முள்பாதை 53

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

அன்று மாலையில் கிருஷ்ணனிடம் போவதற்கு நான் அதிகமாக கஷ்டப்படவில்லை. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு என்ன காரணம் சொல்வோம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது அம்மா சொன்னாள்.
“மீனா! சொல்ல மறந்து விட்டேன். பிளவுசுக்கு அளவு கொடுக்க உன்னை அனுப்பி வைப்பதாக டைலரிடம் சொல்லியிருக்கிறேன். பழைய பிளவுஸ் எல்லாம் டைட் ஆக இருக்கு. பட்டுப்புடவைக்கு மேட்ச் பிளவுசுக்காக லூசாக அளவு கொடுத்து விட்டு வா.” ஆணையிடுவது போல் அம்மா சொன்னதும் என் மனம் துள்ளிக் குதித்தது. தேடப் போன மூலிகை காலில் தட்டுப்பட்டது போல் சந்தோஷமாக இருந்தது.
“சரி மம்மி!” அடக்கமான குரலில் பதில் சொன்னேன். சமீபகாலத்தில் நான் கொஞ்சம் பருத்துவிட்டது உண்மைதான். பழைய பிளவுசுகள் எல்லாம் பிடிப்பாக இருந்தன. நான் உயரமாக இருப்பதால் பருமனும் சேர்ந்துகொண்டால் வயதுக்கு மீறியவளாக தென்படுவேன் என்பத அம்மாவின் பயம். டயட்டில் இருக்கச் சொல்லி அம்மா தொந்தரவு செய்த போதெல்லாம் அப்பா கோபித்துக் கொள்வார்.
“சற்று பூசினாற்போல்இருந்தால் வயது அதிகமாகிவிடுமா என்ன? முகத்தில் குழந்தைத்தனம் எங்கே போகும்? ஒல்லியாக, கச்சலாக இருப்பவர்களின் முகம் முற்றிய வெண்டைக்காய் போல் இருப்பதை நாம் பார்க்கவில்லையா என்ன?”
அப்பா என் பக்கம் வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசியதால் டயட்டிங் தொல்லையிலிருந்த விடுபட்டேன். ஏற்கனவே என்னால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது. இருந்தாலும் அம்மாவின் பயம் ஏனோ எனக்குப் புரியாத விஷயம். காலத்துடன் மனித உடலில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம்தானே. எத்தனை நாடகள் இயற்கைக்கு எதிராக போராட முடியும்? வயதிற்கு ஏற்ற விதமாக இருப்பதற்கு பழகிக் கொள்ளணும். அதைவிட அழகு வேறு இல்லை. என்னைக் கேட்டால் உண்மையான அழகு தனித்தன்மையினால்தான் வரும். உடல் ரீதியான அழகு இன்னிக்கு இருக்கும். நாளைக்குப் போய்விடும். தனித்தன்மையினால் ஏற்படுத்திக் கொண்ட ஈர்ப்பு வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும். அம்மாவும், நானும் சுபாவத்திலும் சரி, கருத்துகளிலும் சரி நேர் எதிராக இருக்கிறோம்.
நான் கிளம்ப முற்படும் போது ராஜி என் அருகில் வந்து “அண்ணி! நானும் உன்னுடன் வருகிறேன்” என்றாள்.
“நீ எதுக்கு? பிளவுசுக்கு அளவு கொடுத்துவிட்டு உடனே திரும்பி வந்து விடுவேன்” என்றேன்.
ராஜி என் தோளில் கையைப் போட்டு வேண்டுகோள் விடுப்பது போல் பார்த்தாள். “அண்ணி! எனக்கு ஏனோ ரொம்ப பயமாக இருக்கிறது. என் மனம் தீங்கை எடை போடுகிறது. ஊகிக்க முடியாதது எதோ நடக்கப் போவது போல் என் இதயம் படபடக்கிறது.”
என் தோளில் படிந்த ராஜியின் கையை லேசாக அழுத்தினேன். “பைத்தியம் போல் பேசாதே. நீ ஏற்கனவே பயந்தாங்குளி. உன் நிழலைக் கண்டு நீயே பயப்படுகிறாய். நான் இருக்கும் போது உனக்கு எந்தக் கெடுதலும் வராது. எத்கும் பயப்பட வேண்டியது இல்லை. போதுமா?” நயமான குரலில் சொன்னேன்.
“அது இல்லை அண்ணி!” ராஜி மேலும் ஏதோ சொல்லும் முன் கீழே இருந்த “ராஜீ!” என்று திருநாகம் மாமி அழைக்கும் குரல் கேட்டது. “அண்ணி! நானும் உன்னுடன் வருகிறேன். என்னை விட்டுவிட்டு நீ போகாதே.” ராஜி மற்றொரு முறை எச்சரிப்பது போல் சொல்லிவிட்டு வேகமாகக் கீழே போய்விட்டாள்.
பத்தே நிமிடங்களில் நான் தயாராகி கீழே வந்துவிட்டேன். தாமதம் செய்தால் ராஜி மறுபடியும் வந்து தானும் வருவேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போகிறாளே என்று பயந்து கையில் கிடைத்த புடவையை மாற்றிக் கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தேன்.
அம்மாவுக்காக கிளப் மெம்பர்கள் சிலர் வந்திருந்தார்கள். எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் என் பெயர் அடிபட்டதால் என்னையும் அறியாமல் படிகளில் நின்றுவிட்டேன்.
“மகளுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கிறதாமே.” யாரோ ஒரு அம்மாள் கேட்டாள்.
“ஆமாம். இரண்டு நாட்களில் நிச்சயதார்த்தம். நீங்கள் எல்கோரும் முன்னாடியே வந்து விழாவை கிராண்டாக நடத்தித் தரவேண்டும்.”
“நீங்க வாய்விட்டு சொல்லணும்¡? கட்டாயம் வருகிறோம். எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்கிறோம்.”
“உங்க மகளுடைய கல்யாணத்தை உங்களை விட நாங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறோம்.”
“அதென்ன பிரமாதம்? நானும் உங்களைப் போன்றவள்தானே.” அம்மா முறுவலுடன் சொன்னாள்.
“வீட்டோடு மாப்பிள்ளையாக வருதற்கு சம்மதித்து விட்டாற்போல் தானே?” இன்னொரு மாமி கேட்டள்.
“இல்லை என்றால் நான் ஒப்புக்கொண்டு இருப்பேனா?” அம்மாவின் குரல் பெருமையுடன் ஒலித்தது.
“ஆமாம். இருப்பதோ ஒரே மகள். சகஜம்தானே.”
“அதிலும் சாரதிக்கு பெற்றோர்கள் இல்லை. நான் முன்னாடியே சொல்லிவிட்டேன். இதோ பாருப்பா! நீதான் எனக்கு மகன். மகள்தான் இனி எங்களுக்கு மருமகள் என்று.” அம்மா சொன்னாள்.
“நன்றாகச் சொன்னீங்க.” எல்லோரும் சிரித்தார்கள்.
அந்த சிரிப்பு அலைஅலையாக வந்து என்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணனை பார்க்கப் போகிறேன் என்ற சற்தோஷம் ஒரு நிமிடம் காணாமல் போய்விட்டது.
அதற்குள் ஒரு மாமி என்னைப் பார்த்துவிட்டாள். “அதோ! மீனா வருகிறாள்” என்றாள்.
எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். நான் கீழே இறங்கி வந்தேன். “மம்மி! நான் கிளம்பட்டுமா?” என்றேன்.
“சீக்கிரம் போய்விட்டு வா. வரும்போது சாரதியின் வீட்டுக்குப் போய் அவனையும் அழைத்து வா. அப்பா அவனிடம் ஏதோ பேச வேண்டுமாம்.” அம்மா சொன்னாள்.
இயந்திரகதியில் தலையை அசைத்துவிட்டு வெளியேறினேன். சாரதி! சாரதி! மூச்சுக்கு மூச்சு அம்மா உச்சரிக்கும் வார்த்தை அதுதான். அம்மா இவ்வளவு தூரம் விரும்பும் சாரதியின் மனதில் எனக்கு இடம் இல்லை என்றும், வேறு நபர் அந்த இடத்தை எடுத்துக் கொண்டதாகவும் தெரிந்தால் அம்மாவின் முகம் எப்படி மாறும்?
‘வீட்டோடு மாப்பிள்ளையாக வரவில்லை என்றால் நான் ஒப்புக்கொண்டு இருப்பேனா?’ அம்மாவின் குரல் என் காதுகளில் எதிரொலித்தது. அந்தக் குரலில் எவ்வளவு நம்பிக்கை! எவ்வளவு பெருமை!
சாரதி மட்டுமே இல்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக வருவதற்கு விரும்பும் எந்த நபரின் நிழலை கூட என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று அம்மாவிடம் கத்தி சொல்லணும் போல் இருந்தது.
‘சாரதிக்கு பெற்றோர்கள் இல்லை. நான் முன்னாடியே சொல்லிவிட்டேன். நீதான் எங்களுக்கு மகன். மகள்தான் இனி எங்களுக்கு மருமகள்.’
அம்மா சொன்ன இந்த வார்த்தைகள் மனதை அம்பாகத் தைத்தன. சாரதியிடம் அம்மாவுக்கு முக்கியமாக பிடித்த விஷயம் என்னவென்று இப்போ எனக்குப் புரிந்துவிட்டது. சாரதிக்கு தாய் தந்தை இல்லை. சாதாரணமாக ஒரு பெண் திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டாருடன் கலந்து போகவேண்டும். இங்கே அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அம்மா சாரதியின் விஷயத்தில் என்னைவிட தான் அதிர்ஷ்டசாலி என்று எதற்காக சொல்லிக் கொண்டிருந்தாளோ எனக்கு இப்பொழுது புரிகிறது. சாரதியிடம் அம்மா எதிர்பார்த்த தகுதிகள் எல்லாம் இருந்தன. தனக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்று அம்மா பூரித்துப் போகிறாளே ஒழிய சாரதி என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற கணவனா இல்லையா என்று அம்மா யோசிக்கவில்லை.
இந்த விஷயத்தில் அப்பாவும் அம்மா பக்கம் சேர்ந்து கொண்டு விட்டதால் நான் தனியளாகி விட்டேன். இந்தச் சூழ்நிலையில் ராஜியிடம் சாரதிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்னுடைய அதிர்ஷ்டம்தான். இன்றோ நாளையோ சாரதியிடம் என் மனதில் இருப்பதைச் சொல்லி விடவேண்டும். நான், சாரதி, ராஜேஸ்வரி மூன்று பேரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அம்மாவால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஓசைப்படாமல் ராஜியை பதிவுத் திருமணம் செய்து கொள்ளும்படி சாரதியிடம் சொல்லி விடவேண்டும். தேவைப்பட்டால் நானே அருகில் இருந்து நடத்தி வைக்கணும்.
யோசனையில் மூழ்கியிருந்தவள் கிருஷ்ணன் தங்கியிருந்த ஹோட்டலை தாண்டிவிட்டேன் என்பதை உணர்ந்து ரிவர்ஸ் செய்து காரை திருப்பினேன்.
ஹோட்டல் கேட்டில் பெரிதாக “வெல்கம்” என்ற எழுத்துகளுடன் அலங்கார வளைவு இருந்தது. பணக்காரர்கள் வீட்டு திருமண ரிசெப்ஷன் போலும். மக்கள் கூட்டத்தால் ஹோட்டல் வளாகம் முழுவதும் நிரம்பியிருந்தது. இடம் இல்லாதததால் காரை தொலைவிலேயே பார்க் செய்துவிட்டு வந்தேன். உள்ளே மக்கள் கூட்டத்தில் புகுந்து ரிசெப்ஷன் கௌண்டர் அருகில் செல்லும் போது பின்னாலிருந்து “மீனா!” என்ற அழைப்புகேட்டது. பின்னாலிருந்து யாரோ பட்டும் படாமல் தொட்டதும் திரும்பினேன். என் எதிரில் கிருஷ்ணன் நின்றிருந்தான்.
“நீயா!” என்றேன்.
“கேட் அருகில் நீ வரும்போதே பார்த்துவிட்டேன். கீழே இறங்கி வருவதற்குள் மக்கள் கூட்டத்தில் கலந்துவிட்டாய்” என்றான்.
இருவரும் லி·ப்ட் பக்கம் வந்தோம். கிருஷ்ணன் தங்கியிருந்த அறை எட்டாவது மாடியில் இருந்தது. லி·ப்ட்டில் கண்ணா¡டியில் பார்த்துக் கொண்டபோது அவன் தோள் உயரம்தான் இருந்தேன். கண்ணாடியில் தென்பட்ட உருவங்களைப் பார்த்த போது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. கிருஷ்ணன் சிரிக்கவில்லை. நான் சிரித்தது அவனுக்குப் பிடிக்காதது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“உட்கார்ந்து கொள்.” மின் விசிறியை போட்டுக் கொண்டே சொன்னான்.
அ¨று முழுவதும் பார்வையைச் சுழற்றினேன். விலை உயர்ந்த கார்பெட், இரட்டை கட்டில். ரூம் வாடகை நிறைய இருக்கும் போல் ¦தோன்றியது.
“நீ இதுபோல் அப்பாவிடம் கிளயிண்டுகளை அழைத்து வருவாயா?” சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டேன்.
“அடிக்கடி இல்லை. சாதாரணமானவர்களால் மாமாவின் ·பீஸை கொடுக்க முடியாது.”
“நீ சொன்னால் அப்பா மறுக்கப் போகிறாரா? அப்பா பணத்திற்காக வற்புறுத்தும் ஆசாமி இல்லையே?”
“இல்லைதான். இருந்தாலும் மாமாவை சங்கடப் படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை. குடிக்க ஏதாவது வரவழைக்கட்டுமா?”
“எதுக்கு இந்த மரியாதைகள்? நான் குடிக்க நினைப்ப¨து உன்னால் வரவழைக்க முடியாது.”
“அப்படி என்றால்?”
“எனக்கு அமிர்தம் குடிக்கணும் போல் இருக்கு. வரவழைத்துத் தர முடியுமா?”
நான் எதிர்பார்த்ததுபோல் அவன் சிரிக்கவில்லை. எப்போதும் என்னைப் பார்த்ததும் அவன் கண்களில் மின்னல் போன்று வெளிச்சம் தோன்றும். இன்று அப்படி எதுவுமே இல்லை. அவன் ஏதோ வேதனையில் இருப்பது போலவும், அதை மறைக்கணும் என்று வீண் முயற்சி செய்வது போலவும் எனக்குத் தோன்றியது.
கிருஷ்ணன் எழுந்துபோய் பெல்லை அழுத்தினான்.
“அமிர்தத்தை வரவழைத்துத் தரப் போகிறாயா?” என்றேன் முறுவலுடன்.
“அவ்வளவு தகுதி எனக்கு இல்லை.” வேகமாக பதில் வந்தது.
“இன்னிக்கு என்ன விசேஷம்? கோபமாக இருக்கிறாயே?”
தீவிரமாக பார்த்தான்.
“கோபம் என்மீதுதானா?”
“ஆமாம்.”
“நான் செய்த அபராதம் என்னவென்று சொல்ல முடியுமா திருவாளர் கிருஷ்ணன் அவர்களே?”
“உனக்கு எல்லாம் விளையாட்டாக இருக்கிறது. உன்னை மெலட்டூருக்கு வர அனுமதித்தது என்னுடைய முட்டாள்தனம். மாமா முதல் தடவை உன்னை அனுப்புவதாக தந்தி கொடுத்த போதே அனுப்பாதீங்க, நாங்க வேற்று மனிதர்கள் என்று பதில் தந்தி கொடுத்திருக்கணும். ஒரு சின்ன தவறு செய்தால் வாழ்நாள் முழுவதம் தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.”
அவன் உண்மையிலேயே கோபமாக இருந்தான். நான் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் ரூம்பாய் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.
“டிபன் ஏதாவது சாப்பிடுகிறாயா?” கிருஷ்ணன் என்னிடம் கேட்டான்.
வேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தேன்.
“இரண்டு பாதாம்கீர்” என்று சொல்லிவிட்டு ரூம்பாயை அனுப்பிவிட்டான். “ராஜேஸ்வரி யாரென்று உங்க அம்மாவுக்குத் தெரியுமா?” ரூம்பாய் போனதும் என் பக்கம் திரும்பிக் கேட்டான். அவன் குரல் சாந்தமாக இருந்தாலும் கத்தி முனையின் கூர்மை வார்த்தைகளில் வெளிப்பட்டது.
திடுக்கிட்டவள் போல் பார்த்தேன்.
“சொல்லு மீனா! ராஜி யாரென்று உங்க அம்மாவிடம் சொல்லும் துணிச்சல் இல்லாதபோது அவளை உங்கள் வீட்டுக்கு எதற்காக அழைத்துப் போனாய்? நான் உயிருடன் இருக்கும் போது என் தங்கை அநாதை என்றும், ஆதரிக்க யாருமே இல்லை என்றும் சொல்லி இன்னொத்தர் வீட்டில் அடைக்கலம் இருப்பதைக் கேட்டு என்னால் சகித்துக்கொள்ள முடியும் என்று எப்படி நினைத்தாய்?”
என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. பூமிக்குள் புதைந்துவிட்டால் தேவலை என்று தோனறியது. இதையெல்லாம் கிருஷ்ணனிடம் யார் சொன்னார்கள்? எப்படி தெரிந்திருக்கும்?
“சொல்லு மீனா! எதற்காக இப்படிச் செய்தாய்? நான் இத்தனை நாளும் ராஜி யாரென்று தெரிந்துது¡ன் உங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்று நினைத்தேன். உங்க அம்மா என்னை வேற்று மனிதனாக நினைத்து ஒதுக்கினாலும், சொந்த மருமகள் என்பதால் ராஜியைப் பிரியமாக நடத்துகிறாள் போலும் என்று எண்ணி சந்தோஷப்பட்டேன். ராஜி யாரென்று உங்க அம்மாவுக்குத் தெரியவே தெரியாது என்றதும் நான் எப்படி நிலைகுலைந்த போனேனோ உன்னால் ஊகிக்க முடியுமா? இதைவிட அவமானம் இந்த ஜென்மத்தில் வேறு இருக்குமா?”
எப்படியோ தைரியத்தை திரட்டிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தேன். அவன் கண்களில் கோபம், அவமானம், ரோஷம் எல்லாம் கலந்த உணர்வு பளபளத்தது. வலுக்கட்டாயமாக வேதனையை விழுங்கிக் கொண்டவன் போல் தென்பட்டான். அவன் எவ்வளவு சுய அபிமானம் கொணடவனோ எனக்குத் தெரியாதது இல்லை. ரொம்ப நாட்களாக என் மனதில் நினைத்துக் கொண்டு இருப்பதை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல், நாற்காலியை விட்டு எழுந்து கொள்ளவும் திராணியற்றவள் போல் உட்கார்ந்திருந்தேன்.
“மீனா! நீ இவ்வளவு கோழையாக இருப்பாய் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. எல்லோரையும் கிண்டல் செய்து அழவைக்கும் குறும்புப் பெண்ணுக்குள் தேவை ஏற்பட்டால் தைரியமாக எதிர்த்து நிற்கக் கூடிய துணிச்சல் இருக்கும் என்று நினைத்தேன். இப்போ எனக்குப் புரிகிறது, நான் இத்தனை தடவை இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஒரு பேச்சுக்குக் கூட என்னை நீ உங்கள் வீட்டுக்கு ஏன் அழைக்கவில்லை என்று. உங்க அம்மாவுக்கு என்னுடைய நிழல் கூட பிடிக்காது. அதனால்தான் நீ அந்தப் பேச்சை எடுக்கவில்லை என்று நினைத்தேனே ஒழிய நான் வந்தால் ராஜி யாரென்று உங்க அம்மாவுக்குத் தெரிந்து விடுமே என்று நீ பயப்படுவதை நான் ஊகிக்கவில்லை. சரி… நடந்தது நடந்து முடிந்துவிட்டது. ராஜியை உடனே அனுப்பிவிடு. சொல்ல மறந்துவிட்டேன்.” கிருஷ்ணன் ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் பக்கத்தில் இருந்த டிரெஸ்ஸிங் ரூமுக்கு போனான்.
பெட்டியை திறந்து மூடிய சத்தம் கேட்டது. கிருஷ்ணன் கையில் பெரிய கவருடன் திரும்பி வந்தான். கவரை என் எதிரே வைத்துக் கொண்டே சொன்னான். “நிலத்திற்காக நீ செலவழித்த பணம். நீ கொடுத்த விலைக்குக் கூடவே போட்டு வட்டியையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறேன்.”
“திடீரென்று இவ்வளவு பணம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?”
“அது உனக்கு அனாவசியம்.”
“அதாவது நமக்குள் இருக்கும் பாசபிணைப்பை எல்லாம் அறுத்துக் கொண்டு போவதற்காக வந்திருக்கிறாய். அப்படித்தானே.”
“அப்படி எதுவும் நமக்குள் இருந்தால்தானே?”
“எந்த உறவும் இல்லாமல்தான் நான் மெலட்டூருக்கு வந்தேனா?”
“உன்னுடைய தேவைக்காக வந்தாய். என்மீது பிரியத்துடனோ, எங்களைப் பார்க்க வேண்டும் என்ற பாசத்துடனோ வரவில்லை. அம்த விஷயம் உனக்கும் தெரியும்.”
நான் பற்களால் கீழ் உதட்டை அழுத்திக் கொண்டேன். அதற்குள் ரூம் பாய் வந்தான். ட்ரேயில் இரண்டு டம்ளர்களில் பாதாம்கீர் கொண்டு வந்து டீபாய்மீது வைத்துவிட்டு போனான். என் மனம் முழுவதும் கசப்பான உணர்வு நிரம்பியிருந்தது. கிருஷ்ணன் பாதாம்கீர் டம்ளரை என்னிடம் நீட்டி “எடுத்துக்கொள்” என்றான்.
“எனக்கு வேண்டாம். என்னைக் கேட்டு வரவழைத்தாயா?” என்றேன்.
கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை. நான் எதிர்பார்த்தது போல் கெஞ்சவும் இல்லை. இரண்டு டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு போய் வாஷ்பேசினில் கொட்டிவிட்டு டம்ளர்களை ட்ரேயில் வைத்தான்.
“என்ன வேலை இது? அந்த அளவுக்குக் கோபமா என்மீது?” என்றேன்.
“கோபமா? உன்மீதா? எதுக்கு? உன்னைக் கேட்காமல் வரவழைத்தது உண்மைதானே. இந்தப் பணத்தை எடுத்துக்கொள். ராஜியை எத்தனை மணிக்கு அனுப்பி வைப்பாயோ சொல்லு.”
“அந்த இரண்டு காரியமும் என்னால் செய்ய முடியாது.” பிடிவாதமாக சொன்னேன்.
“பணத்தை நீ எடுத்துக் கொண்டு போகாவிட்டாலும் என்னால் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும். அதேபோல் ராஜியை நீ அனுப்பி வைக்க மறுத்தால் அவளை வரவழைத்துக் கொள்ளவும் முடியும். செய்யத் தெரியாமல் இத்தனை நாளும் சும்மா இருந்தேன் என்று மட்டும் நினைத்து விடாதே.”
“என்ன செய்து விடுவாய்?”
“பார்க்கிறாயா?” அவன் எழுந்து போன் அருகில் சென்றான். ரிசெப்ஷனிஸ்டை அழைத்து எங்கள் வீட்டு நம்பரை சொல்லி கனெக்ஷன் கொடுக்கச் சொன்னான்.
நான் சட்டென்று எழுந்து அவன் அருகில் சென்றேன். “என்ன இது? எதுக்காக வீட்டுக்குப் போன் செய்யணும்?”
“ராஜியை அழைத்துப் பேசப் போகிறேன். நீ இங்கே இருக்கிறாய் என்று சொல்லப் போகிறேன்.”
என் இதயம் வேகமாக துடித்தது. போன் கனெக்ஷன் கிடைத்துவிட்டது போல் போன் மணி ஒலித்தது. கிருஷ்ணன் ரிசீவரை எடுத்து “ஹலோ!” என்றான். நான் அவன் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு மற்றொரு கையால் தொடர்பை துண்டித்தேன். இந்த நேரத்தில் அம்மா வீட்டில் இருந்தால் வேறு வினையே வேண்டாம்.
“உனக்கு மூளை கலங்கிவிட்டதா? என்ன அவசரம்?” என்றேன் கோபத்துடன்.
“உன் தயவால் எனக்கு ஒருநாளும் மூளை கலங்கி போகாது. கையை எடு.”
“எடுக்க மாட்டேன். நீ இவ்வளவு துஷ்டன் என்று கனவிலும் நினைக்கவில்லை. நான் தோற்றுப் போய்விட்டேன். நீ சொன்னது போலவே செய்கிறேன். வா இந்தப் பக்கம்.”
“உண்மைதானே?”
“உண்மைதான்.” அவன் கையிலிருந்த போனை பிடுங்கி வைத்தேன். “வந்தது முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரேயடியாக மிரட்டுகிறாயே. தொண்டை வரண்டுவிட்டது எனக்கு. முதலில் குடிக்க ஏதாவது கொண்டு வரச்சொல்லு.”
“ஜக்கில் தண்ணீர் இருக்கிறது. எடுத்துக்குடி.”
“வெறும் தண்ணீருடன் என் தாகம் தீராது. பாதாம்கீர் வேண்டும்.”
கிருஷ்ணன் என் போக்கைப் புரிந்து கொண்டு விட்டான் போலும். முகத்தைத் திருப்பிக் கொண்டு “ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். இனி கிடைக்காது” என்றான்.
“ஆர்டர் கொடுக்காமலேயே இல்லை என்று சொல்கிறாயே?” நான் போய் பெல்லை அழுத்தினேன். ரூம்பாய் வந்தபோது இருவரும் பழையபடி உட்கார்ந்து கொண்டோம். ரூம்பாய் வந்ததும் கிருஷ்ணன் “இரண்டு ஆரெஞ்ச்” என்று சொல்லப் போனான்.
“ஊஹ¤ம். இரண்டு பாதாம்கீர்” என்றேன். பாய் தலையை அசைத்துவிட்டுப் போய்விட்டான்.
“நீ கோபம் இல்லாமல் நான் சொல்வதை அமைதியாக கேட்கிறாயா?” நயமான குரலில் சொன்னேன்.
“நான் கோபமாக இருக்கிறேனா? உனக்கு அப்படித்தான் தோன்றும்.”
“முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லு. இந்த விஷயத்தை உன்னிடம் சொன்னது யாரு?”
“யார் சொன்னால் என்ன? உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மறுக்க முடியுமா உன்னால்?”
“மறுக்க மாட்டேன். ஆனால் அப்படிச் சொல்வதில் பாரபட்சம் காட்டியிருக்கிறார்கள். என் மனதில் இருக்கும் நல்ல எண்ணத்தை உன்னிடம் சொல்லவில்லை. அந்த நபர் யாரோ வேண்டுமென்றே நம் இருவருக்கும் ஆகாமல் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு செய்திருக்கணும்.”
“ச்செ … ச்செ… அந்த நபர் அப்படிப்பட்டவர் இல்லை.”
என் சந்தேகம் வலுவடைந்தது. “உன்னிடம் யார் சொன்னது? அப்பாதானே?” என்று கேட்டேன்.
“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்.”
“இல்லை. ரொம்ப அவசியம். எனக்குத் தெரியாமல், அதிலும் நீ எவ்வளவு கோபக்காரன் என்று தெரிந்தும் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்றால் இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது. இதனால் அந்த நபருக்குக் கிடைக்கக் கூடிய லாபம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளணும்.”
“இதில் லாப நஷ்டம் என்ற பேச்சே இல்லை. நம் இருவரின் நலனை உத்தேசித்து அப்படிச் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் நீ செய்தது மிகப் பெரிய தவறு. ஏற்கனவே சண்டையும் பூசலுமாக இருக்கும் குடும்பங்களில் இது போன்ற விஷயங்கள் எவ்வளவு பெரிய புயலை ஏற்படுத்தும் என்று உனக்குத் தெரியாது.”
ரூம்பாய் பாதாம்கீரை கொண்டு வந்து வைத்துவிட்டு சற்று முன் கொண்டு வந்த ட்ரேயை எடுத்துக் கொண்டு போனான். நான் டம்ளரை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
“ஜில்லுன்னு இதைக்குடி. ரொம்ப சூடாக இருக்கிறாய்.”
“சூடாக இருக்கிறேனா? உதட்டளவில் பிரியத்தைக் காட்டும் மனிதர்கள் என்றால் எனக்கு எவ்வளவு வெறுப்பு என்று உனக்குத் தெரியாது. அவர்களுடைய நிழலை கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாமாவின் உயிர் நீதான் என்பதால் விட்டுவிட்டேன். இல்லாவிட்டால் உனக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுத்திருப்பேன்.”
அவன் சொன்ன தோரணைக்கு எனக்கு சிரிப்பு வந்து விட்டது. சிரித்து விட்டேன்.
கோபமாக பார்த்தான். “உனக்கு எதுவுமே சிரிப்பும் விளையாட்டும்தான். உன்னை அதே போல் நடத்தும் ஆள் உனக்குக் கிடைக்கவில்லை.”
“போகட்டும். நீதான் முயற்சி செய்யேன்?”
“செய்திருப்பேன். ஆனால்…”
“ஆனால் என்ன? அதற்கான தைரியம் இல்லை. அப்படித்தானே?”
“தைரியமா! என்னுடைய தைரியத்தைப் பற்றி ஒருநாளும் சவால் விடாதே.”
“சற்று நேரம் சுமுகமாக பேசக்கூடாதா? ஏற்கனவே என் மனநிலை சரியாக இல்லை.”
அவன் பதில் பேசவில்லை.
“மனநிலை ஏன் சரியாக இல்லை என்று கேட்க மாட்டாயா?”
“பணம் இருப்பவர்களுக்கு வேறு வேலை என்ன? சும்மா உட்கார்ந்து கொண்டு மனதை கெடுத்துக் கொள்வதைத் தவிர.”
“உண்மையைத்தான் சொல்கிறேன். உன்னிடம் அறிவுரை கேட்டுக் கொள்வதற்காகத்தான் வந்தேன்.”
“அறிவுரை வழங்குவதற்கும், கேட்டுக் கொள்வதற்கும் சரிசமமான உரிமையும், அந்தஸ்தும் இருக்க வேண்டும். அதோடு கிருஷ்வேணியம்மாளின் மகளுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு புத்திசாலி நான் இல்லை.”
அவன் போக்கை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அப்பாவைப் பற்றிப் பேசும் போது மரியாதையுடன் மாமா என்று சொல்லுவான். அதுவே அம்மாவைப் பற்றி பேச்சு வந்தால் கிருஷ்ணவேணி அம்மாள் என்றோ, உங்க அம்மா என்றோ விளிப்பான். அப்படிச் சொல்லும்போது கூட வெறுப்பும், குத்தலும் அந்தக் குரலில் தொனிக்கும்.
“நான் கிருஷ்ணவேணி அம்மாளின் மகள் என்பதை மறந்துவிடு. ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாளாம் என்று கதை சொல்கிறேன். அந்தப் பெண்ணுக்கு வந்த பிரச்னைக்கு தீர்வு சொல்லு, போதும்.”
“சரி. கதையைச் சொல்லு.”
“ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாளாம். அந்தப் பெண்…”
“அழகானவள்… பணக்காரி…படித்தவள்… புத்திசாலி. பெற்றோரின் செல்லமகள். அதெல்லாம் எனக்குத் தெரியும். அந்த சுகுமாரிக்கு வந்த பிரச்னை என்னவென்று சொல்லு.”
“அந்தப் பெண்ணுக்கு ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்வதாக முடிவு செய்தார்கள். அவன்…”
“·பாரின் ரிடர்ன்ட். நல்ல வேலையில் இருக்கிறான்.”
“என்னை சொல்லவிடேன்.” கோபமாக பார்த்தேன்.
“நீ சொல்லப் போவதை வேகமாக முடிக்கிறேன். நீயே சொல்லு.” கிருஷ்ணன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.
“அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளுடைய திருமணத்தை ரொம்ப ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் கூட செய்யப் போகிறார்கள். இந்த நேரத்தில் அந்த பையனின் மனதில் தான் இல்லை என்ற உண்மை அந்தப் பெண்ணிற்குத் தெரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்?”
கிருஷ்ணன் யோசிப்பது போல் என்னைப் பார்த்தான். “அது உண்மைதானா? அந்தப் பெண் வீணாக சந்தேகப்படகிறாளோ?”
“ஊஹ¤ம். வீண் சந்தேகம் இல்லை. நூற்றுக்கு நூறுபர்சென்ட் உண்மை. அந்தப் பையன் வேறு ஒரு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதத்தை அந்தப் பெண்ணே தன் கண்ணால் பார்த்திருக்கிறாள்.”
“மீனா! என்ன இது? நீ சொல்வது உண்மைதானா?” வியப்புடன் பார்த்தான்.
“உண்மைதான் சொல்கிறேன். நீ எந்த சத்தியம் செய்யச் சொன்னாலும் செய்கிறேன். பாரபட்சமில்லாமல் இந்த பிரச்னைக்குத் தீர்வு சொல்லு.”
“நானா? என்னால் என்ன சொல்ல முடியும்?”
“எனக்கு சரியான வழியைக் காட்டு. நான் தவறு செய்து விட்டேனோ என்று எதிர்காலத்தில் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் இருக்கும் விதமாக என்னைக் காப்பாற்றூ”
“மீனா!”
“மனம் விட்டுப் பேசுவதற்கு உன்னைவிட நெருக்கமானவர்கள் எனக்கு யாருமே இல்லை. இந்த விஷயமாக உனக்குக் கடிதம் எழுதுவதாக இருந்தேன். கடவுளே பார்த்து அனுப்பி வைத்தது போல் நீயே வந்துவிட்டாய். என்னை விரும்பாதவனை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது? வாழ்நாள் முழுவதும் எப்படி அவனை சகித்துக் கொள்வது?”
“அந்த நபரிடம் உன் மனதில் எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறாயோ அதைப் பொறுத்து முடிவு எடுக்கணும். நீ அவனை மனப்பூர்வமாக விரும்பியிருந்தால் இப்போதைக்கு மௌனமாக இரு. திருமணம் ஆனபிறகு அவனை மாற்ற முயற்சி செய்.”
“நான் அவனை அந்த அளவுக்கு விரும்பவில்லை என்றால்?”
“உங்க அம்மா அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லி இந்தத் திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிடு.”
“அவர்கள் என் விருப்பத்தை லட்சியம் செய்யாமல் இருந்தால்?”
“ஏன் செய்ய மாட்டார்கள்? உன்னுடைய சந்தோஷத்தை விட அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்?”
“அவ்வளவுதான் என்கிறாயா?”
“இதைவிட வேறு வழி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதோடு முழுக்க முழுக்க உங்கள் குடும்ப விஷயம் இது. வேற்று மனிதன், நான் என்ன சொல்ல முடியும்?”
“எதற்காக சும்மா சும்மா வேற்று மனிதன் என்று நினைவுப் படுத்துகிறாய்? பயப்படாதே… உன் மீது உரிமை கொண்டாடவோ, அதிகாரம் நிலை நாட்டவோ நான் இங்கே வரவில்லை. நீ வேற்றுமனிதன் என்று எண்ணியிருந்தால் இதையெல்லாம் சொல்லியிருப்பேனா?”
“தாங்க்யூ மீனா!” ஏதோ வேலை இருப்பதுபோல் சட்டென்று எழுந்து போனான்.
நான் சோபாவில் சரிந்தபடி உட்கார்ந்துகொண்டேன். கிருஷ்ணன் மறுபடியும் என் எதிரே வந்து உட்கார்வில்லை. ஜன்னல் அருகில் சென்று திரைச்சீலையை சற்று விலக்கி கீழே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய போக்கைப் பார்த்தால் எங்களுடைய உரையாடல் முடிந்துவிட்டது போல் தோன்றியது.
“என்னை இங்கே உட்கார வைத்துவிட்டு நீ மட்டும் அங்கே போய் நின்றால்? இதுதான் மரியாதையா?” என்றேன்.
“கீழே ரொம்ப அகழான காட்சி தென்படுகிறது. நீயும் வந்து பாரேன்” என்றான்.
எழுந்து போனேன். ஆங்காங்கே மேஜைகளை போட்டு விருந்து பரிமாறிக் கொண்டிருந்தார்கள். மக்கள் சிரிப்பும் கும்மாளமுமாக பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று தொலைவில் சிறிய மேடை மீது விலை உயர்ந்த ஆடைகளில், மாலையும் கழுத்துமாக கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். ரிசெப்ஷனுக்கு வந்தவர்கள் முதலில் மேடைக்குப் போய் மணமக்களிடம் பரிசுகளை தந்து விட்டு, போட்டோ எடுத்துக் கொண்டு, கைகுலுக்கிவிட்டு கீழே இறங்கிவந்து விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெட்கத்துடன் சிரித்தபடி நின்றிருந்தார்கள்.
ஒரு நிமிடம் உலகத்தையே மறந்து போனவளாக மணமக்களை, அந்த சந்தடியை பார்த்துக் கொண்டிருந்தேன். மனக்கண் முன்னால் மின்னலைப் போல் காட்சி ஒன்று தோன்றியது.
மேடைமீது மணமக்கள் இருந்த இடத்தில் நானும், என் பக்கத்தில் சாரதியும் நின்று கொண்டிருப்பது போல் காட்சி விரிந்தது. அம்மா பரபரப்புடன் இங்கேயும் அங்கேயும் சுழன்று கொண்டிருந்தாள்.
அந்தப் பெண் இருப்பது போல் சந்தோஷமாக என்னால் இருக்க முடியுமா? சாரதியின் பக்கம் பார்க்கும் போது என் முகத்தில் வெட்கம் பொங்கி வருமா?
“திருமணம் என்பது ஒடி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு இனிமையான கனவு!” பெருமூச்சு விட்டபடி என்னையும் அறியாமல் வெளியில் சொல்லிவிட்டேன்.
“பெண்களுக்கு மட்டும்தானா? ஆண்களுக்கு இருக்காதா அந்தக் கனவு?” தாழ்ந்த குரலில் சொன்னான் கிருஷ்ணன்.
“நேரமாகிவிட்டது. நான் கிளம்பட்டுமா?” என்றேன்.
“பணத்தை எடுத்துக்கொள்.” நினைவுப்படுத்தினான்.
“ஊஹ¤ம். இப்போ வேண்டாம். நாளைக்கு உன் தங்கையை உன்னிடம் பத்திரமாக ஒப்படைத்துவிடு பணத்தை வாங்கிக் கொள்கிறேன். போதுமா?”
என் பேச்சை அவன் நம்பியது போல் தெரியவில்லை. சலித்துக் கொள்வது போல் பார்த்தான். “மறுபடியும் நாளைவரையிலும் தள்ளிப்போடுவானேன்? நாள் முழுவதும் வேலை செய்து பழக்கப்பட்டவன். இப்படி வெறுமனே உட்கார்ந்திருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கு.. மறுபடியும் நீ வரவேண்டியது இல்லை. நான் இப்போதே உன்னுடன் வருகிறேன். டாக்ஸியில் வெளியில் காத்திருக்கிறேன். ராஜியை அனுப்பி வைத்துவிடு.”
“இன்னும் என்மீது கோபம் போகவில்லையா?”
“போய்விட்டது என்று பொய் சொல்லச் சொல்கிறாயா?”
“வேண்டாம். பெரும்பாலானவர்களிடம் இருக்கும் பலவீனம் என்னிடமும் இருக்கு. நான் பொய் சொல்வேன். ஆனால் எதிராளி சொன்னால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ராஜி யாரென்று எங்கள் வீட்டில் சொல்லாமல் போனதுதானே நான் செய்த குற்றம்? அதுதானே உன் கோபம்? வேறு எப்பொழுதாவது விளக்கம் தருகிறேன். இப்போ மட்டும் வேண்டாம். ராஜியை அழைத்துக் கொண்டு நானே இங்கு வருகிறேன். இந்த ஒருநாள் மட்டும் பொறுமையாக இரு.”
நான் கிளம்பும் போது கிருஷ்ணன் சொன்னான். “மீனா! நான் உன்னை எதற்காகவும் விளக்கம் கேட்கப் போவதில்லை. எற்கனவே மனக்கசப்புடன் விலகிப்போன நம் இரு குடும்பங்களுக்கு நடுவில் தேவையில்லாமல் மேலும் பிளவு ஏற்படுமோ என்றுதான் அஞ்சுகிறேன். ராஜியை உடனே அனுப்பிவிடு. அவளுடைய சொந்தக்காரர்களிடம் போய்விட்டாள் என்று வீட்டில் சொல்லிவிடு. ராஜி யாரென்று உங்க அம்மாவுக்குத் தெரிய வேண்டிய அவசியம் என்றைக்குமே ஏற்படாது.”
சரி என்பதுபோல் தலையை அசைத்தேன். அம்மாவுக்கு வலது கரமாக, மிகவும் பிரியமானவளாக இருக்கும் ராஜியை இப்படி திடீரென்று வீட்டை விட்டு என்னால் அனுப்பிவிட முடியுமா? இந்த நாடகம் கடைசியில் எப்படி முடியப் போகிறது?
கிருஷ்ணன் கார் வரையிலும் வந்தான். காரை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னேன். “அறையில் சும்மா உட்கார்ந்து இருப்பது போர் ஆக இருக்கு என்றாயே. என்னுடன் வாயேன். சும்மா எங்கேயாவது சுற்றிவிட்டு மறுபடியும் இறக்கிவிட்டுப் போகிறேன்.”
“எதுக்கு? வழியில் யாராவது தென்பட்டால் மறுபடியும் என்னை காரிலிருந்த தள்ளி விடுவதற்காகவா?”
“என்ன பேசுகிறாய்?” புரியாமல் பார்த்தேன்.
“அன்று மதுவின் உறவினர் வீட்டிலிருந்து வரும்போது யாரோ மாமி உன்னைப் பார்த்துவிட்டாள் என்று என்னுடன் பேசிக்கொண்டிருந்தவள் பாதியிலேயே நிறுத்தி, என் கையை உதறித் தள்ளிவிட்டு போகவில்லையா? அந்த நிமிடத்தை நீ மறந்து போனாலும் என்னால் மறந்து போக முடியாது.”
என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. “நீ ரொம்ப கெட்டவன். சின்ன விஷயத்திற்கு இப்படி குதர்க்கமாக யோசிப்பாய் என்று நினைக்கவில்லை.” காரை ஸ்டார்ட் செய்தேன்.
“கெட்டவனா? இல்லவே இல்லை. விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய இங்கிதம் இருப்பவன். சூறாவளிக் காற்றாக வந்து என்னை சூழ்ந்து கொண்டாய். என் விவேகம் காற்றில் பறந்துவிட்டது. இப்போ பரவாயில்லை. காற்றின் வேகம் குறைந்துவிட்டது. நான் நானாகிவிட்டேன்.”
“என்ன?” ஆர்வத்துடன் அவன் பக்கம் திரும்பினேன்.
“ஒன்றுமில்லை. நேரமாகிவிட்டது. செல்லமகளை இன்னும் காணவில்லையே என்று உங்க அம்மா கவலைப்படப் போகிறாள்.”
“நாளைக்குக் கட்டாயம் வருகிறேன்.”
“நான் காத்திருப்பேன்.” கார் கதவை சாத்திக் கொண்டே சொன்னான்.
வேண்டுமென்றே மெதுவாக டிரைவ் செய்து கொண்டிருந்தேன். கிருஷ்ணனிடம் என்ன மகிமை இருக்கிறதோ தெரியவில்லை. அவனிடம் எத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் நேரம் போவதே தெரியாது. அவனிடமிருந்து விடைபெற்று வரும்போது திடீரென்று பாதியில் எழுந்து வந்துவிட்டாற்போல் இருக்கும். மறுபடியும் அவனைப் பார்க்கும் வரையில் மனம் ஒரு நிலையில் இருக்காது.
‘சூறாவளிக் காற்றாக வந்து என்னை சூழ்ந்துகொண்டாய். என் விவேகம் காற்றில் பறந்துவிட்டது. இப்போ பரவாயில்லை. காற்றின் வேகம் குறைந்துவிட்டது. நான் நானாகிவிட்டேன்.’
கிருஷ்ணன் சொன்னது காதில் எதிரொலித்தது. அப்படி என்றால் அவன் மனதில் எனக்கு என்று தனி இடம் இருக்கிறதா? இதற்கு முன்னால் நானும் அவனும் தஞ்சாவூரில் சேர்ந்து சுற்றியது, ராஜியின் திருமணத்திற்கு முன்னால் தோட்டத்தில் நடந்த எங்கள் சந்திப்பு எல்லாம் காட்சிகளாக கண் முன்னே தோன்றின.
பின்னே அவன் ஏன் கம்பீரம் என்ற கோட்டைக்குள் புகுந்துகொண்டு என்னை உள்ளே எட்டிப் பார்க்கவும் அனுமதிக்க மறுக்கிறான்? அதற்குக் காரணம் அவனுடைய விவேகம்தானா? இல்லை, அம்மா எங்களுக்கு நடுவில் தடுப்புச் சுவறாக இருக்கிறாள் என்ற பயமா?
யோசித்துக் கொண்டே எவ்வளவு நிதானமாக டிரைவ் செய்தாலும் வீடு வந்துவிட்டது.

Series Navigation