மூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

முனைவர் மு. பழனியப்பன்
கவிதைகள் படைப்பவர்களின் மனங்களில் உருவாகும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடுகள் ஆகும். இவ்வெளிப்பாடுகள் படிப்பவர்களின் மனங்களிலும் படிந்து அவர்களை அந்த கவிதை வயத்தில் ஆட்கொள்ளச் செய்யும் பாங்குடையனவாக அமைகின்றபோது கவிஞன் வெற்றிபெறுகின்றான். மரபு, புதியது என்ற வடிவப் பாகுபாடெல்லாம் இந்தக் கவிதை வயத்திற்கு இல்லை. ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் அந்தக் கவிதை வயம் அமைந்தே கிடக்கின்றது. அதனாலே அது கவிதையாகின்றது. படிப்பவர்களை நெகிழ்விக்கிற இக்கவிதை ஆக்கங்கள் படித்தவர்களை உறுதியாக மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையை உருவாக்கிவிடுகின்றன.

அந்த வகையில் ஒரு வார காலம் கவிதைகளோடு கைகோர்த்து நடக்கின்ற வாழ்க்கை எனக்கு அமையப் பெற்றது. பாரதியின் வாழ்க்கைப் பதிவுகள், கம்பனடிப்பொடி சா. கணேசனாரின் வாழ்க்கைப் பதிவுகள், இளைஞனின் பார்வையில் தற்கால மக்களின் வாழ்க்கைப் பதிவுகள் என்ற வகையில் முன்று கவிதை ஆக்கங்களை வாசிக்க நேர்ந்தது. அவை பற்றிய கருத்துக்கள் இனி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.

கவிராசனின் புவிவாசனை ( கவித்தென்றல் நா. கண்ணன், கவிராசன் அறக்கட்டளை,36 கவிராசன் இல்லம், புதுநகர், புதுக்கோட்டை, 2008, விலை:50)

பாரதி அன்பர்கள் என்பவர்கள் பாரதியைப் படித்தவர்கள், பாரதியின் பெயரைத் தன்வீட்டுக்கு ஆக்கிக் கொண்டவர்கள், பாரதியின் பெயரைத் தன் பிள்ளைகளுக்குச் சூட்டியவர்கள் போன்றவர்கள் என்றால் அந்த அத்தனைக்கும் ஒரே சாட்சியாக வாழ்ந்து வருபவர் புதுக்கோட்டையைச் சார்ந்த கவித்தென்றல் நா. கண்ணன் அவர்கள்.

சோர்ந்து போன நேரத்தில், வைரமுத்துவின் கவிராசன் கதையைப் படிக்க நேர்ந்த கவிஞர் கண்ணனின் உள்ளத்தில்கவிராசக் கனவுகளை நனவுகளைத் தன் எழுத்தில் எழுதிப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும் எண்ணம் தோன்றியிருக்கிறது. அதன்விளைவே இந்தக் கவிதைத்தொகுதி.

எண்பத்துநான்கு பக்கங்களை உள்ளடக்கி, ஐம்பத்துஏழு தலைப்புக்களில் பாரதியின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இத்தொகுதி. கவிதைகளின் வேகத்தில் பாரதியின் காலத்தினை மீண்டும் எண்ணிப்பார்க்கச் செய்கிற அரிய முயற்சி இது.

கவிதைக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் கவிதையையும் அழகாக இணைத்துக் கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் கண்ணன். கவிதைச் சொற்களுக்குள் பொடி(றி) வைத்துப் படைக்கின்ற நேர்த்தி கவிஞர்க்கு கைவந்த கலையாய் இருக்கிறது. இந்தப் பொடிகளின் நெடியில், பொறிகளின் பிடியில் சிக்கிக் கொள்கிற வாசகர் வெளிவர பெரும்பாடாக இருக்கிறது என்பது உண்மை.

பாரதி புதுவைக்கு வந்த நிகழ்வைப் பின்வரும் அடிகள் பொடி வைத்துச் சுட்டுகின்றன. பொறி வைத்துப் படிப்பவரைப் பீடிக்கின்றன.

அரிமுக மாவனவன் அறிமுக மடலுடன்!
தெரிமுக மானவர் தேடுமோர் மனமுடன்!
புதுவை நுழைந்தனன் புதுமை நுழைந்திட!
மதுகை வழியும் மக்களும் விழைந்திட!(பக். 50)

இவ்வரிகளுக்குள் அரிமுகம், அறிமுகம், தெரிமுகம், புதுவை, புதுகை, மதுகை போன்ற சொற்களுக்குள் காணலாகும் இயைபு ஓட்டம் கண்ணன் கவிதையைச் சிறக்கச் செய்கிறது. மதுகை வழியும் மக்கள் என்ற குறிப்பு தற்காலம் சார்ந்தது எனக் கொண்டு இக்கவியடிகளை மீண்டும் படித்தால் இதன் பொருள் இன்னும் பெருகும்.

குவளைக் கண்ணன். பாரதியை நேசித்த நல்ல உள்ளம். கவிஞர் கண்ணன் பாரதியை நேசிக்கும் நல்ல உள்ளத்தார். குவளைக் கண்ணனைப் பாடும் வரிகளில் தானே குவளையாகக் கண்ணன் மாறிவிடுகிறார். பாரதியோடு தானும் வாழ்ந்ததாகக் கற்பனை கொள்ளுகின்றார்.

அன்றுமோர் குவளை! இன்றுமோர் குவளை!
ஆயினும் நாட்டிலோ இரட்டைக் குவளை!
பாட்டிடை யிட்டதும் பார்வையில் பட்டதும்
பாரதி பார்வையில் பட்டவன் யானென! (பக். 51)

என்ற அடிகளின் வழியாக பாரதியோடு யான் வாழ்ந்ததாகக் கவிஞர் கொள்ளும் கற்பனைக்கால உலகம் அவரையும் திருப்திப்படுத்துகிறது. எடுத்துக் கொண்ட பாத்திரத்தையும் திருப்தியுறச் செய்கிறது. இரட்டைக் குவளை என இச்சிறுவரிக்குள் இன்னொரு சமுகசிந்தனைப் பொறி(டி)யையும் தூவிவிடுகின்றது.

இதுபோலவே “தத்துவம் பாரதி தலைக்குள் வந்தது, தன்னை அறியுமோர் தவிப்பும் தந்தது” என்ற அடிகளில் அரவிந்தரின் நட்பு நயமுடன் தெரிவிக்கப் பெறுகிறது.

கனகலிங்கத்தின் மார்புப் பூணூல் பெறும் கவிதை மாண்பு பின்வருகிறது.

“வாயில் லிங்கமாய் வந்தவனில்லை . . .
நூலும் லிங்கமாய் நோற்றனன் கனகன்.”

என்ற வரிகளில் பிரோமானந்தாவின் பிரேமைப் பொடியின் நெடி வீசுகிறது. மேலும் `நூலும் லிங்கம் கனகன்’ என்ற சொற்களின் மாற்றிப் போட்ட (நூல் நோற்ற கனக லிங்கம்) வரிசை இன்னும் அழகு கூட்டுகிறது.

இப்படி இப்படி பற்பல பொடிகளின் காரத்துடன், பொறிகளின் பிடித்தலுடன் கவிதைப் பெருமழையாய் இத்தொகுதி பாரதிக்கு மேலும் வலு சேர்க்கின்றது. ஆங்காங்கே தேவைக்கேற்ப பாரதியின் வரலாற்றை ஒட்டிய நல்லோரின் படங்கள் ஓவியர் ராகவன் கைவண்ணதில் இடம்பெற்றுப் பெருமை கொள்ளுகின்றது. தேடி வரைந்த ஓவியருக்கு நன்றி. அட்டை ஓவியமும் அழகாய் அவரால் வரையப் பெற்றுள்ளது.

கூடவே தன்னோடு இணைந்த , இயைந்த கவிஞர்களின் பார்வையில் பட்ட பாரதி வரிகளைத் தந்திருப்பதன் வாயிலாக தனிக் கவிஞராக கண்ணன் விளங்காமல் கூட்டுக் கவிஞராக இத்தொகுதிக்குள் விளங்குகிறார். அவரின் கவிதைப் பெருவழி பெருகட்டும். இன்னும் கொஞ்சம் இருக்கம் தளரட்டும். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

கம்பனடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு, சித. சிதம்பரம், (சிவா பதிப்பகம், 140 பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை, 94. 2009, விலை. 50.00)

கம்பனடிப்பொடியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி வெளியிடப் பெற்ற கவிதைக் காப்பியம் இந்நூல். தரவுகளைத் தேடி அலைந்துத் தொகுத்து அதன் வேகம் மாறாமல், சுவை குன்றாமல் கவிதை ஆக்கியமைக்காக வெகுவாக இக்கவிஞரைப் பாராட்ட வேண்டும். அடிப்பொடியுடன் வாழ்ந்த, ஏறக்குறைய இருபது அன்பர்களைச் சந்தித்து அவர்கள் வழியாகவும், தானகவும் அறிந்து பெற்றச் செய்திகளை கவிதை வயமாக்கியிருக்கும் கவிஞரின் உழைப்பிற்குத் தக்கப் பரிசுகள் கிடைக்க வேண்டும்.

எண்பத்தெட்டுப் பக்கங்களில் நிகழ்விற்கு ஏற்ற பல்வகைக் கவிவடிவத்துடன் செறித்துச் செய்யப் பெற்றிருக்கிற உணர்வுக் காவியம்/ காப்பியம் இக்கவிதை நூல்.

தன்னிகரில்லாத் தலைவன், இருசுடர் தோற்றம், உலா, விழா எனப்பல காப்பியப் பாவியத் தகுதிகளுடன் இக்கவிதைக் காப்பியம் இலங்குகின்றது. அதனால் இதனைக் காப்பியம் என்றே தமிழுலகம் ஏற்க வேண்டும்.

இந்நூலுள் சிறுச் சிறு செய்திகளுக்குக் கூட அழுத்தம் தரப் பெற்றிருப்பது காப்பியத்தில் இடையே வரும் கிளைக்கதைகள் போன்று சுவை பயப்பதாக உள்ளன. காமராசரை முன்னறிவிப்பு இன்றிச் சந்திக்கப் போன கணேசனார் அனுபவத்தைப் பின்வரும் அடிகள் காட்டுகின்றன.

“திருமலைப் பிள்ளை வீதியில் வாழ்ந்த காமராசர் வீட்டுக்கு
ஒருமுறை முன்னர் அறிவிப்பின்றி சா. க. சென்றார் காணற்கு
வருவதை அறிந்த காமராசர் வழித்த பாதி முகத்தோடு
வரவேற்றாராம் கணேச அண்ணலை மரியாதை அன்புமனத்தோடு”
(ப. 58)

இரு சான்றோரிடத்திலும் சமமான அணுகுதலோடு இக்கவிதை அடிகளைக் கவிஞர் செய்திருக்கிறார்.

“காந்திச் சதுக்கத் துப்பாக்கிச் சூட்டில் பலியானார் தொழிலாளி நெல்லியான் ( ப. 31)” என்று காரைக்குடியின் விடுதலை வரலாற்றிற்கும் சிம்மாசனம் இட்டுச் சிறுசெய்திகளுக்குத் தக்க இடம் கொடுக்கிறது இக்காப்பியம்.

இக்காப்பித்தில் சா. கணேசனாரின் தலைமறைவு, சிறைவாழ்வு மிக்க நேர்த்தியாக வடிவமைக்கப் பெற்றிருக்கிறது. மையப்பகுதியில் வரும் இப்பகுதி காப்பியத்தின் அழுத்தமிக்கப் பகுதியாகும்.

அட்டுழியங்களின் பட்டியல்கள்/ ஆணவத்தின் உத்தரவுகள்/ சா. கவின் தாயாரும்/ மனைவியும் மக்களும்/ தனித்திருந்த வீட்டில் / மலபார் போலிசார் வழியை / மறித்து நின்றனர்/ சிலுவையைச் சுமந்த மகன்/ சிறுசைச் சுமந்த மருமகள்/ வறுமை அறியாத வாழ்க்கை/ வாரிக் கொடுத்தச் செங்கை/ நாட்டிற்குத்/ தன்மகளை ஈன்ற தாய்/ வீட்டிற்குள் அடைக்கப்பட்ட வேதனை/ புன்னகை தொலைத்த போராளியின் மனைவி/ சின்னஞ்சிறிய செல்லமகள்/ தன்னை அடக்கித் தவமிருந்த தோற்றம்/ தியாகியைத் தெரிகிறது/ தியாகத்தைத் தெரிகிறது/ பின்புலம் என்றேனும் பேசப்படுகிறதா?( ப. 35)

வருத்தக் கோர்வைகளின் பட்டியலாய் கவிதை புதுக்கவிதை வடிவமெடுத்து ஓடுகின்றது. மனதில் வேதனை மறையாமல் நிற்கிறது.

தமிழ்த்தாய்க்குக் கோயில் வடித்து நிற்கும் கணேச அண்ணலின் பக்கத்தில் நின்று அங்குள்ள தமிழ்த்தாய்க்கு வணக்கம் பல சொல்லிக் கவிஞர் தன் தமிழ்த் தாகத்தினைத் தீர்த்துக்கொள்ளுகிறார். தமிழ்த் தாய்க்காகப் பாடப்பட்ட பதிமுன்று விருத்தங்களும் தமிழுக்குக் கிடைத்த விருந்துகள். ஒன்று மட்டும் பின்வருமாறு.

மொழிப்புலத்தின் ஒருமையிலே தொழுது போற்ற
முகம்மதியர் கிறித்தவர்கள், சமணர், இந்து
எழிலான மதம்கடந்த தேவி ஆனாய்!
எந்தமிழர் காரைநகர்க் கணேச மண்ணில்
அழியாத அறுகோணக் கோபுரத்தில்
அய்யன் வள்ளுவன் இளங்கோ கம்பனோடு
மொழியரசி நடுவிருக்க பரிவாரத்தில்
முன்னிருந்து வாழ்த்துகிறாய் முவாத்தாயே! (ப. 76)

கம்பன் திருநாளின் பெருமை கூறும் பெரும் பகுதி இத்தனை நாள் கம்பன் திருநாள்களின் அழியாப் பட்டியல். படிக்கப் படிக்க மேடைகள் நினைவிற்கு வருகின்றன. பேச்சாளர்கள் பேசும் மனக்காட்சி விரிகின்றது. இப்பகுதிகளில் கவிஞர் நேரடி சாட்சியாக கம்பன் திருநாளுக்கு அமைந்துள்ளார்.

தற்காலத் தடுமாற்றங்களும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்படும் கவிஞரின் கருத்து நேர்மை சுட்டிக்காட்டத்தக்கதாகும். கணேசனார் தேர்தல் களம் கண்டபோது சில பின்னடைவுகளைச் செய்யச் சிலர் எண்ணினர். அதுகுறித்தக் கவிதைக் கண்டனம் பின்வருமாறு.

திசையெங்கும் பணம் கொடுத்து வாக்கு வாங்கும்
பணநெறியை இந்தியா கண்டதன்று!
பலமடங்கு கூடியது காணும் இன்று! (ப. 47)

இப்படி இனிய எளிய, தேவையான கவிதைச் செழுமையாய் இக்காப்பியம் அடிப்பொடியின் பெருமைக்கு அணி சேர்க்கின்றது. கவிஞரின் கவி உள்ளம் நம்மைப்போன்று படித்தவர்களால் பெரிதும் பேசப்பட வேண்டும். பேசப்படும்.

உயிர்வலிவேல். சரவணக்குமார்யாழினி வெள்ளவெட்டான் விடுதிபெருங்களுர் அஞசல்2009
இளைஞனின் பார்வையில் வாழும் மக்களின் பதிவை உயிர்வலி என்ற வேல். சரவணக்குமாரின் தொகுதி எடுத்துக்காட்டுகின்றது.

பல கவிதைகளின் தொகுப்பாக நூற்று எட்டுப் பக்கங்களில் விரிகின்றது இத்தொகுப்பு. இதனுள் கவிஉளம் மிக்க, கவிவளத்தை நோக்கிச் செல்கிற இனிய கவிஞராக வேல். சரவணக்குமார் தெரிகிறார். இவரால் இவரின் ஊரான வெள்ளவெட்டான் விடுதி இலக்கியப் பெருமை பெறுகின்றது.

அஃறிணையை அழைப்பதாய்/ அதட்டவாள் அம்மாள்/ அன்போடு ஓடிவருவார் அப்பா/ இருவரும் பேசிக் கொள்வார்கள்/ வாதம் சூடாக இருக்கும்/ சாப்பிடாமல் கூட படுத்துக் கொள்வார்கள் இருவரும்/ ஆறிப்போன தோசையைத் தின்போம் நானும் தம்பியும்/ விடிந்தபொழுது சூடாகக் காப்பி தருவாள் அனைவருக்கும்/ எதுவும் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்போம் நானும் தம்பியும்(ப. 47)

என்ற இக்கவிதையின் தலைப்பு காதலர் என்பதாகும். அப்பா, அம்மாவின் சண்டை எதனால் சமாதானம் ஆனது என்பதை அறியாத அண்ணன் தம்பிகளின் எதார்த்த நிலையை இக்கவிதை தெற்றெனப் புலப்படுத்துகிறது.

சுடிதாரின் சோகத்தை சில வரிகள் தெரிவிக்கின்றன. “எப்படிப் பசியாற்ற முடியும்/ மாராப்பு இல்லாத/ சுடிதாரை விலக்கி”(ப. 33) என்ற கவிதைக்குள் ஆணின் தவிப்பை உணரமுடிகின்றது.

“வீச்சமெடுத்த வார்த்தைகளால்/ என் வீட்டாரை இழுக்கும் பொழுதும் சகித்துக் கொள்கிறேன்/ இரவுகளில் கட்டித் தழுவி /நீ புரளும்போது இறந்து விடுகிறேன்” என்ற வரிகளில் பெண்ணின் வேதனைப் புலப்படுகிறது.

ஒதுக்கப்பட்ட இவர்கள் / உயிருடன் இருப்பதே/ இறந்தபொழுதுதான் தெரிகிறது (ப. 76) என்று ஒதுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கவிதை.

தன் அனுபவத்தை தக்க நிலையில் சேமித்துத் தடையின்றி வழங்கியிருக்கிற வேல். சரவணக்குமாருக்கு வாழ்த்துக்கள். எழுதுங்கள்! இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்.


M.Palaniappan
muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்