முள்பாதை 33

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மறுநாள் காலையில் வேண்டுமென்றே தாமதமாக விழித்துக் கொண்டேன். எட்டு மணி ஆகும்போது அம்மா என் அறைக்குள் வந்தாள். ஏற்கனவே குளித்து முடித்துவிட்டு பளிச்சென்று உடுத்தியிருந்தாள்.
“இன்னும் என்ன தூக்கம்? எழுந்துகொள்” என்றாள் லேசான கண்டிப்புடன்.
அலுப்புடன் கண்களைத் திறந்து பார்த்தேன். சோர்வாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு “உடம்பெல்லாம் ஒரே வலி. ரொம்ப களைப்பாக இருக்கு மம்மீ” என்றேன்.
அம்மா சட்டென்று என் நெற்றியின் மீது கையை வைத்துப் பார்த்தாள். அப்பொழுதுதான் பெட்காபியுடன் அறைக்குள் நுழைந்துகொண்டிருந்த திருநாகத்திடம் நேற்று இரவே எனக்கு திருஷ்ட்டி சுற்றி போடச் சொல்லி நினைவுப்படுத்தாததற்கு சத்தம் போட்டாள். அருகில் உட்கார்ந்து கொண்டு காபியை சுயமாக கோப்பையில் ஊற்றி என் கையில் கொடுத்தாள்.
“ஒரு நிமிஷம் கீழே வந்து சாரதியைப் பார்த்து ஹலோ என்று சொல்லிவிடு” என்றாள் அம்மா.
“வாடிப்போன இந்த முகத்துடன் ஹலோ சொல்வதை விட சும்மாயிருப்பதே மேல்” என்றேன்.
அம்மா என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ. மேற்கொண்டு வற்புறுத்தாமல் கீழே சென்றுவிட்டாள். நான் கட்டில்மீது படுத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மா, அப்பா மற்றும் சாரதி பத்து மணிக்கு மேல் யாரையோ பார்க்கப் போகிறார்கள். அவர்கள் கிளம்பியதும் நான் வீட்டை விட்டு கிளம்பி, அவர்கள் திரும்பி வருவதற்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். ஆனால் இவர்கள் எப்போ கிளம்பப் போகிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. நேற்று கிருஷ்ணனிடம் பேசும்போது நான் வருவதற்குத் தாமதம் ஆனாலும் அங்கேயே காத்திரு என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஒருக்கால் நான் போகவில்லை என்றால் கிருஷ்ணன் மறுபடியும் போன் செய்வானா? அவன் அப்படி செய்யமாட்டான் என்றும், நேராக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறிவிடுவான் என்றும் தோன்றியது. அவனிடம் என்ன பேசுவது என்றும், எப்படிப் பேசவது என்றும் மனதிலேயே ஓரிருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்ருந்தவள் வாசலில் சந்தடி கேட்டதும் தலையைத் திருப்பிப் பார்த்தேன்.
சாரதி உள்ளே வந்து கொண்டிருந்தான். சட்டென்று எழுந்து கொள்ளப் போனேன். “வேண்டாம்… வேண்டாம். எழுந்து கொள்ளாதே.” தடுப்பதுபோல் சொல்லிக் கொண்டே கட்டில் அருகில் சற்றுமுன் அம்மா அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.
எழுந்து கொள்ளும் முயற்சியை அதற்கு முன்பே நான் கைவிட்டு விட்டேன். ஏன் என்றால் மெல்லிய நைட்டீயில் இருந்தேன். அந்தத் தோற்றத்தில் அவன் முன்னால் உட்கார்ந்து கொள்வது சாத்தியம் இல்லை. போர்வையைக் கழுத்து வரையிலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்ருந்தேன்.
“ஜுரம் இருக்கா?”
இல்லை என்பது போல் தலையை அசைத்தேன்.
“வெறும் உடம்பு வலிதானா?”
ஆமாம் என்பதுபோல் பார்த்தேன்.
“நேற்று அலைந்ததால் இருக்குமோ?”
இருக்கலாம் என்பதுபோல் தலையை மேலும் கீழும் அசைத்தேன். நான் கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பார்வையைத் திருப்பிக் கொண்டு என்னுடைய அறையை, அதிலிருந்த பர்னிச்சரை சிரத்தையாக கவனிப்பது போல் உட்கார்ந்திருந்தான்.
அவன் தோரணையைப் பார்த்தால் அம்மா அனுப்பியதால் வேறு வழியில்லாமல் வந்திருப்பது போல் தென்பட்டது. நான் மறுபடியும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கத் தொடங்கினேன். அவன் முன்னிலையில் என் வாயிலிருந்து வார்த்தை வெளிவர மறுக்கிறது. அவன் எதிரில் இருந்தால் முள் இருக்கையின் மீது அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. இப்படியெல்லாம் நான் உணருவதாக அவனிடமே சொல்லிவிட்டால்? வேறு வினையே வேண்டாம். அம்மா என்னைக் கொன்று போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பாள்.
பத்து நிமிங்கள் அவன் என்னுடைய அறையை ஆராய்ச்சி செய்வதிலும், நான் சூனியத்தை வெறித்து பார்ப்பதிலுமாக கழிந்து விட்டன.
“நான் வருகிறேன்.” வந்த வேலை முடிந்துவிட்டாற்போல் சாரதி எழுந்து கொள்ளப் போனான். சரி என்பதுபோல் பார்த்தேன். அவன் நாற்காலியிலிருந்த எழுந்து கொள்ளும்போது அம்மா உள்ளே வந்தாள். சாரதி மறுபடியும் உட்கார்ந்து கொண்டான்.
“பிரேக்·பாஸ்ட் இங்கேயே வரவழைக்கட்டுமா?” அம்மா கேட்டாள்.
“வேண்டாம். கீழேயே வருகிறேன்.”
அம்மா வந்து கட்டில் விளிம்பில் அமர்ந்து கொண்டாள்.
“டெம்பரேச்சர் இல்லை போலிருக்கு.” சாரதி அம்மாவிடம் சொன்னான்.
“ஆமாம். எதற்கும் இருக்கட்டும் என்று டாக்டருக்கு போன் செய்தேன். ரொம்ப பூஞ்சை உடம்பு. ஒருவேளை ஜுரம் அடித்தாலும் கீரைத்தண்டாய் துவண்டு போய் விடுவாள்” அம்மா என் நெற்றியின் மீது கையை வைத்து மற்றொரு முறை ஜுரம் இருக்கா இல்லையா என்று பார்த்தாள். அம்மா இப்படி கனிவாக பேசும் போதெல்லாம் என் மனதில் சந்தோஷம் வெள்ளமாக பெருகி ஓடும்.
மனித மனம் எவ்வளவு விசித்திரமானது? சில சமயம் பொங்கிப் போவதும், சில சமயம் குன்றிப் போவதும். எதையும் சமமாக எடுத்துக் கொண்டால் என்ன?
அங்கும் இங்குமாக தலையைத் திருப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாரதி கையை நீட்டி மேஜை மீது இருந்த ·போட்டோ ·பிரேமை எடுத்துப் பார்த்தான். என் இதயத்தில் கிலி பரவியது.
“ரொம்ப நன்றாக இருக்கு. எப்போ எடுத்த போட்டோ இது?” அம்மாவிடம் என்னுடைய போட்டோவை காண்பித்துக் கொண்டே கேட்டான்.
எனக்கு பதினேழு வயது இருக்கும்போது இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டு ரிப்பனை வைத்து மடித்து கட்டியிருந்தபடி எடுத்த போட்டோ.
“மூன்று வருடங்களுக்கு முன்பு.” அம்மா சொன்னாள்.
“மூன்று வருடங்களுக்கு முன்பா?” நம்ப முடியாதவன் போல் பார்த்தான். “ரொம்ப வித்தியாசம் தெரிகிறது, அப்போ இருந்ததற்கும் இப்போ இருந்ததற்கும்.”
அம்மா பெருமூச்சை அடக்கியப் “பெண் வளர்த்தியோ பீர்க்கை வளர்த்தியோ என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்” என்றாள். சாரதியிடமிருந்து ·போட்டோ ·ப்ரேமை வாங்கிக்கொண்டு என்னுடைய போட்டோவை ஆழமாகப் பார்த்தாள். நான் எப்போதும் சிறுமியாகவே இருந்து விட வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம். ஆனால் அது சாத்தியம் இல்லையே.
திடீரென்று அம்மா “உங்களிடம் மீனாவின் போட்டோ ஒன்று கூட இல்லை இல்லையா. அவளுடைய போட்டோ கொடுக்கணும் என்று ஓரிருமுறை நினைத்தேனே ஒழிய கை வரவே இல்லை. இதை எடுத்துத் தருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே ·ப்ரேமை திருப்பி என்னுடைய போட்டோ இருந்த ·ப்ரேமின் கிளிப்பை கழற்றப் போனாள்.
என் இதயத்தில் தடக் தடக் என்று ரயில் ஓடும் சத்தம். அம்மா கிளிப்பைக் கழற்றுவதில் கவனமாக இருந்தாள்.
என் போட்டோவுக்கு பின்னால் கிருஷ்ணனின் போட்டோ! வேறு வினையே வேண்டாம். எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அடுத்த நிமிடம் மேற்கூரை தலைமீது விழப் போவது நிச்சயம் என்று முன்கூட்டித் தெரிந்தவள் போல் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருந்தேன்.
ஏதோ அற்புதம் நிகழ்ந்ததுபோல் திருநாகம் மாமி உள்ளே எட்டிப் பார்த்தாள். “அம்மா! மிஸெஸ் ராமன் லைனில் இருக்காங்க. உங்களிடம் ஏதோ அர்ஜெண்டாக பேசணுமாம். உடனே வரச் சொன்னாங்க” என்றாள்.
அம்மா கையிலிருந்த ·போட்டோ ·ப்ரேமை அப்படியே கட்டில் மீது போட்டுவிட்டு வேகமாகப் போய்விட்டாள். சாரதியும் அம்மாவின் பின்னாலேயே கிளம்பிப் போனாள்.
என் இதயத்துடிப்பு பழைய நிலைக்கு திரும்புவதற்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. கிருஷ்ணனின் போட்டோவை எடுத்து பீரோவில் உடைகளுக்கு நடுவில் பத்திரப்படுத்தினேன். பீரோவை பூட்டி சாவியை தலையணைக்கு அடியில் வைத்து விட்டேன்.
பதினோரு மணி ஆகிவிட்டது. அம்மா, அப்பா, சாரதி மூவரும் வெளியில் கிளம்புவதற்குத் தயாராக காத்திருந்தார்கள். மிஸெஸ் ராமன் அவ்வளவு அவசரமாக போன் செய்த காரணம் என்னவென்றால், இன்று எங்கள் எல்லோருக்கும் மதியச் சாப்பாடு அங்கே ஏற்பாடு செய்திருப்பதாகவும், இங்கே சமைக்க வேண்டாம் என்றும் சொல்வதற்காகத்தான். சற்று முன்னாடியே வந்தால் அவர்கள் வீட்டுக்கு வரப்போகும் விருந்தாளிகளுக்கு சாரதியை அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தாள்..
அம்மாவும் மற்றவர்களும் கிளம்ப முற்பட்டபோது எங்கள் குடும்ப நண்பர் பார்த்திபனும் அவருடைய மனைவியும் கிளப் விழாவை சிறப்பாக நடத்தியதற்காக அம்மாவை நேரில் பாராட்டுவதற்காக வந்து விட்டார்கள். எல்லோரும் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். பதினோரு மணி ஆகிவிட்டது. கீழே இருந்து சிரிப்புச் சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கிருஷ்ணனை சந்திக்க முடியாமல் போனால் நான் போட்ட திட்டமெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும். ஏற்கனவே சொன்ன நேரத்தையும் தாண்டி அரைமணி ஆகிவிட்டது. கிருஷ்ணன் அங்கே எனக்காகக் காத்திருப்பான். நான் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருந்தேன்.
கார் கிளம்பப் போகும் சத்தத்திற்காகக் காத்திருந்த எனக்கு திடீரென்று யாரோ என் அறையை நோக்கி நடந்து வருவது போல் காலடிச் சத்தம் கேட்டது. சட்டென்று வந்து கட்டில்மீது படுத்துக் கொண்டேன். கழுத்து வரையிலும் போர்த்திக் கொண்டு வாசல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அ¨க்குள் வந்தது யாரோ இல்லை. டாடீ!
அப்பாவை பார்த்ததுமே என் பார்வை தரையில் பதிந்தது. நேற்று அப்பா என்னை சத்தம் போட்ட பிறகு மறுபடியும் நான் அவருடைய கண்ணில் படவில்லை. அப்பா என்னைப் பார்த்ததும் என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ. அருகில் வந்து நெற்றியின் மீது கையை வைத்து பார்த்தார்.
“ஜுரம் இல்லை.” வேண்டுமென்றே சோர்ந்துபோன குரலில் சொன்னேன்.
அப்பாவின் முகம் வழக்கத்தைவிட பிரசன்னமாக இருந்தது. “இரவு முழுவதும் தூங்கவில்லையா?” என்று கேட்டார்.
இல்லை என்பது போல் தலையை அசைத்தேன்.
“ராஜியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தாயா?” அப்பாவின் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
“ஆமாம்.” பிடிவாதமாக சொன்னேன்.
“அந்த எண்ணத்தை விட்டுவிடு. நேற்று இரவு கமலாவுக்குக் கடிதம் எழுதிப்போட்டுவிட்டேன். ராஜியின் திருமணம் அந்த முகூர்த்தத்தில் நடந்துவிடும்.
“நடக்காது.” திடமான குரலில் சொன்னேன்.
“அவ்வளவு நம்பிக்கையா?”
“ஆமாம். ராஜி என்னுடைய பேச்சைக் கேட்பாள்.”
“பந்தயம் கட்டத் தயாரா?”
“ஓ.கே.”
“எவ்வளவு?”
“ஒன்றரை லட்சம்!”
“அவ்வளவு பெரிய தொகையா?”
“ஆமாம்.” நான் எது செய்தாலும் எங்க ஸ்டேடஸ¤க்கு தகுந்தாற்போல் இருக்கணும் என்று அம்மா சொல்லிக் கொண்டு இருப்பாள்.
“ஜெயித்து விடுவோம் என்று அவ்வளவு உறுதியா”
“பந்தயம் கட்டிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்.”
“சரி ஒப்புக் கொள்கிறேன். ஒருக்கால் நீ தோற்றுப் போய்விட்டால்?”
“நான் தருகிறேன்.”
“உன்னால் எப்படித் தரமுடியும்?”
“எப்படியோ தருகிறேன். உங்கள் பணத்திலிருந்து மட்டும் இல்லை.”
அப்பா என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு தலையை அசைத்துவிட்டு “ஓ.கே.” என்றார்.
“கொடுத்த வாக்கை மறக்கக் கூடாது.”
“அந்த வார்த்தையை நீதான் நினைவில் வைத்துக் கொள்ளணும்.”
அப்பா வாசலைத் தாண்டும்போது “டாடீ!” என்று பின்னாலிருந்து செல்லமாக அழைத்தேன்.
பின்னால் திரும்பி என்ன என்பதுபோல் பார்த்தார்.
“தெரிந்தோ தெரியாமலோ நான் உங்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.”
அப்பா ஒரு நிமிடம் என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு மிருது கம்பீரமான குரலில் “மீனா! நீ உண்மையிலேயே தெரியாமல் செய்தால் என் மன்னிப்பு எப்போதும் உனக்கு இருக்கும். ஆனால் தெரிந்தும் தெரியாததுபோல் நடித்தால் மட்டும் எனக்கு இருமடங்கு வேதனை ஏற்படும். நீ எந்தக் காரியத்தை எந்த எண்ணத்தோடு செய்கிறாய் என்று என்னால் சுலபமாகக் கண்டுபிடித்து விடமுடியும். நான் ஒரு லாயர் என்பதை மறந்து விடாதே” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அப்பா அப்படி சகஜமாக பேசிவிட்டுப் போன பிறகு என் இதயத்திலிருந்து பெரிய பாரம் நீங்கியதுபோல் நிம்மதியாக இருந்தது. ஆனால் அப்பா சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த அர்த்தம் உடனே புரியவில்லை. அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>