மெட்டி ஒலி – கடிதம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

டி.பி.ஆர்.ஜோசப்


அன்புள்ள ஆசிரியர்,

கடந்த வார திண்ணை இதழில் வெளியான திருமதி கற்பகம் இளங்கோவன் அவர்கள் ‘மெட்டி ஒலி’ தொடரைப் பற்றி எழுதிய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு சின்னத்திரை தொடர் நம்முடைய நிஜ வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற அவருடைய கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

என் வேலைப் பளுவிற்கிடையில் ‘மெட்டி ஒலி’ தொடரின் ஒரு 400-500 எபிசோட்களையாவது நான் பார்த்திருக்கிறேன்.

அதில் என்னை வெகுவாக கவர்ந்தவைகளை கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

1. தத்ரூபமான பாத்திர படைப்புகள்.

2. உணர்ச்சி பூர்வமான நடிப்பு

3. ஆழமான வசணங்கள்

இந்த தொடரில் நடந்த சம்பவங்கள் யாவுமே ஒரு நடுத்தர குடும்பத்தில் அனுதினமும் நடக்கும் சம்பவங்களாகவே அமைக்கப் பட்டிருந்தன என்பதை மறுக்க முடியாது. நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நம் தமிழ்க் குடும்பங்களில் இன்றும் இத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதையும் யாரும் – திருமதி கற்பகம் உள்பட – மறுக்கவியலாது.

பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் என்று பெருமைப் பேசி உலவும் பெண்களைத் தலைவியாய் கொண்டிருக்கும் குடும்பங்களிலும் இத்தகைய பெண்களை இழிவு படுத்தும் சம்பவங்களை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

வாசகர் விமர்சித்தது போல் ஒரு கல்பனா சாவ்லா, ஒரு இந்திரா நூயி போன்ற சாதனைப் பெண்களை நாம் நினைவில் வைத்திருப்பதன் காரணம் அவர்களைப் போல் ஒரு சிலரே உள்ளனர் என்பதால் தான்.

ஆனால் பல குடும்பங்களில், முக்கியமாக தமிழ் குடும்பங்களில், ‘மெட்டி ஒலி’ தொடரில் வரும் சம்பவங்கள் இன்னமும் நிகழ்ந்துகொண்டு-தானிருக்கின்றன. அவைகளை அப்படியே மிகைப்படுத்தாமல் காண்பித்திருப்பதுதான் தொடரின் வெற்றியாக நான் மட்டுமல்ல பலரும் கருதுகிறார்கள்.

தொடரில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தால் பெண் குழந்தைகள் பிறப்பதைக் குடும்பத்தில் எப்படி விரும்புவார்கள் என்ற வாசகரின் கேள்வி அபத்தமானது. அதுமட்டுமல்லாமல் ‘விளக்கு வச்ச நேரத்தில.. அழுது தீர்க்கிறார்கள்.. அதுவும் நம்ம வீட்டுல..’ என்ற வாசகரின் விமர்சனம் நம் தமிழ் சமுதாயத்தில் வேரூன்றிபோயிருக்கும் மூட நம்பிக்கையையே காண்பிக்கின்றது.

ஒரு திரைப்படத்தையோ, தொலைக்காட்சித் தொடரையோ வெறும் கற்பனைகளாக மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர அதையும் வாழ்க்கையையும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்வது அறிவீனம் என்பது என் தாழ்மையான கருத்து.

கவியரசு வைரமுத்து விழாவில் தொடரைப் பற்றி சொல்லும்போது தொடரின் யதார்த்தமான அதே சமயம் ஆழமான வசனங்களைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்தார்.

ஒரு யதார்த்தமான, தினசரி வாழ்க்கையில், ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தொடரை அதுவும் மூன்றாண்டு காலமாக தொய்வில்லாமல் – ஒரு சில எபிசோட்களைத் தவிர – நேர்த்தியாக சொன்ன விதத்தில் தொடரின் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

அதுமட்டுமல்ல, ஒரு பாலசந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா போன்ற திறமை மிக்க இயக்குனர்களுக்கு ஈடாக தொடரில் நடித்த எல்லா நடிகர்களையும் – எல்லாம் என்றால் எல்லாம்தான்.. மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் குழந்தைகள் உள்பட – மிகச்சிறப்பாக நடிக்க வைத்திருப்பதில் இயக்குனர் பெற்றுள்ள வெற்றி மிகவும் பாராட்டுதற்குரியது.

அன்புடன்

டி.பி.ஆர்.ஜோசப்

சென்னை

tbrjoseph@csb.co.in

Series Navigation