மழையின் காதலன்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

காளி நேசன்


மழையை போல் அவனை யாரும் நேசித்தது இல்லை!
மழைக்கு ஒதுங்கும் தருணங்களில்தான்
அவன் மனிதர்களை தரிசிக்கிறான்!
மழையுடன் அவனுக்கு தீராத உறவு உண்டு!
ஃசெக்கோவின் கதை மாந்தர்கள் அலைகின்றார் அவன் கனவில்
மழை பெய்த இரவுகளில் மட்டுமே!
துவண்டிருந்த நாட்களில் மழை அவனுக்கு ஆறுதல்!
மழை அவனுக்கு தேவ அமிர்தம்!
மழைக்கு முந்திவரும் மண்ணின் மணம்
அவனுக்கு ஆன்ம தரிசனம்!
மழைக்கு மறு நாட்களில்தான்
மலர்கள் காதற் பெண்டிருடன் போட்டியிட முடிந்தது!
காதலுக்கும் காமத்திற்க்கும் நூலிழைதான் தூரமா? யார் சொன்னது?
மழை இறங்கிய ஒரு மாலை பொழுதில் அவன் தோளில் வந்தமர்ந்த
பறவை ஒன்று சொன்னது “ஜென்ம ஜென்ம தூரம்” என்று.
ஜென்மம் தொடரும் உறவுகளை கண்டுணர்ந்த கணங்களில்
இடியும் மின்னலும் அவன் சாளரங்களில் நிரம்பி வழியும்!
அவன் உயிர் காதலை கண்ட கணங்கள்
மழையால் ஆசீர்வதிக்க பட்டிருக்கின்றன!
அவனை போல் திங்களை காதலிக்க யாருண்டு?
ஆதலின், அவன் காதலை மழை எப்பொழுதும் வாழ்த்தியது!

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்