மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘ஆம் ‘ என்கிறது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியதோர் ஆய்வு 265 இந்திய ஆண்களின் மரபணுக்களில் சில அடையாளத் தொடர்களை ஆய்ந்த பின் இவ்வாராய்ச்சி முடிவுகள் குறித்து பின்வருமாறு கூறினார், ‘(Y க்ரோமோஸோம் மரபணு அடையாளத் தொடர்களை பொறுத்தவரை) மேல்ஜாதியினர் ஐரோப்பியர்களுக்கு அருகிலும், மத்திய ஜாதியினர் ஐரோப்பிய/ஆசிய இனத்தவருக்கு சமதுரெங்களிலும், கீழ் ஜாதியினர் ஆசிய இனத்துக்கு மிக அருகிலும் இருப்பதைக் காண முடிகிறது. ‘

டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் இராபர்ட் ஹார்ட்க்ரேவ் இம்முடிவுகள் ஆரிய இன படையெடுப்புக் கோட்பாட்டினை உறுதி செய்யும் ஆதாரமாக அமைவதாக கூறுகிறார். இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரசுரித்த மேற்கத்திய பிரபல பத்திரிகைகள் பலவும் அவ்வாறே கூறின1.

ஆனால் இந்திய சமுதாய அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மற்றும் புள்ளியியலாளர்கள் இந்த ஆய்வின் நம்பகத்தன்மையையும் அது பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் முறைமையையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள பல ஆழமும் விரிவும் அதிகமான பல இந்திய மக்கள் தொகை மரபியல் ஆய்வுகளின் முடிவுகளும் இவ்வாய்வின் அடிப்படைகளை ஐயத்திற்குரியதாக்குகின்றன. மென் அறிவியலான மானுடவியலின் பதங்களை கடும் அறிவியலான மரபணுவியலின் பதங்களுடன் இணைப்பது மிகவும் மடத்தனமான அதையும் விட மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இந்த ஆய்வு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சிறு பூகோளப் பிரதேசத்தில், மிகச்சிறிய மாதிரி அளவுகளுடன் மேற்கொள்ளப்பட்டது.

ஜாதியையும் இனத்தையும் முடிச்சு போடும் யுடா பல்கலைக் கழக ஆய்வு முடிவுகள் முழுமையானவையல்ல. அதிகபட்சம் அது ஒரு குறிப்பிட்ட இடத்தின் சில ஜாதிகளில் ஒரு சில மரபணுத் தன்மைகளை வெளிப்படுத்துவதாக மட்டுமே அமையமுடியும் என கூறலாம். 1 பில்லியன் மக்களை தன்னகத்தே கொண்ட சாதிய சமுதாய அமைப்புகளின் மரபணு இயற்கையை அறிய 265 மாதிரிகளைக் கொண்ட ஒரு ஆய்வு எவ்வளவு உதவ முடியும் ? ( சில சாதி பிரிவுகளின் மாதிரி அளவு வெறும்10! ) இந்திய புள்ளியியல் நிறுவனத்தைச்சார்ந்த பார்த்தா மஜும்தார் இவ்வாராய்வின் இத்தகைய பல தவறான போக்குகளை சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் ‘கீழ் ஜாதி ‘ ‘மேல் ஜாதி ‘ என பிரிக்கும் முறை வரலாற்றறிவியல் சார்ந்ததல்ல, இன்றைய சமுதாய நிலைச்சார்ந்தது. (பல ‘கீழ் ஜாதியினர் ‘ ஷத்திரிய வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என அம்பேத்கர் கூறுவது இங்கு நினைவு

கொள்ளத் தக்கது.) வேறுபட்ட வர்ணங்களைச் சார்ந்த பல தொழில் குழு ஜாதிகள் வேறுபட்ட பிராந்திய சமூகக் காரணிகளின் அடிப்படையில் அச்சமுதாய அமைப்பில்

வெவ்வேறு உயரங்களில் விளங்குகின்றன. இந்நிலையில் ‘மேல் ஜாதி ‘ ‘கீழ் ஜாதி ‘ பாகுபாடுகளில் இனத்தன்மையைக் காண விழைவது தவறான முடிவுகளுக்கு வரவே

வழி வகுக்கும் என்பதும் இந்த ஆய்வின் மற்றொரு பிரச்சனை. எனவே இந்த ஆய்வு எவ்விதத்திலும் முடிவானதென்றோ அல்லது இந்தியா முழுமைக்கும் பொருந்துவதென்றோ கூற முடியாது என்கிறார் மஜும்தார்2. சர்ச்சைக்கிடமற்று அறிவியல் உலகால் ஏற்கப்பட்ட இந்திய மக்கட்தொகை சார்ந்த மரபியல் ஆய்வு முடிவுகள் ஆரிய இன மற்றும் படை

யெடுப்புக் கோட்பாட்டினை மறுதலிக்கின்றன. இந்த ஆய்வினைக் காட்டிலும் அதிகமான மாதிரி அளவுகளுடன் மேற்கொள்ளப்பட்ட மரபியல் ஆய்வொன்று வட இந்தியர்களுக்கு மரபியல் ரீதியாக தென்னியந்தியர்களுடனான ஒற்றுமை வட இந்தியர்களுக்கு ஈரானியர்களுடனான ஒற்றுமையைக் காட்டிலும் அதிகமானதென்று கூறுகின்றது3.

யுடா பல்கலைக்கழக ஆய்வு கூறும் மரபணுக் கலப்புகள் எப்போது ஏற்பட்டன என்பதும் கால ஓட்டத்தில் கணிக்கப்பட முடியாத ஒன்று. எனவே இந்த ஆய்வு முடிவு சற்றேறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கருதப்படும் ஆரிய படை யெடுப்பினை உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ள அப்படையெடுப்புக்கான அகழ்வாராய்வுச் சான்றுகள் போன்ற பல இணைப்புல சான்றுகள் கட்டாயமாக வேண்டும். அலெக்ஸாண்டர் கிறிஸ்டென்ஸன் மற்றும் பிரியன் இ. கெம்பில் தாம் மேற்கொண்ட பழம் உலகின் கலாச்சாரங்களின் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் மரபியல் ஒற்றுமைகளை ஆராய்ந்த பின் ஆரிய இன புலப்பெயர்வு கோட்பாட்டினைக்கூட நிராகரிக்கின்றனர்.

மொழியியலாளரான அஸ்கோ பர்போலா முன்வைக்கும் புலப்பெயர்வு கோட்பாடான கி.மு இரண்டாயிரங்களில் பாக்தீரியத்திலிருந்து சிந்து சமவெளிக்கு மக்கள் இடம்

பெயர்ந்தமைக்கானஎந்த சான்றுகளும் இல்லை என தம் ஆய்வுகள் நிறுவுவதாக அவர்கள் கருதுகின்றனர்4. நியூயார்க் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறையைச் சார்ந்த டிசோடெல் ஆரிய படையெடுப்பு/புலப் பெயர்வு குறித்து மரபணு ஆய்வுகளின் மூலம் நாம் பெற்றுள்ள தெளிவினை பின்வருமாறு கூறுகிறார், ‘…அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் 3000 அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் ஆரிய படை யெடுப்பு, கூறப்படுவது போல் நடந்த ஒன்றாக காட்டவில்லை. (அவ்வாறு நிகழ்ந்திருந்தால்) நிச்சயமாக அது (மரபியல் ரீதியாக) முக்கியத்துவமில்லாத ஒரு சம்பவமாகத்தான் தோன்றுகிறது. ‘5

இந்நிலையில் கேள்விக்குரிய அடிப்படையில், மிகச்சிறிய மாதிரி அளவுகளுடனானதோர் ஆய்வின் முதல் நிலை முடிவுகளின் அடிப்படையில் ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தின் சமுதாய அமைப்பினையும் அதன் தொல் வரலாற்றினையும் இனரீதியில் விளக்க மேற்கத்திய ஊடகங்களும் எவ்வித தயக்கமும்

இன்றி முன்வந்ததும் அதற்கு சில அறிவுலக ஆதரவு கூட இருந்ததும், அதிசயமானது. இதுதான் இந்திய சமுதாய யதார்த்தத்திலிருந்து முழுமையாக விலகி, காலனிய பார்வையிலிருந்து உருவான இந்தியவியலின் வெற்றி.

***

குறிப்புகள்:

1. அனில் ஆனந்தசுவாமி, ‘The origins of India ‘s rigid caste systems are confirmed by DNA tests ‘, நியூ ஸ்யிண்டிஸ்ட், Vol-170 , வெளியீடு 2291, 19/5/2001.

(மனித ஜீனோம் குறித்த ஆராய்ச்சி தாள்களில் இடம் பெறும் பாம்ஷாட்டின் ஆய்வின் அடிப்படையில் வெளிவந்த பொது அறிவியல் கட்டுரை இது. ஜீனோம் இணைய தளத்தில் ஆய்வுத்தாளினைக் காணலாம்.)

2. மஜூம்தார் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரை R.இராமச் சந்திரன், ‘ The genetics of caste ‘ , ப்ரண்ட்லைன், Vol-18 இதழ் 12, 09ெ22/6/2001.

3. லுயெியா கவேலி, ‘Genes, Peoples and Languages ‘ , சயிண்டிஃபிக் அமெரிக்கன், நவம்பர், 1991.

4. ஹெம்பில் & கிறிஸ்டென்ஸன், ‘The Oxus Civilization ..A nonெmetric analysis of Bronze age Bactrian biological affinities ‘, தெற்காசிய ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுத்தாள்கள், 3-5 நவம்பர், 1994.

5. டி.ஆர்.டிசொடெல், மானுடவியல் துறை, நியூயார்க் பல்கலைக்கழகம், ‘மானுட பரிணாமம் : ஆசியாவிற்கான தெற்கு பாதை ‘ கரண்ட் பயாலஜி, 1999, டிசம்பர் 16-30.

***

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்