மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ஹமீது ஜாஃபர்.


திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம் வெளியிட்ட திரு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்களை ஓரங்கட்டும் போக்கையும், ஆணாதிக்கத்தன்மையையும், வஹாபியிஸ அடிப்படை வாதத்தின் பாதிப்பையும் எதிர்த்து புரட்சி செய்துக்கொண்டிருக்கும் திருமதி ஆஸரா நொமானி பங்கேற்கும் 16 மற்றும் 18 தேதி நிகழ்ச்சிகளை வரவேற்காமல் இருக்கமுடியாது.

எத்தனை காலத்திற்கு ஆண்கள் பின்னால் தனி இடத்தில் நின்று தொழுவது ? நாங்கள் என்ன அடிமைகளா ? இல்லை பிள்ளை பெறும் எந்திரங்களா ? போதும் பதிநான்கு நூற்றாண்டுகள் பட்ட அவதி. எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. இனி நாங்கள் முன் நின்று தொழுகை நடத்துவோம், எங்களுக்குப் பின்னால் ஆண்கள் நிற்கட்டும் என வீறுகொண்டு வேங்கை என சீறி வரும் மாதர்குல மாணிக்கங்களை வருக! வருக!! வரவேற்போம்.

நடக்கவிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின்மூலம் உலக இஸ்லாமிய பெண்களுக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்படப்போவதை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. மகிழ்ச்சியில் வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன.

அதற்குமுன் சில வார்த்தைகள்….

எந்த ஒரு காரியத்தையும் சொல்வது சுலபம். அதை செய்யும்போதுதான் அதன் தன்மை, இடர்பாடு, பொருப்பு, சிரமம், பலன்கள் புரியும். அதேபோல் எந்த ஒரு காரியத்தையும் எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கென்று சில தகுதியும் வலிமையும் வேண்டும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆணுக்கும் பெண்ணிற்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அதன் அடிப்படையில் பெண்களுக்கு இஸ்லாத்தில் சில காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் ‘இமாமத் ‘ என்று அழைக்கப்படும் முன் நின்று தொழ வைப்பதுவும் ஒன்று.

ஆணும் பெண்ணும் ஐந்து நேரம் தொழவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை, ஒரு நேர தொழுகையை விட நேர்ந்தால் அடுத்த நேர தொழுகையின்போது விட்டத்தொழுகையை நிறைவேற்றவேண்டும் என்பது சட்டம். ஆனால் உபாதையுள்ள அந்த ஆறு நாட்களிலும், பிரசவ காலங்களிலும் விடுபடும் தொழுகையை பின்பு நிறைவேற்றவேண்டும் என்ற சட்டம் பெண்களுக்கு இல்லை. இத்தகைய இயற்கை அமைப்பு பெண்களுக்கு அமைந்திருப்பதாலும் இமாமத் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் மட்டும்தானா ? மற்ற மதங்களில் இல்லையா…. ?

இஸ்லாத்தில் மட்டும் இந்த தடையா ? மற்ற மதங்களில்… ஏன் இந்து மதத்தில் அர்ச்சகர்களாகவோ பூசாரிகளாகவோ பெண்கள் எந்த கோவிலிலாவது இருக்கிறார்களா ? ஏன், கற்பகிரஹத்துக்குள் பெண்கள் செல்ல முடியுமா ? அங்கு செல்ல அனுமதி கிடையாதே! பெண் தெய்வமாகிய மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி அல்லது மாரியம்மனாக இருந்தாலும் சரி அபிஷேகம் செய்யவும் அலங்காரம் செய்யவும் ஆண்களுக்கே அனுமதி உண்டு. பெண் தெய்வம், நாங்கள்தான் செய்வோம் என்று எந்த பெண்ணும் குரல் எழுப்ப முடியாது.

இந்து மதத்தில் இப்படி என்றால் கிருஸ்துவ மதத்தில் ஒரு பெண் பாதிரியாரையோ, ஒரு பெண் பிஷப்பையோ காட்டமுடியுமா ? அது எவாஞ்சலிக்களாகட்டும் பெந்தகொஸ்தேயாகட்டும் அல்லது மார்த்தோமாவாகட்டும், ஜாக்கோபைட்டாகட்டும் அல்லது ரோமன் கத்தோலிக்காகட்டும் சிரியன் கத்தோலிக்காகட்டும் எந்த பிரிவிலாவது காட்டமுடியுமா ?

அப்படியானால் இந்து மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பால் வேற்றுமை காட்டப்படுகிறதா ? இல்லை பெண்கள் அடக்கியாளப்பட்டு ஆணாதிக்கம் ஓங்கி நிற்கிறதா ? இல்லை பெண்கள் அடிமைப் படுத்தப்படுகிறார்களா ? இல்லையில்லை, அங்கேயெல்லாம் கிடையாது இஸ்லாத்தில் மட்டும்தான் பெண்கள் வேற்றுமைப் படுத்தப்படுகிறார்கள்.

அறிவின் ஆணவம் ஆஸ்ரா நொமானியின் கண்ணை மறைத்திருக்கிறது, பட்ட பிறகுதான் ஞானம் பிறக்கும். யாராவது எங்கேயாவது இஸ்லாத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் போதும் திரு. ஆசாரகீனனுக்கு அல்வா தின்பதுபோலாகிவிடும். உடனே வஹாபியையும் இடது சாரியையும் கூடவே மவுண்ட் ரோடு மா(ஒ)வையும் மென்று துப்புவது பழக்கமாகிவிட்டது. இதில் அவருக்கு சந்தோஷம் இருக்குமென்றால் அதை கெடுக்க நான் விரும்பவில்லை. நன்றாகவே மென்று துப்பட்டும். இதிலாவது அவரது மனம் அமைதி பெறட்டும், வாழ்த்துக்கள்!

இவண்,

ஹமீது ஜாஃபர்.

email: maraicar@emirates.net.ae

Series Navigation