சிறில் அலெக்ஸ்
மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி
மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச் சமர்ப்பணம்
நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.
நூறு(Five score) வருடங்களுக்கு முன்னர், இங்கு யாரின் நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ அந்த உன்னத அமெரிக்கர், (அடிமைகள்) விடுவிப்புப் பிரகடனத்தில் (Emancipation Proclamation) கையெழுத்திட்டார். தகுந்த நேரத்தில் வந்த அந்தச் சட்டம் நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் அழிந்துகொண்டிருந்த இலட்சக்கணக்கான நீக்ரோ அடிமைகளுக்கு வந்தது. அடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது.
ஆனால் நூறு வருடங்களுக்குப் பின், நீக்ரோ இன்னும் விடுதலை அடையவில்லை. நூறு வருடங்களுக்குப் பின், நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக்கப்படுதலின்(segregation) விலங்காலும் இரட்டைநிலைகளின்(discrimination) சங்கிலியாலும் முடமாகிக்கிடக்கிறது. நூறு வருடங்களுக்குப் பின் நீக்ரோ வளமைக் கடலின் நடுவே ஏழ்மைத் தீவில் வாழ்கிறான். நூறு வருடங்களுக்குப் பின் நீக்ரோ அமெரிக்கச் சமூகத்தின் மூலைகளில் மனச்சோர்வுடன் கிடக்கிறான், தன் சொந்த நாட்டிலேயே தான் அகதியாயிருப்பதைக் காண்கிறான். இதனாலேயே இன்று நாம் இந்த அவல நிலையை அரங்கேற்றக்(dramatize) கூடியுள்ளோம்.
ஒரு வகையில் நாம் நம் தலைநகருக்குக் காசோலை ஒன்றை மாற்றிச் செல்ல வந்துள்ளோம். நம் குடியரசின் சிற்பிகள் உன்னத வார்த்தைகளால் அரசியல் சானத்தையும் விடுதலைப் பிரகடனத்தையும் எழுதுகையில் நமக்கொரு காசோலையில் கையெழுத்திட்டுத் தந்தார்கள், அந்தக் காசோலைக்கு ஓவ்வொரு அமெரிக்கனும் வாரிசுகள். அது எல்லா மனிதனுக்கும், ஆம், கறுப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும், உயிர்வாழவும், விடுதலைக்கும் மகிழ்ச்சியைத் தேடிப்பெறவும் (Life, Liberty and the pursuit of Happiness) ஆன “பிரித்தெடுக்க இயலாத(unalienable) உரிமையை” வாக்களிக்கிறது. அமெரிக்கா கறுப்பினத்தவருக்கு மட்டும் அந்தக் காசொலையை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டது இப்போது தெளிவாகிறது. இந்தப் புனிதக் கடமைக்கு மதிப்பளிக்காமல் அமெரிக்கா நீக்ரோ கறுப்பினத்தவருக்கு மோசமான காசோலையை வழங்கியுள்ளது, அந்தக் காசோலை “போதுமான பணம் இல்லை” எனத் திரும்பி வந்துள்ளது.
ஆனால் நாம் சமூகநீதியின் வங்கி திவாலாகிவிட்டதென்பதை நம்பமாட்டோம். இந்த நாட்டின் வாய்ப்புக்களின் பெட்டகங்களில் (vaults of opportunity) போதிய பணமில்லை என்பதை நம்பமாட்டோம். அதனால் இங்கே விடுதலையின் வளங்களையும் (riches of freedom) நீதியின் பாதுகாப்பையும் நமக்களிக்கும் காசோலையை காசாக மாற்றிக்கொள்ள வந்துள்ளோம்.
‘இப்போதே’ (Now) என்பதன் அவசியத்தை உணர்த்தவும் நாம் இந்தப் புனித இடத்தில் கூடியுள்ளோம். இது வசதியாகத் தணிந்து செல்லவும் (cooling off), படிப்படிச் செயலாக்கமெனும் (gradualism) போதைப்பொருளின் மயக்கத்தில் கிடக்கவுமான நேரமல்ல. ஜனநாயகத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலம் இது. பிரிவினையின் இருண்டத் தூரப்பள்ளத்தாக்கிலிருந்து எழுந்து கதிரொளிபரவும் இனநீதியின் பாதைக்கு வரவேண்டிய காலம் இது. இன அநீதி எனும் புதை குழியிலிருந்து நம் நாட்டைத் தூக்கிச் சகோதரத்துவம் எனும் திடமான பாறையின் மேல் வைக்க வேண்டிய தருணம் இது. கடவுளின் மக்கள் அனைவருக்கும் நீதியை நிஜமாக்கும் காலமிது.
இந்தத் தருணத்தின் முக்கியத்தைக் கவனிக்காமல் விடுவது இந்த நாட்டிற்கு ஆபத்தானதாக முடியும். கொடுஞ்சூட்டுக் கோடையாயிருக்கும் நீக்ரோவின் சட்டபூர்வமான இந்த மனக்குறை விடுதலை, சமத்துவம் எனும் உயிரூட்டும் வசந்தகள் வந்தாலன்றி மறையாது. 1963 ஒரு முடிவல்ல துவக்கம். நீக்ரோக்கள் கொஞ்சம் கோபத்தைக் காண்பிப்பார்கள் பின்னர் அடங்கிவிடுவார்கள் என நினைத்து வழக்கம்போலப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நீக்ரொவுக்கு குடிமகனின் உரிமைககள் வழங்கப்படும்வரை இங்கே ஓய்வும் அமைதியும் இருக்காது. புரட்சியின் சூறாவளிகள் இந்த நாட்டின் அஸ்திவாரங்களை நீதி ஒளிரும் நாள் வரும்வரை அசைத்துக்கொண்டிருக்கும்.
ஆனால் நீதியின் அரண்மனைக்குள் இட்டுச் செல்லும் இதமான பாதைகளில் நிற்கும் என் மக்களுக்கு நான் ஒன்று சொல்லியாக வேண்டும்: நமக்குச் சொந்தமான இடத்தை நாம் பெறும் வழியில் தவறான செயல்களைச் செய்த குற்றத்திற்கு ஆளாகக்கூடாது. விடுதலைக்கான நம் தாகத்தை (மனக்) கசப்பு மற்றும் வெறுப்பின் கோப்பைகளிலிருந்து அருந்தித் தணித்துக்கொள்ளத் துடிக்க வேண்டாம். எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை(struggle) நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் நாம் உடல் ரீதியான(வன்முறை) சக்திகளை ஆத்மரீதியாக எதிர்கொள்ளும் உன்னத உயரங்களை நோக்கி எழ வேண்டும்.
இந்தப் புதிய வியத்தகு கறுப்பின எதிர்வினை எல்லா வெள்ளையினத்தவர்மீதும் அவநம்பிக்கை கொள்ள நம்மை இட்டுச் செல்லக்கூடாது, ஏனெனில் நம் வெள்ளையினச் சகோதரர்கள் பலர், இங்கு வந்திருப்பவர்களால் வெளித்தெரிவது போலவே, அவர்களின் இலக்குகள் (Destiny) நம் இலக்குகளோடும் அவர்களது விடுதலை நம் விடுதலையோடும் பின்னிப் பிணைந்திருப்பதையும் உணர்ந்திருக்கிறார்கள்.
நாம் தனித்து நடக்க இயலாது.
நாம் நடந்துகொண்டிருகையில் எப்போதும் முன்நோக்கி நடக்க உறுதிகொள்ளவோம்.
நாம் திரும்பிச் செல்ல இயலாது.
சமூக உரிமையின் பக்தர்களிடம் “எப்போதுதான் நீ திருப்தியடைவாய்?” எனக் கேட்பவர்கள் உண்டு. காவல்துறையின் சொல்லமுடியாத கொடுமைக்கு நீக்ரோ பலியாகிக்கொண்டிருக்கும்வரை நாம் திருப்தியடைய முடியாது. பயணத்தில் சோர்வடைந்த நம் உடல்கள் நெடுஞ்சாலைகளுக்கருகிருக்கும் விடுதிகளிலும் நகரங்களுக்குள்ளிருக்கும் விடுதிகளிலும் ஓய்வைப் பெற இயலாதவரைக்கும் நாம் திருப்தியடைய முடியாது. நீக்ரோவின் அடிப்படை இடப்பெயர்வு சிறிய சேரியிலிருந்து பெரிய சேரிக்குத்தான் என இருக்கும் வரையில் நம்மால் திருப்தியடைய முடியாது. “வெள்ளையர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்புப் பலகை ஒன்று நம் குழந்தைகளின் தன்மதிப்பையும்(self-hood) கண்ணியத்தையும் அவிழ்த்தெறிந்துகொண்டிருக்கும்வரைக்கும் நம்மால் திருப்தியடைய முடியாது. மிசிசிப்பியிலிருக்கும் நீக்ரோ வாக்களிக்க இயலாமல் இருக்கும்வரையில், நீயூ யார்க்கில் இருக்கும் நீக்ரோ வாக்களிப்பதால் எந்த நன்மையுமில்லை எனக் கருதும்படி இருக்கும்வரையில் நாம் திருப்தியடையப்போவதில்லை. இல்லை. இல்லை நாம் திருப்தியடையவில்லை. சமநீதி பெரும்நீரைப்போலவும் , அறம் மாபெரும் ஓடைபோலவும் வீழ்ந்தோடும்வரைக்கும் நாம் திருப்தியடையப்போவதில்லை.
உங்களில் பலரும் பல போராட்டங்களுக்கு மத்தியில் இங்கு வந்திருப்பதை நான் கவனியாமலில்லை. உங்களில் சிலர் குறுகிய சிறைச்சாலைகளிலிருந்து இப்போதுதான் வந்துள்ளீர்கள். மேலும் சிலர் விடுதலைக்கானத் தேடல், அடக்குமுறைப் புயலிலும் காவல்துறையின் வன்கொடுமைக் காற்றிலும் அலைக்கழிக்கப்படும் இடங்களிலிருந்து வந்துள்ளீர்கள். மனம்கிளர்ந்தத் துயரத்தின் (creative suffering) அனுபவம் மிக்க வீரர்கள்(veterans) நீங்கள். உரியதல்லாதத் துயரம் விடுதலைதரவல்லது(unearned suffering is redemptive) எனும் நம்பிக்கையில் தொடர்ந்து முயலுங்கள். மிசிசிப்பிக்குத் திரும்பிச் செல்லுங்கள், அலபாமாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், சவுத் காரலைனாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், ஜியார்ஜியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள், லூசியானாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் வடக்கு நகரங்களிலுள்ள சேரிகளுக்கும் குடிசைகளுக்கும் திரும்பிச் செல்லுங்கள் எப்படியேனும் இந்த நிலை மாற்றப்படும், மாறிவிடும் எனும் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்லுங்கள்.
இன்று உங்களுக்குச் சொல்கிறேன் நண்பர்களே, நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கில் நாம் சேற்றில் உழலவேண்டாம்.
மேலும் இன்றையின், நாளையின் சவால்களை நாம் எதிர்கொண்டிருக்கும்போதேகூட, எனக்கு ஒரு கனவிருக்கிறது. அமெரிக்காவின் கனவில் ஆழ்ந்து வேரிட்டக் கனவு அது.
ஒரு நாள் இந்த நாடு “எல்லா மனிதனும் சமமாகப் படைக்கப்பட்டான் எனும் உண்மைகள் தன்னுள் நிரூபணமானவை(self-evident)” எனும் அதன் கோட்பாட்டிற்கேற்ப எழுச்சி பெறும் எனும் கனவு எனக்குண்டு.
ஒரு நாள் ஜியார்ஜியாவின் சிவந்தக் குன்றுகளின் மேல் முன்னாள் அடிமைகளின் மகன்களும் முன்னாள் அடிமைகளின் எஜமானர்களின் மகன்களும் சகோதரத்துவத்தின் மேசையில் ஒன்றாய் அமர்ந்திடுவார்கள் எனும் கனவு எனக்குண்டு.
ஒரு நாள் அநீதியின், அடக்குமுறையின் அதிவெப்பத்திலுழலும் மிசிசிப்பி மகாணம்கூட விடுதலையின், சமநீதியின் பாலைவனச் சோலையாக மாறும் எனும் கனவு எனக்குண்டு.
என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் அவர்களின் தோலின் நிறத்தைப் பார்த்தல்லாமல் அவர்களின் நடத்தையின் பேரில் மதிப்பிடப்படுவார்கள்(judged) எனும் கனவு எனக்குண்டு.
இன்று எனக்கொரு கனவுண்டு!
ஒரு நாள் தெற்கே கொடுமையான இனவெறியர்களுள்ள, ஆளுனர் interposition*(மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசின் தலையீட்டை தவிர்க்கும் சட்டம்) , nullification**(மத்திய அரசின் சட்டத்தை செல்லுபடியில்லாமல் செய்வது) எனக் கூறிக்கொண்டிடுக்கும் அலபாமாவில், கறுப்புச் சிறுவர்களும் கறுப்புச் சிறுமிகளும் வெள்ளை சிறுவர்களும் சிறுமிகளும் சகோதர சகோதரிகளாகக் கைகோர்த்துக்கொள்ள இயலும் எனும் கனவு எனக்குண்டு.
இன்று எனக்கொரு கனவுண்டு!
ஒரு நாள் எல்லா பள்ளத்தாக்குகளும் உயர்த்தப்படும், எல்லாக் குன்றுகளும் மலைகளும் தாழ்த்தப்படும், கரடுமுரடான நிலங்கள் சமனாகும் வளைந்திருக்கும் பாதைகள் நேர்படுத்தப்படும் கடவுளின் மகிமை வெளிப்படும் எல்லா தசைகளும்(உயிர்கள்) அதை ஒன்றாய்க்காணும்.
இதுதான் நமது நம்பிக்கை. நான் இந்த நம்பிக்கையுடனேயே தெற்கு நோக்கிச் செல்கிறேன்.
இந்த நம்பிக்கையுடன்(Faith) மலையெனத் தெரியும் அவநம்பிக்கையிலிருந்து(Despair) நம்பிக்கை(Hope) எனும் சிறு கல்லைக் கடைந்தெடுக்க இயலும். இந்த நம்பிக்கையுடன் இரைச்சலிடும் சத்தங்களைச் சகோதரத்துவமெனும் அழகிய சேர்ந்திசையாக மாற்ற முடியும். இந்த நம்பிக்கையுடன் நம்மால் ஒருங்கிணைந்து வேலை செய்ய இயலும், ஜெபிக்க இயலும், சேர்ந்து போராட இயலும், சிறை செல்ல இயலும் விடுதலைக்காக நிமிர்ந்து நிற்க முடியும், ஒரு நாள் நாம் விடுதலை பெறுவோம் எனும் அறிதலுடன்.
இந்த நாள் — இந்த நாளே கடவுளின் பிள்ளைகள் அனைவரும் (கீழுள்ளதைப்) புதிய அர்த்தத்துடன் பாட இயலும்.. .
‘என் நாடே உன்னை, இனிய விடுதலையின் பூமியே, உன்னைக் குறித்து பாடுகிறேன்
என் முன்னோர் உயிர் நீத்த பூமியே, புனிதப் பயணிகளின்*** பெருமைக்குரிய பூமியே,
(உன்) மலைகளனைத்திலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.’
அமெரிக்கா உன்னத நாடாக வேண்டுமென்றால் இது உண்மையாக வேண்டும்.
எனவே நியூ ஹேம்ஷைரின் பருத்த மலைகளின் உச்சியிலிருந்து விடுதலை முழங்கட்டும்
நியூ யார்க்கின் பெரும் மலைகளிலிருந்து விடுதலை முழங்கட்டும்
பென்சுல்வேனியாவின் உயர்ந்த அலெகெனீசிலிருந்து விடுதலை முழங்கட்டும்
பனி மூடிய கொலொரடாவின் ராக்கியிலிருந்து விடுதலை முழங்கட்டும்
கலிபோர்னியாவின் வளைந்து நெளிந்த சரிவுகளிலிருந்து (Slopes) விடுதலை முழங்கட்டும்.
அது மட்டுமல்ல
ஜியார்ஜியாவின் கன்மலைகளிலிருந்தும்
டென்னிசியின் லுக்அவுட் மலையிலிருந்தும்
மிசிசிப்பியின் ஒவ்வொரு குன்றிலிருந்தும், மேட்டிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.
ஒவ்வொடு மலைவெளியிலிருந்தும் விடுதலை முழங்கட்டும்.
இது நடக்கும்போது, நாம் விடுதலை முழங்க வகை செய்யும்போது, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் சிற்றூரிலிருந்தும்(Hamlet) விடுதலையை முழங்கச் செய்யும்போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நகரத்திலிருந்தும் விடுதலையை முழங்கச்செய்யும்போது, கடவுளின் மக்கள் எல்லோரும், கறுப்பரும் வெள்ளையரும், யூதரும் பிற இனத்தவரும், ப்ராட்டஸ்டாண்டும் கத்தோலிக்கரும் ஒன்றாய் கைகோர்த்து (கீழுள்ள ) நீக்ரோவின் ஆன்மீக வரிகளைப் பாடும் நாளை விரைவில் அடையக் கூடும்.
விடுதலையடைந்தோம் ஒருவழியாய்! விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!
எல்லாம்வல்லக் கடவுளுக்கு நன்றி! விடுதலையடைந்தோம் ஒருவழியாய்!
**********************************
*http://en.wikipedia.org/wiki/Interposition
**http://en.wikipedia.org/wiki/Nullification_Crisis
*** அமெரிக்காவில் முதன்முதலில் ஐரோப்பியாவிலிருந்து குடிபுகுந்தவர்கள் Pilgrims எனப்படும் புனித யாத்திரிகர்கள்.
ஆங்கிலப் பிரதி மற்றும் ஒலி ஒளி வடிவம் : http://www.americanrhetoric.com/speeches/mlkihaveadream.htm
cyril.alex@gmail.com
- பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)
- நம்ப முடியாத விசித்திரம்
- எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்
- சுஜாதா என்கிற ஆளுமை
- சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!
- எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.
- சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்
- மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)
- கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?
- இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்
- புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்
- சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை
- “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி
- மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்
- கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை
- சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.
- கவிதா நிகழ்வு
- நேற்றிருந்தோம்
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்
- மாதா வெளியேற மறுத்தாள்
- புரியவில்லையே…?
- யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்
- தரிசனம்
- சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!
- வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்
- அடுப்பிலே போடப்பட்ட அமைதி
- எனது மூன்று வயது மகள்
- ஏழு கவிதைகள்
- தீபச்செல்வன் கவிதைகள்
- தாரா கணேசன் கவிதைகள்
- வலி உணரும் தோல்கள்
- கவிதைகள்
- மனக்குப்பை
- ஆகு பெயர்
- காட்டாற்றங்கரை – 2
- புவியீர்ப்பு கட்டணம்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6
- அக்கக்காக் குஞ்சு !
- கருப்பாயி மகனுடைய பெட்டி