மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

பாவண்ணன்


இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிக்கொண்டிருக்கும் விக்ரமாதித்யன், ரசனை மிகுந்த தன் பார்வையின் அடிப்படையில் நவீன கவிதைகள் வழியாக அடைந்த செழுமையான அனுபவங்களையும் மரபுக்கவிதைகளில் தோய்ந்துபெற்ற இன்பத்தையும்பற்றி புதுக்கவிதையைநோக்கி வந்தடையும் ஒரு புதிய வாசகனுக்காக அவ்வப்போது எழதிய 16 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.

விக்ரமாதித்யனைப் பொருத்தவரையில் கவிதை ஒரு மாயநிகழ்வு. மாயம் தன்னை வெளிப்படுத்த கவிஞனை ஒரு கருவியாகக் கொள்கிறது. சொல் என்பதே மாயம்தான். சொல்லில் தேர்ச்சி பெறுவதும் ஒருவிதமான மாயக்கலையே. மொழி தன்னளவில் ஓர் எதார்த்தத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மொழியால் புனையப்படுகிற கவிதை மாயமாகிவிடுகிறது. கவிதை பெறும் மாயம் மனமென்னும் மாயத்தின் வழியே உருக்கொள்கிறது. மனமாயத்தின் அடர்த்தியைப் பொருத்தே கவிதையிலும் மாயம் அடரத்திகொள்கிறது. மனமாயத்தை ஒருபோதும் உருவாக்கமுடியாது என்பதுதான் மனவிசேஷம். கவிதையைப்பற்றிய விக்ரமாதித்யன் மனச்சித்திரம் சற்றேறக்குறைய இதுதான் என்பதற்கான தடயங்கள் நுாலில் பலபகுதிகளில் காணப்படுகின்றன. தனக்கு மாய அனுபவத்தைத் தந்த பல கவிதைகளை- சங்க காலம் முதல் நவீன காலகட்டம் வரை- அவர் மனம் அசைபோட்டபடி இருக்கிறது. அந்த எண்ணத் துளிகளையே வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகளாக விக்ரமாதித்யன் எழுத நேர்ந்திருக்கிறது.

காரைக்காலம்மையாரின் கவிதைகள்பற்றிய கட்டுரை தொகுப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தெய்வப்பிறப்பு என கணவன் விலகிப்போய்விட பேயுருவத்தை தெய்வத்திடம் வெண்டிப் பெற்று, தலையாலேயே கைலாயம் வரை சென்றவர் காரைக்காலம்மையார். சிவனாலேயே ‘அம்மையே ‘ என்று அழைக்கப்படும் அரும்பெரும் பேற்றைப் பெற்றவர். அம்மையாருக்கு கவிதை நோக்கமில்லை. மனம் விரும்பிய ஒன்றை உள்ளார்ந்த விழைவோடும் நம்பிக்கையோடும் பற்றி, அக்கணத்தை என்றென்றும் நிரந்தரமான கணமாக மாற்றும்வண்ணம் சொற்களைக் கூட்டித் தாள லயத்துடன் பொருந்திய வரிகளைப் படைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட ஒரு பித்துநிலையிலிருந்து மொழியப்பட்ட சொற்களாகவே காணப்படுகின்றன அவர் பாடல்கள். கடல்போன்ற மனவெளியில் இவையனைத்தும் சில துளிகள். அவ்வளவுதான். அம்மையாரின் பாடல்களில் படிந்திருக்கும் கவித்துவத்தை ஆழ்ந்த ரசனையோடும் லயிப்போடும் எடுத்துரைக்கிறார் விக்ரமாதித்யன்.

திருவாலங்காட்டு திருப்பதிகங்களிலிருந்து ஒருசில பாடல்களை மட்டுமே எடுத்துக்காட்டுகளாக முன்வைத்து, அவற்றில் ததும்பும் கவித்துவத்தை அணுகும் முறையை ஆர்வத்துடன் விவரிக்கிறார் விக்ரமாதித்யன். சுடுகாட்டின் சித்திரத்தைக் கொண்டுவருவதற்காக அம்மையார் தன் பாடல்களில் அடுக்கும் ஒவ்வொரு விவரணையும் மனத்தை ஈர்க்கின்றன. ஒரு பாட்டில் பேயாக உலவும் பெண்ணின் நடனம். ஏன்னொரு பாட்டில் வெள்ளிச்செடியாக மாறித் தோற்றமளிக்கும் கள்ளிச்செடிகள். இவற்றுக்கு இடையேதான் உடுக்கையும் பறையும் ஒலிக்க நடனமாடுகிறான் சிவன். ஒவ்வொரு பாட்டிலும் முதல்பகுதியில் சூழல் சித்தரிப்பு. அடுத்த பகுதியில் சிவனின் நடனம். காட்சி வடிவிலேயே கவிதை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கவிதையின் வடிவநுட்பத்தை ஆழ்ந்த ரசனையொடு பகிர்ந்துகொள்கிறார் விக்ரமாதித்யன். இரவுக்காட்சிகளும் சூழலும் நிலக்காட்சிகளும் ஜீவராசிகளும் மரம்செடி கொடிகளும் தகுந்த பின்னணியோடு இசைந்து பேசப்பட்ட விதத்தில் பெருங்கவிதைகளாகின்றன. இக்கட்டுரை எழுப்பிய மனஅதிர்வில் யோசிக்கும்போது நெஞ்சம் இன்னொரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறது. உடுக்கையும் பறையும் ஒலிக்க நிகழும் சிவனின் நடனம் உண்மையில் இயற்கையின் ஏகாந்த நடனம். எட்டி, இலவம், ஈகை, சூரை, காரை என ஏராளமாக நிறைந்திருக்கும் மரங்கள். குரங்குகள், நரிகள் என ஓடிப் பாய்ந்து திரியும் விலங்குகள். பிணத்தைச் சுடும் புகையில் கரிந்தும் எரிந்தும் விழுந்து உருண்டுகிடக்கும் கிளைகள். உய்யென வீசும் காற்றில் சருகுகளும் இலைகளும் பறந்து எழும் ஓசை. பின்புலக் காட்சிகளே ஒரு நடனத்தின் விஸ்வ்ருபத்துக்கு உரியவையாகயே தீட்டிக் காட்டப்படுகின்றன. தீம்தரிகிட தீம்தரிகிட என்று காற்று நடனமிடுகிறது. சடசடவென கிளைசுழற்றி மரங்கள் நடனமிடுகின்றன. செடிகள், கொடிகள் அனைத்தும் நெளிந்துநெளிந்து நடனமிடுகின்றன. நடனமிடும் ஓசை எட்டுத்திசையிலும் எதிரொலிக்கிறது. இயற்கையின் பேரெழுச்சி கொண்ட அந்த நடனத்தையே சிவ தாண்டவமாக தீட்டிப் பார்க்கும் ஆசை அம்மையின் சிந்தையில் இருந்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது.

‘நிகழ்வுப் போக்குகளும் எதிர்பார்ப்புகளும் ‘, ‘நவீன கவிதையில் புதிய உலகங்கள் ‘, ‘இன்றைய கவிதை ‘ ஆகிய மூன்று கட்டுரைகளும் அடுத்து முக்கியமானவையாகக் குறிப்பிடப்படவேண்டியவை. இக்கட்டுரைகள் மூன்றுமே நல்ல கவிதைகள் பலவற்றை கவிதைவாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அக்கவிதைகள் வழங்கக்கூடிய அனுபவங்கள் ஒருசில வரிகளில் சுருக்கமான அளவில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்த அனுபவச் சாரத்தையும் கவிதையின்பத்தையும் மீண்டும்மீண்டும் படிக்கிற வாசகனால் மேலும் சில புதிய வெளிச்சங்களைக் கண்டடைய முடியும். அதற்கான உத்வேகத்தை இக்குறிப்புகள் வள்ளல்தன்மையோடு வாரி வழங்குகின்றன. வித்யாஷங்கர், அப்பாஸ், பா.வெங்கடெசன், ஆத்மாஜி, உமாபதி, எஸ்.சண்முகம். பழமலை, தேவதேவன், ஆனந்த், பிரம்மராஜன், சுகுமாரன், கல்யாண்ஜி, இரா.பொன்னாண்டான், லஷ்மி மணிவண்ணன், கண்மணி குணசேகரன், முத்து மகரந்தன், எம்.யுவன், மனுஷ்யபுத்திரன், சமயவேல், கோவிந்தராஜ், மலைச்சாமி, இளம்பரிதி என முக்கியமான தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் கச்சிதமாக அறிமுகப்பத்தப் பட்டிருக்கின்றன.

இளம்வாசகர்களுக்கு ஒரு நல்ல கையேடாக விளங்கத்தக்க இத்தொகுப்பில் ஒருசில பலவீனமான அம்சங்கள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ‘தமிழ்க்கவிதையின் பண்புகள் / நாம் ‘ என்னும் கட்டுரையில் சங்கப்பாடல்களைப் ‘புகைப்படக் கவிதைகள் ‘ என்று விமர்சித்த புதுமைப்பித்தன் வரியை முன்வைக்கும் விக்ரமாதித்யன், அதற்கு மாறான எண்ணமுள்ளவராகவே தன்னை எல்லாக் கட்டுரைகளிலும் வெளிப்படுத்தினாலும் குறிப்பிட்ட கட்டுரையில் வலிமையான எந்த விதமான வாதத்தையும் முன்வைக்காமல் , கவிதையின் பண்புகளைப் பொதுநிலையில் அடுக்கிக் காட்டுவதில் ஈடுபட்டுவிடுவதன் காரணத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை. தொகுப்பின் பிற்பகுதியில் மனமுறிவுக்கும் நம்பிக்கை கொள்ளலுக்கும் இடையிலான உயிரின் பயணமாக அடையாளப்படுத்தப்படுத்தப்படுகின்றன யூமா.வாசுகியின் கவிதைகள் (வாழ்வினால் ஓயாமல் எற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும் கவிஞன்). ஆனால் போதுமான ஊக்கத்துடன் அது அழுத்தமாக கட்டுரையின் எப்பகுதியிலும் நிறுவிக்காட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. நம் காலத்து நாயகனாக கவிஞர் லஷ்மி மணிவண்ணன் அடையாளப்படுத்தப்படுகிறார். எவ்விதமான தர்க்க நியாயம் இல்லாமலும் மற்ற கவிஞர்களுடன் மிக எளிய அளவிலான ஒப்பீட்டைக்கூட நிகழ்த்தாமலும் இம்முடிவை விக்ரமாதித்யன் அறிவிப்பது விசித்திரமாக இருக்கிறது.

( தமிழ்க்கவிதை- மரபும் நவீனமும் -விக்ரமாதித்யன். 226, பாரதி சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. விலை ரூ100)

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்