முத்தமிடு!

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

பசுபதி


போகி ஒருநண்பன் – எனக்குப்
. . போதித்த சொற்களிவை.
‘தேகம் நிரந்தரமோ ? – இதனைச்
. . சிந்தனை செய்துவிடு!
சோகம் தவிர்த்துவிடு -தினநள
. . பாகம் புசித்துவிடு!
மோகக் கடல்மூழ்கி — மங்கை
. . முத்துகள் முத்தமிடு! ‘

யோகம் பயில்பெரியார் – ஒருவர்
. . என்னிடம் சொன்னதிது.
‘ தேகம் ஒருகோயில் – அதனைத்
. . தினமும் வணங்கிவிடு!
நாகம் எனவளைந்தே — உனது
. . நாபியை முத்தமிடு!
ஏகன் ஒருவனையே — நினைத்து
. . இந்த்ரியம் கட்டிவிடு! ‘

காவி உடுத்தியவர் — எனது
. . காதில் உரைத்ததிது.
‘ தேவை சுருக்கிவிடு — உனது
. . சிந்தை விரித்துவிடு!
பாவம் வெறுத்துவிடு — ஆனால்
. . பாவியை முத்தமிடு!
சாவில் அமைதியுறு — ஆன்ம
. . சாதனை செய்துவிடு! ‘

கனவில் அருவுருவம் — என்றன்
. . கருத்தில் பதித்ததிது.
‘நினைவை எரித்துவிடு — உன்றன்
. . நெற்றிக்கண் பார்வையிலே!
மனதை முழுங்கிவிடு — தினமும்
. . மெளனத்தை முத்தமிடு !
எனதெனும் எண்ணமதைக்– கொன்றே
. . இறையுன தாக்கிவிடு ! ‘.

Series Navigation

பசுபதி

பசுபதி