மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

எஸ் எ பாலகிருஸ்ணன்



சுப்ரபாரதிமணியனின் முப்பது புத்தகங்களில் ஒன்று நாடக நூல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுகதை, நாவல் , கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.

தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.தி ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். இராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவானபிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையைத் திரும்பிப்பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்குவதில்லை.

கோமல் சுவாமிநானின் சட்டகவடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களைச் சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றன.
கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.
நாடகங்கள்தான் இடதுசாரி கட்சிகள் கேரளத்தில் ஆட்சிக்கு வர முக்கியப் பங்காற்றின.தமிழகத்தில் சுதந்திரப்போராட்டகாலத்தில் நாடகங்கள் மக்களிடையே சுதந்திர உணர்வையூட்டின, அதன்பின் திராவிட இயக்கங்கள் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெற்ற பலன் நாடறியும்.
பிரிட்டிசு அரசாங்கம் நாடகங்களுக்கு விதித்த சட்டத்தை இன்றைக்கும் நமது அரசுகள் கவனமாகப் பாதுகாக்கின்றன.
“மணல் வீடு” தொகுப்பில் மூன்று நாடகங்கள் உள்ளன.இவை வானொலிநாடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாடகத்தில் ( மணல் வீடு ) மூன்று தலைமுறைகள் இடம் பெறுகின்றன. முதலிரண்டு தலைமுறைகள் முந்தையத் தலைமுறைகள் குறித்து பற்றும் மதிப்பும் மூதாதியாருக்கான சடங்கு முறைகளில் ஈடுபாடும் கொண்டுள்ளன.
இன்றைய தலைமுறையின் பொறுப்பு, அல்லது பொறுப்பற்றத்தன்மை குறித்து கவலையும் விரத்தியும் அடைகின்றனர். ஆயினும் அவரவர் வாழ்க்கையை அலுப்பும் சலிப்புமாய் சுமப்பதைவிட அனுபவித்து தீர்ப்பதே நன்றென உணர்கின்றனர். இது முழுமையாக வாசிப்பிற்கான நாடகமாக இருப்பினும் இது வானொலி வடிவம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
” பசுமை எனும் தாய்மை ” எனும் நாடகம் பிரசாரத்தன்மை வாய்ந்த நடிப்பதற்கான நாடகம்.சுற்றுச்சூழல் குறித்தது. திருப்பூர் பனியன் தொழில் காரணமாக அதன் சாயக் கழிவுகளால் மாசுபட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற ” காஞ்சிமாநதி ” யெனும் நொய்யல் நதிகரையில் வாழும் ஒரு கிராம மக்களின் எழுச்சியை விவரிக்கிறது. மக்கள் இயக்கம் என்றும் முதன்மையான து என்பதை பிரச்சாரத்தொனியில்தான் சொல்ல முடியும்.
” முளைப்பாரி” எனும் மூன்றாவது நாடகம் மத நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது. இந்துக்களும், இசுலாமியரும் காலம் காலமாய் அனுசரித்துதான்
வாழ்ந்து வருகிரார்கள். அவர்களின் ஒர்றுமை திட்டமிடப்பட்டு குலைக்கப்படுகிறது. ஆனாலும் அந்த கிராம மக்கள் தங்களுக்குள் இருக்கும் அர்த்தமற்ற பயத்தை உதறிவிட்டு திருவிழாவில் ஒன்றுபடுகிரார்கள். திருவிழாவில் வீசப்பட்ட கல் யாரால் வீசப்பட்டது என்பது சுசகமாக விவரிக்கப்படுகிறது. அந்த தீய சக்திகள் யார் என்பதினை நாடகமாக நடிக்கப்பட்டால் மக்களும் புரிந்து கொள்வார்கள். இதுவும் ஒரு நவீன அம்சம்தான்.
( மணல் வீடு= சுப்ரபாரதிமணியனின் நாடகங்கள்: விலை ரூ 30/ .
கௌதமராஜன் வெளியீடு. 24, பாட்டை வீதி; மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி 607 302 )

எஸ் எ பாலகிருஸ்ணன்.
அனுப்பியவர்: ramtongauler@gmail.com

Series Navigation