மறுபிறவி

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ரம்யா நாகேஸ்வரன்


“நான் யாருக்குமே உபயோகம் இல்லாதவன்.” மீண்டும் அதே எண்ணம். எப்பொழுதாவது தோன்றும் எண்ணம் தான். ஆட்குறைப்பு காரணமாக இன்னும் மூன்று மாதத்தில் வேலை போய்விடப் போகிறது. இது தெரிந்த இந்த இரண்டு வாரமாக எத்தனை தடவை துரத்தினாலும் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறதே இந்த எண்ணம்! எதில் மனத்தை செலுத்தினாலும் இது தான் மேலோங்கி நிற்கிறது.

நான் கிட்டதட்ட நாற்பது வயது நிரம்பிய துரைசாமி த/பெ கண்ணப்பன். “உன்னை துரை போல் வளர்க வேண்டும் என்று தான் இந்த பெயரை வைச்சேன்’” என்று அம்மா சொன்னது நினைவிலே இருக்கு. சின்ன வயதிலேயே அப்பாவின் மரணத்திற்கு பிறகு அந்த ஆசை வெறும் கனவாக மட்டுமே போனது. எனக்கு சுமார் பதினோரு வயதாக இருக்கும் பொழுது அம்மாவின் உடல் நலமும் மோசமாகி விட்டது. அடுக்கு மாடி கட்டங்களில் துப்புறவுத் தொழில் செய்து என்னை காப்பாற்றி வந்தாள். அவளின் உடல் நிலை அத்தனை வருடம் தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம்! அம்மா தன் கூடப் பிறந்த சகோதரரிடம் என்னை ஒப்படைத்து விட்டு உடனே தன் வேலை முடிந்து விட்டது என்பது போல் இறந்து விட்டாள். மாமாவுக்கும் கஷ்ட வாழ்க்கை தான். ஆனால் நல்ல மனம். தன் இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து என்னையும் ஏதோ வளர்த்தார், படிக்கவைத்தார். மூன்று வேளை வெறும் சோறாவது கிடைத்தது. மாமா நல்லவர்தான் என்றாலும் அவரின் மகன் மற்றும் மகளுக்கு நான் வந்தது அவ்வளவாக பிடிக்கவில்லை. அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதேல்லாம் என்னை அவமானப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. இதனால் இயல்பாகவே அமைந்த என் கூச்ச சுபாவம் மற்றும் தாழ்வு மனப்பான்மை மேலும் வலுவானது. மற்றவரைச் சார்ந்து வாழ்கிறோமே என்று மனம் மிகவும் வேதனையில் ஆழ்ந்தது.

உயர் நிலை கல்விக்கு மேல் மாமாவால் படிக்க வைக்க முடியவில்லை. நானும் ஏதோ சுமாராக படித்து எப்படியோ பள்ளி படிப்பை நிறைவு செய்தேன். அதற்கு பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனர் வேலை தேடிக் கொண்டேன். முதலாளிக்கு கார் ஓட்டுவது தான் வேலை. அவர் ஒரு அமேரிக்கர். அதிக பேச்சு வார்த்தையே கிடையாது. அது எனக்கு வசதியாகத்தான் இருந்தது.

மறுபிறவி

மாமா முன் நின்று எனக்கு ஒரு திருமணத்தையும் நடத்தி வைத்தார். டாங்க் ரோடு தண்டாயுதபாணி கோயிலில் சிக்கனமாக நடந்தது. லதா என்னை விட சற்று வசதியான வீட்டிலிருந்து வந்தாள். அவள் பிடிவாத குணத்தை நன்கு அறிந்ததால் அவள் தந்தை அமைதியானவனாக தெரிந்த நான் சரியான ஜோடி என்று நினைத்தார். எனக்கு குடும்பம் என்று பெரிதாக யாரும் இல்லாததால் இஷ்டப்படி தன் வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் என்று என்னைத் தேர்ந்தேடுத்தாள் லதா.

சந்தோஷமாகத் தான் புது வாழ்வைத் தொடங்கினோம். விலைவாசி ஏற ஏற சம்பளத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லாததால் வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டே வந்தது. தன்னம்பிக்கை இல்லாத என் போன்றவர்கள் இந்தப் பொருளாதார வீழ்ச்சிக் காலத்தின் பகடைக் காய்கள். மாதக் கடைசியில் கடன், வருடத்திற்கு இரண்டே இரண்டு புது புடவைகள், எப்பொழுதாவது சென்டோஸா அல்லது சிராங்கூன் சாலையில் உண்ண செல்வது போன்ற யதார்த்தங்கள் பழகிவிட்டன.

குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைத்து ஒரு மூன்று வருடங்கள் காத்திருந்தேன். இந்த சமூகத்தில் பொருளாதாரரீதியாக ஒரு அங்கீகாரமும் இல்லாத லதாவிற்கு ஒரு தாய் என்ற அந்தஸ்த்தும் இல்லாதது பெரிய அவமானமாக இருந்தது. ஏற்கனவே முன் கோபக்காரியான அவள் “நீங்க எதுக்கும் லாயக்கு இல்லை!” என்று குத்திக் காட்ட ஆரம்பித்தாள். அந்த வலியை போக்கும் விதத்தில் குமரன் பிறந்தான்.

சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களை சந்தித்ததால் எனக்கு நிறைய யோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களும் அதிகம் இல்லாததால் நான் பல புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். மெதுவாக நானே என்னைச் சுற்றி ஒரு சிறு வேலியைப் போட்டுக் கொண்டேன். யோசித்து பார்த்ததில் என்னிடம் ஒரே நாளில் இருபது பேர் பேசியது என் திருமண நாளில் மட்டும் தான் என்று தோன்றியது. இப்பொழுதேல்லாம் ஏதாவது தெரிந்தவர் வீட்டு விருந்துகளுக்கு சென்றால் மூன்று, நான்கு பேர் நலமா என்கிறார்கள். பதில் சொல்வதற்கு முன் சென்று விடுகிறார்கள் அல்லது பார்வை அலை பாய்கிறது. யாருக்குமே நான் முக்கியம் இல்லை என்ற எண்ணம் பலப்பட இதுவும் ஒரு காரணம்.

மறுபிறவி

வயது ஏற ஏற, உலகத்தின் நடக்கும் விஷயங்கள் ஒரு விதமான பயத்தையும், ஆயாசத்தையும் தந்தன. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்த்தாலே எனக்கு மனச் சோர்வு ஏற்பட்டது. இந்த உலகத்தில் என்னுடைய பங்கு தான் என்ன ? நான் எவ்வளவு சிறியவன். ஏன் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் சிறியவர்கள் தான் இல்லையா ? பொருளாதார பலம் கொண்டவர்கள் இல்லாதவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்திகிறார்கள். நாடுகளுக்கும் இது பொருந்துகிறது. அல்லது ஆயுத பலம் உள்ளவன் கை ஓங்கியிருக்கிறது. எவ்வளவோ நல்லவர்கள் பல நாடுகளில் இயற்கையின் கோபத்தாலோ அல்லது மத வன்முறைச் சக்திகளாலோ கஷ்டப் படுகிறார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு கவலையும் இல்லாமல் அல்ப விஷயங்களை பெரிது படுத்துவது, ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கு உற்றார் உறவினரிடம் சண்டை போடுவது போன்றவை என்னை பாதிக்கின்றன. மற்றவர்களிடம் கனிவாக பழகுவது குறைந்து சுயநலம் ஓங்கி இருக்கும் இந்தக் காலத்தில் என்னால் ஒட்ட முடியவில்லை.

எதை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது ? நம் வேலையையா ? என்ன உழைத்தாலும் திடாரென்று போய் விடுகிறதே ? நம் உடல் நலம் ? ஸார்ஸ் போன்ற திடார் நோய்கள் தோன்றுகின்றதே ? நம் குடும்பத்தின் பாதுகாப்பு ? இப்பொழுதேல்லாம் என்ன செய்தி வருகிறதோ இல்லையோ தீவிரவாத தாக்குதல்கள் நடக்காத நாள் உண்டா ? ஆக மொத்தம் எது நம் கையில் உள்ளது ? எதுவுமே நம் கையில் இல்லை என்ற உண்மையைத் தவிர! ஏதோ தன்னால் தான் இந்த உலகம் இந்த மட்டும் சுழன்று கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்களை பார்த்தால் சில சமயம் சிரிப்புத் தான் வந்தது.

லதா தன் தேவைகள் பற்றி மிகத் தெளிவாக இருப்பவள். அவளுக்கு வேண்டியதெல்லாம் ஹனீபா கடையில் நான்கு பட்டுப் புடவைகள், முஸ்தபாவில் ஒரு பத்து சவரன் நகை, மற்றும் ஒரு சொந்த மூன்றறை அறை குடியிருப்பு. இது தான் அவள் வாழ்க்கையின் லட்சியம். தன் கையாலாகாத கணவனால் இந்த வாழ் நாளில் இதையெல்லாம் நிறைவேற்ற முடியாது என்று திட்ட வட்டமாக தெரிந்து வைத்திருப்பவள். அவளுக்கு உலகில் நடக்கும் பெரிய விஷயங்களை பற்றியேல்லாம் கவலை இல்லை. அவை தன் வாழ்க்கைக்கு தேவை இல்லாதவை என்ற எண்ணம். ஒரு விதத்தில் அது நல்லது தான். அப்பொழுதானே இந்த வாழ்க்கை சற்று சுவாரஸ்யமாக இருக்கும். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அவள் அக்கா பெண்ணின் திருமணத்திற்கு யாரிடம் நகை இரவல் கேட்கலாம் என்பது தான் அவளுடைய தற்போதைய மிகப் பெரிய கவலை. ஏதோ கடமைக்காகத் தான் என்னோடு

மறுபிறவி

வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இப்பொழுதேல்லாம் இருவரும் அதிகம் பேசிக் கொள்வது

கூட கிடையாது. இத்தனைக்கும் வேலை போகப் போவது பற்றி இன்னும் அவளிடம் சொல்ல தைரியம் வரவில்லை. அது தெரிந்தால் இன்னும் எந்த விதமான மரியாதை கிடைக்குமோ ?

ஒரு வேளை நான் இறந்து விட்டால் எல்லோரும் என்ன பேசிக் கொள்வார்கள் என்று யோசித்தேன். லதா நிச்சயமாக இரண்டு நாட்களாவது அழுவாள். பிறகு குமரனை அழைத்துக் கொண்டு தன் அப்பா வீட்டிற்குச் சென்று விடுவாள். ஒரளவு வசதியானவர்கள் என்பதால் சாப்பாட்டுக்கு கஷ்டம் இருக்காது. குமரனுக்கு பெரிதாக எதுவும் புரியும் வயதில்லை. காலையில் ஏழு மணிக்கு புறப்பட்டு மாலை எட்டு மணிக்கு திரும்பி ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் மட்டுமே வீட்டில் இருக்கும் அப்பா. எது கேட்டாலும் “அடுத்த மாதம் வாங்கலாம்பா” என்று பதில் அளிக்கும் அப்பா. அதிகம் பேசாத அப்பா. இப்படிபட்ட அப்பா இல்லாமல் போவது ஒரு பெரிய இழப்பா என்ன ? வேலை செய்யும் இடத்தில் பல பேருக்கு நான் யார் என்றே தெரியாது. தெரிந்த இரண்டோருவர் “ஐயோ பாவம்! நல்ல ஆளு! சரி, இன்னிக்கு எங்கே மக்கான் ?” எனலாம். தமிழ் முரசில் ஒரு சிறு போட்டோ வரலாம் மாமனார் மனது வைத்தால். குடியிருப்பில் உள்ள பெண்கள் கீழே கூடும் பொழுது எனக்காக இரண்டு நிமிடங்கள் ஒதுக்கலாம். “என்ன வியாதியோ தெரியலை.. பாவம் லதா.. நல்ல வேளை குமரன் ஒரே மகனா போய்ட்டான்..” என்று பேசியபடி “நேத்து ராத்திரி கோலங்கள் பார்த்தியா ? நான் தூங்கியே போய்ட்டேன்லா. ஆனாலும் இந்த அபி ரொம்ப பாவம் இல்லை… ” என்பார்கள். மாமா உண்மையாக வருத்தப்படுவார். ஆனால் மாமியின் மறைவிற்கு பிறகு அவரே மகனைப் பிரிந்து நாராயணா முதியோர் இல்லத்தில் இருக்கிறார். ஆக மொத்தம் என்னுடைய நாற்பது ஆண்டு வாழ்க்கை கிட்ட தட்ட பதினாங்கு ஆட்களால் லேசாக அலசப் பட்டு முடிந்து போய்விடும். என்ன ஒரு சராசரிக்கும் கீழான வாழ்க்கை ? கழிவிரக்கத்தால் லேசாக கண்ணீர் கசிந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட எண்ணங்கள் ? ஓரு வேளை இந்த எண்ணத்தை நிறைவேற்றினால்…. ? “சே!” தலையை உதறிக் கொண்டேன். மாமாவை ஒரு முறை பார்த்து விட்டு வந்தால் என்ன ? பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

“வா துரை! இப்பவாவது இந்த கிழவன் ஞாபகம் வந்ததே,” என்றார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வந்தார் ஒரு சீன முதியவர்.

மறுபிறவி

“குட் மார்னிங் செல்!” என்றார் விளையாட்டாக செல்லப்பன் என்ற மாமாவின் பெயரைச் சுருக்கி! என்னை பார்த்து, “ஹவ் ஆர் யூ யங் மேன் ?” என்றார். அவரின் சிறிய கண்கள் முகம் முழுக்க நிறைந்த சிரிப்பால் மேலும் சின்னதாயின. ஆனால் அதில் வழிந்தோடிய சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் நன்றாக உணர முடிந்தது.

“என்ன செல், உன் பாட்டரிகளை சார்ஜ் பண்ணிவிட்டாயா ?” என்று ஆங்கிலத்தில் கேட்டபடி சிறிது நேரம் பேசி விட்டு அடுத்த ஆளைப் பார்க்கப் போனார். மாமாவும் சிரித்த முகத்தோடு அவரிடம் உரையாடிவிட்டு என்னிடம் சொன்னார் “இதோ இந்த செங் தான் எங்கள் அனைவரின் உற்சாக ஊற்று. இவருக்கு எழுபத்தைந்து வயது. இந்த விடுதிக்கு வந்து எட்டு மாதமாகிறது. ஒரு நாள் கூட சிரிப்பு மாறவே இல்லை. புற்று நோய் மெதுவாக அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அவருக்காக செலவழிக்க முடியவில்லை என்று சாக்கு சொல்லி குடும்பத்தினர் அவரைக் கைவிட்டு இங்கே சேர்த்துவிட்டார்கள். தான் உயிருடன் இருக்கும் வரை தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் மற்றவரையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே லட்சியம் தான் செங்கிற்கு!” என்று பேசிக் கொண்டே போனார் மாமா.

என்னை யாரோ கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. பேச்சற்று செங்கை ஒரு சில நிமிடங்கள் கவனித்தேன். எல்லோரிடம் சிரித்த முகத்தோடு ஏதோ உரையாடினார். ஒரு பாட்டியிடம் ஏதோ சொல்ல, அந்த பாட்டி வெட்கத்தோடு சிரித்தது கவிதை போல் இருந்தது. தன்னிடம் முகம் கொடுத்து பேசாதவர்களிடம் கூட ஓரிரு வார்த்தைகள் சொல்லி விட்டுத் தான் நகர்ந்தார். வேகமாக சென்று செங்கின் கையைப் பற்றி ஒரு முறை குலுக்கினேன். எது நம் கையில் இருக்கிறது என்று நினைத்தேனே! ‘உன் உற்சாகம், உன் வாழ்வில் நீ என்ன செய்கிறாய் மற்றும் மற்றவருக்கு என்ன செய்கிறாய் என்பது உன் கையில் தானே’ என்று புரிய வைத்த செங் என்னுடைய போதி மரமாக எனக்கு காட்சி அளித்தார்.

“அடிக்கடி உங்களை வந்து பார்க்கறேன் மாமா” என்று சொல்லி விட்டு, மறுபடியும் பிறந்தது போல் உணர்ந்த்து உலகை நோக்கி நடந்து சென்றேன் நான் துரைசாமி த/பெ கண்ணப்பன்.

**

consolation prize in a contest held by Singapore Tamil Writer ‘s Association in April 2004

**

ramyanags@hotmail.com

Series Navigation