முத்தம் குறித்த கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

மதியழகன் சுப்பையா,மும்பை


1
கண்கள் முத்திக் கொள்கின்றன
சந்திப்பில்
(பிரிவிலும் கூட)

கைகள் முத்திக் கொள்கின்றன
நட்பில்
( காதலிலும் கூட)

உதடுகள் முத்திக் கொள்கின்றன
காதலில்
(நட்பிலும் கூட)

உடல்கள் முத்திக் கொள்கின்றன
தாம்பத்தியத்தில்
(சந்திப்பிலும், பிரிவிலும் , நட்பிலும் , காதலிலும் கூட)

2
குறித்த ஒரு மணியின்
இறுதி நொடியில்
வந்தாய்

நீண்ட நாட்களாய்
கெஞ்சிக் கேட்டதை
கடைசி நொடியில்
தந்தாய்

உணர்ந்து மகிழும் முன்
சென்றாய்
சுவற்றில் விழுந்த
பந்தாய்.

3
ஆயிரம் வார்த்தை சொல்லி
வழியனுப்புவதை விட
உதடு குவித்து ஒன்று போதும்

இடு ப்பு கட்டி தரும்
கழுத்து இதத்திற்கு
பட்டு ம் நகையும்
துட்டு ம் வளமும்
ஈடில்லை

மாற்றமளிக்கா
மாத்திரைகளை விட
தூக்கமளிக்கும் உன்
ஊக்க முத்தம்

கண்களால் தொட்டாய்
கவிதையானேன்
இதழால் தொடு
காவியமாகிறேன்.

4
தயவு செஞ்சு கொடேன்
மாட்டேன்

எங்க அம்மல்ல
ஆமா ! அச்சுக்கு – புச்சுக்கு

ஒன்னேயொன்னு தானே
ஒன்னுமில்ல அரையுமில்ல

என் செல்லம் ! கொடு டா
அதெல்லாம் ……..அப்புறம்

அவனவன் என்னென்னமோ
பண்ணுறான்
போங்க யாராவது கிடைச்சா

கன்னத்திலாவது ?
அறைதான்

இப்படியேத்தான்
சந்திப்பின்
இறுதி உரையாடல்கள்

கேட்டவுடன்
கிடைத்ததில்லை
எதுவும் என்றும்.
5
நெற்றியில் தருவது
வாழ்த்துதலாகும்

கைகளில் தருவது
அன்பின் வெளிப்பாடு

கன்னத்தில் தருவது
கவிதைக்கு ஒப்பு

உடலெங்கும் தருவது
சொர்க்க சுகம்

தருவதாய் பெறுவதும்
பெறுவதாய் தருவதுமான
இதழில் முத்தமே
நட்பின் வலிமை.

madhiyalagan@rediffmail.com
http://madhiyalagan.blogspot.com

Series Navigation

மதியழகன் சுப்பையா, மும்பை

மதியழகன் சுப்பையா, மும்பை