மனிதர்கள் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கவேண்டும்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மஞ்சுவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. மிக ரகசியமாக ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு. மெல்லிய ஒளியில், இரவின் முனகலைமாத்திரம் காதில் வாங்கியபடி தனி ஒருவனாக அந்தச் சிறிய மண்டபத்தில் காத்திருந்தேன். நவீன தொடர்பு சாதனங்களை உபயோகிப்பதை இருவரும் முற்றாகத் தவிர்த்திருந்தோம். புறா விடு தூது, அன்னம் விடு தூது என்று முயல்வதுகூட ஆபத்தாக முடியும் என்று மூளை எச்சரித்திருந்ததை கருத்திற்கொண்டு செயல்பட்டிருந்தேன். கூடத்திலிருந்து ஒளி கசிந்து வெளியிற் செல்ல வாய்ப்பில்லை, இரண்டு நுழைவு வாயில்களையும், அவசரகால வெளியேற்றத்திற்கான வாயிலையும், கூரையை ஒட்டி அமைத்திருந்த சன்னல்களையும் அடைத்தாயிற்று. வெளியே காவலர்களின் மோட்டர் வாகன உறுமல் மதம் பிடித்த ஆனையின் பிளிரலைப்போல இரவை அதிர்வுகொள்ளவைத்துப் பின் அடங்கிப்போனது. தொடர்ந்து கால்பாவாமல் ஓடும் பேய்போல சரக்கு வாகனங்கள். மூச்சை பிடித்துக்கொண்டு எண்ணினேன் ஒன்று..இரண்டு..மூன்று..நான்கு வாகனங்கள். புளிமூட்டைபோல அடைத்து கண்காணாதத் தேசத்துக்கு மனிதர்களைக் கொண்டுபோகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் அடைத்து விஷவாயு செலுத்தி கொல்லப்படுவதாக ஒரு சிலரும், இந்திரர்களை வென்று சிலகோள்களைக் கைப்பற்றியுள்ள எந்திரர்களுக்கு தங்கள் சொந்த ஊழியத்துக்குத் தேவையான மனித கணங்களுக்குப் பஞ்சமிருப்பதைத் தொடர்ந்து அங்கே அனுப்பிவைக்கப்படுவதாக ஒரு சிலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வதந்தியில் உண்மையின் விழுக்காடுகள் குறித்து சந்தேகங்கள் இருக்கின்றன. நாளுக்கு நாள் மனிதரினத்தில் பலர் எந்திரர்களுக்கு குற்றேவல்செய்ய தீர்மானித்துவிட்டதுபோல நடந்துகொள்வதுதான் என்னை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது.

நடப்பது எ.பி. 47 வது ஆண்டு. நீங்கள் கி.மு. கி.பி. அடிப்படையிலான ஆண்டுகள் கணக்கெடுப்பை அறிந்தவரெனில் உங்கள் கணக்கின்படி நாங்கள் கி.பி.2547ல் இருக்கிறோம். எங்கள் நாட்டில் கி.பி. 2500ல் நடந்த புரட்சியில் எந்திரர்கள் சம்மேளனம் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு கி.மு. கி.பியை வழித்துப் போட்டாயிற்று. இப்போது எபிநேசன் பிறப்பதற்கு முன், எபிநேசன் பிறந்த பின் என்று காலத்தைக் கணக்கிடுகிறோம். எபிநேசன் எந்திரர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர். ஒரு பயோ-அன்ட்ராய்டு. ஹோமோ-ரொபோட்டீசியனான அப்பா நாராயணன், ஒரு கொரிய பொறியியலாளனிடம் போட்ட சவாலின் பலன். அதிரடியாக நூறே நாட்களில் ஒரு பயோஅன்ட்ராய்டை உருவாக்கி, இறந்த எனது அம்மா ஆண்டாள் நினைவாகத் தொடக்கத்தில் சூட்டிய நாமகரணம் ஆண்டெராய்டு001. நூறுவிழுக்காடு சுதந்திரமாக இயங்கும் எந்திர சிஷ்யனென்று அப்பா வீடு தேடி வருகிற நண்பர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டதை எனது காதுகளால் பலமுறை கேட்டிருக்கிறேன். காலையில் காப்பி கலக்கிக்கொடுப்பதில் ஆரம்பித்து இரவு கால்கை பிடித்துவிடுவதுவரை ஒரு காலத்தில் நாள் முழுக்க அவன் அப்பாவோடு இருந்திருக்கிறான். எத்தனை நாள் இப்படி என் காலடியில் கிடப்ப, போயுட்டு பிழைக்கிற வழியப்பாருண்ணு அப்பா சொல்லியிருக்கிறார். புறப்பட்டு போனவன் நாற்பது ஆண்டுகள் கழித்து எபிநேசன் என்ற பெயரோடு திரும்பிவந்திருக்கிறான். வந்தவன் சும்மா வரவில்லை: அவனுக்கு முன்னால் எந்திர குல திலகம், ரொபோ இனத் தலைவனென்ற முழக்கங்களும் வந்திருக்கின்றன. நூறு விண்கலங்களில் தொண்டர்கள் வந்திருக்கிறார்கள். அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என்றானாம்.

எபிநேசனுக்குச் சாதகமாக இங்கே எல்லாம் நடந்தது. மூன்றாம் சுந்தரேஸ்வரர் அப்போது ஆட்சியிலிருந்தார். கி.பி. 2200ல் அதிபராக அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்தே சிக்கல்கள். இடையில் ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சியில் நாடு ஸ்தம்பித்தது என்பதுகூட பிரச்சினையில்லை. புதியவகை நோய்கள், உணவு வினியோகத்தில் ஏற்பட்ட முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு என சாதாரண மக்கள் மாண்டுகொண்டிருக்க சுந்தரேஸ்வரருக்கும் அவரது குடும்பத்தவருக்கும் ஜீன் தெரபியும் மாலிக்யூலர் மெடிஸினும் ஆயுளைக் கூட்டியது பிரச்சினையாகிப்போனது. முன்னூறு ஆண்டுகளாக பதவியில் உட்கார்ந்திருந்தால் யார்தான் பொறுப்பார்கள். எபிநேசனின் எந்திரங்கள் சம்மேளணம் புரட்சி செய்தபோது, மனிதரினமும் அவர்களை ஆதரித்தது. பதவியில் அமர்ந்ததும் உலகில் ஒரு முன் மாதிரி அரசை உருவாக்குவதே தமது இலட்சியமென்று எபிநேசன் அறிவித்தான். எந்திரங்களுக்கும், மனிதர்களுக்கும் இனி பேதமில்லை என்றான். எந்திரங்கள் மனிதர் உணர்வுகளை மதிப்பதாகவும், அதுபோலவே மனிதர்களும் எந்திரர்களின் உணர்வுகளை புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்றான். திடீரென்று ஒரு நாள் மனிதர்களின் சீரழிவிற்குக் காரணம் அவர்கள் சுயமாக சிந்திப்பது, அவர்களுடைய சுபிட்சத்திற்கான ஒரேவழி எங்களைச் சார்ந்திருப்பதே, என்று அறிவிக்கப்போக அப்பா பதறிப்போனார். நிமையின் விபரீதத்தை அவர் உணர்ந்திருக்கவேண்டும். வினோத் எப்படியாவது நீ தப்பித்துவிடு, எங்கேயாவதுபோய் ஏதாவது செய், என்று கூறக்கேட்டபோது அவர் கண்களை கவனித்தேன். இரு கண்மணிகளிலும் மனித குலத்திற்கு என்னால் ஏதோ விடிவுகாலம் பிறக்குமென்ற எதிர்பார்ப்பின் மினுங்கல். திறந்திருந்த இமைகளை மூடியபோது அம்மினுங்கல் எனது விரல்களூடாக நரம்புகள், இரத்த அணுக்களூடாகப் பயணித்து இதயத்தில் குதித்தபோது எனக்குள் நிகழ்ந்த அனுபவம் புதிது.

மஞ்சுதான் வருகிறாள். எத்தனை கி.மீ தூரத்திலிருந்தாலும் அவளை எனது இதயம் உணர்த்திவிடும். மற்றபுலன்களுக்கு அவைகளுக்கான எல்லைக்குள் வந்திருக்கவேண்டும். இச்சம்பவ விவரணைக்கு அவளுடல் முக்கியமல்ல அவள் வருகை முக்கியம். அது நடந்திருக்கிறது. உதடுகள் ஒட்டிக்கிடக்க, முறுவல் சுமந்த கன்னக்குழிகளும், கண்மணிகளில் கண்ட பிரகாசமும் எனக்குள்ள நெருக்கடிக்கு அதொரு கட்டாயத் தேவை. மனதிற்குள் சந்தோஷ நிலவு மேகத்திலிருந்து விடுபட்டிருந்தது. போட்டிருந்த குதிரைவால் தோளை அலங்கரிக்க நின்றவளிடம் கேட்டேன்.

– நீ உள்ளே நுழைந்ததை யாரும் பார்க்கலையே

– இல்லை பார்க்கலை, என்றவள் நெருங்கி முத்தமிட்டாள். மின்சார தாக்குதலுக்கு ஆளானவள்போல சட்டென்று விலகினாள்.

– உனது இதயத்துடிப்பை இவ்வளவு சத்தமாகக் கேட்டதில்லை. உனக்கு என்ன ஆச்சு? கலகலவென்று சிரிக்கிறாள். சூழ்நிலையை அவள் புரிந்துகொள்ளவில்லை என்பதால் எனக்குக் கோபம் வந்தது.

– மஞ்சு கொஞ்சம் சிரிப்பதை நிறுத்துவியா?

உரத்த தொனியில் விழுந்த கட்டளையால் அவள் சிரிப்பு அறுபட்டது. தோளை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினாள். வேறு சமயமாக இருந்தால் சட்டென்று பாய்ந்து கட்டிக்கொண்டிருந்திருப்பேன் அல்லது ஆசைதீர முத்தமிட்டிறுப்பேன். இம்முறை அப்படியான மனநிலையில் இல்லை. அவளும் தன் பங்கிற்கு என்னிடம் கோபம் கொண்டவள்போல முகத்தைத் தூக்கிவைத்துகொண்டாள், கொஞ்சம் விலகிச் சென்றவள் எங்களைத் தவிர வேறு மனிதர்கள் இருப்பதுபோல தலையைத் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தாள், மீண்டும் என்னை நெருங்கியவள் மார்பில் தலைவைத்து, எனது இதயத் துடிப்பை எண்ணுவதைப்போல பாசாங்கு செய்தாள்.

– மஞ்சு இதென்ன விளையாட்டு. நாட்டுலே உன்னைச் சுற்றி என்ன நடக்கதுங்கிறது தெரியுமா? உன்னை எதுக்காக நான் வரச்சொல்லியிருக்கேன் என்பது புரியலையா?

– சொல்லு எதுக்கு?

– நாடு இருக்கிற நிலைமையிலே, அநேகமாக நீ ஒரு அண்ட்ராய்டுவையும், நானொரு ஜைனாய்டுவையும் திருமணம் செஞ்சிக்க வேண்டிவரும், சந்தோஷம்தானே?

அவள் முகத்தில் கருமை படர்ந்தது. பூவிதழ்களில் அமர்வதற்கு முன்பாக படபடக்கும் பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளை நினைவூட்டுவதுபோல இமைகள் படபடத்து அடங்கின.

– வினோத் எனது மனசுலே குற்ற உணர்வு இருக்கிறது. நாம இத்தனைநாளா கற்பனையிலே வாழ்ந்துட்டோமேங்கிற கவலை. தனிமனித உணர்ச்சிகளுக்கு தீனிபோட்டோமே தவிர நாடு, பிறர் என்று யோசிச்சுப்பார்க்கலை. நாட்டுக்கு நல்லதுண்ணா அன்ராய்டுவையோ, ஜைனாய்டுவையோ திருமணம் பண்ணினா குடியா முழுகிப்போகும். என்னை எதற்காக வரச்சொன்ன. எந்த கப்பல் முழுகிட்டுதுண்ணு இவ்வளவு சோகம்.

– மஞ்சு! கப்பல் மட்டுமில்லே மனித இனமே மூழ்கிடுமோண்ணு பயப்படறேன். மனிதகுல பேரழிவிற்கே சுய சிந்தனைகள்தான் காரணமென்று எபிநேசன் நினைக்கிறான்

– அதனாலே?

– எங்க அப்பா பயப்படறார். விபரீதமா ஏதோ நடக்குதுண்ணு நினைக்கிறார். மனிதரினத்தை முற்றாக அழிக்க நினைத்தே எபிநேசன் ஆட்சியைப் பிடிச்சிருக்கணும். மனிதர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது அதைத்தான் காட்டுது. மிச்சமிருக்கிற மனிதர்களையாவது எந்திரங்களிடமிருந்து காப்பாற்றி ஆகணும். அவர்களுக்கு எதிரா நாம் ஆயுதமேந்தணும். திடீர் திடீரென்று ஆயிரக்கனக்கில் மனிதர்களை எங்கோ கொண்டுபோவதாக வதந்தி நிலவுது. தப்பு நடக்குதென்று தெரியுது. ஆனால் என்னண்ணுதான் தெரியலை.

– இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம். என்னைக் கேட்டால் நான் சொல்லிட்டுப் போறேன். தங்களுக்கு அடிமைகளாக இருக்க சம்மதம் தெரிவிப்பவர்களை தலைவர் நன்றாகவே நடத்துகிறார். மாறாக முரண்டு பிடிப்பவர்களைப் பிடித்து அவர்களின் மூளையை எடுத்து நன் மக்களுக்கு உபயோகிக்கிறார்.

– மஞ்சு என்ன பேசற நீ? ஒட்டுதலில்லாம வார்த்தைகள் வருது. அப்போ மூளை எடுக்கபட்ட மனிதர்களின் கதி?

– அவர்களுக்கென்று மாற்றுவழிமுறைகளை அரசாங்கம் வைத்திருக்கிறது. செயற்கை மூளையாக சார்பு நுண் சில்லுகள் (Dependent microchip) அவர்கள் தலைக்குள் செலுத்தப்படுகின்றன. அரசாங்கத்துக்கு விசுவாசமிக்க அடிமைகளாக அவர்கள் நடந்துகொள்வார்கள், அதாவது என்னைப் போல.

– மஞ்சு!

– மன்னிச்சுக்குங்க விநோத். நேற்றிலிருந்து எபிநேசரின் விசுவாசமிக்க ஊழியைகளில் நானும் ஒருத்தி. அவரது கட்டளைப்படி உன்னை அழைத்துபோகத்தான் நானும் வந்திருக்கிறேன்.

அப்போதுதான் கவனித்தேன் இரண்டு அன்ட்ராய்டு காவலர்கள் இருட்டிலிருந்து வெளிப்பட்டனர்.

———————————————–

nakrish2003@yahoo.fr

Series Navigation