முள்பாதை 54

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

வாசல் கேட் அருகில் வந்து நின்ற பிறகுதான் கிளம்பும் முன் அம்மா சாரதியை அழைத்து வரச்சொல்லி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. ஒருக்கால் சாரதி வந்திருப்பானோ. அவன்தான் ராஜியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டு இருக்கிறானே. அவன் வரவில்லை என்றால் மறுபடியும் கிளம்புவோம் என்ற எண்ணத்துடன் காரை வெளியிலேயே நிறுத்திவிட்டு சிறிய கேட் வழியாக உள்ளே போனேன்.
ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து வராண்டா படிகளில் ஏறிக் கொண்டிருந்தவள் சட்டென்று நின்றுவிட்டேன். உள்ளேயிருந்த அம்மாவின் குரல் கூச்சல் போடுவதுபோல் கேட்டுக் கொண்டிருந்தது. சாதாரணமாகவே உரத்தக் குரலில் பேசுவதை விரும்பாத அம்மா இப்படி பண்பை, நாகரீகத்தை மறந்து போய் கத்துகிறாள் என்றால் நடக்கக் கூடாதது ஏதோ நடந்திருக்க வேண்டும். அதுவும் சுயநினைவை இழந்த போகும் அளவுக்கு கோபத்தை, ஆவேசத்தை ஏற்படுத்திய சம்பவமாக இருக்க வேண்டும். அப்படி என்னதான் நடந்திருக்கும்? வராண்டா தூணுக்குப் பக்கத்தில் மறைவாக நின்றபடி அந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்.
அம்மா அப்பாவின் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். “உங்களுக்குக் கொஞ்சமாவது மூளை இருக்கா? நடந்ததற்கு புத்தி புகட்டுவதை விட்டுவிட்டு இந்த நாதியற்றவளுக்கு வக்காலத்து வாங்கறீங்களே?
“கிருஷ்ணவேணீ! ஏற்கனவே இரண்டு மூன்று முறை சொல்லி விட்டேன். ராஜேஸ்வரி நாதியற்றவள் இல்லை. நாக்கில் நரம்பு இல்லாதது போல் பேசாதே. அந்தக் கடிதத்தை எழுதியது யாரோ அவனையே கேள். நம்முடைய மகளை பண்ணிக் கொள்வதாக சொல்லிவிட்டு நமக்குப் பின்னால் இவ்வளவு நாடகம் ஆடவேண்டிய தேவை என்னவென்று கேள். நம்பிக்கை துரோகம் செய்வதனை உலுக்கி எடு. வேண்டுமென்றால் நானும் கூட வருகிறேன்.”
இந்த உரையாடலைக் கேட்டதும் எனக்கு உயிரே போய்விட்டது போல் இருந்தது.
அம்மா அதே வேகத்தில் பதில் சொன்னாள். “யாரை என்ன கேட்கணுமோ, யாருக்கு எப்படி புத்தி சொல்லணுமோ எனக்குத் தெரியும். உங்களுடைய அறிவுரைகள் எனக்குத் தேவையில்லை.”
“ராஜியின் மீது உன் கை பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்.”
“சும்மா இருக்காமல் என்ன செய்ய முடியும் உன்னால்? பெற்ற மகளின் எதிர்காலத்திற்கு உலை வைக்க தயாராகிவிட்ட இந்தச் சதிக்காரியை இன்னும் வீட்டில் வைத்துக் கொள்ளணும் என்று சொல்றீங்களே? நீங்களும் ஒரு தந்தைதானா? இது என்னுடைய வீடு. என் இஷ்டம்! நீங்க எல்லை மீறி பேசினால், தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் வேலைக்காரர்களுக்கு முன்னால் அவமானப்படும்படி ஆகிவிடும். ஜாக்கிரதை! நமக்குப் பின்னால் இவ்வளவு நாடகம் ஆடுவாளா? எவ்வளவு நெஞ்சழுத்தம்? இந்தாடீ உன்னைத்தான்! இந்த நிமிடமே இந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடு.”
அம்மா ராஜியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்து வெளியே தள்ளினாள். ஏற்கனவே அங்கே வந்து விட்ட அப்பா ராஜியின் இரண்டாவது கையைப் பற்றி உள்ளே இழுத்தார். ஆவேசத்தில், கோபத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் உக்கிரமூர்த்திகளாக நின்றிருந்த அந்த இருவருக்கும் நடுவில் ராஜி மிரண்டுவிட்ட மான்குட்டியைப் போல் நின்றிருந்தாள். எந்த நிமிடமும் வெளியேறுவதற்கு தயாராக இருப்பது போல் தளும்பிக் கொண்டிருந்த அவளுடைய விழிகளைப் பார்த்ததும் எனக்கு துக்கம் பொங்கி வந்தது. இனியும் தாங்க முடியாமல் சட்டென்று உள்ளே போனேன்.
என்னைப் பார்த்ததும் அம்மாவின் கோபம் என்மீது திரும்பியது. கையிலிருந்து கடிதத்தை என் முகத்தில் வீசிவிட்டு “வாவிமகளே! வழியில் போய்க் கொண்டிருந்த சனியை வலுவில் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறாய். அதை படித்துப் பார். உனக்கே புரியும். இதற்கெல்லாம் காரணம் நீதான். உன்னைப் போன்ற துப்பு கெட்டவளை நான் எங்கேயும் பார்த்ததில்லை. உன்னை முட்டாளாக்கி உன் அதிர்ஷ்டத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டிருக்கிறாள்.”
என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக் கொண்டே போலி வியப்பை காட்டியபடி கடிதத்தை படிக்கத் தொடங்கினேன்.
அங்கேயே இருந்த திருநாகம் மாமி இரண்டே எட்டில் என் அருகில் வந்தாள். தாழ்ந்த குரலில் “இன்னிக்கு நாம் எல்லோருக்கும் கண்முழிச்ச வேளை நல்ல வேளை. இந்தக் கடிதம் என் கண்ணில் பட்டுவிட்டது. இல்லாவிட்டால்…” என்று சொல்லிக்கொண்டே கண்களை சுழற்றினாள்.
நான் செய்த தவறு எனக்குப் புரிந்துவிட்டது. இதெல்லாம் மாமியின் கைங்கரியம்தானா! கிருஷ்ணனிடம் கிளம்பும் அவசரத்தில், கூட வருவேன் என்று ராஜி பிடிவாதம் பிடிக்கப் போகிறாளே என்ற பயத்தில் சாரதி ராஜிக்கு எழுதிய கடிதத்தை பீரோவில் வைக்க மறந்துவிட்டேன்.
கெட்டது குடி என்று நினைத்தபடி மாமியின் பக்கம் பார்த்தேன். ஏற்கனவே லட்சணம் குறைவாக இருந்த அந்த முகத்தில் ராஜியை பழி வாங்கிவிட்ட திருப்தி பிசாசாக ஆனந்த தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
“எவ்வளவு கொடுமை மாமி! எனக்கு பின்னால் இவ்வளவு நாடகம் நடப்பது எனக்கு தெரியவே தெரியாது” என்றேன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டே.
எத்தனையோ எதிர்பார்ப்புகளு¡டன் என் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த ராஜி இந்தப் பேச்சைக் கேட்டதும் திகைத்துப் போய்விட்டாள். அப்பாவும் வாயடைத்துப்போனவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார். நான் கடிதத்தை மம்மியிடம் கொடுத்துவிட்டு ராஜியை நோக்கிப் போனேன். அவளுக்கு எதிரே நின்றுகொண்டு தீவிரமான குரலில் “இத்தனை நாளும் பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்திருக்கிறேன். நீ இது போல் நம்பிக்கை துரோகம் செய்வாய் என்று கனவிலும் நினைக்கவில்லை. எவ்வளவு துணிச்சல் உனக்கு?” என்று அதட்டினேன்.
ராஜி பைத்தியம் போல் மிரள மிரள விழித்தாள். இதெல்லாம் வெறும் நடிப்பு என்று உணர்த்துவது போல் உதட்டை பிதுக்கி ஒரு கண்ணை மூடி திறந்தேன். அவள் குழப்பத்துடன் பார்த்தாள்.
ஆள் காட்டி விரலை உயர்த்தி மிரட்டுவது போல் சொன்னேன். “மம்மி நல்லவள் என்பதால் இன்று உன் உயிர் பிழைத்துவிட்டது. இதே வேறு ஒருவர் வீட்டில் நடந்திருந்தால் இந்த நேரம் உன்னை…”
என் வார்த்தைகள் இன்னும் முடியக்கூட இல்லை. இடிவிழுந்ததுபோல் அப்பா கர்ஜித்தார்.
“மீனா!!”
வியப்புடன் திரும்பிப் பார்த்தேன். எனக்கு நினைவு தெரிந்தது முதல் எப்போதும் பார்த்திராத அளவுக்கு அப்பாவின் முகம் ஆவேசமாக இருந்தது. “நீ… நீ…” ஆவேசத்தில் வார்த்தைகள் வெளியே வராமல் தடுமாறின.
அதே சமயத்தில் வாசலில் கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. அம்மா திருநாகம் மாமியின் பக்கம் பாத்தாள். அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டவள் போல் மாமி வேகமாக வெளியே சென்றாள். அதே வேகத்தில் திரும்பி வந்து “மாப்பள்ளை சார் வந்திருக்கிறார்” என்றாள்.
அம்மாவின் முகம் கறுத்தது. அது ஒரு வினாடிதான். அடுத்த நிமிடம் பழையபடி ஆகிவிட்டாள். என் பக்கம் திரும்பி “மீனா! உள்ளே போ” என்றாள். பிறகு ராஜியின் பக்கம் திரும்பி “நீயும் உள்ளே போ” என்று உறுமினாள்.
அம்மாவின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வந்ததுதான் தாமதம், திருநாகம் மாமி ராஜியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். சாரதி வந்தான் என்ற செய்தியைக் கேட்டதுமே துவண்டுவிட்ட ராஜி திருநாகம் மாமியை எதிர்க்கவில்லை.
அம்மா வெளியில் சென்று “வாங்க… வாங்க. இன்னும் வரவில்லையே என்று இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருந்தோம்” என்று வரவேற்றாள்.
அந்தக் குரலில் தென்பட்ட சகஜதன்மைக்கு வியப்படைந்துவிட்டேன். உள்ளே போகும் முன் என்னையும் அறியாமல் அம்மாவின் பக்கம் பார்த்தேன். அம்மாவின் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் அந்த நிமிடமே எரிந்து சாம்பலாகி இருப்பேன்.
உள்ளே வந்த எனக்கு ராஜி கண்ணில் படவே இல்லை. மாமியிடம் கேட்டேன். “அதோ அங்கே இருக்கிறாள்” என்று தன்னுடைய அறையைக் காட்டிவிட்டு வேறு ஏதோ வேலையாக போய்விட்டான். ஸ்டோர் ரூம் பக்கத்தில் இருந்த மாமியின் அறைக்குள் மெதுவாக நுழைந்தேன். அறையின் நடுவில் ராஜி தரையை நோக்கிய பார்வையுடன், சலனமற்ற பதுமையாக நின்றிருந்தாள். அந்த நிலையில் அவளைப் பார்க்கும்போது என் இதயம் கலங்கிவிட்டது. அருகில் சென்று கையைப் பற்றிய போது உதறிவிட்டாள்.
“என்மீது கோபமா?” நயமான குரலில் §க்டேன்.
“உன்மீது இல்லை. என்மீதே எனக்குக் கோபமாக இருக்கிறது. இங்கே வந்ததே பெரிய தவறு. வந்தாலும் இந்த நாடகத்தில் மாட்டிக் கொண்டது அதைவிட பெரிய தவறு.”
“நாடகமா?”
“இல்லாவிட்டால் என்ன? சாரதியை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் ஏன் மாமியிடம் நேராக சொல்ல மாட்டேன் என்கிறாய்? நடுவில் என்னை மாட்ட வைப்பானேன்? சின்ன பொய் சொன்னாலே அண்ணன் எங்களைக் கொன்று விடுவானே? வேடிக்கையாக பொய் சொல்லணும் என்றால் கூட எங்களுக்கு சங்கடமாக இருக்குமே. நீயானால் வாய்க்கு வந்தபடி பொய் சொல்கிறாய். அது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை. எனக்கு மட்டும் நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது.”
“ஒரு நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் அதில் தவறு இல்லை.”
“நல்ல காரியமா? அடிவாரம் சரியாக இல்லாத கட்டடம் போல் பொய் சொல்வதால் ஏற்படும் நன்மை நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. எந்த நிமிடமும் இடிந்து போய் விடும்.”
“ரொம்ப நன்றாக பேசுகிறாயே?” வலிந்த சிரிப்பை உதிர்தேன்.
“என் மனதில் இருக்கும் வேதனை உனக்குப் புரியாது. இதெல்லாம் அண்ணாவுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? நீ பொய் சொன்னது தெரிந்தால் மாமாவும், மாமியும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்களோ என்னவோ. ஆனால் எங்க அண்ணன் அப்படி இல்லை. இந்தப் பொய்களுக்கும், நாடகத்திற்கும் இத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிடு. மாமாவிடம் கேட்டுக் கொண்டு இன்று இரவோ நாளை காலையோ ஊருக்குப் போய் விடுகிறேன்.”
“ராஜி!
“இனி உன் பேச்சை கேட்கப் போவதில்லை. நீ என்ன நினைத்துக் கொண்டாலும் சரி.”
அதற்குள் திருநாகம் மாமி உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு “அம்மா உங்களை சாப்பிட வரச்சொன்னாங்க. உங்களை மட்டும்தான் கூப்பிட்டாங்க” என்றாள்.
பின்னால் திரும்பிப் பார்த்தேன். “எனக்குப் பசியில்லை. சாப்பிட மாட்டேன் என்று சொல்லிவிடுங்கள்” என்றேன் எரிச்சலுடன். மாமி போய்விட்டாள்.
அங்கேயே இருந்த கட்டில் மீது அமர்ந்து கொண்டேன். கடைசியில் ராஜிக்குக் கூட என்மீது கோபம் வந்துவிட்டது. நான் தோற்றுப் போய்விட்டேனா? நான் நினைப்பது போல் எதுவும் நடக்கப் போவதில்லையோ? அம்மா சொன்னதுபோல் உண்மையிலேயே நான் ஒரு முட்டாள்தானோ?
திடீரென்று அறைக்கதவு திறந்து கொண்டது. “சாப்பிட வரமாட்டேன்னு சொன்னாயாமே?” தீட்சண்யமாக பார்த்துக் கொண்டே அம்மா கேட்டாள்.
விசையை அழுத்தியது போல் விருட்டென்று எழுந்து நின்றேன். “பசியாக இல்லை மம்மி.”
“வாயை மூடிக்கொண்டு சாப்பிட வா. உங்க அப்பாவுக்கும் பசி இல்லையாம். நீயும் வரவில்லை என்றால் சாரதி என்ன நினைத்துக்கொள்வான்?” கண்களை உருட்டி கோபமாக பார்த்தாள்.
அந்தப் பார்வையின் மகிமை என்னவோ, மறுபேச்சு பேசாமல் ஆட்டுக் குட்டியை போல் அம்மாவைப் பின் தொடர்ந்தேன். அறையை விட்டு நான் வெளியே வந்ததும் அம்மா கதவை சாத்தி வெளியிலிருந்து நாதாங்கியைப் போட்டாள்.
விருட்டென்று திரும்பி “மம்மீ!” என்றேன்.
“ஹ¤ம்!” அணல் கக்கும் விழிகளூடன் கர்ஜித்தாள்.
உணவு மேஜை அருகில் நான், சாரதி, மம்மி உட்கார்ந்து கொண்டோம். திருநாகம் மாமி தேவைக்கும் அதிகமான பணிவுடன் எங்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கோபத்தால், அவமானத்தால் என் மனம் தகித்துக் கொண்டிருந்தது. ராஜி என்ன நினைத்துக் கொள்வாள்? இவ்வளவு அவமானம் நடந்த பிறகு இந்த வீட்டில் ஒரு நிமிடமாவது இருப்பாளா?
அம்மா எதுவுமே நடக்காதது போல், ரொம்ப சகஜமாக சாரதியுடன் பேசிக் கொண்டிருந்தாள். மதியம் வாங்கிய புடவை ரொம்ப நன்றாக இருக்கிறதாம். சாரதியின் ரசனையை பாராட்டிக் கொண்டிருந்தாள். அம்மாவின் சாமர்த்தியத்திற்கும், தந்திரமான பேச்சிற்கும் வியப்படையாமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவின் தோரணையைப் பார்த்தால் சில நிமிடங்களுக்கு முன்னால் இந்த வீட்டில் எரிமலை ஒன்று வெடிக்கத் தயாராக இருந்தது என்று யாராலும் நினைக்க முடியாது. அதைவிட பெரிய வேடிக்கை என்னவென்றால் அவ்வளவு தீவிரமாக ராஜிக்குக் காதல் கடிதம் எழுதிய சாரதியிடம் கொஞ்சம்கூட வெறுப்பையோ, கோபத்தையோ வெளியில் காட்டவில்லை.
அம்மா கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாலும் சாரதியின் கவனம் அந்தப் பேச்சில் லயிக்கவில்லை. அவன் கண்கள் ராஜேஸ்வரிக்காக இங்கும் அங்கும் தேடிக் கொண்டிருந்ததை நானும் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன்.
சாப்பாடு முடிந்த பிறகு இனியும் பொறுத்தக் கொள்ள முடியாமல் பாக்குத்தூளை கொடுக்க வந்த என்னிடம் “மீனா! ராஜேஸ்வரி எங்கே? கண்ணில் படவே இல்லையே?” என்று கேட்டான்.
என்னை பதில் சொல்ல விடாமல் அங்கேயே இருந்த அம்மா நடுவில் புகுந்தாள். “அட்டா! உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். மாலையில் ராஜேஸ்வரியின் அண்ணன் வந்தான். தங்கையை அழைத்துக் கொண்டு போய்விட்டான்” என்றாள்.
பாக்கை எடுத்துக் கொள்ளப் போன சாரதி அப்படியே நின்றுவிட்டான்.
“பார்த்தீங்களா? அந்தப் பெண் நம்மிடம் சொன்னதெல்லாம் பொய். அவளுக்கு எந்தக் கஷ்டங்களும் இல்லையாம். சோத்து சுகம் இருக்கும் இடம் என்று இரண்டாம் தாரமாக கொடுக்க நினைத்தது உண்மைதானாம். ஆனால் அந்தப் பையனுக்கு வயது அதிகம் இல்லையாம்.” அம்மா என் பக்கம் திரும்பினாள். “இந்த குழப்பமெல்லாம் மீனாவால் வந்தது. இந்த முட்டாள்பெண் அந்தப் பெண் சொன்னதையெல்லாம் அப்படியே நம்பிவிட்டாள்.”
சாரதி கற்சிலையாக கேட்டுக் கொண்டிருந்தான்.
“அவன் சிநேகிதன் ஒருவன் ராஜி நம் வீட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு அட்ரெஸெல்லாம் கொடுத்து கடிதம் எழுதியிருக்கிறான். பாவம் அந்த அண்ணன்! அரக்க பரக்க ஓடிவந்தான். அவனுக்கு தங்கையிடம் எவ்வளவு பாசம் தெரியுமா? ஏதோ கெட்ட நேரத்தில் நல்ல நேரம். அந்தப் பெண் நம் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நீங்க வருவதற்கு சற்று முன்னால்தான் அண்ணன் தங்கை கிளம்பிப் போனார்கள். பத்து பத்துக்கு ஏதோ ரயில் இருக்கிறதாம்.”
சாரதி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான். ஆனால் அம்மாவும் லேசு பட்டவள் இல்லை. அவன் ஓரிரு முறை கிளம்ப முற்பட்டபோது ஏதோதோ சொல்லிக் கொண்டே அவனைப் பேச்சினால் கட்டிப் போட்டாள். பத்தரை மணி ஆனபிறகுதான் அவனைப் போகவிட்டாள்.
சாரதி ஓட்டமும் நடையுமாக படிகளில் இறங்கிப் போதை, அதே வேகத்தில் காரை ஸ்டார்ட் செய்ததை அம்மாவும், நானும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவனுடைய அவசரத்தைக் கண்டபோது இரக்கம்தான் ஏற்பட்டது. அவன் போய்ச் சேரும் போது எப்படியும் அந்த ரயில் கிளம்பிவிட்டிருக்கும்.
சாரதி போன பிறகு அம்மா ராஜியை அழைத்தாள். அம்மாவின் முகத்தில் சற்றுமுன் சாரதி இருந்த போது தென்பட்ட கனிவு, இணக்கம் மருந்துக்குக் கூட இல்லை. “இதோ பார்! நாளை காலையில் எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டிற்கு உன்னை அனுப்பி வைக்கிறேன். மீனாவின் திருமணம் முடியும் வரையில் நீ அந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக் கூடாது. அதற்குப் பிறகு நீ எக்கேடு கெட்டாலும் எனக்குக் கவலை இல்லை. இதற்கு இடையில் சாரதியை சந்திக்கணும் என்றோ, கடிதம் எழுதவோ முயற்சி செய்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் ஜாக்கிரதை!”
தலை குனிந்து நின்றிருந்த ராஜி, வழிகளில் சுழன்ற நீரை கட்டுப்படுத்தியபடி தலையை அசைத்தாள். தங்களுடைய வழியில் குறுக்கே வந்தவர்களை அம்மா போன்றவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் எப்படி நடத்துவார்களோ சுயமாக உணர்ந்தேன். அம்மா திருநாகம் மாமியின் பக்கம் திரும்பினாள். “இந்த விஷயம் இந்த நான்கு சுவர்களுக்கு நடுவிலேயே சமாதியாகி விடவேண்டும். வெளியில் எங்கேயாவது பரவினால் நீங்கதான் காரணம் என்று நினைத்துக் கொள்வேன்.”
“ச்சே… ச்சே… நான் அப்படிப்பட்ட மனுஷியா? உங்களுக்கு என்னை தெரியாதா?”
“சரி. இன்று இரவு அந்தப் பெண் உங்களுடைய அறையிலேயே இருக்கட்டும். போய் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வாங்க. தலைவலி மண்டையைப் பிளக்கிறது. தூக்க மாத்திரை போட்டுக் கொண்டால் தவிர தூக்கம் வராது போலிருக்கு.” அம்மா தன்னுடைய அறையை நோக்கிப் போனாள். அம்மா சொன்னபடி செய்து காட்டுவாள். யாராலும் அதை மீற முடியாது.
சாரதியிடம் தனியாக பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. இந்த ஆபத்தான நேரத்தில் அப்பாதான் எனக்கு வழி காட்டணும். தாமதம் செய்தால் நிலைமை மேலும் மோசமாகிவிடக் கூடும்.
நேராக அப்பாவின் அறைக்குள் நுழைந்தேன். சற்றுமுன் அப்பா என்னைப் பார்த்த பார்வை நினைவுக்கு வந்ததும் பயமாக இருந்தது. இருந்தாலும் துணிச்சலை வரவழைத்துக் கொண்டேன்.
அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து முழங்கையால் கண்களை மறைத்துக் கொண்டிருந்தார். ஆடைகளைக் கூட மாற்றவில்லை. அவர் முகத்தில் வேதனையும், களைப்பும் தென்ப்டன.
“டாடீ!” தாழ்ந்த குரலில் அழைத்தேன். திடுக்கிட்டவர் போல் விருட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
“என்ன வேண்டும் உனக்கு? பாக்கி ஏதாவது இருக்கிறதா?”
கடினமாக ஒலித்த அந்தக் குரலை கேட்டதும் என் முதுகுத்தண்டில் நடுக்கம் பரவியது. அப்பா கோபமாக ஒரு பார்வை பார்த்தாலே நிலைகுலைந்து போய் விடுவேன்.
அப்பா எழுந்து என் அருகில் வந்தார். “இன்று சாரதி அந்த நேரத்தில் வரவில்லை என்றால் நிலைமை எவ்வளவு மோசமாகியிருக்கும் தெரியுமா?”
தெரியும் என்பது போல் தலையை அசைத்தேன்.
“உன்னை எத்தனை முறை எச்சரித்து இருக்கிறேன். என் பேச்சை காதில் வாங்கிக் கொண்டாயா?”
“அது இல்லை டாடீ! சாரதி ராஜியை…” என்று மேலும் சொல்லப் போனேன்.
“வாயை மூடு! உன் மனதில் இந்த எண்ணத்தை வைத்துக் கொண்டுதான் ராஜியை இங்கே அழைத்து வந்திருக்கிறாய். அப்படித்தானே. உனக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா பகடைக்காயாக பயன்படுத்துவதற்கு?”
“ராஜியை நான் பகடைக்காயாக பயன்படுத்தவில்லை. உங்களுக்கு அசல் விஷயம் தெரியாது.”
அப்பாவின் கை திடீரென்று காற்றில் எழும்பியதும், என் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறை விழுந்ததும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டன. எனக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
“பாவிமகளே! உன்னை மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய முட்டாள்தனம். அவர்களுடன் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த பந்தத்தை கூட அறுத்துவிடப் பார்க்கிறாயா? இந்த இடத்தை விட்டு முதலில் போய்விடு. உன் முகத்தை இனி எனக்குக் காட்டாதே.”
இந்த வார்த்தைகளைச் சொன்னது அப்பாதானா? என் மூளை செயல்பட மறுத்தது. மனம் குழம்பிவிட்டது. கனவில் நடப்பவள் போல் மெதுவாக நடந்து வெளியே வந்துவிட்டேன்.

Series Navigation