், அவ்வாறான சொற்களைக் கையாளும் ஞானம் அவனுக்கு உண்டென்பதுபோலவும் மோந்தோ நினைத்துக் கொண்டிருந்தான்.
அடுத்து கேள்விகேட்பதும் முக்கியம், அநேக மனிதர்களுக்கு நல்ல கேள்விகள் எதுவென்று தெரியாது. மோந்தோ அறிவான். ஊகித்தறிய முடியாத தருணங்களில், பொருத்தமான கேள்விகளைக் கேட்பதில் அவன் திறமைசாலி. இவன் வினாவைத் தொடுத்ததும் ஒரு சில விநாடிகள் வினாவுக்கு உரியவர்கள் திகைத்து நிற்பார்கள், கணத்தில் தங்களையும் தங்களுடைய பிரச்சினைகளையும் மறந்துபோவார்கள், யோசிப்பார்கள். அவர்கள் கண்களில் இலேசாக மிரட்சி தெரியும். காரணம் இதற்குமுன்பும் அக்கேள்வி அவர்களிடம் பலமுறை கேட்கப்பட்டிருக்கும்.
வேறொரு நபரையும் மோந்தோ சந்திப்பதற்கு மிகவும் விரும்புவான். அவனொரு இளைஞன், போதுமான உயரமும், திடகாத்திரமான உடலும் கொண்டவன். முகம் சிவப்பாகவும் கண்கள் நீல நிறத்திலுமிருக்கும். நீல நிற சீருடையில் இருக்கும் அவ்விளைஞன், கடிதங்கள் துருத்திக்கொண்டிருக்கும் ஒரு பெரிய கித்தான் பையை சுமந்தபடி வருவான். காலைவேளைகளில் மலைத்தொடர்களூடாகப் போகும் பாதையில் ஏறிக்கொண்டிருக்கிறபோது அவனை மோந்தோ சந்தித்திருந்தான். முதன் முதலாக அவனிடம் மோந்தோ கேட்டது: எனக்கேதேனும் கடிதம் இருக்கிறதா?
இளைஞன் மோந்தோவின் கேள்வியை வாங்கிக்கொண்டு சிரித்தான். மோந்தோ ஒவ்வொரு நாளும் வழியில் சந்திக்கிறபோதெல்லாம், அவன் அருகிற் சென்று அலுப்பில்லாமல் கேட்கிற ஒரே கேள்வி:
– இன்றைக்காவது எனக்கு கடிதம் வந்திருக்குமா?
இளைஞனும் உடனே தனது கித்தான்பையை திறந்து தேடுவதுண்டு.
– என்ன பேரு சொன்ன?
– மோந்தோ.
– மோந்தோ.. மோந்தோ..ம் இல்லை. இன்றைக்கும் உனக்குக் கடிதமெதுவும் இல்லை.
சில சமயங்களில் பையைத் திறந்து ஏதேனும் விளம்பரத் தாள்கள் கிடக்கும். அதிலொன்றை எடுத்து மோந்தோவிடம் தந்து, இன்றைக்கு உன்னுடைய பெயருக்கு வந்தது இதுவொன்றுதான், என நீட்டுவான். மோந்தோ கையில் வாங்கியதும், கண்ணை சிமிட்டிவிட்டு நடையைக் கட்டுவான்.
கடிதங்கள் எழுதி தபாலில் அனுப்பவேண்டுமென்கிற ஆசையில் ஒருநாள், வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்வதென்று மோந்தோ நகரத்தின் வீதிகள், பொதுப்பூங்காவிருக்கும் இடங்களென்று ஆட்களைத் தேடினான். கடுமையான வெப்பகாலமானாதால், அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற மனிதர்களென்று எவரையும் சந்திக்க முடியவில்லை. வேறு இடங்களை தேடிச் சென்றான். கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். வெப்பம் கடுமையாக இருந்தது. கடலோர கற்களெங்கும் உப்பு பூத்திருந்தன, அவை வெயிலில் கண்ணாடிபோல ஒளிர்ந்தன. கரையோர நீரில் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்பிள்ளைகளின் உள்ளாடைகள் தக்காளி சிவப்பிலும் பச்சை ஆப்பிள் நிறத்திலும் விநோதமாக இருந்தன. பிள்ளைகள் விளையாட்டின்போது கூச்சலிடுவற்கு அழுத்தமான நிறத்தில் அவர்கள் அணிந்திருக்கிற ஆடைதான் காரணமென்று மோந்தோ நினைத்தான். ஆனால் அவர்களை நெருங்கும் எண்ணமெதுவும் அவனுக்கில்லை.
தனியாருக்குச்சொந்தமான கடற்கரை பகுதியில் மரத்தலான குடிலையொட்டி முதியவரொருவர் பரம்புப் பலகையினால் கடற்கரை மணலை நிரவிக்கொண்டிருந்தார். அவர் உண்மையில் வயதானவராகத்தான் இருக்கவேண்டும். நிறைய கறைகளைக்கொண்ட வெளுத்துப்போன நீலச்சீருடையில் இருந்தார். தீய்ந்த ரொட்டியின் நிறத்துடனிருந்த தேகம், உழைத்துழைத்து உருமாறி சுருக்கம் கண்டிருந்தது, மூப்படைந்த யானைபோல இருந்தார். அங்கிருந்த சிறுவர்களைப்பற்றியோ, கடலில் குளிப்பவர்களைப்பற்றியோ கவலையின்றி, கீழிருந்து மேலாக கடற்கரையை நிரவிக்கொண்டிருந்தார். ஒளிரும் சூரியனை அவரது கால்களிலும் முதுகிலும் பார்க்க முடிந்தது, வியர்வை முகத்தில் வழிந்தபடியிருந்தது. அவ்வப்போது தனது காற்சட்டை பையிலிருந்து எடுத்த கைக்குட்டையினால் முகத்தையும் கைகளையும் அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தார்.
மோந்தோ, முதியவருக்கு முன்பாக சுவரில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்திருந்தான், முதியவர் தமக்கான கடற்கரை பகுதியை சமப்படுத்தி முடிக்கும்வரை வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. வேலையை முடித்து சுவரருகே அமர்வதற்காக வந்த முதியவர் மோந்தோவைக் கண்டார். மனிதரின் கண்களிரண்டும் நிர்மலமாக, வெளுத்த சாம்பல் நிறத்திலிருந்தன. அவரது பழுப்பு நிற முகத்தில் அக்கண்கள் இரண்டு குழிகள் போலிருந்தன. தோற்றத்தில் இந்தியர் போலவிருந்தார்.
மோந்தோவின் கேள்வியைப் புரிந்துகொண்டவர்போல அவரது பார்வை இருந்தது, ஆனால் வாய் திறந்து ஒரே ஒரு வார்த்தை: ஹாய்!
– எனக்கு எழுதவும் படிக்கவும் கத்துக்கணும், தயவு செய்து, சொல்லித் தருவீங்களா?
– முதியவர் சிலையாக நின்றார். ஆனால் மோந்தோவின் கேள்வி அவரை வியப்பில் ஆழ்த்தியதாகத் தெரியவில்லை.
– நீ பள்ளிக்கூடம் போனதில்லையா?
– போனதில்லைங்க – மோந்தோ
முதியவரும் சுவரில் முதுகைவைத்து கடற்கரைமணலில் அமர்ந்தார். முகம் சூரியன் திசைக்காய் இருந்தது. முன்னால் பார்த்துக்கொண்டிருந்தார், மூக்கில் கோணலும் கன்னங்களில் சுருக்கங்களும் உண்டென்றபோதிலும், அவர் முகத்தில் கனிவும் நிதானமும் குடியிருந்தன. அவனை ஊடுறுவும் பார்வை, கண்களில் தெளிவும் கூர்மையும் உண்டென்றாலும், பார்வையில் ஒருவித குறும்பு.
– உனக்கு எழுதவும் படிக்கவும் நான் கற்றுக்தரேன், சந்தோஷமா? -அவரது கண்களைப்போலவே குரலிலும் அமைதி. உரத்து பேச தயங்குவதைப்போல குரல் வெகுதூரத்திலிருந்து வருவதைப்போலக் கேட்டது.
– ஆக உனக்கு எழுத்தென்றால் என்னவென்று தெரியாது?
– உண்மைங்க.
மனிதர் தம் தோளில் மாட்டிருந்த பணிக்கான பையிலிருந்து சிறியதொரு பேனாக்கத்தியை எடுத்து, தட்டையாக இருந்த கற்களில் எழுத்துக்களை கீறலானார். அவ்வாறு செய்கிறபோதே அவ்வெழுத்துகளை பார்க்கிரபோதும், கேட்கிறபோதும் என்னவெல்லாம் உணரமுடியுமென்பதுகுறித்து சொன்னார். ‘A’ என்ற எழுத்து இறக்கைகளை பின்புறம் மடித்த ‘ஈ’ போன்றதென்றார். இரண்டுவயிறுகளைக் கொண்ட ‘B’ வேடிக்கையானது; ‘C’யையும் ‘D’யையும் பிறை நிலாக்களென்று சொல்லலாம், நாட்களில்தான் வித்தியாசம்; மாறாக ‘O’ கறுத்த வானத்தில் தெரியும் முழுநிலா; ‘H’ என்பது உயரத்திற்கானது, மரங்களிலும், வீட்டுக்கூரைகளிலும் ஏற உதவும் ஏணி; ‘E’யும் ‘F’ம் முறையே பரம்பு(rake) என்றும், சிறு முறம் என்றும் கருதலாம்; ‘G’ என்ற எழுத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் குண்டு மனிதனை நினைவூட்டும்.; ‘I’ முன்காலை ஊன்றி ஆடுகிற பாலே கலைஞர் போன்றிருக்கிறது, கோட்டின் இருபுறமும் உடலைவிட்டுப்பிரிந்த சிறிய தலை தெரிகிறது பார்; ‘K’ முடமான கிழவன்; ‘R’ அகல கால் வைத்து நடக்கும் படைவீரன்; ‘Y’ எழுந்து நின்று கைகளை உயர்த்தி அபயம் கேட்கும் மனிதன்; ‘L’ கரையை ஒட்டி நிற்கும் மரம்; ‘M’ பெரியதொரு மலை. ‘N’ பெயரிட்டு அழைக்கவும், கைகொடுத்துக்கொள்ளவும் உதவும்; ‘P’ ஒற்றைக்காலில் நின்றபடி உறங்கும் மனிதன்; ‘Q’ வால் மீது அமர்ந்துள்ளது; ‘S’ பாம்பென்பது நமக்குத் தெரியும்; ‘Z’ மின்னல்; ‘T’ மிகவும் அழகானது, பாய்மரத்தை நினைவூட்டுகிறதில்லையா? ‘U’வுக்கு ஜாடிபோன்றதொரு தோற்றம்.; ‘V’யும் ‘W’ பறக்கின்ற பறவைகள்; ‘X’ நினைவூட்டல் குறி. கத்திமுனைகொண்டு கீறிமுடித்த கற்களை மோந்தோவிடம் கொடுத்தார்.
– உன்னுடைய பெயர் என்ன?
– மோந்தோ.
எழுத்திருந்த கற்களில் சிலவற்றை எடுத்து வரிசையாக வைத்து, ‘பார்த்தியா, இதுதான் உன்னோட பேரு. இப்படித்தான் எழுதணும், என்றார்.
– இதுலே அத்தனை அழகு இருக்குமா? ஒரு மலை, ஒரு முழு நிலா, வணக்கம் சொல்லும் ஒருவன், மீண்டும் ஒரு முழு நிலா. எதனாலே அவ்வளவு நிலாக்கள்?
– உன்னோடபேருலே அத்தனை நிலாக்கள் இருக்கு, உனக்கு அப்படித்தான் பேரு வச்சிருக்காங்க. நிறைய நிலாக்களோடதான் உன்னுடைய பேரை எழுதணும்.
கற்களை மீண்டும் ஒன்றாக்கினான்.
– இப்போ நீங்க சொல்லுங்க, உங்க பேருலே என்னவெல்லாம் இருக்கும்.
முதியவர் ஒவ்வொரு கல்லாக சுட்டிக்காட்ட, மோந்தோ அவ்ருக்கு முன்னால் வரிசைபடுத்தினான்.
– ஆ! ஒரு மலை.
– ஆமாம் அங்குதான் நான் பிறந்தது.
– ஒரு ஈ.
– மனிதனாவதற்கு முன்பாக ஈயாக நான் இருந்திருக்கலாம்.
– ராணுவ வீரனொருவன் நடக்கிறான்.
– நான் ராணுவத்தில் இருந்திருக்கிறேன்.
– பிறை நிலாவும் இருக்கிறது
– நான் பிறந்தபோது அதுதான் சாட்சியாக இருந்திருக்கிறது
– ஒரு பரம்பு
– பார்த்தியா, அதுவே எனக்குத் தொழிலாகிவிட்டது. கையில் வைத்திருந்த பரம்புவைக் காட்டினான்.
– நதிக்கரையில் ஒரு மரம்
– ம்.. இறந்ததும் இப்படித்தான் ஒருவேளை எழுந்துவரக்கூடும்: அழகான நதிக்கரையொன்றின் நெடுமரமாக…
– வாசிக்கக் கற்றுக்கொள்வது நல்லதென்றுதான் நினைக்கிறேன். எனக்கு எல்லா எழுத்துக்களையும் இன்னும் நன்றாக தெரிஞ்சுக்க ஆசை.
– என்னைப்போலவே நீயும் ஒரு நாளைக்கு எழுதமுடியும். என்ற முதியவர் கத்தியைக் கொடுக்க, கடற்கரையிற் கிடந்த எழுதமுடிந்த கற்களில், பெரியவர் காட்டிய வடிவங்களை மோந்தோ கத்தியின் முனையால் கீறினான், பின்னர் அது என்ன பெயரைத் தருகிறது என்பதை அறியவிரும்பியவன்போல, கற்களை அருகருகே வைத்தான். நிறைய ‘O’க்களும் ‘I’களுமிருந்தன. அவை அவனுக்கு பிடித்தகற்கள் போலிருக்கிறது. ‘T’, ‘Z’ வடிவங்களும், பறவை வடிவங்கள் என்று சொல்லபட்ட ‘V’, ‘W’ வடிவங்களும் அவற்றிலிருந்தன. முதியவர் வாசித்தார்:
– ‘OVO OWO OTTO IZTI’
இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்
முதியவருக்கு விநோதமான வேறு சில சங்கதிகளும் தெரிந்திருந்தன. கடலைப் பார்த்தவண்ணம், மெல்லிய குரலில் அவற்றை கூறினார். கடலின் மறுபக்கம் வெகுதொலைவிலிருந்த ஒரு நாட்டைக் குறிப்பிட்டார். அது பெரிய நாடென்றும், அங்குள்ள மக்கள் நல்லவர்கலென்றும் அழகானவர்களென்றும் கூறினார். போர் பற்றிய அச்சம் அந்த நாட்டிலில்லையென்றும், மரணம் கண்டு அங்குள்ளவர்கள் அஞ்சுவதில்லையெனவும் சொன்னார். அங்கு கடலைக்காட்டிலும் பெரிய நதியொன்று உண்டென்றும், வைகறைப் பொழுதில் நதியில் இறங்கி நீராடும் மக்கள், அந்தி சாயும்வரை கரைக்குத் திரும்புவதில்லை என்றார். அந்த நாட்டை பற்றி பேசிய பொழுது குரல் மேலும் தாழ்ந்தது, நிதானமாக வெளிப்பட்டது, அந்த நதிக்கரைக்கே போனதுபோல பார்வையின் எல்லை அதிகரித்திருந்தது,
– உங்களோட நானும் வரலாமா? – மோந்தோ.
முதியவர் கை மோந்தோவின் தோளில் ஆதரவாக விழுந்தது.
– கண்டிப்பாக அழைத்து போவேன்.
– நீங்க எப்போ போவதா இருக்கீங்க?
– தீர்மானிக்கலை. போதுமான பணம் சேந்ததும் போகலாம். அநேகமாக ஒருவருடத்திலும் சாத்தியமாகலாம். ஆனால் போகும்போது உன்னையும் கூட்டிப்போவேன்.
அதற்குப் பிறகு முதியவர் தமது பரம்புப் பலகையுடன் எழுந்தவர், வேலையைத் தொடர்ந்தார். மோந்தோ அவனுடையை பெயர்கொண்ட கற்களை தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டான். முதியவரைப் பார்த்து கை அசைத்தான். அங்கிருந்து புறப்பட்டான்.
முதன் முறையாக நகரமெங்கும் எழுத்துக்களைக் கண்டான்: சுவர்கள், கதவுகள், பலகைகள். வீதிகளில் நடக்கிறபோது சில வடிவங்களை அடையாளங் காணவும் முடிந்தது. ஓரிடத்தில் நடைபாதை காரையில் குறுக்குவாட்டில் ‘NADINE’ என்றிருந்தது, ‘D’க்கு மேலே ‘DE’ என்றும், கீழே ‘E’ என்றும் மேலிருந்து கீழாக இருந்தன. அவைகளைப் புரிந்துகொள்வது கடினமாகயிருந்தது.
இரவானதும், மோந்தோ ‘பொன்னொளி’ வீட்டிற்குத் திரும்பினான். கொஞ்சம் சோறும் காய்கறிகளும் தி-ச்சின்னுடன் சேர்ந்து சாப்பிட்டான். பிறகு தோட்டத்திற்கு வந்தவன், குள்ளப் பெண்மணிக்காகக் காத்திருந்தான். பிறகு இருவரும் மெதுவாக சரளைக் கற்கள் பாதையில் நடந்தார்கள். மரங்களும், புதர்களுமாக இருந்த இடத்திற்கு வந்திருந்தார்கள். தி’-ச்சின் மோந்தோவின் கையை அழுந்தப் பற்றி தமது கரங்களுடன் சேர்த்துக்கொண்டபோது அவனுக்கு வலித்தது. ஆனாலும் ஒளியற்ற இரவில், தட்டுத் தடுமாறி, விழுந்திடாமல், மிதிபடும் சரளைக் கற்களின் ஓசை வழிகாட்ட இருவருமாக நடப்பதில் சுகமிருந்தது. மோந்தோ வெட்டுக்கிளியின் கிறீச்சிடும் சீழ்க்கையை மறுபடியும் கேட்டான். இரவுவேளைகளில் மாத்திரம் இலைகளிலிருந்து விடுபடுகிற, புதர்களின் வாசத்தையும் நுகர்ந்தான். தலையை இலேசாகச் சுற்றுகிறது, அதைத் தவிர்க்க நினைத்தே அநேகமாக வியட்நாம் பெண்மணி மோந்தோவின் கைகளை இறுகப் பிடித்திருக்கவேண்டும்.
– பொதுவாக இரவுவேளைகள் நன்றாக இருக்கின்றன – மோந்தோ.
– நாம பார்க்க முடிவதில்லை என்பதுதான் அதற்கான காரணம். நாம பார்க்க முடியாதபோது, நாம காதுகொடுத்து கேட்கிறோம், வாசத்தில் அக்கறை காட்டுகிறோம். உணர்வும் நன்றாக இருக்கிறது.
பெண்மணி நின்றாள்.
– நட்சத்திரங்கள் தெரிகிறது பார்.
வெட்டுக்கிளியின் சப்தம் ஆகாயத்திலிருந்து குதித்ததைபோல இப்போது அவர்களுக்கு வெகு அண்மையில் கேட்டது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின்னொன்றாக வரத்தொடங்கின, ஈரப்பதத்துடனான இரவென்பதால், நட்சத்திரங்கள் மங்கலாலத் தெரிந்தன. மோந்தோ அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான்.
– கொள்ளை அழகு, அவைகள் ஏதாச்சும் நமக்குச் சொல்லுமா?- மோந்தோ.
– அவை நிறைய சொல்லத்தான் செய்கின்றன, நமக்குத்தான் அதுபற்றிய ஞானம் போதாது.
– படிக்கக் கற்றுக்கொண்டால், ஒருவேளை புரியுமா?
– முடியாது. மனிதர்களுக்கு நட்சத்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவே இயலாது.
– ஒருவேளை வெகுகாலத்திற்குப் பிறகு என்ன நடக்கலாமென்பதை அவை சொல்லுதா?
– இருக்கலாம், அதுபோன்ற கதைகளைத்தான் சொல்கின்றன என்று நினைக்கிறேன்.
மோந்தோவின் கையை இறுகப் பற்றியபடி தி-ச்சின்ன்னும் அசையாமல் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
– ஒரு வேளை நாம் போகவேண்டிய நாடுகளுக்கான பாதைகள் பற்றிப் பேசுமோ?
மோந்தோ சிந்தனையிலாழ்ந்தான்.
– நேரம் ஆக ஆக கூடுதலாக ஜொலிக்கின்றன. அவைகளுக்கும் உயிர் இருக்கக்கூடும்.
தி-ச்சின் மோந்தோவின் முகத்தைப் பார்க்க விரும்பினாள், எங்கும் இருட்டாக இருந்தது. சட்டென்று அச்சத்திற்கு வசப்பட்டிருந்தாள், தேகம் நடுக்கங் கண்டது, அவனது கைகளைஎடுத்து அவளுடைய மார்பில் வைத்துக்கொண்டாள். அவனது தோளில், அவளுடைய கன்னத்தைக் கிடத்தினாள், அவளுக்கு பாதகம் நேர்ந்ததுபோல பிதற்றத் தொடங்கினாள்.
– மோந்தோ.. மோந்தோ..
அவனது பெயரை உச்சரித்தபோது, வார்த்தை தடைபட்டது, சரீரம் குலுங்கியது.
– உங்களுக்கு என்ன ஆச்சு? இங்கேதான் இருக்கேன். உங்களை விட்டுட்டு எங்கும் போகமாட்டேன். பெண்மணியை அமைதிபடுத்துவதுபோல மோந்தோ பேசினான்.
தி-ச்சின் முகம் தெரியவில்லை. ஆனால் அவள் அழுகிறாளென்பதை ஊகித்தான், அவள் உடல் நடுங்க அதுதான் காரணம். தான் கண்ணீர் சிந்துவதை மோந்தோ உணரக்கூடாதென்று நினைத்தவள்போல அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
– மன்னிச்சிக்கோ, நானொரு பைத்தியம், என்றாளேத் தவிர தடுமாறினாள், மேற்கொண்டு பேச்சு வரவில்லை.
வருத்தப்படாதீங்க, என்றவன், அவளைத் தோட்டத்தின் மறுபக்கம் அழைத்துபோனான்.
– மின்னொளியில் மூழ்கியிருக்கும் நகரை நாம வானிலிருந்து பார்க்கலாம், வாங்க
மரங்களுக்கு மேலே காளான்கள் போல தெரிந்த மென்மையான சிவப்பொளியை பார்ப்பதற்கு ஏதுவாக ஓரிடத்திற்கு வந்தார்கள். அங்கிருந்து பார்க்க விமானமொன்று விளக்குகளை சிமிட்டிக்கொண்டு பறந்து போனது. அக்காட்சி அவர்களை சிரிக்க வைத்தது. கலகலவென்று இருவரும் சிரித்தனர்.
சரளைக் கற்கள்பாவிய பாதையில் இருவருமாக கைகோர்த்தபடி அமர்ந்தார்கள். பெண்மணியிடத்தில் சற்றுமுன்பிருந்த துயரங்களில்லை, என்னபேசுகிறோம் என்பது பற்றிய சிந்தனையின்றி தொடர்ந்து பேசினாள். மோந்தோவும் அவன் பங்குக்குப் பேசினான். வெட்டுக்கிளியும் தம் பங்குக்கு இலைகளுக்கிடையே மறைந்தவண்ணம் விடாமல் கீச்சுகுரலில் சத்தமிட்டுக்கொண்டிருந்தது. கருவிழிபடலத்தில் நித்திரை உறுத்துவரை வெகுநேரம் மோந்தோவும்- தி-ச்சின்னும் உட்கார்ந்தபடி இருந்தார்கள். பின்னர் இருவருமாக தரையிலே நித்திரைகொண்டார்கள். கப்பலொன்றின் ஏறுபாதையைபோல, தோட்டம் மெல்ல அசைந்துக் கொண்டிருந்தது.
——-
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 1
- வியப்புகளும் உவமைகளும் சிரிப்புகளும் : Six Suspects a Novel By Vikas Swarup (Author of Q&A a.k.a Slumdog Millionaire)
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் (Asteroids) ஓரினமா அல்லது வேறினமா ?(கட்டுரை 52)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் << காதலியுடன் வாழ்வு >> (வசந்த காலம்) கவிதை -2 (பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -24 << காதலிக்குக் கேள்வி >>
- நான் கடவுள் பற்றிய மணி அவர்களின் கட்டுரை மிக அருமை
- சிங்கப்பூரில் எழுத்தாளர் சை.பீர்முகம்மதின் நூல் அறிமுக விழா
- தமிழ்நூல்.காம் வழங்கும் வாழ்வியற் களஞ்சியம் மற்றும் ஈழத்து நூல்கள்
- அடவி காலாண்டிதழ்
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்
- நூல் நயம்: தெரிந்த – கவனிக்கத் தவறிய முகங்கள்
- சங்கச் சுரங்கம் – 3 : குப்பைக் கோழி
- நகரத்தில் வாழும் கிழவர்கள்
- ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் – 2
- முடிவு உங்கள் கையில்
- இருக்கை
- காதலின் பரிமாணங்கள்
- வேத வனம் விருட்சம் 24
- பறக்கத்தான் சிறகுகள்
- இன்னொரு கரை…
- “வேலியை உடைக்கும் மரணம்”
- வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்
- நினைவுகளின் தடத்தில் – (26)
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)
- அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)
- மோந்தோ -5(2)
- மோந்தோ -5 (1)
- கருணையினால் அல்ல!
- சாம்பல்நிறப் பூனை