மூன்றாவது தோல்வி

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

கோ.துக்காராம்


அந்த விண்கலத்தின் மூன்றாவது அடுக்கில் வரிசையாக போர்வீரர்கள் படுத்திருந்தார்கள். கணங் கணங் என்ற ஒலியுடன் ஒரு போர் வீரன் நடந்து சென்றதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நடந்து சென்ற போர்வீரன் நேர்குத்தாகத் திரும்பி தன்னுடைய படுக்கையில் படுத்தான். அவனது முகத்துக்கு நேரே இருந்த ஒரு மூடி கூரையிலிருந்து கிழிறங்கி அவனை மூடியது.

நானும் அதுபோலவே படுத்திருந்தேன். நான் ஒரு தவறான போர்வீரன். எனது மூளை சரியாக சுத்தம் செய்யப்படவில்லை என்று நான் உணர்ந்திருந்தேன். நான் சரியாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்று எஜமான் அறிந்தால், நான் கொல்லப்படுவேன். வாயைத் திறக்கவில்லை நான்.

அடுத்த தாக்குதல் இன்னும் சில மணிநேரங்களில் வரும். எனக்குத் தெரியும். அத்தனை மணி நேரங்களே எனக்கு ஓய்வு. அந்த நேரத்துக்குள் என்னுடைய உடல் சரிபண்ணப்பட வேண்டும். கீழிறங்கும் இந்த மூடி என்னை எக்ஸ்ரே, இன்னும் இதர பரிசோதனைகளைப் பண்ணி என்னை மரத்துப் போக வைத்து என்னை மறுபடி போர் செய்ய தயாராக ஆக்கவேண்டும். அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் நான் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும். நான் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. இதுதான் அவஸ்தை. தன்னுடைய உடல் பிய்த்துப் போடப்படுவதை பார்த்துக்கொண்டே விழித்திருப்பது. இந்த ஒரு விஷயமே போதும் நான் ஒரு தவறான போர்வீரன் என்பதற்கு.

எங்களது விண்கலத்தில் நிச்சயமான ஒரு சமத்துவம் தான் இருக்கிறது. எஜமானின் உண்மையான பெயர் தலைமை போர்வீரன் அவ்வளவுதான். அதுவும் நிரந்தர தலைமை போர்வீரன் கிடையாது. அது ஒரு பேருக்குத்தான் தலைமையே தவிர, எங்களுக்கு எல்லாம் தெரியும். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். என்ன தாக்குதல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பது அத்துப்படி. மூளையிலேயே செருகிவிட்ட சமாச்சாரம்.

இறந்து போகக்கூடாது என்பது எனக்கு மிகவும் தெரிந்த சமாச்சாரம். ஆனால், இறப்பது என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்காத ஒரு விஷயத்துக்கு எப்படி எனக்கு பயம் வந்தது என்பது கூட எனக்குப் புரியவில்லை.

இன்னும் கொஞ்சம் கதை சொன்னால்தான் உங்களுக்கு புரியும். நான் பிறக்கும்போதே போர்வீரனாகத்தான் பிறந்தேன். அப்படிச் சொல்லமுடியுமா ? ம்ம்… எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே நான் போர்வீரனாகத்தான் இருக்கிறேன். இது சரியாக இருக்கும். ஏனெனில், என்னுடைய இந்த நினைவு தெரிவதற்கு முன்னால் என் மூளையில் என்ன இருந்தது என்ன நினைவு இருந்தது என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை நான் குழந்தையாக இருந்திருக்கலாம். ஆனால், என்னுடைய போர்வீர வாழ்க்கையில் குழந்தைகளைப் பார்த்ததும் இல்லை. இதுதான் என் மூளைச்சலவையில் பிரச்னையோ என்னவோ. பார்க்காத கேட்காத அனுபவிக்காத விஷயங்கள் மூளையில் அங்கங்கு பாக்கி இருக்கின்றன. இது வாழ்க்கையை மிகவும் குழப்பிவிடுகிறது. மேலும் நாங்கள் இரண்டுவாரங்களுக்கு முன்னர் எதிரி தேசத்தை அழிக்க குண்டுமழை பொழிந்தபோது இத்தனை குழந்தைகள் இறந்தார்கள் என்ற புள்ளிவிவரம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. (ஒரு லட்சம்) குழந்தைகளையே நான் பார்த்ததில்லை என்றாலும், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமல் இருந்தாலும் நான் வருத்தப்பட்டேன். ஆனால் மற்ற போர்வீரர்கள் அதனைப் பற்றியே கண்டுகொள்ளாமல் இருந்ததால் நானும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொண்டு, அதன் பின்னர் என் மூளை சரியில்லை என்று காலாவதி பண்ணிவிட்டால் என்ன செய்வது ?

ம்ம்.. சொல்லப்போனால், காலாவதி பண்ணிய போர்வீரனைக் கூட நான் பார்த்ததில்லை. என் கூட இதே 300 பேர்கள்தான் போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் யாரும் இறக்கவும் இல்லை. எங்கள் விண்கலமே சுத்தமாக உடைந்து போனால்தான் நாங்களெல்லாம் இறப்போமோ என்னவோ. எங்களுக்கு மருத்துவம் செய்ய இந்த விண்கலம் இருக்கும் வரைக்கும் எங்களுக்கும் இறப்பில்லையோ என்னவோ.

திடாரென்று பம்பம்…பம்பம் என்று அலறத்தொடங்கின ஒலிபெருக்கிகள். அவ்வளவுதான் ஓய்வு. ஆனால் என் உடலை சரி பண்ண இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறது. நான் படுத்திருந்தேன். என் மீது கவிந்திருக்கும் மூடியை எடுத்தால்தானே நான் எழுந்திருக்க முடியும் ? மற்ற போர்வீரர்கள் எழுந்தார்கள். கணங் கணங்க் என்ற ஒலியெழுப்பி அவர்கள் சென்றார்கள்.

திடாரென்று விண்கலம் பலத்து குலுங்கியது. லாசர் ஏவுகணை அடித்திருக்கும். திரையைப் பார்த்தால் தெரியும். நான் தான் இங்கு படுத்திருக்கிறேனே. இன்னும் பத்து லாசர் ஏவுகணைகளை மொத்தமாக தாங்கக்கூடிய வலிமை கொண்டது எங்கள் விண்கலம். எதிரி போர் விண்கலங்களில் ஏதும் ஒரே நேரத்தில் பத்து லாசர் ஏவுகணைகளை வீச வலிமை இல்லாதது. (ஒரு சிலவற்றைத் தவிர)

ஒரு பக்கம் படு முட்டாள்த்தனமாக இருக்கிறது இந்த போர். நினைவு தெரிந்த நாள் முதலாகப் போர் புரிந்து வந்தாலும் மனது ஒட்டவில்லை. இந்த போருக்கு முகம் இல்லை. நான் ஒரு சிறைக்கைதி போல போர் புரிந்து கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் போர் புரிந்து கொண்டிருக்கிறோம். நான் எப்போதாவதுதான் மற்ற போர் வீரர்களுடன் பேசுகிறேன். பல நேரங்களில் அவர்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை. நான் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை. நான்பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை என்பதன் ஆரம்ப அறிகுறி தெரியவந்ததுமே நான் நிறுத்துவிட்டேன் பேசுவதை.

மேலும் பேச நேரமும் இல்லை. போர் போர் போர் தான் தொடர்ந்து. உடல் ஆறுவதற்கு முன்னால் இன்னொரு அடி. இப்போதுகூட என் உடலுக்கு மருத்துவம் நடந்து கொண்டே இருக்கிறது. குண்டு மழை எங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது.

தீவிரமாக விண்கலத்தை எதிரிக்கப்பலிடமிருந்து தப்பி ஓட வைத்துக்கொண்டிருக்கும்போது கூட என்னுடைய மனதில் நான் யார் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இவ்வாறு வளர்ந்த போர் வீரனாவதற்கு முன்னால் என்னவாக இருந்தேன் ? யார் இவர்கள் ? ஏன் போர் புரிந்து கொண்டிருக்கிறேன். எதிரி விண்கலம் என்பதை யார் நிர்ணயம் செய்தார்கள் ? இந்த விண்கலம் செய்கிறதா ?

ஆனால் எங்கள் விண்கலமும் எதிரி விண்கலமும் வெவ்வேறு வடிவிலானாவை என்பது எங்களுக்குத் தெரியும். எங்களது சகோதர விண்கலங்கள் வேறு வடிவமும் வண்ணமும் கொண்டவை. ஆபத்து காலத்தில் சகோதர விண்கலங்கள் எங்களைக் காப்பாற்றும். எதிரி விண்கலங்கள் மீது குண்டு மழை பொழியும். அவர்கள் திக்குமுக்காடும்போது நாங்கள் தப்பிப்போம்.

நான் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தேனா என்பது என்னை வெகுகாலம் வாட்டி வந்தது. குழந்தையாக இருந்தேன் என்றால் யாருடைய குழந்தையாக இருந்தேன் ? என் அப்பா அம்மா யார் ? எப்படி நான் இந்த விண்கலத்தில் போர் வீரனாக ஆனேன் ? என்னை ஏன் மூளைச் சலவை செய்ய அனுமதி அளித்தேன். மூளைச் சலவை செய்ய நான் அனுமதி அளித்தேனா அல்லது கட்டாயத்தினால் என் மூளை சலவைச் செய்யப்பட்டதா ? கட்டாயத்தின் பேரில் என் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தால், அதனை நான் அறிவதெப்படி ?

எங்களது விண்கலங்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உண்டு. நீலவண்ணத்தில் உருண்டோடும் ஒரு கிரகத்தை காப்பாற்றுவது. எதிரிப்படைகள் காக்கும் கிரகம் சிவப்பு வண்ணத்தில் உருண்டோடுகிறது. உருண்டோடும் இந்த கிரகங்களில் வாழும் மனிதர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள தொடங்கிய போர்தான் இது. நீலவண்ண கிரகத்தின் அனைத்து விண்கலங்களுக்கும் நீல வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீலவண்ண கிரகத்தை பூமி என்று அழைக்கிறார்கள். சிவப்பு கிரகம் உண்மையில் சிவப்பு கிரகம் அல்ல. அது ஒரு சிவப்பும் நீலமும் கலந்த ஒரு வண்ணம். சமீபத்தில்தான் நீலமானது போல ஒரு தோற்றம். அதனை செவ்வாய் என்று அழைக்கிறார்கள். எங்களது குறிக்கோள் செவ்வாய் கிரக மக்களை அழிப்பதுதான். சென்ற மாதம் வெற்றிகரமாக அங்கு நாங்கள் நடத்திய போரில் பல செவ்வாய் விண்கலங்களுக்கு டிமிக்கி கொடுத்து ஒரு ஊரை அழித்தோம். அதுதான் மேலே சொன்ன 1 லட்சம் குழந்தைகள் சமாச்சாரம். கூடவே வளர்ந்தவர்கள் 3 லட்சம் பேர் இறந்ததாக புள்ளிவிவரம் சொன்னது.

நான் ஒருவேளை பூமியில் பிறந்திருக்கலாம். அதனைக் காப்பாற்ற வேண்டி போர் வீரனாக இறங்கி இருக்கலாம். சொந்தம் பந்தம் குழந்தைகள் போன்ற சமாச்சாரங்கள் மனதில் இருந்தால் சிறப்பான ஒரு போர்வீரனாக இருக்கமுடியாது என்று நினைத்து என் மூளைச் சலவையை நானே ஏற்றுக்கொண்டிருக்கலாம். எல்லாம் லாம்-தான். எதற்குமே என் மூளையில் ஆதாரம் இல்லை. அங்கங்கு இருக்கும் சில விஷயங்களை வைத்து கோர்த்துக்கொண்டிருக்கிறேன்.

பூமியிலிருந்து எங்களுக்கு எந்தவிதமான செய்திகளும் வருவதில்லை. ஒரு சில வேளைகளில் சில கட்டளைகள் வருவதுண்டு. அந்த கட்டளைகளும், விண்கலத்தின் திரையின் வழியாக வருவதில்லை. தினசரி மூளைச்சலவையின் போது அந்த கட்டளைகள் எங்கள் மூளையில் நடப்படும். அவற்றை எங்களால் செய்யாமல் இருக்கமுடியாது.

ஒரு முறை நான் அப்படி முயன்றேன். வந்த கட்டளை செவ்வாய்க்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு அஸ்ட்ராய்ட் கல்லின் மீது லாசர் ஏவுகணையை வைத்துத் தாக்குவது. அந்த அஸ்ட்ராய்ட் கல்லின் மீது சில செவ்வாய் மக்கள் பரிசோதனை செய்துகொண்டிருப்பதாகவும், அவர்களை அழிக்க வேண்டும் என்றும் கட்டளை. நான்தான் அப்போது தலைமை போர்வீரனாக இருந்தேன். இருப்பினும் என்னால் அந்த கட்டளையை நிறைவேற்றத்தான் முடிந்தது. என் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தது. என் கை தானாக சென்று பட்டனை அழுத்தி லாசர் ஏவுகணையை அந்த குறியிட்ட அஸ்ட்ராய்ட் கல்லுக்கு நேராக அனுப்பியது. அந்த வினாடி என் மனம் ஒரு திசையிலும், என் உடல் மறு திசையிலும் இருப்பதை உணர்ந்தேன்.

சொல்லப்போனால், அந்த கட்டளை என் கைக்கு நேராக அனுப்பப்பட்டது போல என் கை தானாக வேலை செய்த அதிசயத்தைப் பார்த்தேன்.

அன்றிலிருந்துதான் என் மூளையில் நடக்கும் விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன். நான் என்ன யோசிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நேற்று யோசித்ததை மீண்டும் அசை போட்டு அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள விரும்பினேன். தினசரி மூளைச் சலவை செய்ததும், நேற்று யோசித்ததை மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள யோசித்தேன். பிரச்னை என்னவென்றால், மூளைச்சலவை என் தினசரி மருத்துவத்துடன் சேர்ந்தது. அவற்றை தனியாகப்பிரிக்க முடிந்தால் நல்லது. இல்லையென்றால், தினசரி மருத்துவத்துக்கே போகாமல் இருக்க வேண்டும். ஆனால் என்னால் தினசரி மருத்துவத்துக்குப் போகாமல் இருக்க இயலாது. ஒரு முறை முயற்சி செய்துகூட பார்த்தேன். என் கால்கள் தானாகச் சென்றன. என் உடல் தானாக படுக்கையில் படுத்துக்கொண்டது. என்னால் என்ன செய்ய முடியும் ?

இப்போதுகூட படுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். மூடி என்னை அமுக்கிஇருக்கிறது என்று நான் சொன்னாலும் அது அவ்வளவு வலிமையாக என்னை அமுக்கி பிடித்துக்கொண்டு எனக்கு மருத்துவம் பார்க்கவில்லை. ஏதோ மூடி மாதிரி இருக்கும் இந்த சமாச்சாரத்துக்குள் என் முழு உடலையே மாற்றிவிட எல்லா சமாச்சாரங்களும் இருக்கின்றன. இத்தனை காலப் போருக்குப்பின்னால், உண்மையில் எலும்பு இருக்கும் இடங்களில் எல்லாம் எஃகு குச்சிகள்தான் இருக்கின்றன. தோலுக்குப் பதிலாக செயற்கை தோல்தான் இருக்கிறது. மூளையும் என்னுடைய மூளையா என்றுகூட சந்தேகம் வருகிறது. (என்னுடைய மூளை இல்லை என்றால் என்ன அர்த்தம் ? அதற்கு என்னுடைய உடல் இல்லை என்று அர்த்தமா ?)

என்னுடைய உடல் மீது நான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால், என்னால் முடியவில்லை. இந்த சும்மனாச்சிக்கும் மூடியைக் கூட தள்ள முடியவில்லை.

ஏறத்தாழ முடிவு செய்துவிட்டேன். அடுத்தாற்போல ஒரு கட்டளையை மறுப்பது என்று. என்னுடைய மருத்துவமும் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது.

‘பய்ங் ‘ என்று மூடி திறந்து மேலே சென்றது.

நான் எழுந்தேன். வழக்கம்போல விண்கலத்தின் முக்கிய கட்டளை அறைக்குச் சென்றேன். சக போர்வீரர்கள் மும்முரமாக ஒரு லாசர் ஏவுகணையைத் தயார் செய்துகொண்டிருந்தார்கள்.

என்னுடைய இடம் காலியாக இருந்தது. நான் சென்று அங்கு அமர்ந்தேன். நான் தான் பட்டனை அழுத்தவேண்டும். எதிரே ஒரு செவ்வாய் விண்கலம் எங்களை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்தது. அந்த விண்கலத்தின் பின்னால் ஒரு பாஸஞ்சர் விண்கலம் செவ்வாய் கிரக மக்களை ஏற்றிக்கொண்டு அஸ்ட்ராய்ட் நோக்கிப் போகிறது. நான் செவ்வாய் போர் விண்கலத்தை அழித்தால், பாஸஞ்சர் விண்கலம் கொஞ்ச நேரம் தப்பும். ஆனால், இறுதியில் பாஸஞ்சர் விண்கலம் எங்களால் அழிக்கப்பட்டுவிடும். பின்னர். நான் முதலில் பாஸஞ்சர் விண்கலத்துக்கு குறிவைத்தால், அந்த நேரத்தில் செவ்வாய் போர்விண்கலம் எங்களை அழித்துவிடும். எங்களால் முடிந்ததோ இரண்டு லாசர் ஏவுகணைகளை வீசுவது. ஆனால் எதிரி போர் விண்கலம் ஒரே நேரத்தில் பத்து லாசர் ஏவுகணைகளை வீசக்கூடியது. அதனால்தான் அது பாஸஞ்சர் விண்கலத்துக்கு பாதுகாவலனாக வருகிறது. அந்த இடத்திலிருந்து ஓடுவதுதான் சரியான விஷயம். ஆனால் வந்த கட்டளை பாஸஞ்சர் விண்கலத்துக்கு குறி வைக்கச் சொல்லி.

நான் பாஸஞ்சர் விண்கலத்துக்கு குறி வைக்கப்போவதில்லை என்று முடிவு செய்தேன். அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை என்றாலும், கட்டளையை மறுக்கவேண்டும் என்பதற்காகவே அந்த முடிவை எடுத்தேன்.

இன்னும் 19 வினாடிகள் இருந்தன நான் பட்டனை அழுத்த. நான் பட்டனை அழுத்தப்போவதில்லை. என் மனமா அல்லது இந்த உடலா என்று பார்த்துவிடலாம் என்று இருந்தேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

என் விரல் பட்டனை அழுத்தவில்லை.

லாசர் ஏவுகணை பாஸஞ்சர் விண்கலத்தை நோக்கிப் பாய்ந்தது. செவ்வாய் போர்விண்கலத்திடமிருந்து இரண்டு லாசர் ஏவுகணைகள் புறப்பட்டன. ஒன்று எங்களது லாசர் ஏவுகணையைத் தாக்கியது. மற்றொன்று எங்களை நேராகத் தாக்கியது. எங்கள் விண்கலம் ஆடியது. இன்னொன்று அந்த செவ்வாய் விண்கலத்திடமிருந்து புறப்பட்டது. அது எங்களை இன்னொரு முறை தாக்கியது. இன்னொன்று ன்னொன்று இன்னொன்று இன்னொன்று..

….

ஒரு வழியாக நான் இறந்தேன்.

****

‘நீ பூமி-செவ்வாய் போர் விளையாட்டில் மூன்றாம் முறையாகத் தோற்றாய்… ‘ என்றான் முருகன்.

‘நீ ஏதோ விளையாட்டு புரோகிராமில் நோண்டி எதையோ மாத்திட்ட ‘ என்றவாறு வள்ளி தன்னுடைய மகா கம்ப்யூட்டரை எடுத்துக்கொண்டு ‘அம்மா.. ‘ என்று ஓடினாள்.

***

thukaram_g@yahoo.com

Series Navigation

கோ.துக்காராம்

கோ.துக்காராம்