மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

பி.ஏ. ஷேக் தாவூத்


இந்திய தலைநகரமான தில்லியில் புதியதாக கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஐந்து கட்டுமானப் பணியாளர்கள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்ற செய்தி கடந்த வாரம் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு ஒரு நாள் செய்தியாகவும் புலனாய்வு பத்திரிக்கைகளுக்கு தங்களுடைய கற்பனை வளத்தை காட்டுவதற்கான தளமாகவும் அமைந்திருந்தது. மேம்பால இடிதல்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் இடிதல்கள் மற்றும் அரசு கட்டி கொடுக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழுதல்கள் என்பன இந்த தேசத்தில் தொடர் நிகழ்வுகளாக இருந்தும், இந்த மாதிரி நிகழ்வுகள் இந்த தேசத்தில் ஆழமாக புரையோடியுள்ள ஊழலை அப்பட்டமாக தோலுரித்து காட்டும் கண்ணாடிகளாகவே இருந்தும் இதிலிருந்து எந்த ஒரு பாடத்தையும் படிப்பினையையும் கற்றுக்கொள்ள இந்த தேசமும் அதனை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள் – அதிகாரிகள் அடங்கிய கூட்டு வர்க்கங்களும் தயாராக இல்லை.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய உலகில் எந்த ஒரு விபத்து ஏற்பட்டாலும் அதில் எத்துனை மனிதர்கள் மரணத்தை தழுவுகின்றனர் என்பதை வைத்தே அந்த நிகழ்வுகள் மக்களின் அனுதாபத்தை பெறுகின்றன. மனிதநேயம் கூட இன்று மரணித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் வெளிப்படுகிறது. இந்நிலையில் மனிதநேயம் அறவே இல்லாத அரசு இயந்திரங்கள் இந்த நிகழ்வை, வெறுமனே ஒருவரின் தனிப்பட்ட ராஜினாமாவினாலும் ஒரு சிலரை பணியிடை நீக்கம் செய்வதினாலும் மரணித்த அந்த அடிமட்ட தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு சில லட்சங்கள் இழப்பீடு வழங்கி விடுவதன் மூலமும் மக்களின் எண்ணத்திலிருந்து நீக்கி விடலாமென்று எண்ணுகிறது.

இந்த மாதிரி நிகழ்வுகளில் அரசு இயந்திரங்கள் பிரச்சனைகளின் ஆணிவேரை கண்டறியாமல் (கண்டறிந்தாலும் கண்டுகொள்ளாமல்) வெறுமனே சம்பிரதாய நடவடிக்கை எடுப்பதினாலேயே இவை தொடர் நிகழ்வுகளாக மாறிவிட்டன. இந்த மேம்பால இடிதல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது நம் தேசத்தில் புரையோடிப் போய்விட்ட ஊழலேயாகும். பெரும்பாலான இடங்களில் பணி ஒப்பந்தக்காரர் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால்தான் பணி ஒப்பந்தமே கிடைக்கும் என்ற அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கும்போது இத்தகைய இடிதல்களும் தொடர்கதையாகவே இருக்கும்.

இவ்விதமான நிகழ்வுகள் தொடராமல் இருக்க வேண்டுமெனில் பணி ஒப்பந்தக்காரர் மீதும் இந்த பாலத்தை தர பரிசோதனை செய்து ஒப்புதல் வழங்கிய பொறியியலாளர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தல் வேண்டும். கொலை செய்தால் இந்திய அரசியல் சட்டப்படி எத்தகைய தண்டனைகள் கிடைக்குமோ அவையனைத்தும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். இந்த சட்டரீதியான பயமுறுத்தல்களால் ஓரளவிற்காவது பயன் ஏற்படலாம். சில லகரங்களை இழப்பீடாக கொடுத்து பிரச்சனையை முடித்து விடலாமென்று அரசு இயந்திரங்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றன. மக்கள் விழிப்படைந்து போராட ஆரம்பித்துவிட்டால் அரசியல்வாதிகள் – அதிகாரிகள் அடங்கிய கூட்டு வர்க்கங்களின் நிம்மதி என்பது கானல் நீராகி விடும். ஏனெனில் உலகில் ஏற்பட்ட பல மக்கள் புரட்சிகள் சிறு புள்ளியிலிருந்தே தொடங்கியது என்பது தான் வரலாறு.

ஒருவேளை மக்கள் திரள் போராட்டங்கள் இதற்காக நடக்குமேயானால் அவற்றை திசைதிருப்பவும் அரசு இயந்திரங்கள் ஒரு குறுக்கு வழியை கையாளுகின்றன. இத்தகைய குறுக்கு வழிகளுக்கு சட்டரீதியான பெயர்தான் “விசாரணை ஆணையம்”. நீதியை மரணிக்க செய்யும் இந்த மாதிரி விசாரணை ஆணையங்கள் அளித்த அறிக்கைகளில் பெரும்பாலானவை ஆட்சியாளர்களின் உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கும். சில விசாரணை ஆணையங்கள் மிகவும் அபூர்வமாக சில, பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து விடலாம். அப்படிப்பட்ட விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பிரதமர் அலுவலகங்களிலோ அல்லது மாநில முதல்வர்களின் அலுவலகங்களிலோ மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். மேலை நாடுகளிலாவது காகிதங்களின் பயன்பாடுகள் கழிவறை வரை நீண்டிருக்கும். ஆனால் அதற்கும் கொடுப்பினையில்லாத இந்திய தேசத்தில் இத்தகைய ஆணையங்களின் அறிக்கைகள் மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும்.

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்