மின்சாரப்பூக்கள்…

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


இந்தக் கிராமத்துக் காற்றில்
நைட்ரஸ் ஆக்சைடு
கலந்திருந்ததோ என்னவோ
பூக்கள்
புன்னகைத்துக் கொண்டிருந்தன.

அந்த
மின்விளக்குப் பூவை தொட்டேன்.
10 வோல்ட் ஏ.சி. டைனமோ
மின்சாரம் மாதிரி
விறுவிறுவென்று ஏறியது
கையில் குத்திய கொடியின் முள்.

தேன்கூடு மின்விளக்கு.

கிளைதொட
கருந்தேனீக்கள் வட்டமிட
இருட்டு.
பகலில்
இருள் தரும் விளக்கு.

அதோ
விண்வெளிபயணி
இல்லை
ரோபோ.

மரத்தில் கட்டப்பட்டு.

இவர்களை இந்த கிரமம்
இப்படிதானா மதிப்பது ?

சோளக்கொல்லை பொம்மை.

இது என்ன
பறக்கத் தெரியாத பலூன்.
பச்சைக்கொடி நூலில்
பரங்கிக்காய்.

கொடிநூலை அறுத்துவிட்டால்
இந்த பலூனும் இளைத்துவிடும்.
எப்படி
கட்டப்படும் நூலே
காற்றை ஊதி பெரிதாக்கிறது ?
இதுவெல்லாம்
இந்த மண்ணின் இரகசியம்.

எழுந்து நடந்தேன்
ஏறாதப்படிக்கு
கருக்கு கட்டப்பட்ட தென்னைமரம்.
எப்படி ஏறினான்
அவன் ?

வானவில்லின் நிறங்களெல்லாம்
பிரிந்துகிடந்தன மண்ணில்

மலர்களிலும் கொடிகளிலும் நீரிலுமாய்.

கணநேரம் என் கண்கள்
முப்பட்டகக் கண்ணாடியாய்
நிறப்பிரிகை நிகழ்த்தின.

கிளையில் கட்டித்தொங்கும்
கட்டை விளக்கமாறு.

அடுத்த மரத்தோடு
அப்படி என்ன சண்டை ?


இந்த மரத்தின்
இலைகளை மறைத்துக்கொண்டு
அடுத்த மரம்
ஸ்டார்ச் தயாரிக்கிறதோ ?

தெரிந்தவள் வந்தாள்.
விளக்கமாறின் விளக்கம் புரிந்தது.

அது
கல்லெறிபவனுக்கு காட்டவாம்.

தொடர்ந்து நடந்தேன்.
இரவில்தானா
மின்வெட்டு நிகழவேண்டும் ?
ஒரு
சூரிய மின்விளக்கு முன்
எத்தனை
நட்சத்திர சிம்னிகள் ஏற்றினாலும்
நிகராகுமா ?

நட்சத்திர விளக்குகள்
நனைய அணைய காற்று மழை.

மழையில் நனையவும் ஆசை
அந்த
குடிசையில் ஒதுங்கவும் ஆசை.

இரண்டு ஆசைகளும்
ஈடேறல்.

உள்ளே தூறல்
வெளியே மழை
ஒழுகும் குடிசை.

நினைவுகள் நீள நெஞ்சம் நனைய

இனி
இந்த காற்றுப் படாவிட்டால்
என்
கல்லறைக்குக்கூட
வியர்த்துப் போகும்.

—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation