மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

தீபச்செல்வன்



————————————————————————–
தீபச்செல்வன்

சவப்பெட்டியின் முகத்தோடிருக்கிற
சுவர் முட்டிய
அறைகளின் மூலையில்
எங்கோ இருப்பவர்களுக்காய்
தூவிய பூக்கள்
காய்ந்து குவிந்து கிடக்கின்றன.

நாளுக்கு ஒரு மாதிரியாய்
போர் வகுக்கிற வியூகங்களில்
சிக்கிக் கொண்டிருக்கிறது
நீ பிடித்துச் செல்லுகிற தெரு.

பூட்டி ஏற்றப்பட்ட தொழிற்சாலையில்
வாங்க முடியாத போன
கடைசி மாத சம்பளத்துடன்
மீண்டுமொரு மரத்திற்கு நகர்ந்தாய்

நம்மீது விழ்த்தப்போகும் குண்டுகளுக்கான
செலவு விபரங்களை
ஜனாதிபதி நமது மொழியில் வாசித்தபொழுது
மூட்டையின் அடியிலிருக்கும்
ஒரு ரூபாய் காசிலிருந்து
கர்ஜிக்கும் மிருகம் குண்டாக வெடிக்கிறது.

நம்மை போர்
துரத்திக்கொண்டேயிருக்கிறது
அதன் நீண்ட நகங்கள்
ஒடுங்கிய இரவினை கிழித்தெறிய
நீ மீண்டுமொரு கோயிலின்
தாழ்வாரத்தில் பதுங்குகிறாய்.

மிகவும் பச்சைக்காடுகள்
முழுவதுமாய் அழிய
தெருக்கள் புதைந்த மண்மேட்டினை
உடைத்து
வந்த படைகள் அக்கராயன் குளத்தை
குடித்தபொழுது
எனது கைகளும் கூடவே ஈரமாகின.

ஒரு முறை நம்முடன் பலர் ஒதுங்கிய
பள்ளிக்கூடத்தின் கூரைகளை
கைப்பற்றிய பிறகும்
அம்பலப்பெருமாள் சந்தியிலிருந்து
மிகவும் நிலத்துக்கான
பசியோடு பற்கள் முளைத்த கொடி பறக்கிறது.

இரண்டு போராளிகளின்
சேறு ஊறிய உடல்களுடன்
கைப்பற்றப்பட்ட பதுங்குகுழியில்
இடம்பெயர மனதின்றி
இன்னும் யாரோ தங்கியிருக்கிறார்கள்.

நம்மைப் போர் விடுவதாயில்லை
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருக்கிறது
எனது கனவுகளையும் தெருக்களையும்
தின்றுவிட்டு
உன்னை மரங்களின் கீழாய்
பின் வாங்க வைக்கிறது
நிலங்களை துண்டாடிவிட்டு
பசிக்கேற்ற முகங்களை அணிந்திருக்கிறது.

மீண்டும் இரவிரவாக வரப்போகும்
விமானங்களிடமிருந்து
தப்புவதற்காய் துடிக்கிற நாய்க்குட்டியைப்போல
மரம் உனக்கு மேலாய் பதறுகிறது.

நாளை நீ பேசப்போகும்
சொற்களை தேடியலைகிற கனவில்
இன்னும் நிறைய மரங்களுக்கு கீழாய்
அதனுடன் நீ பின்வாங்குவதைக் கண்டேன்.
————————————————————————————————————
08.11.2008 அம்மாவின் அழைப்பிற்காய் காத்திருந்த நாள்.

– (deebachelvan@gmail.com)

Series Navigation