மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

ஸ்ரீகாந்த் மீனாட்சி


மதியிறுக்கம் எனப்படும் Autism ஒரு சிக்கலான, தீவிரமான நோய். அறிவியல் ரீதியான, உறுதியான, சிகிச்சை முறை இல்லாத நோய். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, பத்தாயிரத்தில் ஒன்று என்ற அளவிலிருந்து கடந்த பதினைந்து வருடங்களில் நூற்றி அறுபத்தியாறில் ஒன்று என்ற அளவில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படிக்கும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தால், உங்களுக்கு நெருக்கத்திலேயே ஒரு குடும்பம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதைக் கண்டறிவீர்கள் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை.

ஒரு குழந்தையிடம் இந்த நோய் கண்டறியப் படும் போது, அந்தக் குடும்பம் கடும் பாதிப்புக்குள்ளாகிறது. குழந்தையின் பெற்றோர்கள் அக்குழந்தையை மீட்டுக் கொண்டு வர தவம் போன்ற முனைப்புடன் பெருமுயற்சிகள் மேற்கொள்ளத் துவங்குகின்றனர். இம்முயற்சிகளில் சுற்றத்தார், மற்றும் நட்பு வட்டத்தின் ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் புரிந்து கொள்ளுதல் அவசியம் தேவையாகிறது. ஆகையால் இந்நோய் பற்றிய புரிந்துணர்வு சமூகத்தில் பரவலாகத் தேவைப்படுகிறது. அதற்கு உதவுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நோயின் தன்மை, அறிகுறிகள், காரணிகள், சிகிச்சை முறைகள், சமூகப் பங்களிப்பு என்று ஐந்து பகுதிகளாக இக்கட்டுரை உள்ளது. உங்களுக்கு அதிகம் நேரம் இல்லாவிடில், தன்மை, அறிகுறிகள் மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை மட்டுமேனும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஒரு மருத்துவன் அல்லன். பல மருத்துவர்களிடம் பேசியும், பல புத்தகங்கள் மற்றும் தகவல் தளங்களைப் படித்தும், என் குழந்தையிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட விவரங்களின் சாரமே இக்கட்டுரை. மேலதிக விவரங்களும், விளக்கங்களும், கட்டுரையின் இறுதியில் உள்ள சுட்டிகளின் மூலம் பெறலாம்.

குறிப்பு 1: இக்கட்டுரையில் குழந்தைகளை மையமாகக் கொண்டே இந்த நோயை நான் விளக்க முற்பட்டாலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் (Autistic adults) உள்ளனர். அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளாகவோ, சரியானபடி சிகிச்சை பெறாத குழந்தைகளாகவோ இருந்திருப்பார்கள். மதியிறுக்கம் வளர்ந்த பிறகு திடாரென வரும் நோய் அல்ல. கண்டிப்பாக குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக கண்டறியப்படவல்லது.

குறிப்பு 2: Autism-த்திற்கு ‘மதியிறுக்கம் ‘ என்ற மொழிபெயர்ப்பை நான் டாக்டர் கார்த்திகேயன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரத்யேகமாக இக்குழந்தைகளுக்காக நடத்தி வரும் DOAST என்ற மருத்துவமனையில் முதன்முறையாகப் பார்த்தேன். ‘தன்வய ‘ நோய் என்று பிற தமிழ் சொற்கள் இருந்தாலும் இந்தச் சொல்லே சரியாக எனக்குப் படுவதால் அதை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன்.

நோயின் தன்மை

மதியிறுக்கம் ஒரு மன நல நோய். இந்நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில சமயம் உடல் ரீதியான வளர்ச்சிக் கோளாறுகள் (co-occuring symptoms, அதாவது சேர்ந்தமைந்த அறிகுறிகள்) இருந்தாலும், அவை இந்த நோயின் முக்கியக் கூறுகள் அல்ல. தன்னையொத்த பிற குழந்தைகளிடம் பழகும் விதம், பேச்சுத்திறனின் வளர்ச்சி, புலன் சார்ந்த உணர்ச்சிகளின் ஒழுங்கு (sensory balance), மற்றும் விளையாடும் முறைகள் ஆகியவற்றில் பிற சாதாரண (Neurologically typical) குழந்தைகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதே இந்த நோயின் பிரதானமான தன்மையாகும்.

மதியிறுக்கம் ஒரு நிறப்பிரிகை வகையிலான நோய் (Spectrum disorder). அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எல்லாம் ஒரே மாதிரியோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சில குழந்தைகளுக்கு யார் அருகே வந்தாலும், தொட்டாலும், கொஞ்சமும் பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும். சில குழந்தைகளுக்கோ தொடுவது, இறுக்க அணைப்பது போன்றவை மிகவும் பிடித்திருக்கும். சில குழந்தைகளுக்கு ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச வராது. சில குழந்தைகள் அர்த்தமே இல்லாவிடிலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த நோய் கண்டறியப் பட்ட குழந்தைகள் எல்லாருக்குமே பிறரோடு பழகுவதில் ஏதாவது ஒரு வகையில் சிக்கல், அல்லது தயக்கம் இருக்கும். ஏதோ ஒரு விதத்தில், ஒரு தனி உலகத்தில் தாம் இருப்பது போன்ற பாவனை இருக்கும்.

சுருக்கமாக, சாதாரண குழந்தைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள், ஒரு மதியிறுக்கக் குழந்தையைப் பார்த்தால், சிறிது நேரத்தில் இந்தக் குழந்தைக்கு ஏதோ பிரச்னை என்று கண்டுபிடித்து விடுவார்கள். சில சமயம் இதற்கு ஓரிரு நிமிடங்களே ஆகும். சில சமயம் பத்து நிமிடங்கள் வரை ஆகும்.

பரவலாக மதியிறுக்கக் குழந்தைகளிடம் கீழ்க்காணும் குணாதிசியங்களைக் காணலாம்:

1. பிறரோடு பழகுவதைத் தவிர்த்தல். குறிப்பாக தன் வயதுடையவர்கள். தனிமையை விரும்புதல். கூட்டத்தைக் கண்டு மருளுதல், (சிலர் அழுது, பிடிவாதம் பிடிப்பார்கள்).

2. பேச்சுத் திறன் குறைவு. எழுதிக் கொடுத்ததை ஒப்பிக்கும் பாவனையில் பேசுதல்; திரும்பத் திரும்ப சொன்னதையே திருப்பிச் சொல்லுதல்; சொல்லப் படுவதை புரிந்து கொள்ளாமை அல்லது புறக்கணித்தல்.

3. அசாதாரணமான உணர்ச்சித் தேவைகள் – தொடுதலை அதிகம் விரும்புதல் அல்லது விரும்பாமை, நிலை தடுமாறும் இடங்களில் (விளிம்புகள், ஒரு உதாரணம்) இருக்க விரும்புதல். அதிக வலி பொறுத்துக் கொள்ளும் திறன்,

4. வினோதமான பழக்கங்கள் – எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்தல். அடுக்கி வைத்தது கலைக்கப்பட்டால் பொறுத்துக் கொள்ள இயலாமை. வேறு சிந்தையின்றி ஒன்றையே மறுபடி மறுபடி செய்தல். மாறும் எண்களைப் பார்த்துப் பரவசப் படுதல்.

இவையெல்லாம் தவிரவும் சில குணங்கள் உள்ளன. அவையும் சரி, மேற்கூறியவையும் சரி, எல்லாமே ஒரு குழந்தையிடம் இடம் பெறாது. இடம் பெறுபவையும் ஒரே அளவில் இருக்காது.

நோயின் தன்மை பற்றி கடைசியாக ஒரு விஷயம். Autistic Savant எனப்படும் கூர்மையான அறிவும், குறிப்பிட்ட சில (சங்கீதம், கணிதம் போன்ற) திறமைகளும் படைத்தவர்கள் குறைவு. மதியிறுக்கம் என்றாலே, ஏதாவது ஒரு விதத்தில் அவர்கள் அதிபுத்திசாலியாக இருப்பார்கள் என்று நினைப்பது தவறு. பெரும்பான்மையானவர்கள் சாதாரண திறன் படைத்தவர்கள்தாம்.

நோயின் அறிகுறிகள்

பல மன நல நோய்களைப் போல மதியிறுக்கத்தைக் கண்டறிவதற்கும் எந்த உடல் ரீதியான மருத்துவப் பரிசோதனையும் இல்லை. இரத்தப் பரிசோதனை செய்தோ, எக்ஸ்-ரே எடுத்தோ இதைக் கண்டறிய முடியாது. ஒரு குழந்தை எப்படிப் பழகுகிறது என்பதை வைத்தே இதைக் கண்டறிய முடியும்.

இந்த நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளிடம், மூன்று வயதிற்குள்ளரே அதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விடும். ஆனால் எல்லாக் குழந்தைகளும் மூன்று வயதிற்குள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவராகக் கண்டறியப்படுவதில்லை. பெரும்பாலும் இதற்குக் காரணம், பெற்றோர்கள் இத்தகைய குறைபாடு தமது குழந்தைக்கு வரும் என்பதை நம்ப மறுப்பதும், சில மருத்துவர்கள் அசிரத்தையாக இருப்பதும்தான். ஆனால் இந்த நோய் எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, எவ்வளவு சீக்கிரம் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை துவங்க முடிகிறதோ அந்த அளவுக்கு நல்லது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு உண்மை. இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலம் அவர்களது உள்ளுணர்வுதான். தங்களது குழந்தை பழகும் விதத்தில் ஏதோ ஒன்று பிசகாய் இருக்கிறது என்று தோன்றினால், அவர்களது சந்தேகம் தீரும் வரையில் மருத்துவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

பல நோய்களைப் போல இந்த நோயும் எந்தக் குடும்பத்திலும், யாருடைய குழந்தைக்கும் வரலாம்.

பொதுவாக ஒரு வயதிற்குள் ஒரு குழந்தையிடம் இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினம்; மூன்று வயதிற்கு மேல்பட்டு இந்த அறிகுறிகள் திடாரெனத் தோன்றுவதும் அரிது. ஆகையால் ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் ஒரு குழந்தை எப்படி வளருகிறது என்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.

இந்த வயதுகளுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் முக்கியமாக கவனிக்க வேண்டிய அபாய அறிகுறிகள் இவை:

1. கண் பாராமை – குழந்தையிடம் கொஞ்சும் போது அல்லது உறவாடும் போது கண்ணோடு கண் பார்த்துப் பேசாமல் வேறு எங்கோ பார்த்தல்

2. ஒரு வயதில் மழலைச் சத்தங்கள் செய்யாமை

3. எதிர்வினை உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருத்தல் – அதாவது, நாம் சிரித்தால், திருப்பிச் சிரிப்பது. கண்ணாமூச்சி விளையாடுவது, நம்மைப் போலவே பாவனை செய்வது போன்றவை.

4. பதினாறு மாதங்களுக்குள் ஒரு சொல் கூடச் சொல்லாமல் இருத்தல்

5. சுட்டிக் காட்டாமை – ஒரு குழந்தையின் சுட்டு விரல் ஒரு பிரமாதமான கருவி. மிகச் சீக்கிரமே அதை சாதாரணக் குழந்தைகள் உபயோகிக்கக் கற்றுக் கொண்டு விடும் (அது வேண்டும், இது வேண்டும் என்று). நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அது இயலாது.

6. இரண்டு வயதில் இரு வார்த்தை சொற்றொடர்கள் பேசாமலிருத்தல்.

7. மற்ற குழந்தைகளிடம் ஆர்வமின்மை.

8. திரும்பத் திரும்ப சில செய்கைகளைச் செய்த வண்ணம் இருத்தல் – கையை ஆட்டுதல், தட்டாமாலை சுற்றுதல் போன்றவை – குறிப்பாக இவற்றை தனிமையில் செய்ய விரும்புதல்.

இவற்றுள் எல்லா அறிகுறிகளும் இருக்க வேண்டுமென்பதில்லை, ஏதாவது ஒன்றிரண்டு மட்டும் இருந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் இவற்றில் பல சேர்ந்து இருக்கும் போது அது கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சந்தேகம் இருந்தால் இந்த நோய் உள்ளதா இல்லையா என்பதை குழந்தை மன நல மருத்துவரோ, ஒரு குழந்தைகள் நரம்பியல் நிபுணரோ ஊர்ஜிதம் செய்ய முடியும்.

‘என் அத்தைப் பையனுக்கு இப்படித்தான், ரொம்ப பயந்தார்கள், ஆனால் கடைசியில் ஒண்ணுமே இல்லை, எல்லாம் சரியாகி விட்டது ‘ போன்ற வார்த்தைகளெல்லாம் தற்காலிக மன சாந்திக்குத் தான் உதவும். இந்த நோய் தானாக குணமாகும் நோயல்ல. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோய். அபாய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நோயின் காரணிகள்

இந்த நோயின் ஆதாரக் காரணி என்ன என்பது யாருக்கும் தெரியாது. இந்த 2005-ஆம் ஆண்டில் இது தான் உண்மை. ஆயினும், இது எதனால் வருகிறது என்பதற்கும், சமீபத்தில் இந்த நோயின் பரவல் அதிகமாகி இருப்பதற்கு என்ன காரணம் என்பதற்கும் பல துணிபுகள் (theories) உள்ளன. அவை அனைத்தையும் பட்டியலிட்டு முடிப்பதற்குள் புதிதாக இன்னொன்று கிளம்பி விடும். ஆகையால் இருப்பவற்றுள் பிரபலமான சிலவற்றை மட்டும் பார்ப்போம்:

நச்சு உலோகங்களின் விளைவா ? – இது அமெரிக்காவில் தற்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விஷயம். இதன்படி, மதியிறுக்கம் என்பது நச்சு உலோகங்கள், குறிப்பாக பாதரசம் (mercury), இக்குழந்தைகளின் உடல்களில் அதிக அளவு கலந்திருப்பது தான் இந்த நோயின் ஆதாரக் காரணம். இந்த உலோகங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிகளில் உள்ள மருந்துகளிலிருந்து வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் தயாரிக்கும் நிறுவனமான மெர்க் 1980களின் இறுதியில் ஒரு பிரச்னையைச் சந்தித்தது. அது தயாரிக்கும் தடுப்பூசி மருந்துகளை அடைக்கும் குடுவைகள் ஒரு முறையே பயன்படுத்தக் கூடியவையாக இருந்தன. அதாவது, ஒரு குடுவையில் ஒரு குழந்தைக்கு ஒரு முறை கொடுக்கக் கூடிய மருந்து மட்டுமே இருந்தது. இதை மாற்றி ஒரு குடுவையில் பல குழந்தைகளுக்குத் தேவையான மருந்து அளவினை வைக்க முடிந்தால், செலவும், விற்பனை விலையும் குறையும். இதனால் மேலும் பல வளரும் நாடுகளில் தடுப்பூசிகளை விநியோகிக்கலாம். ஆனால், அப்படிச் செய்வதற்கு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவுக்கு பதப்படுத்த வேண்டும் – அதாவது, ஒரு முறை குடுவைக்குள் ஊசி நுழைந்த பின்னும், மருந்து கலப்படம் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது தான் மருந்தினை மற்றொரு முறை வேறு ஊசி கொண்டு பத்திரமாக எடுத்து உபயோகிக்கலாம். இப்படிப் பதப்படுத்துவதற்கு ‘தைமரோசால் ‘ (Thimerosal) என்ற இரசாயனத்தை என்று கண்டுபிடித்தனர். 1991-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கியது (உலக வங்கி, மற்றும் உலக சுகாதார அமைப்பும் இதற்கு ஆதரவளித்தன).

பிரச்னை என்னவென்றால், இந்த பதப்படுத்தும் இரசாயனத்தில் பாதரசம் மிக அதிகம் உள்ளது. ஒரு வளர்ந்த மனிதன் தாங்கிக் கொள்ளும் அளவில் பல மடங்கு ஒரு குழந்தைக்கு பல முறை வழங்கப்படுவதால், சில குழந்தைகளுக்கு இது மூளையை பாதித்து, மதியிறுக்கம் போன்ற நோய்களால் தாக்கப்படுகின்றனர் என்கின்றனர் இதன் எதிர்கட்சியினர். ஒருவர் எத்தனை பாதரசத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் மீதெய்ல் (Methyl) வகையான பாதரசத்தை ஆதாரமாகக் கொண்டவை என்று சொல்லி, அதை விட வீரியம் மிகக் குறைந்த ஈதெய்ல் (Ethyl) வகையான பாதரசமே தைமரோசாலில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகின்றனர் ஆளுங் கட்சியினர். அப்படியானால் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு குழந்தைகள் இவ்வகையான தடுப்பூசிகளைப் பெற்றனர், அவர்களில் எவ்வளவு பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர் என்ற புள்ளி விவரங்களை வெளியிட வேண்டியது தானே என்கின்றனர் எதிர்கட்சியினர். அந்த விவரங்கள் எங்களிடம் இல்லை என்கின்றனர் ஆளுங்கட்சியினர். ‘பொய்! ‘, ‘உண்மை! ‘, ‘பொய்! ‘, ‘உண்மை! ‘ இத்யாதி இத்யாதி.

இதற்கிடையில் பல மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ‘நாங்கள் நன்கு பரிசோதித்துப் பார்த்து விட்டோம், இதற்கும் அதற்கும் தொடர்பு இல்லை, தடுப்பூசிகளைக் கண்டு பயப்படாதீர்கள் ‘ என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஓசைப்படாமல், மருந்து நிறுவனங்களும் தைமரோசால் கலப்பதை (அமெரிக்காவிலேனும்) நிறுத்தி விட்டார்கள்.

‘சுட்டிகள் ‘ பகுதியில் இதைப்பற்றிய இருதரப்பு வாதங்களுக்கும் சுட்டிகள் உள்ளன. படித்து விட்டு என்னைப் போலவே தெளிவின்றி இருக்க உங்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன்.

ஒவ்வாமையினால், அசூயையினால் வரும் பிரச்னையா ? – இந்தத் துணிபிற்கு ‘ஓட்டை வயிறுத் துணிபு ‘ (Leaky gut syndrome) என்றும் ஒரு பெயருண்டு. இதன்படி, இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சில உணவுகளிடம் ஒவ்வாமை (allergy) அல்லது அசூயை (intolerance) பிரச்னைகள் இருப்பதால், உணவுப் பொருட்களின் சத்துக்கள் உடம்பிற்குள் சரியாக உள்வாங்கப் படாமல் போகின்றன. அவை இரத்த ஓட்டத்தில் கலந்து, நச்சுப்பொருள் ரூபத்தில் மூளையைச் சென்றடைகின்றன. அங்கே அவை ஒரு போதை மருந்து போல செயல்பட்டு மூளையின் செயல் திறனைக் குறைக்கின்றன. நாளடைவில், இந்த மூளை பழுதடைகின்றது.

இத்தனை விபரீதமான விளக்கம் கொண்ட இந்தத் துணிபிற்கும் அறிவியல் ஆதாரமான விளக்கங்கள் போதுமான அளவு இல்லை. ஆயினும், பல குழந்தைகள், ஒவ்வாத உணவுகள் என்று கருதப்படும் சில உணவுகளை ஒதுக்கிய பிறகு முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த வகையில் ஒவ்வாத உணவுகளாகக் கருதப்படுபவை பொதுவாக பால்சத்து (Caseine) உள்ள உணவுகளும், மாவுச்சத்து (Gluten) உள்ள உணவுகளும். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளையும், ரொட்டி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளையும் ஒதுக்கி வைத்து (Gluten-free, Casein-free – GFCF) ஒரு உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

இது போன்ற பல துணிபுகளில் ஆதார கேள்வி என்னவென்றால் – எது காரணம், எது விளைவு என்பது தான். அதாவது, ஏதோ ஒன்று மதியிறுக்கத்தை தோற்றுவிக்க, அந்த நோயின் விளைவாக இது போன்ற ஒவ்வாமைகள் வருகின்றனவா, அல்லது இந்த ஒவ்வாமைகள் காரணமாக நோய் தோன்றுகின்றதா என்ற குழப்பம். இதற்கு பதிலில்லை.

மரபணுக் கோளாறா ? – வேறு ஒன்றும் சரிப்படவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது – மரபணுக் கோளாறு (Genetic defect) என்ற மந்திரக் காரணி. ஜலதோஷம் வந்தால் கூட மரபணுப் பிரச்னை என்று ஜல்லியடிப்பது இன்றைய வழக்கமாக இருக்கையில், அதிகம் புரியாத மதியிறுக்கம் போன்ற நோயை விட்டு வைப்பானேன் ? இந்த நோயை தோற்றுவிக்கும் குறிப்பிட்ட மரபணுவை தனிமைப்படுத்தி ஆராய்கிறோம் என்று சொல்லி ஒரு கையில் மைக்ராஸ்கோப்பும், மறு கையில் மானியக் கோரிக்கையுமாக சில விஞ்ஞானிகளின் வரிசையாக நிற்கிறார்கள். வாழ்த்துக்கள்.

யாருக்கும் உறுதியாகத் தெரியாது என்பதால், ‘எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்… ‘ என்று துவங்கி யார் வேண்டுமானாலும் புதிதாக ஒரு காரணம் சொல்லலாம். அந்த தைரியத்தில் சொல்கிறேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சமீப காலத்தில் இந்த நோய் கண்டிருக்கும் வளர்ச்சிக்கு, மருத்துவர்கள் அதிக முனைப்புடன் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி ‘ வேலை செய்கிறார்கள் என்பது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. சமீப காலத்தில் சுற்றுச் சூழலில் ஏதொ ஒரு குறிப்பிட்ட மாறுதல் ஏற்பட்டிருக்கிறது, பல குழந்தைகள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், சில குழந்தைகளிடம் அது ஒரு மோசமான பக்க விளைவை ஏற்படுத்துகிறது. அந்த கெட்ட மாறுதல் என்ன என்பது மனிதனுக்குத் தான் வெளிச்சம்.

சிகிச்சை முறைகள்

இந்த நோயின் காரணிகள் இன்னவென்று உறுதியாகச் சொல்ல முடியாததால், இந்த நோயை அணுகப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகளும் தெளிவின்றி அநேகம். இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதோ ஒரு சிகிச்சை முறை நன்கு பயனளித்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம். ஒரே பிரச்னை – எந்த சிகிச்சை முறை பலனளிக்கும் என்பதை அறிவதற்கு தெளிவான முறைகள் எதுவும் இல்லை – அதாவது இத்தகைய அறிகுறிகள் இருந்தால் இந்த சிகிச்சை முறைகள் பயன் தரும் என்பதில் அறிவியல் பூர்வமான உறுதியில்லை. வாய்வழியாகவும், பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதிலும் தான் பல சமயங்களில் சிகிச்சை முறைகள் அடையாளம் காணப்படுகின்றன.

பொதுவாக சிகிச்சை முறைகள் இரண்டு வகைப்படுகின்றன – ஒன்று மருந்துகளின் அடிப்படையில் நோயினை அணுகும் வகை; மற்றது, குழந்தையின் குணநலன்களின் (behavior) அடிப்படையில் இதை அணுகுவது. இவற்றிலும் உட்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான சிலவற்றை சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு முன் ஒரு சிறு வார்த்தை. இது நான் அனுபவத்தில் சொல்வது. இந்த நோயைப் பற்றி சில மருத்துவர்கள் – அவர்களை நீங்கள் முதல் முறையாக சந்திக்கும் போது – கூறுவது என்னவென்றால், ‘மற்ற முறைகளெல்லாம் இந்த நோயின் அறிகுறிகளைத்தான் நிவர்த்தி செய்ய முயற்சி செய்கின்றன. நாங்கள் ஆதார வேரைத் தாக்குகிறோம் (we attack the root cause) ‘. மூலக் காரணி என்னவென்று உறுதியாகத் தெரியாத போது இது எப்படி சாத்தியம் ? இதையெல்லாம் அதிகம் நம்ப வேண்டாம்.

மருந்துகள்

மருந்துகளின் மூலம் மதியிறுக்க நோயை அணுகுவதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன – ஒன்று, நரம்பியல் ரீதியான மருந்துகள், மற்றது holistic எனப்ப்படும் முழுத் தேக ஆரோக்கியத்தை முன்னேற்ற முயலும் மருந்துகள். மதியிறுக்கம் ஒரு மூளை சம்பந்தப்பட்ட நோய் என்பதால், இரண்டுமே ஏதோ ஒரு விதத்தில் நரம்பியல் பாதிப்பை உண்டு பண்ண முயலும் மருந்துகள் தாம். ஆயினும், முன்னது கொஞ்சம் நேரடியாகவும், பின்னது கொஞ்சம் மெதுவாக, அதிக பாதுகாப்புடனும் செயல்படுவன.

நரம்பியல் ரீதியான மருந்துகளில் ஒரு வகையைப் பார்ப்போம் – இது SSRI (Selective Serotonin Reuptake Inhibitor) எனப்படும் வகையைச் சார்ந்தவை. பயமுறுத்தும் சொற்றொடருக்குப் பின்னால் எளிய விஷயம்தான் உள்ளது. மூளையில் செரடோனின் எனப்படும் ஒரு திரவம் இரத்த ஒட்டம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது. மூளையின் செயல் திறனுக்கு இன்றியமையாத ஒரு திரவமாகும் இது. உடலில் தானே உற்பத்தி செய்யப்படுவது. இந்த திரவம், மூளையில் நுழைந்து, அங்கு சில நேரம் இருந்து விட்டு பின்னர் வழித்தெடுக்கப்படுகிறது. அதன் பின்னாலேயே புதிதாக ஒரு குப்பி செரடோனின் வந்து உட்கார்ந்து கொள்கிறது. இந்த சுழற்சி சரியான வேகத்தில் இருந்தால் மூளை முறையாக வளர்ச்சி பெறும். மனநலக் கோளாறு உள்ள குழந்தைகளிடம் இந்த சுழற்சி மிக வேகமாக நிகழ்கிறதென்றும், அதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப் படுகின்றதென்றும் ஒரு துணிபு இருக்கிறது. ஆகையால் இந்த சுழற்சி வேகத்தைக் குறைக்கும் மருந்துகள் (Re-uptake inhibitor) இந்தக் குழந்தைகளுக்குப் பயன் தரும் என்று நம்பப்படுகிறது. மன அழுத்ததிற்குக் கொடுக்கப்படும் மருந்துகளான Luvox, Prozac போன்றவை இந்த வகையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர நரம்பியல் நிபுணர்கள் சிலர் பரிந்துரைப்பது Steroid வகையிலான மருந்துகள். இது பரிசோதனை அளவில், சில குழந்தைகளுக்கு வியத்தகு வகையில் உதவி செய்திருக்கிறது. ஆனால் கடுமையான பக்க விளைவுகள் (தூக்கப் பிரச்னை, உப்பிய தோற்றம், பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்படைதல் போன்றவை) கொண்டது. இக்குழந்தைகளின் உடல்களில் தடுப்புச்சக்தி மிக அதிக வீரியத்துடன் வேலை செய்து சாதாரண உயிரணுக்களை சேதாரம் செய்கிறது என்றும், அதைத் தடுக்க இந்த மருந்துகள் உதவுகின்றன என்று இந்த சித்தாந்தம் சொல்கிறது. குறிப்பாக, சில திறன்களை (பேச்சு, பழகு தன்மை) ஒரிரு வயதில் அடைந்து, அதன் பின்னர் அவற்றை இழந்த குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை முறை பயன் தந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

நேரடியாக நரம்பியல் சம்பந்தப்படாத மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன. முன்னர் கூறியது போல, இவற்றில் எது எந்தக் குழந்தைக்குப் பயனளிக்கும் என்பது முயன்று பார்த்தே அறியப் பட வேண்டியதாக இருக்கிறது. கலிபோர்னியாவில் இருக்கும் மூத்த மருத்துவர் டாக்டர் பெர்னார்டு ரிம்லண்ட் அவர்கள் நடத்தும் வலைத்தளத்தில் (சுட்டி கட்டுரையின் முடிவில்) எந்த மருந்து எவ்வளவு குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறது என்பது பற்றிய புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

மதியிறுக்க நோயை இந்த மருந்துகள் மூன்று திசைகளிலிருந்து அணுகுகின்றன. முதலாவது இதை ஒரு விட்டமின் குறைபாடாகப் பார்ப்பது. இரண்டாவது இதை ஒரு நச்சுப் பொருள்களினால் உருவானதாகக் காண்பது. மூன்றாவது இதை ஒரு வயிறு மற்றும் சீரணப் பிரச்னையாகப் பார்ப்பது. ஆனால், இந்த வகைகளில் மருந்துகளை வழங்கும் மருத்துவர்கள், இதில் ஏதோ ஒன்றை மட்டும் பின்பற்றுவதில்லை. ஒரு குழந்தையிடம் தென்படும் அறிகுறிகளை வைத்து, ஒரு திசையைப் பிரதானமாகக் கொண்டாலும், மூன்று வகையான மருந்துகளையும் உட்கொள்ளச் சொல்கின்றனர். முதல் வகையானதில் விட்டமின் பி-6, பி-12 மற்றும் மெக்னீஷியம், விட்டமின் ஏ (பார்வை கோளாறுகளை முறைப்படுத்த), விட்டமின் சி ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. இரண்டாம் வகையில் chelating agents எனப்படும் நச்சுப் பொருட்களோடு பிணைந்து அவற்றை உடலிலிருந்து நீக்கும் மருந்துகள் (DMSA) அளிக்கப்படுகின்றன. மூன்றாம் வகையில் Nystatin, Pro-biotics போன்ற வயிற்றில் உடலுக்கு சாதகமான பாக்டாரியாக்களை வளர்க்க உதவும் மருந்துகள் சொல்லப்படுகின்றன.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சென்னையில் டாக்டர் கார்த்திகேயன் நடத்தும் DOAST மருத்துவமனையைக் குறிப்பிட்டேன். இவர் மேற்கூறிய மருந்துகளில் உபயோகமானவற்றைக் கண்டறிந்து, அவற்றுடன் ஆயுர்வேதம், யோகா போன்றவற்றையும் சேர்த்துக் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் பாதுகாப்பான, நீண்ட நாள் நல்ல விளைவுகள் ஏற்படுத்தக் கூடிய ஒரு மருந்து முறையினை கண்டறிந்து வருகிறார். இவரது மருத்துவமனை வரும் பல குழந்தைகள் நல்ல பலனடைந்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இந்த மருத்துவமனை பற்றி குமுதத்தில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரை ஒன்று சந்திரவதனாவின் வலைப்பதிவில் வெளி வந்தது. சுட்டி கட்டுரை முடிவில்.

மருந்துகளைப் பொறுத்த அளவில், மருத்துவர்களிடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவர்கள் இரண்டு முக்கியக் கட்சிகளாக உள்ளனர். முதல் கட்சி, நிரூபிக்கப் படாத மருந்துகள் எதுவும் குழந்தைகளைச் சென்று அடையக் கூடாது என்றும், பல மருந்துகளை ஒரே சமயத்தில் கொடுப்பதன் மூலம், எது எந்தப் பயன் அளித்தது என்பதற்கான அறிவியல் சான்று இல்லாமல் போய் விடுவதால், அப்படிச் செய்வது அறிவியல் முறையாகாது என்ற தர்க்க ரீதியான வாதத்தை முன்வைக்கிறார்கள். இரண்டாவது கட்சி, இந்தக் குழந்தைகளுக்கு சீக்கிரம் சிகிச்சை முறை அளிப்பது ஒன்றே அவர்களது எதிர்கால நன்மைக்கு மிகவும் தேவையானது என்பதால், மருத்துவ ரீதியான பரிசோதனைகள் நடந்து வருகையில், பாதகமில்லாத (விட்டமின் போன்ற) மருந்துகள் ஒரு குழந்தைக்குப் பலனளிக்குமானால் அதைத் தடுப்பது, மெதுவாகக் கொடுப்பது போன்றவை தவறு என்ற ஓரளவுக்கு உணர்ச்சி பூர்வமான வாதத்தை முன்வைக்கிறார்கள். பெற்றோர்கள் இந்த இரு வகையான மருத்துவர்களிடமும் சென்று அவர்கள் குழந்தைக்கு எது பயன்படுகிறதோ அதை ரொம்பவும் பிரயத்தனப்பட்டு அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

குணநல மாற்ற சிகிச்சைகள்

(Behavior therapy என்பதை எளிமையாக இவ்வாறு மொழி பெயர்த்துள்ளேன், தயவு செய்து இதை விட நல்ல சொல்லிருந்தால் சொல்லவும்)

நான் கண்ட வரை மருந்துகள் மதியிறுக்கத்தை முழுமையாக குணப்படுத்த வல்லவை அல்ல. இந்த நோயிடமிருந்து குழந்தையை மீட்க ஏதாவது ஒரு குணநல மாற்ற சிகிச்சையும் தேவைப்படுகிறது. நான் ‘ஏதாவது ஒன்று.. ‘ என்று சொல்வதிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் – மருந்துகளைப் போலவே இதிலும் உறுதியான ஒன்று கிடையாது. ஆயினும் இதில் தேர்வு செய்வது கொஞ்சம் எளிது.

குணநல மாற்ற முறைகளில் முக்கியமாக ஒரு முறை இருக்கிறது – அது ABA எனப்படும் Applied Behavior Therapy. ஸ்கின்னர் எனப்படும் விஞ்ஞானியால் கண்டறியப்பட்ட இந்த முறையை மதியிறுக்கக் குழந்தைகளுக்குப் பயன்படும் விதத்தில் 1960-களில் லோவாஸ் என்பவர் மாற்றினார். அதன் பின்னர் 1980-கள் முதல் தீவிரமாக உபயோகத்தில் உள்ளது. இதன் அடிப்படைக் கோட்பாடு ஒருவரின் குணநலன்கள் பழக்கத்தினால் மாற்ற இயலும் என்பதே. நாம் அனைவருமே இதை ஏதாவது ஒரு விதத்தில் அன்றாடம் பயன்படுத்துகிறோம். ஒரு செயலைச் செய்யும் போது அதற்குக் கிடைக்கும் எதிர்வினையைப் பொறுத்தே நாம் அந்த செயலை மீண்டும் செய்கிறோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கின்றோம். இந்த அடிப்படை சித்தாந்தத்தை அறிவியல் பூர்வமாக, ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் குணநல குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றிற்கேற்ற முறையில் ஒரு சிகிச்சைத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினால் வியத்தகு மாற்றங்கள் உண்டாக்கி இருக்கின்றது. ஏற்றுக்கொள்ளக் கூடிய குணநலன்களை வெளிப்படுத்துகையில் ஒரு சிறு பரிசளித்தும், இல்லையென்றால் பரிசளிக்காமலும் இருப்பதன் மூலம், ஒரு குழந்தைக்கு எது சரி, எது தவறு என்பது புரிகிறது. ஒரு சில முறைகளுக்குப் பின்னர், அந்தப் பரிசை ஒரு புகழ்ச்சி மொழியாக மாற்றி, பின்னர் அதையும் நீக்கி விடலாம்.

இந்த சிகிச்சை முறை மிகவும் அறிவியல் பூர்வமாக பயிலப்பட்டு வருகிறது. இது ஆரம்பிக்கும் முன்னர் சுமார் நானூறு கேள்விகளின் உதவியோடு ஒரு குழந்தை அளவெடுக்கப்படுகிறது. அதன்படி, ஒரு அடிப்படையை உருவாக்கி, அதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் சிகிச்சை முறை உருவாக்கப்படுகிறது.

இந்த முறை மீதிலும் சில விமர்சனங்கள் உள்ளன. இது பரீட்சைக்கு உருப்போட்டு எழுதுவது போன்றது, உண்மையான புரிதல் நிகழ்வதில்லை என்று சொல்லப்படுகிறது. குழந்தையை ஒரு ரோபாட் போல மாற்றுகிறது என்றும் சொல்கிறார்கள். ஆயினும், மிகப் பெரும்பான்மையான குழந்தைகளிடையில், இது ஒரு நல்ல, உண்மையான மாறுதலையே உண்டாக்கி இருக்கிறது என்பது பெற்றோர்கள் கூற்றுப்படித் தெரிகிறது. உதாரணமாக, எங்கள் பெண் இந்த முறையின் மூலம் தான் ‘ஆம் ‘, ‘இல்லை ‘ என்ற சொற்களின் உபயோகங்களைக் கற்றறிந்தாள். இப்போது சகஜமாகவும், பொருத்தமாகவும், பரவலாகவும் இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறாள். இது ஒரு சிறு உதாரணம்தான். ஆயினும், எங்களுக்கு நம்பிக்கை அளித்த உதாரணம்.

இன்னொரு புதிய, முக்கியமான முறை RDI (Relation development Intervention) எனப்படும் முறை. முன்னம் சொன்ன ABA பேச்சுத்திறன், விரும்பத்தகாத பழக்கங்களைக் கட்டுப்படுத்தல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை நேரடியாக குறி வைக்கிறது. RDI அதற்கு மாறாக, ஒரு குழந்தையின் சமூக உறவாடலைக் குறிவைத்து அதை சீர் செய்ய முயற்சிக்கிறது. இதன் சித்தாந்தம் என்னவென்றால், மதியிறுக்கத்தின் அடிப்படைக் கோளாறு மற்றவர்களோடு உறவாடுவதில் இருக்கும் சிக்கல், பிரச்னை ஆகியவை தான். அவற்றை நிவர்த்தி செய்தால் மற்ற விஷயங்கள் தானாக முன்னேற்றம் கண்டு விடும் என்பது. இது சமீபத்தில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ?ூஸ்டனில் டாக்டர் கட்ஸ்டான் என்பவரால் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பிரபலமடைந்து வருகிறது. சில விதங்களில் இது ABA முறைக்கு நேர் எதிரானது. உதாரணமாக, ABA நேரடியான உரையாடல்களை வலியுறுத்துவது, அதாவது, ‘இதைச் செய் ‘, ‘இது என்ன ‘, ‘யார் இது ‘ போன்ற கேள்விகளைக் கேட்டு சரியான விடைக்கும் செயலுக்கும் பழக்குவது. ஆனால், RDI முறையில் உணர்ச்சிகளின் மூலம் – சந்தோஷம், உற்சாகம், வருத்தம் போன்றவற்றின் மூலம் – குழந்தைகளுடன் உறவாடுவதை வலியுறுத்துகிறது. குழந்தைகள் உணர்ச்சிப் பரிமாற்றம் செய்து கொள்வதே அவர்களது சமூகப்பழக்கத்தின் ஆதாரத் தேவை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுவது. இதில் மெளனமும், மறைமுகமான உரையாடல்களும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, ‘இது ஒரு விஷமக்காரக் குரங்கு ‘ என்றோ ‘வானம் எத்தனை நீலமாக இருக்கிறது ‘ என்றோ சொல்லி விட்டு விட வேண்டும். குழந்தை தன்னிச்சையாக இந்த உரையாடலை நீட்டிக்கும் வண்ணம் பதில் சொல்ல வேண்டும். இதுவே உண்மையான, இயல்பான உரையாடல் என்கிறது RDI. இந்தப் பயிற்சி முறை கடினமானது, ஆனால் பலன்கள் நிறைவு தருபவை.

சில பெற்றோர்கள், ABA மூலம் பயிற்சி துவங்கி விட்டு, ஒரு நிலை வந்த பின்னர் RDI முறைக்கு மாற்றிக் கொள்கிறார்கள்.

இவை தவிர Sensory integration, Floor time போன்ற முறைகளும் உள்ளன.

சிகிச்சை முறைகள் என்று ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், ஒவ்வொரு குழந்தைக்கும் புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மூளை, மன, உடல் ரீதியாக ஏதோ தடைகள் உள்ளன. அவற்றை மட்டுப்படுத்தும் வகையில் மருந்துகளைக் கொடுத்தோமானாலும், இந்தக் குழந்தைகளுக்கு சாதாரண முறையில் கற்றுக் கொடுப்பது கடினம். ஆகையால், மருந்தினால் உடல் ரீதியான சிக்கல்களை மட்டுப்படுத்தி, பின்னர் குணநல மாற்ற முறைகளைக் கைகொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், குழந்தையின் வளர்ச்சி சற்று தாமதப்பட்டாலும், இந்த நோயின் தீவிரப் பிடியிலிருந்து வெளி வர முடியும். நம்பிக்கையூட்டும் செய்தி என்னவென்றால், பல குழந்தைகள் இது போன்ற முறைகளைப் பின்பற்றுவதன் மூலமே ‘இந்தக் குழந்தைக்கும் நோய் இருந்ததா ? ‘ என்று வியக்கும் வண்ணம் முன்னேறி இருக்கிறார்கள்.

சமுதாயத்தின் பங்கு

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, இந்த நோயின் தீவிரமும், தன்மையும், இதை ஒரு சமூக அளவில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை ஆக்குகிறது. இது நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு குடும்பத்தை பாதித்திருக்கலாம், அல்லது ஒரு தூரத்து உறவினரோ, நண்பரோ பாதிக்கப்பட்டிருக்கலாம், எப்படி ஆயினும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நம்மால் உதவ முடியும்.

பல சமயங்களில் பாதிக்கப்பட்ட பெற்றோர் விரும்புவது, மற்றவர்கள் அவர்களது நிலையயும், படும் துன்பங்களையும் புரிந்து கொண்டு பேசிப் பழக வேண்டும் என்பதே. இந்தக் கட்டுரையை படித்திருக்கும் நீங்கள் கண்டிப்பாக அப்படிச் செய்ய இயலும். இந்த நோயினால் பாதிக்கப்படும் குடும்பங்கள் பல சமயங்களில் கடும் மன அழுத்தத்தை சந்திக்கின்றன. இந்த சமயங்களில் நண்பர்களது ஆதரவும், புரிந்துணர்வும் மிக அவசியம் தேவைப்படுகிறது.

குறிப்பாக, நண்பர்களும் உறவினர்களும் செய்யக் கூடிய சில விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

1. குழந்தையின் நோயினையும், பெற்றோர்களின் கவலையையும் அங்கீகரியுங்கள். நம்பிக்கை வார்த்தைகள் சொல்லும் போது கூட, ‘குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்கிறீர்கள், கண்டிப்பாக சரியாகி விடும் ‘ என்று சொல்வதற்கும், ‘குழந்தை நன்றாகத் தான் இருக்கிறான், அநாவசியமாகக் கவலைப்படுகிறீர்கள் ‘ என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பெற்றோர்களுக்கு முன்னதைக் கேட்பதற்கு ஆறுதலாகவும், பின்னதைக் கேட்பதற்கு வேதனையாகவும் இருக்கும்.

2. இந்தக் குடும்பங்கள் பல சமயம் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள். இது மேலும் மன அழுத்தத்திற்கும் தனிமைப்படுதலுக்கும் அக்குடும்பத்தை ஆளாக்குகிறது. தயவு செய்து முடிந்த வரை உங்கள் வீட்டு நன்னிகழ்ச்சிகளில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமது குழந்தைகளைப் பராமரிப்பதில் வல்லவர்கள் இவர்கள். எந்த இடைஞ்சலும் இல்லாது கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.

3. உங்கள் குழந்தைகளுக்கு இந்த நோயைப் பற்றி கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள். உங்களை விடவும் அதிகமாக இத்தகைய குழந்தைகளை அவர்கள் சந்திப்பார்கள் (பள்ளியில், நண்பர்கள் வீட்டில் என). அவர்களிடம் அதிக புரிந்துணர்வுடன் பழக அது உதவும்.

4. மதியிறுக்கம் பற்றி புதிய செய்திகள், கட்டுரைகள், தகவல்கள் வருகின்றனவா என்று முடிந்த வரை கவனமாக இருங்கள். ஏதாவது தென்பட்டால், உங்களுக்குத் தெரிந்த, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் அது குறித்துத் தெரியப்படுத்துங்கள். நமக்காகப் நண்பர்கள் பலர் அக்கறை கொண்டுள்ளனர் என்ற எண்ணம் மிகவும் ஆறுதலளிப்பதாகும்.

5. நீங்கள் அடிக்கடிச் செல்லும் குடும்பமென்றால், அந்தக் குழந்தை பற்றி சில விவரங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது, அந்தக் குழந்தையின் நோயின் தன்மை, அந்தக் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள், பழகும் விதம் ஆகியன பற்றிக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நோய் முக்கியமாக பிறரோடு பழகுவதை சிக்கலாக்குகிறது. பழக்கத்தினால் அதைக் கண்டு வருவதே பெரும் பிரயத்தனம். நீங்கள் அந்தக் குழந்தையின் வீட்டுக்குச் செல்லும் போது, முடிந்த வரை அந்தக் குழந்தையோடு பழக முயலுங்கள். முதலில் புறக்கணித்தாலும், மெல்ல மெல்ல, அந்தக் குழந்தை உங்களை ஏற்றுக் கொண்டு பழகும். அம்மா, அப்பா தவிர இன்னொருவரிடம் இத்தகைய குழந்தைகள் பழகுவது ஒரு முக்கியமான வளர்ச்சி மைல்கல்லாகும். உங்களால் அது கைகூடலாம்.

இதற்கு முக்கியமாக, அந்தக் குழந்தையின் பழகும் எல்லைகளைக் கண்டறியுங்கள் (பெற்றோர்களிடமிருந்து). பின்னர், அந்த எல்லையின் விளிம்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே செல்ல முயல வேண்டும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு அருகில் மற்றவர் உட்காருவது பிடிக்காது என்றால், ஒரு பக்கத்து இருக்கையில் அமர்ந்து, சில நாட்கள் கழித்து இன்னம் கொஞ்சம் நெருக்கமாகி, பின்னர், மெல்ல அருகில் சென்று அமர முயல வேண்டும். வேறு சில குழந்தைகளுக்கு தமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்பவர்களிடம் கொஞ்சம் நன்றாகப் பழக முடியும். உதாரணமாக , தட்டாமாலை சுற்றுவது பல மதியிறுக்கக் குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படியெல்லாம் செய்வதன் மூலம், அம்மா, அப்பா தவிர்த்த வெளியுலகத்தின் மேல் ஒரு குழந்தைக்கு நம்பிக்கை ஏற்படுவதில் நீங்கள் உதவுகிறீர்கள் என்பது தான்.

6. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர், ஒரு குறிப்பிட்ட உணவு முறையில் உள்ளனர். பால் மற்றும் கோதுமை உணவுகளைத் தவிர்க்கும் இந்த உணவு முறையில் பொதுவாகக் குழந்தைகளுக்குப் பிடித்த பல விஷயங்கள் கிடையாது. உதாரணம் – சாக்லேட், பிஸ்கெட் ஆகியவை. ஆதலால், இந்தக் குடும்பங்களுக்கு நீங்கள் செல்லும் போது ஒரு வார்த்தை என்ன வாங்கிச் செல்லலாம் என்று கேட்டுக் கொண்டு விடுங்கள். அதற்கு அவகாசம் இல்லாவிடில், பத்திரமாக பழவகைகளை வாங்கிச் செல்லுதல் உத்தமம்.

7. அதே போல் விளையாட்டுப் பொருட்களும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில விளையாட்டுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பார்கள். ஏனெனில், அந்தக் குழந்தைகள் சில வகையான விளையாட்டுப் பொருட்களோடு தீவிரமான (Obsessive) ஈடுபாடு வளர்த்துக் கொள்ளக் கூடியவர்கள். ஆதலால், இதிலும் பெற்றோர்களை ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது. மேலும், சில வகையான பழக்க சிகிச்சை முறைகளுக்கு, சில விளையாட்டுப் பொருட்கள் தேவைப்படும். அவற்றில் ஒன்றை வாங்கிக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக, குழந்தைகளுக்குப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்கு சமுதாயமும் ஆதரவாக இருந்தால், இந்த நோயையும், அது உண்டாக்கும் பக்க விளைவுகளையும் நாம் தேவையில்லாத சிரமங்கள் இன்றி எதிர்கொள்ள முடியும்.

முடிவு

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும், அந்த நம்பிக்கை பொய் நம்பிக்கையல்ல என்பதற்கான சான்றுகள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமும் அறிவியலும் இந்தக் குழந்தைகளின் தேவைகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வளர்ச்சி அடைய வேண்டும். இது பிரார்த்தனை. அது வரையில் சமுதாயத்தில் இருக்கும் நண்பர்களும், உறவினர்களும், ஆசிரியர்களும், பள்ளிகளும் இந்தக் குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் அரவணைத்து ஆதரிக்க வேண்டும். இது விண்ணப்பம்.

சுட்டிகள்

http://www.vaporia.com/autism/autism.faq.html – மதியிறுக்கம் குறித்த முக்கியக் கேள்விகளும் விடைகளும

http://www.autisminfo.com – ஆழமான கட்டுரைகளும், புதிய கண்டுபிடிப்புகளும்

http://www.tacanow.com – நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் சிகிச்சை முறைகள் பற்றி பேசும் தளம்

http://del.icio.us/tag/autism – புதிய தளங்கள், ஏராளமான சுட்டிகள்

http://www.behavior.org – ABA பற்றிய விவரமான தளம்

http://www.rdiconnect.com – RDI பற்றிய விவரமான தளம்

http://www.autismwebsite.com/ari/treatment/form34q.htm – எந்த மருந்துகள் எவ்வளவு குழந்தைகளுகு பயனளித்தன என்பது பற்றிய புள்ளி விவரம்

http://kulanthaikal.blogspot.com/2004/11/blog-post_24.html – DOAST பற்றி குமுதம் கட்டுரை.

http://www.commondreams.org/views05/0616-31.htm – தைமரோசால் தான் வில்லன்

http://slate.com/id/2123647/ – தைமரோசாலில் எந்த பிரச்னையும் இல்லை

Srikanth.Meenakshi@core.fanniemae.com

Series Navigation