மலையாளக் குடிவார மசோதா – பெரியார்

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

தாஜ்


1. காலம்: 1926 / நம்பூதிரிகள் – நாயர்கள் பிரச்சனை / சென்னை மாகாண சட்டசபை நிகழ்ச்சி….. பெரியாரின் ஓர் யதார்த்த செய்தி கண்ணோட்டம்!

2. சமூகம், அரசியல், மற்றும் வழ்வியல் தடங்களை சில காலம் பின்நோக்கிப் பார்க்க ஆவல் கொள்பவர்களுக்கு, அரசுப் பதிவு களும், முந்தைய இலக்கியங்களும் ஓரளவு உதவக்கூடும். இங்கே தமிழ்ச்சார்ந்த சூழலில், அப்படி ஓர் தேடலில் பெரியாரின் பதி வுகள் சில கூடுதல் நம்பகத்தோடு பெரிய அளவில் உதவுவதாக இருக்கிறது!

– தாஜ்

மலையாளக் குடிவார மசோதா என்கிற ஒரு மசோதாவின் பேரில் சென்னை சட்டசபையில் இவ்வாரம் வாதம் நிகழ்ந்து வருகி றது. இம்மசோதாவின் தத்துவம் பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற வகுப்பின் நன்மை தீமைகளை அஸ்திவாரமாகக் கொண் டது. எப்படியெனில், மலையாள தேசத்தில் உள்ள பூமிகள் பெரும்பாலும் அத்தேசத்திய பிராமணர்களுக்குச் சொந்தமானது. அத் தேசத்துப் பிராமணர்களில் பெரும்பாலோர் நம்பூதிரிகள் என்னும் மலையாளப் பிராமணர்கள். இவர்களுடைய சொத்துக்கள் பாதி க்கப் படுவதேயில்லை. இந்தப் பிராமணர்கள் தங்களுக்கு அதிகக் குழந்தைகள் பிறந்துவிட்டால் குடும்பத்திற்கு அதிகச் செலவா கிவிடுமென்றும், பங்குபோட்டுக் கொண்டே போனால் சொத்துக்களின் அளவு குறைந்துபோகுமென்றும் எண்ணியே தங்கள் குடும் பங்களில் தலைவானாக உள்ளவன் (மூத்தவன்) மாத்திரம்தான் கல்யாணம் செய்து கொள்வது என்றும் மற்றவர்களெல்லாம் ‘சூத் திர ஸ்திரீ’களை அதாவது நாயர் ஸ்திரீகளை சம்பந்தம் செய்து (தமிழ்நாட்டு தாசி வேசிகளைப் போல்) ஒவ்வொரு பிராமணரல் லாத ஸ்திரீயை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதென்றும், அவர்களுக்குத் தாங்கள் வருஷம் ஒன்றுக்கு நாலு முழத்துண்டுகள் இரண்டுஜோடியும், தலைமுழுக எண்ணெயும்கொடுத்து விடுவதென்றும், இதன் மூலமாய்பெறும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு தங்களுக்குக் கொஞ்சமும் இல்லாமல் ஏற்பாடு செய்து அதை வெகு நாளாகப் பழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

இப்பழக்கங்கள் யாதொரு விதமான தங்குதடையில்லாமல் நடைபெறவே, மலையாள தேசத்துப் பிராமணரல்லாத ஸ்திரீகளுக்கும் பிராமண சம்பந்தமே புண்ணியமானதென்றும் மோட்சத்திற்கு ஏதுவானதென்றும் சாஸ்திர ஆதாரங்களையும் ஏற்படுத்தி அவர்க ளை நம்பச் செய்கிறார்கள். இவ்வித சாஸ்திரங்களில் நம்பிக்கையில்லாமல் யாராவது தகராறுக்கு வந்து விட்டால் என்ன செய்கி றதென்று நினைத்து, சாஸ்திர ஆதாரத்திற்கு மேல் பொருளாதாரத்திலும் ஜாக்கிரதையாயிருந்து, அந்த நாட்டிலுள்ள பூமிகள் பூரா வும் தங்களுடையதாக்கிக் கொண்டு, எந்த பிராமணரல்லாதாரும் குடி இருப்பதற்குக்கூட இந்த பிராமணர்களின் தயவில் – பிராம ணர்களின் பூமியில் – இருக்கும் படியாயும், இது பிராமணர்களின் அதிர்ப்திக்கு ஆளானால் மோட்சவீடு இல்லாமல் போவதோடு, குடி இருக்க வீடும் இல்லாமல் போகும்படி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

இது எப்படி இவர்களுக்குச் சாத்தியமாகிறது என்று பார்த்தால், நமது நாட்டுப் பிராமணர்களுக்கு எப்படித் தாங்கள் உயர்ந்த ஜா தியார் என்பதற்கும் தங்களை ‘சுவாமி’ என்று மற்ற வகுப்பார் கூப்பிட்டுக் கும்பிடுவதற்கும் வேத சாஸ்திர ஆதாரத்தோடு உத்தி யோக அதிகார ஆதாரமும்தேடி வைத்திருக்கிறார்களோ, அதுபோலவே இவர்களுக்குப் பூஸ்திதி அதிகம்; செலவுகுறைவு; இவர் களைத் தவிர மற்றவர்கள் ‘கூலி ஆட்கள்’, ‘வைப்பாட்டி மக்கள்’. இந்த நிலையில் ஒவ்வொரு பிராமணக் குடும்பத்திற்குப் பணம் வருஷத்திற்கு ஆயிரக்கணக்காய் மீதப் படுவதால் அக்கம் பக்கம் உள்ள அன்னியன் பூமிகளை எல்லாம் இவர்களே வாங்கிக் கொள்ள சௌகரியப்படுகிறதும், மற்றவர்களுக்கு அதிகச்செலவும் வரும்படிக் குறைவும் ஏற்படுவதால், எப்படியாவது இவர்களு க்கே தங்கள் பூமியை விற்றுவிட்டுப் போக வேண்டியதுமான நிலைமை ஏற்பட்டு விடுகிறது.

சாதாரணமாக, ஒரு பிராமணன் ஏறக்குறைய 40 – 50 பெண்களுக்குக் கூட சம்பந்தம் வைத்துள்ள புருஷனாக ஏற்படுகிறதும்
உண்டு. ஏனெனில் மலையாளதேசப்பெண்கள் தங்களை வைப்பாட்டியாக வைத்திருப்பவன் பிராமணன் என்று சொல்லிக் கொண் டால்தான் அவர்களுக்குப் பெருமை. அதிலும் கொஞ்சம் பெருமையுள்ள குடும்பஸ்தார்களாயிருந்து விட்டால் கட்டாயம் பிராம ணன் பெயரைத்தான் சொல்லிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் குடும்பத்திற்கு கௌரவக் குறைவு என்று எண்ணு வார்கள். சிற்சில கௌரவம் பொருந்திய நாயர் குடும்பங்களில் உள்ள பெண்களுக்குப் பிராமணர்கள் பெயரைத் தங்கள் புருஷ னாகச் சொல்லிக் கொள்வதற்கு ருது சாந்தியில்லாமல் 5 வருஷம் 10 வருஷம் காத்திருப்பதும், கடைசியாய் சில சமயங்களில் அந்தப் பிராமணர்களில் யாராவது ஒருவனுக்குப் பணம் கொடுத்துத் தன் சம்பந்தக்காரன் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு உரி மை கேட்பதும் சாதாரணமாய் நடப்பதுண்டு. பெரியநாயர் குடும்பங்களில் வீடு கடுவதானால் தங்கள் வீட்டைச் சேர்ந்தாப்போல் இந்தப் பிராமணர்களுக்கென்று அவர்கள் வரப்போக தங்கியிருப்பதற்கும் பொங்கி சாப்பிடுவதற்கும் ‘மடம்’என்பதாக ஒரு தனிக் கட்டிடமும் கட்டிக் கொள்வதுண்டு.

இவ்வளவுமல்லாமல் அங்குள்ள நாயர்களில் யாருடைய சம்சாரமாவது கொஞ்சம் அழகுள்ள பெண்ணாயிருக்கிறாளென்று ஒரு
பிராமணன் கேள்விப்பட்டால் அந்த பிராமணன் மேற்படி பெண்ணுடைய புருஷனைக் கூட்டி வரச்செய்து, “அடே, மாதவா உன் னுடைய பாரியால் அதிக அழகுள்ளவளென்று கேள்விப்பட்டேன். அது வாஸ்தவமா?” என்று கேட்பான். அதற்கு மாதவன்,”அடி யேன், எல்லாம் தங்களுடைய பாக்கியம்” என்பான். இதைக்கேட்ட பிராமணன் “அப்படியானால் அவளை நம்முடைய மடத்தி ற்கு வந்து ஒரு வாரம் இருந்து போகும்படி சொல்லு” என்று சொல்லுவான். ஏதாவது அழகுள்ள ஸ்திரீ தெருவில் நடந்து போவ தைக் கண்டால் உடனே அவளைக் கூப்பிட்டு, “ஏ பெண்ணே! உன்னுடைய வீட்டுப் பெயரென்ன?” என்று கேட்பான். அந்தப் பெண் தன்னுடைய வீட்டுப் பெயரைச் சொன்னவுடன், “இன்றைய ராத்திரிக்கு நான் வருகிறேன் என்று உன்னுடைய தாயாரிடம் போய்ச் சொல்லு” என்று சொல்லுவான். இம்மாதிரியாக இந்தப் பிராமணர்கள் தங்களுடைய திருப்திக்காகவே அந்நாட்டிலுள்ள ஸ்திரீகளையெல்லாம் கடவுளைக்கொண்டு தாங்களே சிருஷ்டிக்கச் செய்ததாக எண்ணிக்கொண்டு காரியம் நடத்தி வருகிறார்கள்.

இது மாத்திரமல்லாமல், அந்த நாட்டுப் புருஷர்களை நடத்துகிற மாதிரியோ இதைவிட மோசமாயிருக்கும். அதாவது யாரைக் கூப்பிடுவதானாலும், ‘டோய்’, என்கிற சப்தத்தை முன்னால் வைத்துத்தான் கூப்பிடுவார்கள். பெயரோடுகூடிய ‘சாமி’ ‘அப்பன்’ என்கிற பதங்கள் இருந்தால் அதைத்தள்ளி ‘டோய் ராமா’, ‘டோய் கிருஷ்ணா’ என்றுதான் கூப்பிடுவார்களேயல்லாமல் ‘ராமசாமி’ என்று கூப்பிடவே மாட்டார்கள். அவர்கள் வீட்டுக்குப்போனால் மேலே வேஷ்டி போட்டுக்கொண்டிருக்கக் கூடாது. அரைக்கை, கால்கை சட்டைகள் போட்டிருந்தாலும் கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பேசும்போது ஒரு கையைக் கட் டிக் கொண்டும் மற்றொரு கையால் வாயை மூடிக்கொண்டுதான் பேச வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை முன்னிலையாய் பேசும் போது தாங்கள் என்பதற்கு ‘திருமேனி’ என்றும், ‘திருமனசு’ என்றும், ‘தம்பிரான்’ என்றும், தன்மையில் பேச வேண்டுமானால் ‘அடியேன்’, ‘அடியேன்’ என்றுதான் பேச வேண்டும். இன்னும் மலையாள நாட்டில் அந்நாட்டு மக்களுக்கும் அவர்களது பெண்க ளுக்கும் செய்யும் கொடுமைகளையும், நடத்தும் பான்மைகளையும் எழுதுவதென்றால் இது சமயம் எடுத்துக் கொண்ட வியாசத்தி ற்கு இடம் கிடையாது போய்விடும் என்று இது சமயம் இவ்வளவோடு நிறுத்திவிட்டோம்.

இப்பேர்ப்பட்ட கொடுமைகளையும் இந்தப் பிராமணாதிக்கத்தையும் ஏழைகளின் கஷ்டத்தையும் ஒழித்து அங்குள்ள பிராமணரல் லாதாரின் சுயமரியாதையைக் காப்பாற்றி அங்குள்ள பிராமணரல்லாதார்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருவது யாவரு மறிந்த விஷயம். இதன் பலனாகவே கொச்சி, திருவாங்கூர் முதலிய இடங்களிலும் பிரிட்டிஷ் மலையாளத்திலும் ‘நாயர் ஆக்ட்’ என்று சொல்லப்படும் சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த சட்டமானது பொருளாதார விஷயத்தில் பிராமணர்களுக்கு இருக்கும் நிரந்தர ஆதிக்கத்தால் சரியான பலன் தருவதற்கில்லாமல் செய்து விடுகிறபடியால் அது விஷத்தி லும் சிறிது சீர்திருத்தங்கள் செய்யவேண்டிய அவசியமிருந்தபடியால் ‘மலையாளக் குடிவார மசோதா’ என்ற ஒரு மசோதாவை சட்டசபை மூலம் கொண்டு வர ஏற்படுத்தி, அதை ஒரு தனிக் கமிட்டிக்கு விட்டு அக்கமிட்டியிலேயே வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு அது அமுலில் வருவதற்கு சட்டசபையின் மூலம் நிறைவேற வேண்டியதற்காக இப்போது சட்டசபையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டு அது நடைபெற்று வருகிறது.

இந்த மசோதா கமிட்டியில் ஏற்பாடு செய்திருக்கிறபடி நிறைவேற்றப்பட்டுவிட்டால் பிராமணர் ஆதிக்கத்திற்குக் கொஞ்சம் ஆப த்து வந்துவிடுமென்னும் காரணத்தினால், பிராமணக் க்ஷியான சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் ஒரு காரியமும் செய்ய முடி யாது என்று வெளியில் வந்த பிறகும் இந்த மசோதாவிற்கு மட்டிலும்போய் சட்டசபையின் மூலம் சிலகாரியங்கள் செய்து கொள் ளலாம் என்று போனார்கள்..

இந்த 5, 6 நாட்களாக சட்டசபையில் அந்த மசோதாவைப் பற்றி நடக்கும் வியவகாரங்களைக் கவனித்தவர்களுக்கு இந்த மசோ தாவின் உயிர்நாடியை வாங்குவதற்குப் பிராமணர்கள் ஒற்றுமையாய் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கிறார்கள் என்பதும், பிராம ணரல்லாதார்கள் எவ்வளவுதூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் விளங்காமல்போகாது. மலையாளத்துப் பிராமணர்களும், பெரிய பூஸ்திதியுள்ள சில ஜமீந்தாரர்களும் ஸ்ரீமான் சர்.சி.பி.இராமசாமி அய்யர் அவர்களைத் தங்கள் நாட்டுக்கு வரவழைத்து பெரிய வரவேற்பும் ஆடம்பரமும் செய்ததையும் நேயர்கள் பத்திரிகைகளில் பார்த்திருப்பார்கள். இப்போதோ இதே ஸ்ரீமான் சர்.சி.பி. இராமசாமி அய்யர் இந்த மசோதாவின் உயிர்நாடியை வாங்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கனுகூலமாக மற்ற
பிராமண மெம்பர்களும் தங்களால் ஆனவரையிலும் கூடச் சேர்ந்து தாங்கி வருகிறார்கள்.

இம்மசோதாவின் உயிர்நாடியான சில பாகங்களை சர்.சி.பி.அய்யர் எதிர்க்கும் போது, சர்.கே.வி.ரெட்டி நாயுடு பதில் சொல்லு கையில், “மலையாள தேசத்துப் பெண்கள் பக்குவமானால் முதன் முதல் பிராமணந்தான் அவளைப் புணர வேண்டும் என்று இருக்கிற அக்கிரமங்கள் எல்லாம் துலைந்துபோய் விடுகிறதே என்று பயப்படுகிறீர்களா?” என்றும், “சர்.சி.பி. அய்யரே நீங்கள் கவர்ன்மெண்டு சார்பாய் பேசுகிறீர்களா அல்லது மனுதர்மத்தின் சார்பாய் பேசுகின்றீர்களா?” என்றும் கேட்டார். இது சர்.சி.பி. இராமசாமி அய்யருக்கு கோபத்தை மூட்டாவிட்டாலும், ஸ்ரீமான் எஸ்.சத்திய மூர்த்தி அய்யருக்கு “மனுதர்ம சாஸ்திரத்தைப் பற்றி பேசலாமா?” என்று கோபம் வந்து, சர்.சி.பி. அய்யருக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, “சர்.சி.பி.அய்யர் கவர்மெண்டார் சார்பாய் பேசுகிறபடியால் அவரை ‘நீங்கள்’ என்று முன்னிலைப்படுத்தி பேசியது தப்பு” என்று சிபார்சுக்கு வந்து விட்டார். உடனே ஸ்ரீமான் சர்.கே.வி. ரெட்டி நாயுடு, “பார்ப்பனரைப் பாதிக்கும் படியான ஒரு சிறு வார்த்தை ஏற்பட்டாலும்கூட உடனே எல்லா பார்ப்பனர்களும் கட்சி பேதமில்லாமல் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். சர்.சி.பி.அய்யருக்குப் பேசத்தெரியாதா? அல்லது ஸ்ரீமான் சத்திய மூர்த்தி அய்யர் சர்க்கார் மனுஷரா? அல்லது இதனால் ஏதாவது பொது ஜனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விட் டதா? இதிலிருந்து பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னவுடன் சத்திய மூர்த்தி அய்யர் வெட்கிப்போய் விட்டார்.

மற்றொரு சமயத்தில் திவான் பஹதூர் எம். கிருஷ்ண நாயரின் தீர்மானத்தை சர்.சி.பி. அய்யர் எதிர்க்கும் போது சபையைப் பார்த்து “நீங்கள் இங்கு இத்தீர்மானத்தை நிறைவேற்றி விட்டதினாலேயே அது அமுழுக்கு கொண்டு வரமுடியாது”, என்றும் “கவர்னரைக் கொண்டு இந்த தீர்மானத்தை தள்ளிவிடச் செய்யப்படும்” என்றும் சொல்லி மிரட்டினார். ஸ்ரீமான் எம்.கிருஷ்ண நாயர் அதற்குப்பதில் சொல்லும்போது இந்த ‘பில்’ விஷயத்தில் சர்க்காரார் ஜனங்களை அனுசரித்துப் போகாமல் பொறுப்பற்றத் தனமாய் நடந்து கொள்வதையும் சர்.சி.பி.இராமசாமி ஜனங்களின் மனப்பான்மையைக் கவனிக்காமல் கொஞ்சமும் பயமின்றி நெஞ்சும் குடலும் அஞ்சாமல் எழுந்து நின்று “நீங்கள் நிறைவேற்றினாலும் நான் கவர்னரைக் கொண்டு நிராகரித்து விடுவேன் என்று சொல்லும்படியான தைரியம் வந்து விட்டதல்லவா” என்று சபையைப்பார்த்து ஓர் அதட்டு அதட்டியவுடன் சர்.அய்யருக்கு நடுக்கம் வந்து “நான் அப்படிச் சொல்லவில்லை, இப்படிச் சொல்லவில்லை” என்று மழுப்ப ஆரம்பித்து விட்டார்.

பிரிதொரு சமயத்தில் இந்த மசோதாவை இந்தத் தடவை எப்படியாவது தள்ளிவைத்து வாய்தா போட்டுவிட்டால் பிறகு இந்தக் கவுன்சிலே கலைந்து போய்விடும். அதன் பிறகு புது கவுன்சிலுக்குப் புது மெம்பர்கள்தானே வருவார்கள் என்று நினைத்து, ஒரு வெள்ளைக்காரரைவிட்டு மெதுவாக காலம் குறிப்பிடாமல் தள்ளி வைக்கும்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதன் வார் த்தைகள் சட்டத்திற்குப் பொருத்தமில்லை என்கிற காரணத்தால் அத்தீர்மானம் தள்ளுபடியாகப்போகும் சமயத்தில், அட்வெகேட் ஜெனரல் ஸ்ரீமான் வெங்கிட்டராம சாஸ்திரியார் அந்த வெள்ளைக்காரருக்கு வார்த்தை திருத்திக் கொடுத்தார். இந்த தீர்மானத்தை ஸ்ரீமான் எம். கிருஷ்ணநாயர் எதிர்க்கும்போது “துரைக்கு இந்த மசோதாவின் தத்துவமும் வாய்தாவின் அவசியமும் ஒன்றுமே தெரியாதென்றும், இதெல்லாம் உங்களுக்கு வேறு ஆட்கள் இருந்து கொண்டு செய்கிற காரியமல்லவா” என்றும் கண்டித்ததும் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீமான் வெங்கிட்டராம சாஸ்திரியார் எழுந்து, “நான் திருத்தினேனே ஒழிய எனக்கும் அதற்கும் சம்மந்த மில்லை” என்று சொல்லிக் கொண்டார். கடைசியாக தீர்மானங்கள் ஓட்டுக்கு வந்த காலத்தில் சர்.சி.பி. இராமசாமி அய்யர் உள் பட ஏறக்குறைய எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தே ஒரு பக்கத்திற்கு ஓட்டுக் கொடுப்பதும், எல்லா பார்ப்பனல்லாதாரும் ஒன்று சேர்ந்து மற்றொரு பக்கத்திற்கு ஓட்டு கொடுப்பதுமாகவே இருந்து வந்தது.

இதிலிருந்து பார்ப்பனர் ஆதிகத்திற்கு ஏதாவது கொஞ்சம் ஆட்டம் வருவதாயிருந்தாலும் எல்லோரும் ஒன்று சேர்ந்துக் கொள்வ தன் மூலம், பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதாரின் அடிமைத்தனத்தை விலக்குவதில் எதிரிகளாயிருக்கிறார்கள் என்பதும் விளக்குவதற்காகவே இவைகளை இங்கு எடுத்து சொல்லப்பட்டது.

இந்த மசோதா விவாத விஷயத்தில் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்களான கனவான்கள் திவான் பஹதூர் எம். கிருஷ்ண நாயர்,
சர்.கே.வி.ரெட்டி, ஸ்ரீமான் நரசிம்மராஜூ முதலியவர்கள் நடந்து கொண்ட உறுதியும் பார்ப்பனர்களுக்கும் அவர்களுடைய அதி காரங்களுக்கும் கொஞ்சமும் பயப்படாமல் அவர்களின் திருட்டுத்தனத்தை தைரியமாய் வெளியிட்டுக் கண்டித்த வீர மொழிக ளும் தங்க நீர் துவைத்த எழுத்துக்களால் அச்சடித்து கண்ணாடிக்குள் சட்டம் போட்டு வைக்கத்தக்க சொற்களாகவே ஜொலிக் கின்றன.

இனியும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கு இதுபோலவே அநேக மசோதாக்கள் கொண்டு வரவேண்டியி ருக்கிறது. அவற்றிற்கெல்லாம் அனுகூலம் செய்யப்பட வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார்களையே சட்டசபைக்கு அனுப்பினா ல்தான் முடியும். அரசியல் சம்மந்தமாக சட்டசபையில் ஒரு காரியமும் செய்து கொள்ள முடியவே முடியாது. பார்ப்பனர்களின் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்குத்தான் சட்டசபையைக் கொஞ்சம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதுவும் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள் தெரிந்தெடுக்கப் பட்டால்தான் முடியுமே அல்லாமல், பார்ப்பனப் பத்திரிகைகளின் மோகப் பிரசாரத்தில் மயங்கியோ அவர்களின் ஆசை வார்த்தையில் ஏமாந்தோ இன்று அவர்களுக்கு ஓட்டுக் கொடுத்துவிட்டால், நாளை க்கு அப்பா என்றாலும் வராது சாமி என்றாலும் வராது. காரியம் ஆனவுடன் நம் தலையிலேயே காலை வைக்க வந்து விடுவார் கள். உதாரணமாக, ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு பனகால் ராஜா ஜில்லா போர்டு மெம்பர் பதவி கொடுத்த மூன் றாம் நாளே ராஜாவுக்கு விரோதமாய் அவரின் விரோதிகளுடன் சேர்ந்து கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஓட்டுக் கொடுத்ததை எல்லோரும் பார்க்கவில்லையா? ஆதலால் நம்மிடம் காரியம் ஆகும் வரையில் நமது நம்பிக்கைக்குப் பாடுபடப் போவதாகவே சொல்லுவார்கள். காரியம் ஆனவுடன் நம்மை எந்த ஊர் என்று கேட்பதோடு தங்கள் ஜாதி நலனுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும்தான் நாம் செய்து வைத்த வேலையை உபயோகப் படுத்திக் கொள்வார்கள். ஆதலால் வரப்போகும் தேர்தல் களில் ஏமாந்து போகாமல் ஒவ்வொரு ஓட்டாரும் தங்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டுகிறோம்.

(குடிஅரசு வார இதழ் / 18.07.1926)

இவ்வார சட்டசபையில் நமது பார்ப்பனர்கள் கடும் சூழ்ச்சிகளுக்கிடையில் மலையாளக் குடிவார மசோதா சட்டமாக்கப்பட்டு விட்டது. இனி மலையாளத்தில் உள்ள பார்ப்பன ஆட்சிக்கு இதன் மூலம் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதையும் சந்தோஷத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(குடிஅரசு வார இதழ் / 05.09.1926)

************

கட்டுரைத் தேர்வு /வடிவம் /தட்டச்சு: தாஜ்.
நன்றி: பெரியாரின் எழுத்தும் பேச்சும் /
குடி அரசு – 1926 (இரண்டாம் பகுதி) /
தொகுப்பு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation