மழலைச்சொல் கேளாதவர்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

ஜெயந்தி சங்கர்


தொடக்கக்கல்லூரியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்திருந்தாள் அனிதா. சில நல்லுள்ளங்களின் பொருளுதவியால் தான் அவளுக்கு அது சாத்தியமாகியிருந்தது. குடும்பத்திலேயே அவள்தான் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாள். ஆகவே, கைக்கும் வாய்க்குமாக திண்டாடிக் கொண்டிருந்த குடும்பத்தை உயர்த்த அம்மா அவளைத்தான் மலையாக நம்பியிருந்தாள். சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிறுதித் தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாட பாஸிர் ரிஜ் சென்றிருந்தனர் கும்பலாக. பதினோரு மணிக்குள் வந்துவிடுவதாகத் தான் அம்மாவிடம் அனுமதி பெற்றிருந்தாள். ஆனால், ஆட்டம் பாட்டம் என்று முடிந்த பிறகு நள்ளிரவு தாண்டி தான் அனிதா வீடு திரும்பினாள்.

அன்று நடந்தது அவளின் நினைவில் மங்கலாகத் தான் இருந்தது. நடக்கக்கூடாதது நடந்துவிட்டிருந்தது என்பதை மட்டும் அவள் புரிந்துகொண்டாள். ‘கோக் ‘ என்று அவள் அருந்தியதில் மதுவைக் கலந்து கொடுத்தது கூட்டத்தில் இருந்த மூன்று பையன்களில் யார் என்று கூடத் தெரியவில்லை. தனக்குமட்டும் தான் நடந்ததா உடன் வந்த பெண்களுக்கும் அவள் கதிதானா என்றும் அறியாது குழம்பினாள். கூட்டாளிகள் என்று சொல்லிக்கொண்ட அந்தக்கும்பலைத் தவிர்க்க ஆரம்பித்தாள்.

கர்பம் என்ற சிக்கல் வருமென்று அனிதா கொஞ்சமும் எதிர்பார்க்காததால், அம்மாவின் கோபத்துக்கு பயந்து நடந்ததை மறைத்திருந்தாள். ஆனால், அவளின் மாதவிடாய் இரண்டு மாதங்களாக வரவில்லை என்றபோதுதான் வேறு வழியின்றி அம்மாவிடம் சொன்னாள். ஒரே ஒரு முறை நடந்த விபத்தில்கூட கருத்தரிக்குமா என்ற சந்தேகமும் ஆச்சரியமும் ஏற்பட்டது அவளுக்கு. கோபத்தில் அம்மா கத்திய கத்தல் அக்கம் பக்கத்தில் வசித்தவர்களைப் பெரிதாக பாதித்து விடவில்லை. அப்பாவோடு அடிக்கடி அம்மா சண்டைபோட்டிருந்ததால், அவர்களுக்குப் பழகிப் போயிருந்தது. அவளை அடித்து, காலால் உதைத்து நாற்காலியைத் தூக்கி அவள் மேல் போட்டு அம்மா தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றாள். சினம் கொஞ்சம் தணிந்ததும், ‘யாருன்னு தெரிஞ்சா மட்டும் என்னடி செய்யமுடியும் ? ‘, என்று சலித்துக்கொண்டே சொல்லிவிட்டுத் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் ஏதேதோ புலம்பினாள்.

அப்போதிலிருந்து அனிதாவுக்கு வீடு நரகமானது. அம்மா வீட்டிலிருந்தால், அவள் வெளியே பள்ளிவளாகம், நூலகம் என்று எங்காவது போய்விடுவாள். உடன் பிறந்தவர்களின் பார்வைக்கணைகளைப் பொறுத்துக்கொண்டு அவள் வீட்டில் இருந்தது சொற்பநேரமே. வீட்டினுள் நிலவிய அழுத்தம் அவளால் தாங்கக் கூடியதாக இருக்கவில்லை. அம்மா உதைத்த உதையிலாவது வயிற்றில் இருந்த அந்தப் பிண்டம் கரைந்து தொலைந்திருக்கலாம். ஆனால், அது பத்திரமாய் அவளுள் உறைந்து வளர ஆரம்பித்துவிட்டது.

வாய்க்குச் சுவைவேயில்லை. பசிக்கு ஏதும் கொஞ்சம் சாப்பிட்டால், அடுத்த சில நிமிடங்களிலேயே கொடக்கென்று வாந்தியாக வெளியேறியது. உடலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்கள் மட்டுமில்லாமல் மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அதுவரை அனிதாவின் பதினேழு வயது வாழ்க்கையில் அவள் அனுபவித்திராதது. உறக்கம் வந்தது. இருப்பினும், குழப்பத்துடன் கவலையும் பதட்டமும் சேர்ந்து வந்து அழுத்தியதால், அவளால் இரவுகளில் கூட ஆழ்ந்து தூங்க முடியவேயில்லை. தன்னை மறந்து ஐந்து நிமிடங்கள் மயக்கத்தில் இருந்தால், ஆறாவது நிமிடம் திடுக்கிட்டு எழுந்து விடுவாள். இனம் புரியாத ஒர் தவிப்பு. கருவென்ற பெயரில் வயிற்றில் இருந்தது மட்டும் வேண்டாம் என்று தோன்றிக் கொண்டேயிருந்தது. அப்படித்தோன்றிய ஒவ்வொரு நொடியும் அதன் மீது அவளுக்கு இருந்த வெறுப்பு அதிகரித்தபடியே இருந்தது.

அடுத்த நாளே மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள் தொண்டூழியையான செல்வி. மார்கரட்டும் அம்மாவும். கரு உருவாகி பத்து வாரத்திற்கு மேலாகி விட்டது. ஆகவே, கருக்கலைப்பு செய்யக்கூடாது. அப்படியே முயற்சித்தாலும் அது அனிதாவின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர் சொன்னதும், அம்மாவுக்கு அதுவரை இருந்த கோபமும் ஆத்திரமும் பன்மடங்காகப் பெருகியது. மருத்துவ மனையிலேயே, பொது இடமென்றும் பாராமல், கத்தத் துவங்கிய அம்மாவை மார்கரட், ‘ரிலாக்ஸ்லா மிஸிஸ் கணேசன். வீட்டுக்குப் போய்ப் பேசிக்குவோமே ‘, என்று சொல்லித்தடுத்தார். அவரில்லாமல் போயிருந்தால், அம்மா சூழ்நிலையையும் மறந்து அங்கே கத்தி ஆர்பாட்டம் செய்து, அனிதாவை அடிப்பதுவரை போயிருப்பாள்.

அம்மாவின் சுட்டெரிக்கும் பார்வையைத் தவிர்க்க விரைவு ரயிலில் பயணிக்கும்போது ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அம்மாவைப்பார்க்கும் போதெல்லாம் குற்றுவுணர்வு நமநமவென்று அவளுள் அரித்தது. ‘மிஸிஸ் கணேசன், பேப்பர்ல படிச்சீங்கல்ல, ஒரு பதின்மவயதுப் பெண் இறந்தே பிறந்த தன் குழந்தைய வீட்டு சன்னல் வழியா வீசியெறிஞ்சத. இப்ப நமக்கு அனிதா தான் முக்கியம். அவ ஏதும் தப்பான முடிவெடுத்துட்டா, போன உயிர் அம்மான்னாலும் வராது அப்பான்னாலும் வராது. அந்தப் பையன்கள்ள எவன்னு அனிதாவுக்கு தெரியாமப் போச்சே, நமக்கு சட்டத்தோட உதவியையும் நாடமுடியாம இல்ல இருக்கு. ‘, என்று மார்கரட் குசுகுசுவென்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது அனிதாவின் காதுகளில் விழவே செய்தது.

000

வெள்ளியன்று மார்கரட் முன்தினமே தொலைபேசியில் அம்மாவிடம் சொல்லியிருந்தபடி வந்திருந்தார். அம்மா வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தநேரம். கொஞ்சநேரம் பேசிவிட்டு அம்மா போய்விட்டாள். அனிதாவிடம் அம்மா பேசி பத்துநாட்களிருக்கும். இருவருக்குள்ளும் நடந்துவந்த மனப்போராட்டம் எதிலும் மனதைச் செலுத்தவிடவில்லை.

மணமாகி, இருபது வருடங்களாகப் போகிறதாம். ஆரம்பகாலத்தில் ‘க்ளோமிட் ‘ எடுத்துப்பார்த்தார்களாம். பலனில்லை. பிறகு இரண்டு வருடங்களுக்கு தினமும் காலையில் மீனாள் தனக்குத் தானே சர்க்கரை நோயாளிகளைப் போல ஊசிகுத்திக்கொள்வாராம், முட்டை உற்பத்தி பெருக. அதற்கெல்லாமும் கருத்தரிக்கவில்லை மீனாள். அப்போதுதான், செயற்கைக் கருத்தரிப்பு வழிகளையும் கயாண்டு பார்த்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கில் பலமுறை செலவு செய்து. ஒரு வழியும் பலனளிக்காமல் போகவே கடந்த சில வருடங்களாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் யோசனை வந்திருக்கிறது. அவர்களின் உடல், மனப்போராட்டங்களை சொல்லச்சொல்ல அனிதாவுக்கு அவர்கள் மேல் தன் பாசம் ஏற்பட்டது.

ராஜனுக்கும் மீனாளுக்கும் மார்ஸிிலிங்கில் இருந்த அவர்களது ஓரறை வீட்டைக் கண்டுபிடிக்கக் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டதாம். அதைப் பிரஸ்தாபித்துக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள் அனிதா வீடு பிரதிபலித்த ஏழ்மையைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டுப் பின் வாங்கினாற்போலிருந்தது. அனிதாவைப் பார்த்ததுமே இருவர் முகத்திலும் திருப்தி படர்ந்தது. துருதுருவென்று துடைத்து விட்டாற்போலப் பளிச்சென்றிருந்த அனிதாவைப் பிடித்துப்போனது இருவருக்கும். அவள் கொடுக்கும் பிள்ளை ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்குள் வந்துவிட்டிருந்தது அவர்கள் முகங்களிலேயே தெரிந்தது. கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருந்த ஏராளமான பழங்களையும் தின்பண்டங்களையும் அனிதாவின் கையில் கொடுத்தனர்.

‘மீனா, இந்தப்பொண்ணே ஒரு சின்னப்பிள்ளை மாதிரி இருக்கே. இதுக்கு ஒரு பிள்ளையா ? நம்பறமாதிரியா இருக்கு ? ‘, என்றார் உரக்கவே. மார்கரட்டும் மீனாவும் ஆமோதித்துச் சிரித்தனர்.

தேசியசேவையில் இருந்த அண்ணன் குமார் அன்றிரவுதான் வாரயிறுதிக்கு வீட்டுக்கு வரவேண்டும். அவனுக்கும் அப்பாவுக்கும் விஷயம் தெரியாமல் மறைக்கப்பட்டது. வயிறு தெரிய ஆரம்பிக்கும்போது என்ன செய்வது என்ற கவலைதான் அம்மாவுக்கு. மனவளர்ச்சிகுன்றிய கடைக்குட்டியான தம்பி ரகுவின் நிலையை தம்பதியர் பார்த்துவிடக்கூடாது என்று கீழ்த்தளத்தில் இருந்த உறவினர் வீட்டில் கொஞ்சநேரத்திற்கு விட்டுவைத்திருந்தார்கள். வேலைதேடிக்கொண்டு வீட்டிலிருந்தபடியே தெரிந்தவர்கள் கொடுத்த தையல்வேலை செய்துசம்பாதித்து வந்த இரண்டாவது அக்கா புனிதாதான் அனிதாவோடு கூடவே இருந்து வந்திருந்தவர்களோடு பேசினாள். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே மணமாகி ஒரு குழந்தையோடு ஸோஜோரிலிருந்த மூத்த அக்கா, ‘ என்ன முடிவாச்சு ? ‘ என்று கேட்டறிய பதட்டத்துடன் போன் போட்டுவிட்டாள்.

அம்மா வேலைக்குக் கிளம்பிப்போகும்போது, மார்கரட், ‘ அம்மா நீங்களும் இருக்கலாமில்ல. இன்னிக்கி வேலைக்கிப் போய்த் தான் ஆகணுமா ? ‘, என்று கேட்டபடி எழுந்து வாசலுக்குப் போனார். ‘மார்கரட், உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. ஒரு நாள் வேலைக்கி போகல்லன்னாலும் வேலயே போயிடும். சீனன் எம்மேல பாவப்பட்டுகிட்டு நிப்பாட்டாம இருக்கான். போனவாரம் ஒரே காச்சல். ஆனாலும், ஒரு மாத்தரைய போட்டுகிட்டு பாத்திரம் கழுவ சாப்பாட்டுக்கடைக்கிப் போயிட்டேனே ‘, என்று அம்மா வந்தவர்களுக்குக் கேட்காதவாறு சொன்னாள். ‘என்ன உங்க வீட்டுக்காரருக்கு இப்ப வேல இருக்கில்ல. நீங்க ஏன் இவ்வளவு சிரமப்படணும் ? ‘, என்று மார்கரட் கேட்டது கொஞ்சம் உரக்கவே ஒலித்தது. ‘எங்கலா ? ஒரு வேலைல நெலச்சிருந்தாதானே ? நீங்க சொல்லித்தானே அஞ்சாம் மாசம் செக்யூரிட்டி வேல கெடச்சிது. என்னா செஞ்சாரு ? குடிச்சுட்டு வேலைக்கி போனா, சீனன் தொரத்திட்டான். அந்தாளு சம்பாதிக்கறது அதுக்குக் குடிக்கவே பத்தல்ல. வீட்டுக்கு வந்தா சண்டதான். வரவே வேணாம்னு சொல்லிட்டேன். அதையெல்லாம் விடுங்க. இப்ப இந்தப்பிள்ள செஞ்சி வச்சிருக்கற கொழப்பத்துக்கு நீங்களே பேசி ஒரு ‘முடிவு ‘ செஞ்சிடுங்கலா. உங்களுக்குத் தெரியாததா ? நா வரேன் நேரமாச்சு ‘, என்று வேறு அம்மா சொல்லிக்கொண்டே போய்விட்டாள். பல மாதங்களாக நடையாய் நடந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தான்செய்த அறிவுரைகள் ஒரு பலனும் அளிக்காது போனதில் மார்கரட்டுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் முகத்தில் பூசியிருந்தது.

‘மிஸஸ் ராஜன், வாட் டு யு ஃபீல் ? ‘, என்று மார்கரட் கேட்டபோது, மீனாள் ராஜன் முகத்தைப் பார்த்தார். இருவருமாக இரண்டுநாட்களிலேயே சொல்வதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டு கிளம்பிச்சென்றனர்.

சொன்னமாதிரியே மார்கரட்டிடம் சம்மதம் சொல்லி அனுப்பிவிட்டனர். அடுத்த வாரத்தில் அனிதாவிற்கு ஏகப்பட்ட பானங்களும் தின்பண்டங்களும் வாங்கிக் கொண்டு வந்து பார்த்தனர். வீட்டில் மற்றவர்களும் தின்றது போக அனிதாவிற்கு, அதிலும் முக்கியமாக அவளுள் வளர்ந்த ‘அவர்களுடைவண்டுமே என்ற கரிசனம் பொருட்களின் அளவுகளில் தெரிந்தது. அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் அனிதா தொடர்ந்து படிக்கவேண்டும் என்றும் தாங்களே படிக்க வைப்பதாயும் சொல்லிவிட்டுப்போனார்கள்.

தினமும் மீனாள் ஒரு முறை காலையில் தொலைபேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அடிக்கடி வந்தும் பார்த்தார்கள். இவர்களுக்கென்று ஒரு குழந்தை பிறந்திருந்தால் அதுவும் பதின்பருவத்தில் இருந்திருக்கும். மிகவும் அன்பான அம்மாவும் அப்பாவும் அதற்கு அமைந்திருக்கும் என்றெல்லாம் பலவாறாக நினைத்துக்கொண்டாள் அனிதா. அன்பாக இருந்த ராஜனையும் மீனாளையும் அனிதாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. வசதியில்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வத்தை வாரிவழங்கி விடும் இயற்கை ஏன் இந்தத் தம்பதிக்கு ஒன்றுகூடக் கொடுக்காமல் ஏமாற்றியது என்று பலமுறை நினைத்துக்கொண்டாள்.

000

அந்த வாரயிறுதியில் அனிதாவை தங்கள் காடியிலேயே கூட்டிக்கொண்டு போனார்கள். வீட்டைச் சுற்றிக் காட்டினார்கள். அனிதா வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைக்கென்று தயாரித்திருந்த அறைக்குள் போனார்கள். இளஞ்சிவப்பில் அறைக்குப் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருந்தது. சாயத்தின் வாசனை இன்னமும் அறைக்காற்றில் இருந்ததால், நாசியில் வந்து மோதியது. எப்போதும் அத்தகைய வாசனைகளை வெறுக்கும் அவளுக்கு அந்த சில மாதங்களாகத் தான் பிடிக்கிறது. முன்பு பிடித்தவை எல்லாம் இப்போதெல்லாம் பிடிக்காமல் போன புதுமையில் பதினேழே வயது நிரம்பிய அவளின் குழந்தைமை குதுகலித்தது. நீண்ட மூச்சு விட்டு இழுத்துக்கொண்டாள். வெட்கத்துடன் அருகில் நின்றிருந்த இருவரையும் பார்த்துக்கொண்டாள்.

நகர்ந்து சென்று அறையில் ஒரு கோடியில் இருந்த தொட்டிலைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், மீனாள் ‘அனிதா, அந்த கபோர்ட்ல பார்த்தியா, கொஞ்சம் பொம்மைகூட வாங்கி வச்சிருக்கோம் ‘, என்று கூறிக் கொண்டே பேழையைத்திறந்து காட்டினார். உள்ளே நிறைய பொம்மைகள், குழந்தைக்கான சட்டைகள் மற்றும் பொருட்கள். எல்லாமே புத்தம் புதியவை. சிலவற்றை மட்டும் கையில் எடுத்துப் பார்த்தாள் அனிதா. கிலுகிலுப்பை ஒன்று இருந்தது பலவண்ணத்தில். ஆர்வமாய் எடுத்து ஆட்டிப்பார்த்தாள்.

‘சரி, ஆண்டி நேரமாச்சு. இன்னொரு நாளைக்கி வரேன் ‘, என்று கிளம்பிவிட்டாள். ‘நானே ‘ட்ராப் ‘ பண்ணுவேன். எனக்கு அவசரமா தம்பனீஸ் போகணும். நீ டாக்ஸில வேணா போயேன் அனிதா ‘, என்ற ராஜனிடம், ‘இல்ல அங்கிள் நான் எம் ஆர் டா லயே போயிடுவேன் ‘, என்று சொல்லிக்கொண்டே சப்பாத்தை அணிந்துகொண்டாள். மீனாள் அவளோடு மின்தூக்கிவரை வந்து விட்டார். கையாட்டிக்கொண்டே, ‘பாத்துப்போ அனிதா. நேரா வீட்டுக்கே போ. கவனம் ‘, என்று கூறினார். சரிசரி என்று சொல்லிய படியே விடைபெற்றுக் கொண்டு, ‘நோவோ ‘, என்ற பெயர் கொண்ட அந்தத் தனியார் அடுக்கக வளாகத்திலிருந்து, எதிரே தெரிந்த யூசூகாங்க் விரைவு ரயில் நிலையத்தை நோக்கி நடந்தாள். வரும் போது அடித்த வெள்ளை வெயில் மறைந்து மழை மேகத்தின் சேர்க்கையால் குளிர்க்காற்று வீசியது.

சாலையில் மறுபுறம் சென்றதும் நின்று மீண்டும் சில கணங்களுக்கு அந்த நீல வண்ணத்தையும், அந்த வளாகத்தில் அமைந்திருந்த பூங்கா மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றையும் பார்த்துக்கொண்டாள். ‘இங்கு தான் வளரப் போகிறதா என் குழந்தை ?பிரசவம் முடிந்து நானும் தான் சில மாதங்களுக்கு இங்கிருப்பேன் ‘, என்று எண்ணிக்கொண்டே தன் அடிவயிற்றை ஒருமுறை தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டாள். முதல் முதலாக ‘என் குழந்தை ‘ என்று தனக்கு ஏற்பட்டிருந்த எண்ணம் கொடுத்த புத்தம்புது அனுபவம் அவள் முகத்தில் புன்னகையாக விரிந்தது.

தொடர்ந்து நடந்தாள். இப்போதெல்லாம் வயிறுமுட்டச் சாப்பிட்ட உணர்வைக் கொடுத்தது லேசாக மேடிட்டிருந்த அவளின் வயிறு. அவள் மின்படியேறி மேலே வரவும் வுட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் ரயில் வரவும் சரியாக இருந்தது. வாரநாளின் நண்பகல் என்பதால், ரயிலில் கூட்டமேயில்லை. செளகரியமா உட்கார்ந்துகொண்டாள். நிலையத்தைவிட்டுக் கிளம்பிய ரயில் ஜன்னல் வழியாக மீண்டும் அந்த நீல அடுக்குமாளிகை அவள் கண்களில் பட்டது. தனக்கு இல்லாத அதிருஷ்டம் தன் குழந்தைக்கு என்று நினைக்கும்போது ஏதோ ஒருவகை இனம் புரியாத குழப்பமான மகிழ்ச்சி உண்டானது.

000

அம்மாவைத் தவிர மற்றவரின் கவனிப்பில், அனிதாவினுள்ளிருந்த கரு ஐந்தாம் மாதத்தில் அடியெடுத்து வைத்தது. அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. காலையில் எழுந்து கழிப்பறைக்குச் சென்ற அனிதா, தன் உள்ளாடையில் பழுப்பு நிறக் கறை படிந்திருப்பதைப் பார்த்தாள். வேறு வழியில்லாமல் அம்மாவிடம் போய்ச் சொன்னாள். முதலில் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகயிருந்தவள் சட்டென்று திரும்பி, ‘வயித்த வலிக்குதா ? ‘, என்று கேட்டாள். வலித்தமாதிரியும் இருந்தது. வலிக்காதமாதிரியும் இருந்தது. சொல்லத்தெரியவில்லை அவளுக்கு. இல்லையென்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள். நேரமாக ஆக லேசாக ஆரம்பித்த வலி கூடிக்கொண்டே போனது. உதிரப்போக்கு பழுப்பு நிறம் இளம் சிவப்பாக மாறி அடர்சிவப்பாய் மாறியபோது, அனிதா வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.

மார்கரட்டுக்குத் தகவல் சொல்லிவிட்டுக் காத்திருந்தார்கள். அம்மாவுக்கு இரண்டு மனமாக இருந்தது. ‘ஒருபக்கம் பிரச்சனை ஒரேயடியா முடியுதுன்னு நிம்மதி வருது. ஆனா, பாவம் அவங்களுக்கு ஒரேயடியா நம்பிக்கை கொடுத்துட்டு, இப்ப இல்லன்னா ஏமாந்துபோவாங்கன்னும் வருத்தமா இருக்கு ‘, என்று மார்கரட்டைப் பார்த்ததும் அம்மா சொன்னாள். ‘மிஸஸ் கணேசன், இப்ப அனிதாவக் கூட்டிகிட்டி ஹாஸ்பிடலுக்குப் போவோம். அதான் முக்கியம். மீதியெல்லாத்தையும் அப்பறமாப் பேசிக்குவோம் ‘, என்று சொல்லிவிட்டு, ஒரு ‘டாக்ஸி ‘ யை அழைத்தார்.

மருத்துவமனையில் செய்யமுடியாது என்று முன்பு சொன்னது தானாகவே நடந்துவிட்டதால், அனிதாவின் கர்பப்பையைச் சுத்தம் செய்து அவளை ஒரு நாளைக்கு அங்கேயே இருக்குமாறு சொன்னார்கள். நினைவு வந்தபோது, அனிதா மனமுடைந்து கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதாள். ஏனென்று அப்போது அவளுக்குப் புரியவில்லை. குழந்தையின் மீது ‘பாசம் ‘ ஏற்பட்டுவிட்டிருந்ததோ ? ‘வேண்டாம் ‘ என்று நினைத்த கரு தானே கலைந்துவிட்டிருந்தது, ஏன் இந்தக் கலக்கம் ? முதல் மாதங்களில் ‘ வேண்டாம் வேண்டாம் ‘, என்னும் போது ஒன்றும் ஆகவில்லை. எல்லாம் ஒருவாறாக தீர்மானமாகி, இயல்புக்கு வந்து கொண்டிருந்த நேரத்தில் குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வருந்தினாள். சாகும் நேரத்தில் வாழ ஆசைப்படும் கதை மாந்தர்கள் போல அவளுக்கு வேண்டாம் என்று முன்பு நினைத்த குழந்தை வேண்டியிருந்தது. அவளுக்காகவும் ராஜன் தம்பதியினருக்காகவும். குழந்தையைத் தத்தெடுக்க வேண்டிய அத்தனை சட்டவிதிகளையும் செயல்பாடுகளையும் மாரகரட் அவர்களுடன் சேர்ந்து செய்ய ஏற்பாடுகளைக்கூட ஆரம்பித்து விட்டிருந்தார்.

முதல் நாள் உறங்காமல் தொலைக்காட்சியில் பார்த்த பேய்ப்படம் தான் காரணமோ. பார்த்திருக்கக்கூடாதோ. இல்லை, ஒருவேளை படம் பார்த்துக்கொண்டே அதிகமாகத் தின்று ‘துரியான் ‘ சுளைகள் தான் உடல் சூட்டைக் கிளப்பி கருவையே கலைத்துவிட்டதோ என்றெல்லாம் குழம்பினாள். அதையே மருத்துவரிடம் வேறு சொல்லி வருந்தினாள். ஆனால், மருத்துவர் அதெல்லாம் காரணங்களில்லை. அனிதா கருச்சிதைவுக்கு எந்தவிதத்திலும் காற்றணமில்லை என்று சொல்லிவிட்டார். அனிதாவின் மனம் மட்டும் சமாதானமாகவேயில்லை. ‘என்னால் தானோ ‘ என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. தொலைபேசியில் மீனாள் பேசினார். ‘உன்னையே நீ வருத்திக்கொள்ளதே. இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு ? தைரியமா இரு ‘, என்று ஆறுதல் கூறியானார். மார்கரட்டும் நடந்ததை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தச்சொல்லிக் கனிவாகப் பேசினார்.

அடுத்தநாள் ராஜனும் மீனாளும் வீட்டிற்கு வந்தனர், வழக்கம்போல கைகொள்ளாத தின்பண்டங்களுடன். முகத்தில் இருந்த ஏமாற்றத்தைச் சாமர்த்தியமாக மறைத்தனர். இருந்தாலும் அனிதா அவர்களைப்பார்த்ததும் தான்தான் அவர்களுக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றியதுபோல மிகவும் குற்றவுணர்வு கொண்டாள். தானும் வருந்தி, அந்தத் தம்பதியையும் வருத்தி குழம்பியது அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர்கள் வருமுன்னரே அம்மா வேலைக்கி கிளம்பிவிட்டிருந்தாள்.

அடுத்த ஒரு வாரமும் முற்றிலும் வேறு விதமான அவஸ்தையினால் அனிதா உறக்கம் வராமல் தவித்தாள். அடிக்கடி முகம் சிவந்து வீங்கும் அளவுக்கு அழுதாள். செய்து முடிக்கவேண்டிய பாடங்களைப் பற்றி முற்றிலும் மறந்துபோனாள். அடிக்கடி வெளியுலைப் பார்க்காமலே இறந்த அந்தப் பிஞ்சின் நினைவு அடிக்கடி வந்தது. குழந்தை பிறக்கும் முன்பே இறந்துவிட்டாலும் அதன்மீது தனக்கேற்பட்டிருந்த பிடிப்பு தான் தன்னை அந்த அளவிற்குத் துக்கப்படுத்தியது என்பது புரிந்தது. ஆனால், இயற்கையின் ஆற்றலை வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு வாரத்தில் மெதுவாக அழுகையை நிறுத்திவிட்டு மற்றவற்றில் கவனைத்தைச் செலுத்த ஆரம்பித்தாள். படிப்பை நிறுத்திவிட்டு பேசாமல் வேலைக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிப்பார்த்தாள். அம்மா படிப்பை நிறுத்தக் கூடாது என்றாள். அப்போதும் மார்கரட் தான் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசி, அனிதாவின் முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்.

அந்த வார இறுதியில் ராஜனும் மீனாளும் மார்கரட்டுடன் மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை. ‘ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நாங்களே நேர்ல உங்ககிட்ட கேக்கணும்னு மார்கரட் சொல்லிட்டாங்க. நிறைய யோசிச்சிட்டோம். பேசிட்டோம். ராஜன் தான் இந்த யோசனையையே மொதல்ல சொன்னது. எனக்கும் அது மிக அருமையான யோசனையாத்தான் தோணிச்சி. ம்,. நீங்க சம்மதிச்சா,. நாங்க அனிதாவையே எங்க மகளா தத்தெடுத்துக்கலாம்னு நெனைக்கிறோம். அவள எங்களுக்கு ரொம்பப்பிடிச்சு போச்சி. அவள நல்லா படிக்க வைக்கிறோம். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லாவிதமான உதவியையும் நாங்க செய்யறோம். இதுக்கு இப்பவே நீங்க பதில் சொல்லணும்னு இல்ல. யோசிச்சு சொல்லுங்க ‘, என்று மீனாள் அம்மாவிடம் சொல்வாரென்று யார்தான் எதிர்பார்த்திருக்கமுடியும். எல்லோரும் அம்மாவின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர்.

வாழ்க்கை விளையாட்டின் தீர்மானப் பந்து அம்மாவின் பக்கத்தில் விழுந்திருந்தது. அதனை எடுத்து தனக்கு எப்படிப்பிரியமோ அப்படி ஆடுவது இனி அம்மாவின் பாடு. சிந்தனை செய்ய ஆரம்பித்திருந்த அம்மாவின் முகத்தையே எல்லோரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தனர்.

(முற்றும்)

நன்றி : தமிழ் முரசு 16-10-05

(முத்தமிழ் விழா 2005 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தரவில் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு )

jeyanthisankar@gmail.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்