மனிதர்கள்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ராமசந்திரன் உஷா


பொதுவாய் பெண்களுக்கு இளகிய மனம் கொஞ்சம் அதிகம்தான்.நானும் யாராவது தங்கள் சோகத்தைசொன்னால் உருகி போய்விடுவேன். இப்படித்தான் எங்கள் குடியிருப்பு காவலாளிபாபு அவன் வாழும் வாழ்க்கை,படும்பாடு,ஊரில் அவன் குடும்பம் என்று ஏதாவது என்னைப் பார்க்கும்போது எல்லாம்சொல்வான். அவனுடைய எண்ணூறு திராம்ஸ் சம்பளத்தில்(இந்திய மதிப்பிற்கு பதிமூணால் பெருக்கவும்) அவன் சாப்பாடு,மற்ற தேவைகளையும் பார்த்துக்கொண்டு ஊருக்கு அப்படி என்னத்தை அனுப்ப முடியும் என்று அவனுக்காக நான் பரிதாபப் படுவேன்.

அவன் முகத்திலேயே சோகம் கவிந்திருப்பதாக என் மனதுக்கு தோன்றும். பத்து வருடம் ஆகிவிட்டதாம் அவன் துபாய்க்கு வந்து,ஆனால்இது வரை ஒரே முறைதான் சொந்த ஊருக்கு போயிருந்தானாம்.பணியில் இருப்பவர்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை லீவ்வும்,டிக்கெட்டும் தர வேண்டும்

என்று சட்டம் இருந்தாலும் நடைமுறையில் கடைபிடிக்கப் படுகிறதா என்பது கேள்விகுறிதான்.

பாபு தன் மகளுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கிறது என்றும் எப்படியும் இந்த முறை ஊருக்கு போயே ஆகவேண்டும் என்று முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பதாக சொன்னான். இரண்டு மாதம்லீவும்,அதற்கு சம்பளமும் தந்துவிட்டார்கள் என்றும் டிக்கெட்டுக்கு பணம் தரமறுக்கிறார்கள் என்று வருத்தப்பட்டான்.டிக்கெட் புக் செய்திருப்பதாக தானேசெலவு செய்தாவது ஊருக்கு கட்டாயம் போகப்போவதாகவும் சொன்னான்.ஏதோ என்னால் ஆனது

என் பங்கிற்கு நூறு திராம்ஸ் கொடுத்து என் கணவரிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்.

அன்று எனக்கு என் அப்பாவிடமிருந்து போன் வந்தது.என் தாத்தா அதாவது என்

அப்பாவுக்கு அப்பா சுவிகாரம்(தத்து) போனவர்.ஏராளமான நிலபுலன்களுக்கு

அதிபதி.இந்த தலைமுறையினர் ஆளுக்கு ஒரு நாட்டில் வசிப்பதால் எல்லாவற்றையும் விற்று விடலாம் முடிவெடுத்திருந்தோம்.அது சம்பந்தமாய் என்னுடைய கையெழுத்து தேவைபடுவதால் என்னை உடனே புறப்பட்டு வரச்சொன்னார்.லட்சகணக்கில் பணம் வரப்போவதால் என் கணவரும் எந்தமறுப்பும் சொல்லாமல் டிக்கெட் வாங்கி வந்து எள் என்றால் எண்ணையாக நின்றார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழக்கப்படி ஓரே ஆண்கள் கூட்டம்.சரியான நேரத்தில் திருச்சி போய் சேர்ந்தது. ஒரு வார பயணம் என்பதால் சிறிய பெட்டியும்,ஒரு பையும் தான்.சுலபமாய் வெளியே வந்துவிட்டேன்.

தம்பி காத்திருந்தான். ‘ ‘என்னடி எப்படி இருக்க! ‘என்றான்.

நானும், ‘ ஏண்டா! இப்படி நாளெரு மேனியாய் வளர்றே ? ‘ என்றேன்.

‘கண்ணு வெக்காதேடி ‘என்றான்.

இதே என் கணவர் என்னை வாடி,போடி என்றால் சும்மாய் இருப்பேனா என்று

நினைத்துக்கொண்டு, ‘உன் பொண்டாட்டியை இப்படிதான் வாடி,போடிம்மியா ‘

என்று கேட்டேன்.

‘ ‘வாய மூடிக்கிட்டு வா ‘ என்றவன், பெட்டியை தன்னுடைய ஸ்கூட்டரில் வைத்தான்.

‘அட பிசுநாரி! காரு கொண்டு வரல ? ‘ என்று கேட்டேன்.

‘ உங்க ஊரு நெனச்சியா! இங்க பெட்ரோல் என்ன வெல விக்குது!அதுவும் ஷார்ட் டிரிப் தானே,லக்கேஜ் கொஞ்சமா இருக்கும்னு தெரியும்.

பெட்டிய முன்னால வெச்சிக்கிறேன்,நீ பேக தோள்ல மாட்டிக்கோ ‘ என்றான்.

வண்டியை எடுக்கும் போது வேகமாய் ரெண்டு மாருதி வேன்கள் வந்து நின்றது.பெரியகும்பலே இறங்கியது.அப்பா,மாமா,சித்தப்பா,தம்பி என்று விதவிதமான கூப்பாடுகள். ‘எத்தினி ஜாமானுங்க! என்று வியக்கும் குரல்கள்.

போட்டோ பிளாஷ் மின்னியது.

திரும்பி பார்த்தால், ஸ்டைலாய் ஜெர்கினில், இடுப்பில்செல்போன்,கையிலும், கழுத்திலும் பட்டையாய் தங்கம் டாலடிக்க பாபு வந்துக்கொண்டு இருந்தான்.

ramachandranusha@rediffmail.com

UAE

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா