மணி என்ன ஆச்சு ?

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்


‘அப்பா ! அந்தப் பிச்சைக்காரனைப் பார் ! கீழே ஒன்னும் போட்டுக்கலை ‘ என்றான் என் மகன்.

பஸ் ஸ்டாப்பில் கிழிந்த உடைகளுடன் ஒரு ஆள் வானத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான். அவன் மர்ம உறுப்புக்கள் கூட வெளியே தெரிந்தன. ஆனால் கையில் கிழிந்த ‘ ?ிண்டு ‘ பேப்பர். படித்தவனோ ?

காலில் நைந்து போன ஷூ. ஒருகாலத்தில் நன்றாக வாழ்ந்தவனோ ?. ‘அந்நியன் ‘ போன்று தலைமுடி. ஒருவேளை கொல்லப் பார்க்கின்றானோ ?. உடம்பிலே சகதி. கீழே விழுந்திருக்க வேண்டும். காலில் சிறாய்ப்பு. பிரஞ்ஞை இல்லாமல் இருக்கிறான். அடிக்கடி கைகடிகாரம் போன்று எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு குழந்தையைக் கவனிக்காமல் ஒரு மோட்டார் பைக் ‘விர் ‘ ரென்று அருகே செல்ல, ஆங்கிலத்திலும், ?ிந்தியிலும், தமிழிலும் மாறி மாறி திட்டினான். மூன்றையும் தெரிந்த நம்மூர் சென்னைவாசி. குழந்தைகள் என்றால் அவனுக்கு மிகப் பிடிக்கும் போலும்.

அருகே சென்று கவனித்தேன். பயத்தில் என் மகன் என் கைகளைப் பிடித்துக் கொண்டான். எனக்கும் சின்னப் பிதறல் தான். என்ன தான் பண்ணப் போறான், பார்ப்போம், என்று கவனித்தேன்.

‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘ (திட்டத்தை நிறைவேற்று) என்றுத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். ‘பட் லிசன் ‘ என்றும் யாரைப் பார்த்தோ கைவிரல் ஆட்டி சொல்லிக்கொண்டிருந்தான். ஆபிசில் வேலைப் பார்த்தவனோ, மேனேஜராகவோ, சொந்தத் தொழில் பண்ணியவனாக இருக்க வேண்டும். அருகே கடந்து செல்லும் பெண்களையோ, குழந்தைகளையோ அவன் பார்க்க கூட இல்லை. அவர்கள் யாரும் அவனுக்கு எதிரிகள் இல்லை போலும். சில பெண்கள் நெரிசையில் இடிக்கும் படி நேர்ந்தாலும் கண்டு கொள்ள வில்லை. சில நேரங்களில் பின் தள்ளி நகர்ந்தான். ஒரு பண்பு அவனிடம் இருந்ததைக் கவனித்தேன். எதனாலவோ இந்தப் பிச்சைக்காரனுக்குப் பைத்தியமென்று முடிவு செய்தேன்.

அவன் கைவிரல்களில் நகங்கள் உடைந்தும், நீண்டுமிருந்தன. அழுக்குப் படிந்து இருந்தது. கைகள் மிருதுவாயிருந்தன. தோல் இன்னும் இளமையாக இருந்தன. இவன் கடும் வேலை செய்திருக்கமாட்டான். அவன் வயது சுமார் 40 இருக்கலாம். கம்ப்யூட்டர் காரனாகா இருப்பானோ ? அவர்கள் தான் இப்படி பெண்கள் போன்று மிருதுவான விரல்களுடன் இருப்பார்கள்.

பைத்தியக்காரங்க யாரையும் நம்பக் கூடாது. எப்படி மனிதர்கள் யாரும் எந்த நேரமும் பைத்தியக்காரங்களாய் ஆகலாமோ அப்படியே இவனும் ஒருகால் வேஷம் போட்டாலும் போடலாம். எனக்கு பஸ் வர நேரமானதாலே மேலும் கவனிக்க ஆரம்பித்தேன். பிச்சை கேட்கின்றானா, பார்ப்போம். கேட்டால், அவனுக்குச் சொந்தப் புத்தி இருக்கு. இல்லை என்றால் அவன் பைத்தியமாக இருப்பான்.

ஒரு பெண் தனது கைப்பையிலிருந்து கைகுட்டையை எடுக்கும்போது ஒரு பத்து ரூபாய் தாளினைக் கீழே சிதற விட நான் எடுக்கும் முன், பைத்தியக்காரனாகப் பட்டவன் எடுத்துத் திரும்பக் கொடுத்தான். ஒரு நன்றி கூட கூறாமல் அப்பெண் அவனிடமிருந்து பயந்து விலகினாள். ‘ஏன் ஓடறே, மணி என்ன ஆச்சு ‘ என்று அவன் சிரிக்க எனக்கு அவன் பிச்சையெடுக்க வில்லை. ஆனால் ஏன் இப்படி ததுவமாகப் பேசிகின்றான் எனப் பட்டது.

சரி இவனிடம் பேச்சுக் கொடுப்போம் என்று ‘என்னடா மணி, மணி என்ன ஆச்சு ? ‘ என்றேன். முன்னே பின்னே பார்க்காதவர்களிடம் பேசுபவர்கள் பைத்தியங்கள் என்று என் அப்பா சிறு வயதில் கண்டித்தது ஏனோ எனக்கு ஞாபகம் வந்தது. ‘கையில வாட்ச் இல்ல ? ‘ என்று என் கைகடிகாரத்தினைக் குறிப்பிட்ட அவன் என்னைத் திகைக்க வைத்தான். சரி அவன் பைத்தியமில்லை என்ற முடிவுக்கு வருமுன் ‘ ‘கையில வாட்ச் இல்ல ? ‘ ‘கையில டைம் இல்ல ‘ ‘வாழ்க்கையில டைம் இல்ல ‘ ‘உனக்கு டைம் இல்ல ‘ ‘எனக்கு டைம் இல்ல ‘ ‘வாட் இ ஸ் தெ டைம் நெள ? ‘ ‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘ என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தான்.

நன்கு டை அணிந்திருந்த நவநாகரிக இளைஞர்கள் என்னருகே பஸ் ஸ்டாப்பில் வந்திருந்தார்கள். ‘நம்ம ராகவன் இருக்காண்டா இன்னும் ! பாரு ! இன்னமும் ‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘ என்றூ சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்கின்றான். போறப் போக்க பார்த்தா நம்ம ‘கால் ‘ சென் டரில் நாமும் இப்படி தான் ஆவோம் போலிருக்கு. இவன் கல்யாணம் ஆன பிறகு ‘கால் ‘ சென்டரே கதி என்று இரவுகளை காலி செய்ய, இவனை வெறுத்த இவன் மனைவி வீடு விட்டுப் பிரிய, அய்யாவிற்கு ‘டைம் ‘ பாம் போட்ட மாதிரி ஆகியிருக்கு. அதிலேருந்து இன்னும் ‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘ என்று சொல்லித் திரிகின்றான். ‘

‘வாடா, நம்ம வீட்டு வேலையைப் பார்க்கலாம், அப்புறம் ஆபிஸைக் கவனிக்கலாம் ‘ என்று பஸ் வந்தவுடன் கிளம்பினார்கள்.

என் வேலயை விட்டு ஊர் வம்பில் கவனம் செலுத்திய என்னை, என் மகன் ‘அப்பா வா, ஸ்கூல் ப்ராஜெக்ட் இருக்கு ‘ என்று கை இழுக்க வந்த பஸ்ஸில் ஏறினேன்.

ஏறியவுடன் என் மகனிடம் சொன்னேன் ‘இந்த பார்! உனக்கு டைம் இல்லை, சினிமா, கிரிக்கெட் என்று சனி, ஞாயிறு வீண் பொழுது போகி விட்டது. ‘எக்ஸெக்யூட் தெ ஸ்கூல் ப்ராஜெக்ட் ‘ நெள !!! ‘ என்றேன் கோபமாய் ! என் மகன் என் மீது கவனம் செலுத்தாமல் வெளியே வேடிக்கைப் பார்க்க ‘நேரத்தை விரயம் பண்ணாதே ! ‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘, ‘எக்ஸெக்யூட் தெ ப்ராஜெக்ட் ‘ என்றுத் திரும்ப சில முறைச் சொல்ல ஆரம்பித்தேன்.

என் பின்னே ஏறிய ராகவன், என்னைத் தொட்டு ‘மணி என்ன ஆச்சு ? ‘ என்று கேட்டான்.

Krishnakumar_Venkatrama@CSX.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன்