மாலை நேரத்து விடியல்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

மொழிபெயர்ப்பு கௌரிகிருபானந்தன்வெள்ளை நிற மேகத்துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலந்து போவதை, வானம் காயப்பட்ட இதயம் போல் மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அங்கே நடந்துகொண்டிருந்த வாதவிவாதங்கள் அவள் காதில் விழுந்துகொண்டுதான் இருந்தன. தங்களுடைய அபிப்பிராயத்தை வெளிப்படையாக சொல்வதற்கு அங்கே யாரும் தயங்கவில்லை. அருந்ததியிடம் யாருமே அபிப்பிராயம் கேட்கவில்லை.
கேட்டாலும் அவளால் என்ன சொல்ல முடியும்?
“அப்பா அம்மாவால் அமெரிக்காவில் தங்களை பொருத்திக் கொள்ள முடியாது. அந்த வாழ்க்கை முறையே வேறு. அங்கே அவர்களுக்கு பொழுதும் போகாது. இங்கே இருந்தால்தான் நிம்மதியாக இருப்பார்கள்.” ரவி சொன்னான்.
“அம்மா ரொம்பவும் தளர்ந்து போய்விட்டாள். சில நாட்களாவது அம்மாவை அழைத்துப்போய் என்னுடன் வைத்துக் கொள்ளனும் என்று நினைக்கிறேன்.” கருணா சொன்னாள்.
“பைத்தியம் போல் பேசாதே. இந்த வயதில் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருப்பதுதான் நியாயம். அம்மாவை நீ அழைத்துப் போய்விட்டால் அப்பாவால் தனியாக எப்படி இருக்கமுடியும்? வேளைக்குச் சாப்பாடு, மருந்து மாத்திரை இதையெல்லாம் யார் கவனித்துக் கொள்வார்கள்? அழைத்துப் போவதாக இருந்தால் இரண்டு பேரையும் அழைத்துப் போ. பெரிய வீடாகப் பார்த்துக்கொள். இந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்து விடலாம்.” ரவி சொன்னான்.
“கஷ்டப்பட்டு சம்பாதித்து இந்த வீட்டை கட்டியிருக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன். யார் வீட்டிற்கும் வர மாட்டேன். ஒன்று என் மகன் வீட்டில் இருக்கணும். இல்லையா என் வீட்டில் இருக்கணும். நான் போய் கருணாவின் வீட்டில் இருப்பதாவது?” கோபத்தில் கத்தினார் சுவாமிநாதன்.
“என்ன மாமா இப்படிப் பேசறீங்க? கருணா உங்கள் மகள் இல்லையா? ரவி எப்படியோ கருணாவும் உங்களுக்கு அப்படித்தானே.” கருணாவின் கணவன் மோகன் இடையில் புகுந்து சொன்னான்.
“அதெல்லாம் கிடக்கட்டும் தம்பி. உலக நியாயத்தைச் சொன்னேன். என் பெற்றோர்களை வயதான காலத்தில் என்னிடம் வைத்துக்கொண்டேன். என் மனைவி அவர்களுக்கு சிசுரூஷை செய்தாள். அதுதான் தர்மம். எனக்கு என்று ஒரு வீடு இருக்கு. என் வீட்டில்தான் நான் இருப்பேன். மகளிடம் இருப்பது நியாயம் இல்லை.” சுவாமிநாதன் குரல் அழுத்தமாக ஒலித்தது.
கணவர் சொல்லும் நீதி கோட்பாடுகளை கேட்டபோது அருந்ததிக்கு சிரிப்புதான் வந்தது.
லதா அருந்ததியையே பார்த்துக்கொண்டிருந்தாள். வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாத அந்த இல்லத்தரசியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. ரவியை மணம் புரிந்துகொண்ட பிறகு புகுந்தவீட்டில் அவள் தங்கியிருப்பது இதுதான் முதல் தடவை. தாயைப் பற்றியோ, தந்தையைப் பற்றியோ ரவி அவளிடம் அதிகமாக சொன்னதில்லை. கடந்த பத்து நாட்களாக லதா மாமியாரை ரொம்ப கவனமாக பரிசீலித்துக் கொண்டிருந்தாள்.
“மாமாவையும் நம்முடன் அழைத்துப் பொவோம் கருணா.” மோகன் சொன்னான்.
“நான் வரமாட்டேன்னு ஏற்கனவே ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன்.” சுவாமிநாதன் எரிந்து விழுந்தார்.
“அம்மா! நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாயே ஏன்?” ரவி கேட்டான்.
“சொல்வதற்கு எதுவும் இல்லை.” சுருக்கமாகச் சொன்னாள் அருந்ததி.
“தன் சார்பில் வாதாடுவதற்கு மகளை தூண்டிவிட்டிருக்கிறாள் இல்லையா. இனி வாயைத் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு? செய்ய வேண்டியதெல்லாம் செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் உட்கார்ந்திருப்பாள்.” சுவாமிநாதன் வெறுப்புடன் மனைவியை நோக்கினார்.
“இதில் அம்மாவின் பிரமேயம் எதுவும் இல்லை அப்பா. நானாகத்தான் சொன்னேன்.” கருணா சொன்னாள்.
“அவளுடைய பிரமேயம் எதிலேயும் இருக்காது. வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். ‘இந்த வயதில் உங்க அப்பாவும் நானும் ஒரே இடத்தில் தான் இருக்கணும். இங்கேதான் இருப்போம்’ என்று சொல்லலாம் இல்லையா? சொல்லமாட்டாள். இந்தக் குடும்பத்திற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனோ எனக்குத்தான் தெரியும். ஒண்டி ஆளாக, ஒரு சம்பளத்தில் உங்க எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினேன். யாருக்கும் கொஞ்சம் கூட நன்றி இல்லை.” சுவாமிநாதன் குரலில் வெறுப்பும் கோபமும் கலந்திருந்தன.
அருந்ததி எழுந்து சமையலறைக்குள் வந்தாள். சொல்லட்டும். அப்படியே சொல்லிக்கொண்டு இருக்கட்டும். தனக்கு என்ன வந்தது? தான் எடுத்துகொள்ள வேண்டிய முடிவை ஏற்கனவே எடுத்துக்கொண்டாகி விட்டது. வாழ்க்கையில் தானாக எடுத்துக்கொண்ட முதல் முடிவு. ஒருக்கால் கடைசியாகவும் இருக்கலாம்.
சாப்பாடு வேளை நெருங்கும் வரையில் வாதவிவாதங்கள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. சாப்பிடும் போது கத்தரிக்காய் கூட்டில் உப்பு அதிகமாகி விட்டதென்று போர்முழக்கம் தொடங்கினார் சுவாமிநாதன். மனைவி தனக்கு சாதகமாக பேசவில்லை என்ற கோபத்தில்தான் மாமனார் அப்படி கத்துகிறார் என்று லதாவுக்கும் புரிந்தது.
“இத்தனை ஐடம்ஸ் இருக்கு இல்லையா? கூட்டை விட்டு விட்டு மற்றதை சாப்பிடுங்களேன்.” சொல்லாமல் லதாவால் இருக்கமுடியவில்லை.
“வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் அட்ஜெஸ்ட் செய்துகொண்டு இவளுடன் வாழ்ந்து வருகிறேன்.” நொந்துகொண்டார் சுவாமிநாதன்.
குத்திக்காட்டுவது போல் கணவர் சொன்னபோதும் அருந்ததி வாயைத் திறக்கவில்லை.
“உங்க அம்மா ரொம்ப வித்தியாசமாக இருக்கிறாள். எதிலேயும் பட்டுக்கொள்ளாத சுபாவம். இந்த வீட்டைச் சேர்ந்தவள் போல் இல்லாமல் எங்கிருந்தோ வந்து பத்துநாட்கள் உங்களுக்கு உதவியாக இருந்துவிட்டு திரும்பிப் பொகிறவள் போல் தென்படுகிறாள்.” வந்த மூன்றாவது நாளே ரவியிடம் சொன்னாள் லதா.
“அம்மா அப்படித்தான். எப்போதும் எதிலேயும் பட்டுக்கொள்ள மாட்டாள். எதிலேயும் சிரத்தை இல்லை. தன் உடல் நலத்தைப் பற்றி கூட அக்கறை இல்லை. உடம்புக்கு ஏதாவது வந்தால் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு பிறகு டாக்டரிடம் ஓடுவாள்.” ரவி சொன்னான்.
அந்த பதிலை லதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவிலிருந்து வரும் போது மாமியாருக்காக நிறைய போருட்களை வாங்கி வந்தாள். பவழம், முத்து, நான் ஸ்டிக் பாத்திரங்கள், டின்னர் செட்….. அதையெல்லாம் பார்க்கும் போது கூட அருந்ததியின் முகத்தில் மகிழ்ச்சி தென்படவில்லை.
‘இந்த பவழங்களை, முத்துக்களை அணிந்துகொண்டு, நான் ஸ்டிக் தேசைக்கல்லில் தோசையை வார்த்துக்கொண்டு, விருந்தாளிகளுக்கு அமெரிக்கன் டின்னர் செட்டில் பரிமாறிக்கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறாள் சுவாமிநாதனின் மனைவி’ என்று அருந்ததி நினைத்துக்கொண்டிருப்பது லதாவுக்குத் தெரியாது.
இருப்பதற்கு சொந்த வீடு, குழந்தைகள் இருவரும் நன்றாகப் படித்து முன்னுக்கு வந்ததோடு தங்களுக்கு பிடித்த நபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட இந்த சமயத்தில் ஒரு தாய் எவ்வளவு பெருமையாக, சந்தோஷமாக இருக்கவேண்டும்?
லதாவுக்கு தன்னுடைய தாயின் நினைவு வந்தது. அவள் செய்யும் ஆர்பாட்டம் நினைவு வந்தது. “என் மகள் அமெரிக்காவிலிருந்து இதையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாள் என்று முகம் மலர எல்லோரிடமும் பறைச்சாற்றிக் கொண்டிருப்பாள். ஐம்பது வயது ஆனாலும் பளிச்சென்று உடுத்திக் கொண்டு, உற்சாகத்துடன் பேசிக்கொண்டு, சளைக்காமல் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருப்பாள்.
தாய்க்கும், மாமியாருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் பளிச்சென்று தெரியும் வித்தியாசத்தை உணர்ந்த லதா அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள கடந்த பத்துநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அண்ணாவின் குடித்தனம் டில்லியில். தன்னிடம் வரச்சொல்லி அழைத்த போது அப்பாவை முந்திகொண்டு அம்மாவே பதில் சொல்லிவிட்டாள். ” நாங்க வரமாட்டோம் கண்ணா! இது எங்கள் வீடு. இங்கே நிம்மதியாக இருப்போம். பிடித்ததை சமைத்து சாப்பிடுவோம். வீடு முழுவதும் புத்தகங்களும், பேப்பருமாக போட்டு வைத்தாலும் யாரும் எங்களை கேட்க முடியாது. முடிந்த போது எடுத்து வைப்போம். இல்லையா அப்படியே விட்டு விடுவோம். இது எங்கள் ராஜ்ஜியம். இதற்கு நான்தான் ராணி. உன் வீட்டிற்கு உன் மனைவி யஜமானி. புரிந்ததா” என்பாள்.
மாமியாரின் முகத்தில் ஒருநாள் கூட மலர்ச்சியைப் பார்க்கவில்லையே. ரவி, கருணாவிடம், தன்னிடம் வாய் நிறைய பேசிக்கொண்டும், அன்பாக, மதிப்பாக நடந்துகொள்ளும் சுவாமிநாதன் தன் மனைவியை எவ்வளவு இழிவாக நடத்துகிறாரோ, எப்படியெல்லாம் கடிந்துகொள்கிறாரோ லதா பார்த்துகொண்டுதான் இருந்தாள்.
அந்த வீட்டில் எந்த முடிவு எடுத்துக்கொள்ளப் பட்டாலும் அது ஒரு தலைபட்சம்தான். அதிகாரம் முழுவதும் சுவாமிநாதனுடையதுதான். இறுதி முடிவும் அவருடையதுதான்.
முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை அந்த இருவருக்கும் நடுவில் எந்த பாசப் பிணைப்பையும் ஏற்படுத்த வில்லை என்றால் லதாவுக்கு வியப்பாக இருந்தது. சுவாமிநாதனின் மகன் ரவி, தனக்கு லேசாக ஜலதோஷம் பிடித்துக்கொண்டாலும் கட்டிலை விட்டு இறங்க விட மாட்டான். காபியைக் கையில் கொண்டு வந்து தருவான். அப்படிப்பட்ட ரவி தாயின் அருகில் அமர்ந்துகொண்டு சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை கூட பேசவே இல்லையே?தன்னால் அப்படி இருக்கவே முடியாது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்தால் அம்மா அப்பாவிடம் பேசுவதற்கு எத்தனை செய்திகள் இருக்கும்? முதலில் அவர்களிடம் உடல்ரீதியாக வந்த மாற்றங்களை கவனிப்பாள். இளைத்துவிட்டார்களா, தெம்பாக திடமாக இருக்கிறார்களா என்று பரிசீலிப்பாள். முதலில் அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டு தோளில் கையைப் பதிப்பாள். அந்த தொடுகை ஒன்றே போதும்.
ஆனால் ரவி தன்னுடைய அம்மாவின் கையை ஒரு தடவை கூட தொட்டதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் காய்கறி நறுக்கும் போதாவது அருகில் அமர்ந்துகொண்டு ஊர் கதைகள் பேசவில்லை. கேட்டால் ‘அம்மா எப்போதும் இப்படித்தான்’ என்பான். ரவிக்கு தந்தையிடம் பிரியமும், நெருக்கமும் அதிகம். இருவரும் வராண்டாவில் அமர்ந்துகொண்டு எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருப்பார்கள். மகனை நல்ல ஸ்கூலில் சேர்த்து நன்றாக படிக்கவைத்தார். அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார். கேட்ட போது இல்லை என்று சொல்லாமல் வேண்டிய பணத்தைத் தந்தார். லதாவைத் திருமணம் செய்துகொள்வதாக சொன்னபோது சம்மதம் தெரிவித்தார். வரதட்சணை வேண்டாமென்று மறுத்துவிட்டார்.
கருணாவுக்கும் தந்தையிடம் எந்த குறையும் இல்லை. அண்ணனுக்குச் சமமாக படிக்கவைத்தார். பெண் குழந்தை என்று பாகுபாடு காட்டியதில்லை. மோகனை விரும்புவதாக சொன்னபோது, முழுமனதுடன் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைத்தார்.
“இவ்வளவு நல்லவர், தொட்டதற்கெல்லாம் மனைவியை இப்படி பொசுக்குவானேன்?” லதா கேட்டாள்.
“ஏனோ இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. தொடக்கத்திலிருந்தே அம்மா இப்படித்தான். எதையோ தொலைத்து விட்டவள் போல் எப்போதும் கவலையுடன் இருப்பாள். உற்சாகமாக பேசி நான் பார்த்ததில்லை. இருந்தாலும் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. எங்களை நல்ல விதமாக வளர்த்தாள்.” கருணா சொன்னாள். அவர்கள் இருவருக்கும் தந்தை நல்லவர்தான். கருணா அடிக்கடி வந்து தாயைப் பார்த்துவிட்டுப் போவாள். பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவாள். “நானும் கிளம்பிப் போனால் அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்” என்று வருத்தப்பட்டுகொள்வாள். அம்மா, அப்பா தன்னிடம் வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவளுடைய விருப்பம்.
அருந்ததி எதுவும் சொல்லவில்லை. அதாவது எங்கே இருந்தாலும் ஒன்றுதான் என்ற அர்த்தமா இல்லை எப்படியாவது வாழமுடியும் என்ற விரக்தியா?
சாப்பாடு முடிந்ததும் அருந்ததி கணவருக்காக வராண்டாவில் நாடாக் கட்டிலை கொண்டு வந்து போட்டாள். நாடாக் கட்டிலாக இருந்தாலும் பழங்காலத்து தேக்குமரம் என்பதால் கனம் அதிகம். மாமியார் சிரமப்படுவதை கவனித்த மோகன் வந்து வாங்கிக்கொண்டு வராண்டாவில் கொண்டு வந்து போட்டான்.
“தினமும் வராண்டாவில் தானே படுத்துக்கொள்ளப் போறீங்க. கட்டிலை இங்கேயே போட்டு வைக்கலாம் இல்லையா?” ரவி சொன்னான்.
“படுக்கை அழுக்காகிவிடாதா? மேலும் வராண்டாவில் வாசலுக்கு நேராக கட்டிலை போட்டு வைப்பதாவது?” சுவாமிநாதன் சொன்னார்.
கட்டில் மீது மெத்தையை போட்டு, இஸ்திரி செய்த போர்வையை விரித்தாள். இரண்டு தலையணைகளை வைத்தாள். கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த முக்காலியின் மீது தண்ணீர் சொம்பு வைத்து டம்ளரையம் கவிழ்த்து வைத்தாள். கணவர் தினமும் போட்டுகொள்ளும் தூக்கமாத்திரையை எடுத்து கையில் தந்து, டம்ளரில் தண்ணீரையும் கொடுத்தாள். ‘தொரகுனா இடுவண்டி ஸேவா’ மனதிலேயே தியாகராஜ கீர்த்தனையை முணுமுணுத்துக்கொண்டே, உதட்டில் புன்முறுவல் தவிழ அருந்ததி உள்ளே வந்தாள்.
‘அருந்ததி தன்னை விட்டு எங்கே போய்விடப் போகிறாள்?’ என்று நினைத்துக்கொண்டே நிம்மதியாக தூக்கத்தில் ஆழந்துபோனார் சுவாமிநாதன்.
ஆமாம். அருந்ததியால் எங்கே போக முடியும்?
ஏன் போக முடியாது? போகப் போகிறாள். இன்றைக்கே … இப்பொழுதே.
சற்று நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்து விட்டு இளம் ஜோடிகள் தங்களுயை அறைகளுக்குச் சென்று தூங்கிப் போய் விடுவார்கள். தானும் உறங்கிவிடுவாள். நிம்மதியான உறக்கம். வாழ்நாளில் என்றைக்குமே கிடைத்திராத ஆழமான தூக்கம். யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை. யாரும் எங்கேயிருந்தும் சிரமப்பட்டுக் கொண்டு வரவேண்டியதில்லை.
வாழ்க்கையில் பலமுறை தலைதூக்கப்பட்டு நிர்தாட்சிண்யமாக அடக்கிவைக்கப்பட்ட விருப்பம் இன்று நிறைவேறப் போகிறது. அருந்ததி எங்கே இருக்கவேண்டும் என்ற கேள்வி இனி இருக்காது. அருந்ததி எங்கே இருக்கவேண்டுமோ குறைந்தபட்சம் அருந்ததியே இன்று முடிவு செய்வாள்.
அருந்ததி அறைக்குள் வந்து ஜன்னல் கதவைத் திறந்தாள். குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது. உடல் மட்டும்தானே இப்போ இருக்கிறது. அதுதானே இப்போ பாரமாகிவிட்டது. விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கு வெளிச்சத்தில் சுவற்றில் இருந்த திருமண போட்டோவைப் பார்த்தாள். முப்பது வருடங்களுக்கு முந்தைய படம். புகைப்படம் மங்கியிருந்தாலும் அதில் விளக்குச் சுடராக ஒளிவீசும் தன் முகம், கழுத்தில் பாரமாக தொங்கும் பூமாலைக்கு நடுவில் பெளர்ணமி நிலவுபோல் பிரகாசமாக இருந்தது. தூய்மையை வெளிப்படுத்தும் கண்கள்.
முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில் மறக்க முடியாத, கடைசிவரையிலும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய நினைவுகள் என்ன இருக்கு?
இனிய நினைவுகளா? நினைவுகள் இருக்கு. அவற்றை இப்பொழுது நினைத்துப் பார்ப்பானேன்? திருமண போட்டோவுக்கு பக்கத்தில் இருந்த அம்மன் காலெண்டருக்கு கைகளை ஜோடித்து, கண்களை முடி வணங்கினாள். படுக்கையின் கீழே வைத்திருந்த அலமாரியின் சாவிக்கொத்துக்காக தேடினாள். கிடைக்கவில்லை. பதட்டத்தடன் நாலுபக்கமும் தேடினாள். மெத்தையை எடுத்துத் தரையில் போட்டு, போர்வையை உதறிப் பார்த்தாள். சாவிக்கொத்து தென்படவில்லை. கடைசியில் இப்பொழுதும் தனக்கு தோல்விதானா? தான் நிம்மதியாக இருப்பதில் கடவுளுக்கும் விருப்பம் இல்லை போலும். ஊஹ¥ம்… இப்படியே விடக் கூடாது. எப்படியாவது சாவிக்கொத்தைத் தேடி கண்டு பிடிக்கவேண்டும்.
இந்த சாவிக்கொத்து கணவருக்குத் தேவையே இல்லை. தன்னுடைய அலமாரியில் புடவைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது. பணம், தஸ்தாவேஜுகள், நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் அவருடைய பீரோவில் தான் இருக்கும். அசடு, வடிகட்டின முட்டாள், அறிவுகெட்ட முண்டம் போன்ற பட்டங்களைக் கொண்ட அருந்ததியின் பொறுப்பில் இவை எதுவும் இருக்க நியாயமில்லை.
எத்தனை தேடினாலும் சாவிக்கொத்துக் கிடைக்கவில்லை. மாலை வரையில் இடுப்பில்தான் சொருகி யிருந்தாள். குளிக்கப் போகும் முன் தலையணையின் அடியில் போட்டுவிட்டாள். நாளை மாலையில் கருணாவின் பயணம். ரவி கிளம்புவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தது. யாருக்கும் இடைஞ்சல் இருக்கக் கூடாது.இப்போ விளக்கைப் போட்டு தேடினால் வீட்டில் எல்லோரும் எழுந்துகொள்வார்கள். பரவாயில்லை. எதையாவது சொல்லி சமாளித்துகொள்ளலாம். ஆனால் சாவிக்கொத்து மட்டும் கிடைத்தாக வேண்டும்.
யாரோ கதவைத் தட்டும் சத்தம். யாராக இருக்கும்? கதவைத் திறக்கவில்லை என்றால் மேலும் தட்டிக் கொண்டே இருப்பார்கள். கண்களைத் துடைத்துக்கொண்டு, முகத்தில் அரும்பிய வியர்வையை புடவைத் தலைப்பால் ஒற்றிக்கொண்டு போய்க் கதவைத் திறந்தாள் அருந்ததி. எதிரே கையில் சாவிக்கொத்துடன் லதா!
“சாவிக்கொத்தைத் தருகிறேன். ஆனால் தூக்கமாத்திரை பாட்டிலை மட்டும் தரமாட்டேன். வேண்டுமானால் ஒரே ஒரு மாத்திரையைத் தருகிறேன்.” கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத குரலில் சொன்னாள் லதா.
அருந்ததி பதில் சொல்லவில்லை.
“கோழைகளைக் கண்டால் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. உங்களை, உங்களுடைய எண்ணங்களை நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். திடீரென்று இந்த முடிவுக்கு வர காரணம் என்ன? எல்லோரையும் விட்டு விட்டுப் போவானேன்?” கூண்டில் நிற்க வைத்து கேட்பது போல் லதா கேட்டாள்.
திடீரென்றா! இன்னிக்குத்தான் வந்த யோசனையா இது? இல்லை இல்லை. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் அடுத்த வீட்டு கல்லூரி மாணவன் குடிக்க தண்ணீர் கேட்டு, தான் கொடுத்தபோது, தனக்கும் அந்த பையனுக்கும் நடுவில் கள்ளத் தொடர்பு இருப்பதாக கணவன் வாய்க்கு வந்தபடி ஏசி, கன்னத்தில் அறைந்த போது … அன்றைக்கு வரவில்லையா இந்த யோசனை?
வந்தது. ஆனால் அப்பொழுது வயிற்றில் வளையம் வரும் குழந்தை. இன்னும் பத்து பதினைந்து நாட்களில் உலகத்தை எட்டிப் பார்க்கப் போகும் ரவி.
போகட்டும். இவர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்காவிட்டால்தான் என்ன? ஜன்னல் கதவைச் சாத்தி விட்டால் போச்சு.
அன்று மட்டும்தானா. அதற்குப் பிறகும் பலமுறை இந்த யோசனை வந்தது. கொதிக்க கொதிக்க காபியை முகத்தில் வீசிய போது, சாப்பிடும் தட்டை மேலே விட்டெறிந்த போது, பிறந்த வீட்டுக்குப் போய் பத்துநாட்கள் தங்கிவிட்டு வந்தால், படுக்கையறையில் காய்ந்து போன மல்லிகைச் சரங்கள், காலி காண்டோம் பாக்கெட்டுகளைக் கண்ட போது. எல்லாவற்றையும் சுத்தப்படுத்திவிட்டு, வீட்டை பினாயில் போட்டு கழுவி, டெட்டால் போட்டு போர்வைகளை துவைத்து காயப் போட்டு மறுபடியும் குடித்தனம் செய்ய ஆரம்பித்த போது …. பல முறை இந்த யோசனை தலைதூக்காமல் இல்லை.
எப்போ அந்த யோசனை வந்தாலும் மலங்க மலங்க விழித்துக்கொண்டு, அப்பாவி முகத்துடன் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே வளையம் வரும் குழந்தைகள், மாற்றாந்தாயின் கொடுமைகள், தாயை இழந்த துக்கத்தில் பாழாகிவிட்ட எதிர்காலம் … சாகவிடாமல் எத்தனை தடங்கல்கள்தான் இல்லை ஒரு பெண்ணிற்கு? “இருந்தால் இரு. இல்லாவிட்டால் போய்க் கொள். நான் என் விருப்பம் போல்தான் இருப்பேன்” என்ற கொள்கையை அன்றும் இன்றும் சுவாமிநாதன் கடைபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
அப்படியே போய்விட முடியாமல் கண்ணுக்குத் தெரியாத விலங்குகள் தடுத்துவிட்ட போது உயிரோடு இருக்க வேண்டிய நிர்பந்தம்.
இன்றைக்கு குழந்தைகள் பெரியவர்களாகிவிட்டார்கள். சொந்தக்கால்களில் நிற்கிறார்கள். விலங்குகள் விலகிவிட்டன.
காதல், அன்பு, பாசம் போன்ற பந்தங்கள் இருந்தால்தானே வாழவேண்டும். சமுதாயத்திற்காக, சம்பிரதாயத்திற்காக ஏற்பட்ட பந்தங்களுடன் தனக்கென்ன வேலை? மேலும் கடமைகள் தன் ஒருத்திக்கு மட்டும்தானா? அவமானங்களுடன், ஏச்சு பேச்சுகளுடன் நிறைந்த தாம்பத்திய வாழ்க்கையை நினைவு கூர்ந்து பெருமைப் பட்டுக்கொள்வதற்காக இனியும் வாழத்தான் வேண்டுமா? அவர் நல்ல தந்தையாக இருக்கலாம். ஆனால் நல்ல கணவன் இல்லை என்று இவர்களுக்குத் தெரியாதா?
இவர்களுடைய நியாயங்கள், ஆறுதல்கள் தனக்கெதற்கு? வந்த வேலை முடிந்துவிட்டது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. கண்ணீர் விட்டாலும், அவமானத்தால் குன்றிப் போனாலும் யார் முன்னிலையிலும் அந்த வேதனையை வெளிப்படுத்தியதில்லை. யாருடைய மனநிம்மதியையும் குலைத்ததில்லை. தனக்குள் தானே எரிந்து போனாள்.
தன் வாழ்க்கையைப் பற்றிய முடிவை யாருடைய கையிலேயும் விடமாட்டாள். என்ன படிக்கணுமோ தந்தை முடிவு செய்தார். எதை உடுப்பது, எப்படிப் பேசுவது, யாரைக் கல்யாணம் செய்துகொள்வது … இதையெல்லாம் சமுதாயமும், தந்தையும் சேர்ந்து முடிவு செய்தார்கள். எதை சமைக்கணும், என்ன சாப்பிடணும், எப்போ சிரிக்கணும், எப்போ வாயை மூடிக்கொண்டிருக்கணும், எப்படி வாழணும் ….. இதையெல்லாம் கணவர் முடிவு செய்தார். எங்கே இருக்கணுமோ, எதற்காக இருக்கணுமோ, எது நியாயமோ இன்று குழந்தைகள் முடிவு செய்கிறார்கள்.
“பேஷ்!!” அருந்தததியின் கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜொலித்தன. அவமானத்தால் ஏற்பட்ட வெறுப்பு. எரிமலையாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. வியர்வையில் கலைந்து போன குங்குமம் பரவியதில் அவள் முகம் அஸ்தமிக்கும் சூரியன் போல் இருந்தது. சிவப்புப் புடவையில் அருந்ததி தகதகவென்று எரியும் சந்தன மரம் போல் காட்சி தந்தாள்.
லதாவுக்கு தன் தாயின் நினைவு வந்தது. பெளர்ணமி நிலவின் குளிர்ச்சியை நினைவூட்டும் மலர்ந்த முகம். அம்மாவுக்கு வாழ்க்கையிடம் அளவுக் கடந்த அன்பு. அதற்கான காரணமும் லதாவுக்குப் புரிந்தது.
அறையில் இறுகிக் கிடந்த நிசப்தம்!
யாரும் வாயைவிட்டு பேசவில்லை. ரொம்ப நேரம் கழித்து ஜன்னல் அருகில் வந்தாள் லதா. தொலைவில் விடியல் சூரியனின் வெளிச்சக் கீற்றுகள். மெதுவாக அருந்ததியை நெருங்கி அன்புடன் அணைத்துக்கொண்டாள். பல வருடங்களக இறுகிப் போயிருந்த துக்கம் அந்த ஸ்பரிசத்தின் வெப்பத்தில் கரைந்து வெள்ளமாக மாறியது.

முற்றும்

தெலுங்கு மூலம் P.Sathyavathi
email id sathyavathi.pochiraju@gmail.com
மொழிபெயர்ப்பு கௌரிகிருபானந்தன்

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்