முள்பாதை 23

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மறுநாள் அத்தையிடம் கேட்டு கிருஷ்ணனுக்குத் தெரியாமல் நானும் ராஜேஸ்வரியும் சேர்ந்து சுந்தரியைப் பார்ப்பதற்காக திருக்கருகாவூருக்குப் போக வேண்டும் என்று முயறசி செய்தோம். ஆனால் திடீரென்று மேகங்கள் சூழ்ந்துகொண்டு காற்றும் மழையும் பிடித்துக்கொண்டதால் எங்கள் பயணம் நின்று விட்டது. அப்படிப்பட்ட மழையை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. திடீரென்று வானம் இருண்டு விட்டது. அதுவரையில் அமைதியாக இருந்த சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. கதவுகள் பெயர்ந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு காற்று வேகமாக வீசத் தொடங்கியது. மழை பலமாக பெய்து கொண்டிந்தது. திடீரென்று ஆலங்கட்டிகள் விழத் தொடங்கின.
“அம்மா! அக்கா! வந்து பாருங்க. ஆலங்கட்டி மழை.” உரத்தக் குரலில் கத்திக் கொண்டே மணி, மது, காமேஸ்வரி வெளியே ஓடினார்கள். நானும் ராஜேஸ்வரியும் வெளியே வந்தோம். காற்றின் வேகம் சற்று குறைந்து மழை பலமாக பெய்து கொண்டிருந்தது. குழந்தைகள் மூவரும் உள்ளேயிருந்து டவல்களை எடுத்து வந்து தலையில் போர்த்திக்கொண்டு ஆலங்கட்டிகளை பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு பொறுக்கினேன். சில்லென்று இருந்த ஆலங்கட்டிகளை எல்லோரும் வாயில் போட்டுக் கொண்டோம். மழை மேலும் வலுத்தது. குழந்தைகள் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். வராண்டாவில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி “போதும் மழையில் நனைந்தது. உள்ளே வாங்க” என்று குரல் கொடுத்தாள். ஆனால் யாருமே அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. நான் கைகளை நீட்டி வானத்தை நோக்கியபடி வேகமாக சுழன்று கொண்டிருந்தேன். ஷவர்பாத் எடுத்துக் கொள்வதுபோல் மழைநீர் என் மேனியைத் தழுவிக் கொண்டிருந்தது. வராண்டாவில் நின்றிருந்த ராஜேஸ்வரி முறுவலுடன் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ராஜீ! நீயும்வா. ரொம்ப நன்றாக இருக்கு” என்றேன்.
“வேண்டாம் வேண்டாம். தலை நனைந்துவிடும்” என்றாள்.
“நனைந்தால் என்னவாம்? டவலால் துடைத்து காய வைத்துக் கொண்டால் போச்சு. நீ வா.” அருகில் சென்று ராஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மழையில் இழுத்து வந்தேன். இருவரும் கைகளை கோர்த்துக் கொண்டு வேகமாக சுழற்றினோம்.
என் மனதில் உற்சாகம் கரை புரண்டது. ராஜியின் இடுப்பில் கையைப் பதித்து மற்றொரு கையால் அவள் கையை லேசாக உயர்த்தியபடி “ராஜீ! உனக்கு மேல்நாட்டு நடனம் கற்றுத் தரட்டுமா?” என்றேன்.
“நடனம் எதுவும் வேண்டாம். நீ முதலில் என் இடுப்பிலிருந்து கையை எடு.” கூச்சத்துடன் நெளிந்த ராஜி மெதுவாக என் கைகளை விலக்கினாள். “நான் உனக்கு தட்டாமாலை கற்றுத் தரட்டுமா?” என்றாள்.
“ஓ.கே.” என்றேன்.
ராஜி என் இரண்டு கைகளையும் கிராஸாக பிடித்துக் கொண்டாள். இருவரும் கூடுமான வரையிலும் விலகி நின்று கொண்டோம். முதலில் மெதுவாக சுழன்று கொண்டிருந்த ராஜேஸ்வரி போகப் போக வேகமாக சுற்றத் தொடங்கினாள்.
அவளுடைய வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.
“போதும் நிறுத்து. எனக்குத் தலையைச் சுற்றுகிறது.” உரத்தக் குரலில் கத்தினேன்.
ராஜேஸ்வரி மெதுவாக வேகத்தை குறைத்துக்கொண்டே என் கைகளை விட்டுவிட்டாள். அவள் என் கைகளை விட்டதும் கால்களுக்கு அடியில் நிலம் நழுவியதுபோல் இருந்தது எனக்கு. தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. கால்கள் வலுவில்லாமல் துவண்டு போயின. உடல் தள்ளாடிது. கைகளை நீட்டி சமாளிக்கப் போனேன். என்னைச் சுற்றி உலகம் சுழலுவது போல் இருந்தது.
ராஜி என் அருகில் வந்து என்னை அழுத்தமாக பிடித்துக் கொண்டாள். “கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்துகொள். தலைசுற்றல் நின்றுவிடும்” என்றாள்.
“அம்மாடி! இதுபோல் என்றுமே எனக்கு ஆனதில்லை” என்றேன், கண்களை பலமாக அழுத்திக்கொண்டே.
திடீரென்று வராண்டாவிலிருந்து குரல் கேட்டது. “ராஜீ! உங்க அண்ணி உனக்கு டான்ஸ் கற்றுத் தருவதாகச் சொன்னால், நீயே அவளை டான்ஸ் ஆட வைத்து விட்டாயே?”
திடுக்கிட்டவளாக கண்களைத் திறந்து வராண்டாவின் பக்கம் பார்த்தேன்.
கிருஷ்ணன் எப்பொழுது வந்து நின்றானோ நாங்கள் பார்க்கவே இல்லை. இரு கைகளையும் கட்டிக் கொண்டு வராண்டா தூணில் லேசாக சாய்ந்தபடி வேடிக்கைப் பார்ப்பதுபோல் ஆர்வத்துடன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். முறுவலுடன் அவன் நின்றிருந்த தோரணையைப் பார்த்தால் அவன் அங்கே வந்து ரொம்ப நேரமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.
சமையலறையில் இரவுக்கான சமையல் வேலையில் முழ்கியிருந்த அத்தை அப்பொழுதுதான் வெளியே வந்தாள். எங்களைப் பார்த்ததுமே “அடடா! என்ன இது? சின்னக் குழந்தைகள் போல் மழையில் நனைந்து கொண்டு இருக்கீங்களே? உடம்புக்கு ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது? ராஜி! உனக்காவது புத்தியிருக்க வேண்டாமா?” என்று கடிந்து கொண்டாள்.
“ராஜியை ஒன்றும் சொல்லாதீங்க அத்தை. நான்தான் அவளை இழுத்து வந்தேன். இங்கே பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. இல்லாவிட்டால் முன்னாடியே உள்ளே வந்திருப்போம்.” லேசான கோபத்துடன் கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“கால் காசு செலவு இல்லாமல் இவ்வளவு நல்ல டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்க்காமல் எப்படி இருப்பது?” சிரித்த முகத்துடன் என் கண்களை நேராக பார்த்துக் கொண்டே சொன்னான்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எப்பொழுதும் இல்லாதவிதமாக அவன் பார்வை என்னை முழுவதுமாகத் தழுவியதுபோல் இருந்தது. சட்டென்று அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக உள்ளே போய்விட்டேன்.
அன்று இரவு யாருமே சரியாக உறங்கவில்லை. மழையில் நனைந்ததால் எல்லோருக்கும் ஒரே தும்மல்கள். ஏற்கனவே டான்சில்ஸ் பிரச்னை இருந்த எனக்கு ஜலதோஷமும், உடல் வலியும் சேர்ந்து கொண்டு விட்டன. தலையும் பாரமாக இருந்தது. காலையில் எழுந்து கொண்டதும் அத்தை என்னைத் தொட்டுப் பார்த்தாள். ஜுரம் இருப்பதாகவும் காபிக்குப் பதில் கஷாயத்தைக் குடிக்கணும் என்று சொன்னாள். கையோடு மிளகு கஷாயத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள். ஒரு வாய் கஷாயத்தை குடித்தேனோ இல்லேயோ புரையேறிக்கொண்டு விட்டது. இருமலும் சேர்ந்து கொண்டதில் திக்குமுக்காடி விட்டேன்.
அப்பொழுதுதான் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே வந்த கிருஷணன் அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தான். விஷயத்தைத் தெரிந்துகொண்டு அந்த கஷாயத்தைக் குடிக்க வேண்டாம் என்றும், வேறு மருந்து தருவதாகவும் சொன்னான். அத்தை வலுக்கட்டாயமாக என்னை அந்த கஷாயத்தை விழுங்கச் செய்து விடப் போகிறாளே என்று பயந்து போயிருந்தேன். அந்த ஆபத்திலிருந்து என்னை தப்பிக்க வைத்ததற்கு பார்வையாலேயே கிருஷ்ணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
சற்று நேரம் கழித்து கிருஷ்ணன் கொடுத்த மருந்தை சாப்பிட்டுவிட்டு காபியைக் குடித்தேன். ஒன்பது மணி ஆகும் போது ராஜேஸ்வரி கொதிக்கும்நீரில் மஞ்சள் பொடியைப் போட்டு போர்வையைப் போர்த்தி என்னை ஆவி பிடிக்கச் செய்தாள்.
“நான் சொன்னால் கேட்கவில்லை. இப்போ பாரு ஜலதோஷம் பிடித்துக் கொண்டு விட்டது.” ராஜேஸ்வரி உரிமையுடன் கடிந்து கொண்டாள்.
“உன் வார்த்தைகள் இவ்வளவு பமதிப்பு வாய்ந்தவை என்று தெரியாது. இனிமேல் ஒருநாளும் உன் அறிவுரைகளை அலட்சியம் செய்ய மாட்டேன். சரிதானே?” வியர்வையால் தொப்பலாகி விட்டிருந்த முகத்தை போர்வையிலிருந்து நீட்டிக் கொண்டே சிரித்தேன்.
கிருஷ்ணன் டான்சில்ஸ் வீக்கம் குறைவதற்கும் மருந்து கொடுத்தான். மயக்கம் ஆட்கொண்டது போல் கட்டில் மீது படுத்திருந்தேன்.
கிருஷ்ணன் என்றும் இல்லாத விதமாக இன்று பளிச்சென்று வெண்மை நிறத்தில் உடைகளை அணிந்து கொண்டு, தலையை வாரி வெளியே எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தான்.
எனக்கு அவனைப் பாரக்கும்போது தினமும் இப்படி நேர்த்தியாக உடுத்திக் கொண்டால் என்ன என்று தோன்றியது. ராஜேஸ்வரி அழுக்கு உடைகளை வண்ணானுக்கு போடுவதற்காக கணக்கு எழுதிக் கொண்டிருந்தாள்.
“ராஜீ! எனக்கு மருந்து கொடுத்ததற்கு •பீஸ் எவ்வளவு என்று உங்க அண்ணாவிடம் கேட்டுச் சொல்லு. கொடுக்காமல் போய்விடுவேன் என்று நினைக்கப் போகிறான்” என்றேன்.
ராஜேஸ்வரி முறுவலுடன் அண்ணன் பக்கம் பார்த்தாள்.
“வெறும் பேச்சு எதுக்கு ராஜீ? என்னவோ கையோடு கொடுத்து விடுவதுபோல்.” இச்சு கொட்டியபடி கிருஷ்ணன் அலட்சியமாகச் சொன்னான்.
“வெறும் பேச்சு இல்லை. உண்மையாகவே சொல்கிறேன். யாரிடமிருந்தும் இனாமாக வேலை வாங்கிக் கொள்வதோ, உதவி பெறுவதோ எனக்கு பழக்கம் இல்லை.”
“அப்படி என்றால் சரி. உடனே எழுந்து பத்து தோப்புக்கரணம் போடச் சொல்லு. அதுதான் என்னுடைய •பீசு.”
நான் திகைத்துப் போய்விட்டேன். தோப்புக்கரணமா! நானா! கையில் எந்த பொருளும் இல்லை. இருந்திருந்தால் அதை அப்படியே எடுத்து அவன்மீது வீசியிருப்பேன். ராஜி கலகலவென்று நகைத்தாள். எனக்கும் சிரிப்பு வந்தாலும் வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டேன்.
கிருஷணன் அறையை விட்டு வெளியேறும் முன் திரும்பிப் பார்த்தான். “ராஜீ! கவனமாக எண்ணு. பாரபட்சம் காட்டினாய் என்றால் உன் காதைத் திருகி விடுவேன் ஜாக்கிரதை! இந்த விஷயத்தில் நான் ரொம்ப பொல்லாதவன். •பீஸ் குறைந்தால் சும்மா விடமாட்டேன்.”
ராஜியிடம் சொல்லி முடித்துவிட்டு திரும்பும் முன் அவன் கண்கள் மின்னலை விட வேகமாக என் கண்களைச் சந்தித்து விலகியதை நான் உணர்ந்தேன்.
கிருஷ்ணன் போய்விட்டான். “அண்ணன் சொன்னதைக் கேட்டாய் இல்லையா. •பீஸ் எப்போ தரப் போகிறாய்?” சீண்டுவது போல் கேட்டாள் ராஜி.
“இன்னிக்கு என்ன விசேஷம்? உங்க அண்ணன் ரொம்ப உற்சாகமாக இருக்கிறானே? இளவரசனைப் போல் தயாராகி எங்கேயோ போகிறானே?” பேச்சை மாற்றிக்கொண்டே கேட்டேன்.
ராஜேஸ்வரி வண்ணான் கணக்கு எழுதிக் கொண்டே சொன்னாள். “இன்னிக்கு ஊரில் நாடகம் போடுகிறார்கள். இந்த ஊர் லைப்ரரி கமிட்டீயில் வருடத்திற்கு ஓரிரு தடவைகள் நாடகமோ, கதாகாலட்சேபமோ ஏற்பாடு செய்வார்கள். முன் வரிசையில் உட்கார்ந்து கொள்பவர்களுக்கு மட்டும் டிக்கெட் உண்டு. மற்றபடி எல்லோருக்கும் நாடகம் இலவசம்தான். டிக்கெட் வாங்கியவர்களுக்கு முன் வரிசையில் நாற்காலிகள் போடுவார்கள்.”
“அப்போ நீங்கள் எல்லோரும் போறீங்களா?”
“ஆமாம். முன்னாடியே டிக்கெட்டுகள் வாங்கியாகிவிட்டது. நாடகம் பார்க்க நீயும் வருகிறாயா?” என்று §க்டாள்.
வருகிறேன் என்பதுபோல் தலையை அசைத்தேன். “இந்த ஊரில் எல்லாவற்றையும் பார்த்து விடுவேன் போல் இருக்கு. அந்த சுந்தரியை மட்டும் பார்க்க இன்னும் வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்றேன்.
“உண்மையிலேயே உனக்கு சுந்தரியைப் பார்க்க வேண்டுமா?”
“ஆமாம்.”
“காரணம்?”
“ஏனோ தெரியவில்லை. பார்க்கணும் என்று பலமாகத் தோன்றுகிறது. அவளைப் பார்க்காமல் ஊருக்குப் போய்விட்டால் இந்தப் பயணத்தில் ஏதோ குறை இருப்பதுபோல் அதிருப்தியாக இருக்கும்.”
“அந்தக் குறையை வைப்பானேன்? உண்மையிலேயே உனக்குப் பார்க்கணும் என்று தோன்றினால் சுந்தரியை இங்கே வரச்சொல்லி தகவல் சொல்லி அனுப்புகிறேன்.”
“தகவல் சொல்லி அனுப்பினால் வருவாளா?”
“ஏன் வரமாட்டாள்? கட்டாயம் வருவாள். என்ன இருந்தாலும் மாமியார் வீடு இல்லையா? அவ்வப்பொழுது ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு இங்கே வந்து அண்ணனைப் பார்த்து விட்டுப் போவாள்.” ராஜி முறுவலுடன் சொன்னாள்.
“கிருஷ்ணனும் அந்தப் பெண்ணிடம் பேசுவானா?” ஆர்வத்துடன் கேட்டேன்.
ராஜேஸ்வரி தலையைக் குறுக்காக அசைத்தாள். “கல்யாணம் ஆகாமல் அவர்களுக்குள் எப்படி பேசிக் கொள்வார்கள்? அதோடு அண்ணன் பெண்களிடம் அதிகம் பேச மாட்டான். வந்த புதுசில் உன்னிடம் எப்படி இருந்தானோ உனக்குத்தான் தெரியுமே? நான் சண்டை போட்டதால் இந்த அளவுக்காவது உரிமையுடன் பேசுகிறான். அவனுடைய சுபாவமே அப்படித்தான்.”
சாமயலறையிலிருந்து அத்தை “ராஜீ!” என்று குரல் கொடுத்ததும் “வந்துவிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே ராஜி எழுந்து போனாள்.
நான் ரொம்ப நேரம் யோசனையில் ஆழ்ந்தபடி அப்படியே படுத்திருந்தேன்.
ராஜேஸ்வரி சண்டை போட்டதால் மட்டுமே கிருஷ்ணன் என்னிடம் உரிமையுடன் பேசுகிறானா? அதைவிட வேறு ஒன்றும் இல்லையா? தங்கையைத் திருப்திப் படுத்துவதற்காக என்றால் என்னிடம் பேசும்போது அந்தக் கண்களில் தென்படும் அந்த மின்னலுக்கு அர்த்தம் என்ன? நான்தான் தவறாக யோசிக்கிறேனா? இல்லை, ராஜி நினைப்பதில் பிழை இருக்கிறதா? இந்த யோசனை எல்லாம் எனக்கு எதுக்கு? மயக்கம் ஆடகொள்ள அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்