மடியில் நெருப்பு – 35

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

ஜோதிர்லதா கிரிஜா


35.

ஜகந்நாதன் ஆத்திரமே உருவாக ராஜாதிராஜனின் முன் உட்கார்ந்திருந்தார். அவர் உதவியால்தான் தன்னால் ஒருகால் தப்ப முடியலாம் எனும் நெருக்கடியில் இருந்த ராஜாதிராஜன் கூட்டியும் குறைத்தும் உண்மையைச் சொல்லும்படி ஆயிற்று.

“வெள்ளம் தலைக்கு மேல போயிடிச்சு. இனிமே நான் செய்யக் கூடியது எதுவுமே இல்லே. உன்னை ஜாமீன்ல கொண்டு வந்தது ஒண்ணுதான் என்னால செய்ய முடிஞ்சது. ஒரு வக்கீலை வெச்சு வாதாடி, நீ ப்ளூ ·பில்ம் தயாரிச்சு வியாபாரம் பண்ணல்லைன்னு நிரூபிக்கலாமே தவிர, அதிலே நீ பார்ட்டிசிபேட் பண்ணியிருக்கிறதை எப்படி மறுக்க முடியும்? அட, அடி முட்டாளே! அந்த அயோக்கியன் தண்டபாணியுடைய சங்காத்தம் வேணாம், விட்றுன்னு எவ்வளவு சொன்னேன்! கேட்டியா? இப்ப பாரு!”

“அப்பா! அவனோட சகவாசத்தை நான் விடப் பாத்ததுனால வந்த வினைதாம்ப்பா இது! நான் ஒதுங்கப் பாக்கறேன்கிற ஆத்திரத்திலே எனக்கு ஏதோ மயக்க மருந்தைக் குடுத்து அரை குறை நெனவோட நான் ப்ளூ ·பில்ம்ல பங்கெடுக்கும்படி பண்ணிட்டாமப்பா அந்த ராஸ்கல்! உண்மையிலே அந்தப் பொண்ணு கூட இருக்கணும்கிற எண்ணத்தில நான் அங்கே போகல்லைப்பா. அது அப்படிப்பட்ட இடம்கிறது கூட எனக்குத் தெரியாதுப்பா! நான் மனசால கூட கல்பனாவுக்குத் துரோகம் பண்றவன் இல்லைப்பா!”

ஜகந்நாதன் கசப்புடன் சிரித்தார். “அன்னைக்கு உனக்காக ·போன் பண்ணிச்சே அந்தப் பொண்ணோடதானே ப்ளு ·பில்ம்லே. . .”

அவர் முடிக்கு முன் அவன் அவசரமாக, “இல்லேப்பா! இது வேற யாரோப்பா. இவ யாருன்னே எனக்குத் தெரியாது. என்னை நம்புங்கப்பா!” என்றான்.

“சரி. அந்தப் பொண்ணு எந்த ஆ·பீஸ்ல வேலை செய்யுது?”

“எதுக்குப்பா கேக்குறீங்க?”

“எதுக்கா யிருந்தா உனக்கென்னடா? சொல்லு. அந்தப் பொண்ணு எங்கே வேலை செய்யுது? பெண்பாவம் வேணாண்டா நமக்கு!”

அவன் மவுனமாக இருக்கவே, “நீ சொல்லல்லைன்னா, அந்த தண்டபாணியை ஜெயில்லே சந்திச்சு அவனுக்குத் தெரியுமான்னு விசாரிக்கிறேன்!” என்று ஜகந்நாதன் கூறவே , “அய்யோ! வேணாம்ப்பா! நானே சொல்லிட்றேன்,” என்று அவன் தெரிவித்த சூர்யாவின் அலுவலக முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் அவர் குறித்துக்கொண்டார்.

“அப்பா! இந்த ஒரு தடவை மட்டும் எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்கப்பா! இனிமேற்பட்டு எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகவே மாட்டேம்ப்பா! ‘காட்’ ப்ராமிஸாப்பா!”

“போடா, போடா! உன்னோட ப்ராமிஸை ஓட்ற தண்ணியிலே எழுதி வை. ‘காட்’ ப்ராமிஸாம், ‘காட்’ ப்ராமிஸ்! கடவுள் நம்பிக்கைன்றது என்னன்னு தெரியுமாடா உனக்கு? நல்ல நடத்தையோட மறு பெயர்தாண்டா கடவுள் நம்பிக்கை! யூ ராஸ்கல்!”

“அப்பா! இந்த ஒரு தரம் என்னைக் காப்பாத்திடுங்கப்பா! உங்களுக்குத்தான் எத்தனையோ போலீஸ் ஆ·பீசர்ஸைத் தெரியுமே! கமிஷனரையே பெர்சனலாத் தெரியுமேப்பா! என் பேரு வெளியே வராதபடியாவது பாத்துக்குங்கப்பா! பெத்த மகனுக்காக அவங்களோட நீங்க ஒரு வார்த்தை பேசக்கூடாதாப்பா? என் பேரு பத்திரிகையிலே அடிபட்டா அந்த அவமானம் உங்களுக்கும் தானேப்பா?”

“உனக்காக நான் அவங்களோட பேசினா சிரிப்பாங்கடா! உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? போன மாசம், போலீஸ் ரெக்ரியேஷன் க்ளப்லே என்னை ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்கச் சொல்லிக் கூப்பிட்டிருந்தாங்க இல்லே? . . .அப்போ கமிஷனர் என்னைப் பத்தி என்ன சொன்னாரு, தெரியுமாடா? ‘கூடியவரை நியாயமா பிஸ்னெஸ் பண்றவரு மிஸ்டர் ஜகந்நாதன். மத்தவங்க மாதிரி தில்லு முல்லு பண்றவரா யிருந்தா இன்னைக்கு ஒரு பெரிய கோடீஸ்வரரா ஆகி யிருப்பாரு. அப்படிச் செய்யாததுனாலதான் வெறும் லட்சாதிபதியோட நின்னுட்டாரு’ அப்படின்னு பேசினாரு. நான் என்ன பேசினேன், தெரியுமா? போலீஸ்காரங்கள்ளே பாதிப்பேராவது தங்களோட கடமைகளை ஒழுங்காச் செய்தா, இந்த நாடு ஒரு சொர்க்க பூமி யாயிடும்னு பேசினேன். போலீஸ்லே ஒரு சாரார் லஞ்சம் வாங்குறதாலேயும், குற்றவாளிகளோடவும் தாதாக்களோடவும் கூட்டு வெச்சுக்கிறதாலேயும்தான் நம்ம நாடே இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராயிருக்குன்னும் சொன்னேன். கமிஷனரே சிரிச்சுக்கிட்டுக் கை தட்டினாரு. இப்ப எந்த மூஞ்சியோடடா நான் அவருகிட்டப் போய் உனக்காகப் பேசுறது? அப்படி ஒரு கேவலமான செயலைச் செய்யிறதை விடவும் நான் தூக்குல தொங்குவேண்டா!”

“நீங்க எதுக்குப்பா தூக்குல தொங்கணும்? உங்க வயித்திலே பொறந்து உங்களாலேயே கைவிடப்பட்ட சோகத்துக்காக நான் தாம்ப்பா தொங்கணும்!”

ஜகந்நாதனுக்குத் திக்கென்றது. தம் ஒரே மகன் அவ்வாறு சாவதை அவரால் தாங்க முடியாது. ஆனாலும், தமக்குப் பழக்கமானவர் என்பதை ஆதாயப்படுத்திக்கொண்டு கமிஷனரின் உதவியை நாட அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

“இத பாரு, ராஜா! தப்புப் பண்ணிட்டே. தப்பிக்கிறது உன் வக்கீலோட சாமர்த்தியம். மயக்க மருந்தோட பாதிப்பிலதான் அந்தத் தப்பு நடந்திச்சுன்னு நீ சொல்றது உண்மையாயிருந்தா, அதை ஒரு சராசரி வக்கீல் கூட நிரூபிச்சுடுவாரு. அதுக்கான செலவெல்லம் நான் பண்றேன். ரொம்பப் பெரிய வக்கீலை நீ அமர்த்திக்கிறதுக்கும் உதவி பண்றேன். பணம் எவ்வளவு செலவானாலும் பரவால்லே. அது வரையிலே பொறுமை காட்டு. என்னால கமிஷனர் கிட்டே யெல்லாம் பேச முடியாது. அப்படியே பேசினாலும், இப்ப இருக்கிற கமிஷனரை லட்சம் லட்சமாக் கொட்டிக் குடுத்தாலும் வளைச்சுப் போட முடியாது. அவரு என்னை அசிங்கமா நினைக்கிறது மட்டும்தான் அதனோட பலனாயிருக்கும்! வேற எந்தப் பிரயோசனமும் கிடையாது. அதை நீ புரிஞ்சுக்கணும்!”

“ . . . அந்தப் பொண்ணு சூர்யாவோட என்னப்பா பேசப் போறீங்க?”

“நீ ஏன் திரும்பவும் அந்தக் கேள்வியைக் கேக்குறே? வேலை கேட்டு உன்னை நச்சரிக்க்¢ற பொண்ணு மட்டுமா அது இருந்தா, நீ ஏன் பயப்பட்றே?”

“அய்யே! நான் ஒண்ணும் பயப்படல்லேப்பா! சும்மா கேட்டேன் – தெரிஞ்சுக்கலாமேன்னு!”

“அதோட பேசின பிற்பாடு கட்டாயம் சொல்லுவேண்டா!”

ராஜாதிராஜன் வாயை மூடிக்கொண்டான். அவர் அவனை விட்டு அசையாததால் அவனால் சூர்யாவுடன் தொலை பேசும் எண்ணத்தைச் செயற்படுத்த முடியவில்லை. அது முடிந்திருப்பினும், அன்று அவள் விடுப்பில் இருந்ததால் அவளுடன் அவனால் பேசியிந்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்.

. . . ராஜலட்சுமியின் வீட்டிலிருந்து கிளம்பிய சூர்யா ராஜாதிராஜனைச் சந்திப்பதற்கு வழக்கமான இடத்துக்கு வந்தாள். அவனது கார் காணப்படவில்லை. சிறிது நேரம் காத்திருந்து பார்த்த பின், ராஜாதிராஜனுக்கு ஏற்பட்டது எதையும் அறியாத அவள் ஏமாற்றத்துடன் வீட்டுக்குப் பயணமானாள்.

. . . . . . மறு நாள் அவளுக்கு ஜகந்நாதனிடமிருந்து தொலை பேசி யழைப்பு வந்தது. எடுத்த எடுப்பில், “ நான் ராஜாதிராஜனோட அப்பா ஜகந்நாதன் பேசறேம்மா. உன் வேலை விஷயமா, எங்க அ·பீசுக்கு இன்னைக்கு மதியம் உன் லஞ்ச் அவர்ல வந்து பாரும்மா. எப்ப வருவே?” என்றார்.

“குட் மார்னிங், சார்! ஒண்ணரை மணிக்கு வரலாமா, சார்?”

“சரி. வா. கண்டிப்பா வாம்மா. குரல் ஏன் நடுங்குது? பயப்படாம வாம்மா!”

ராஜாதிராஜன் அவளுடன் தொலைபேசிவிட இயலாதவாறு ஜகந்நாதன் அவனை அங்கு இங்கு நகரவிடாமல் தம் அருகிலேயே வைத்துக்கொண்டார். காரணத்தையும் அவனிடம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

பிற்பகல் ஒன்றரை மணிக்கு அவரது அறையினுள் சூர்யா அடி எடுத்து வைத்தாள். அவள் வந்ததும் அவன் கிளம்பிச் சென்று விட வேண்டும் என்று ஏற்கெனவே அவர் ராஜாதிராஜனிடம் சொல்லி வைத்திருந்தார். அதற்கிணங்க, அவள் நுழைந்ததும் அவன் எழுந்துகொண்டான். பின்னர், அவளைப் பார்த்து அரைகுறையாய்ப் புன்னகை காட்டிவிட்டு அவன் வெளியேறினான். சூர்யா நல்ல பெண் என்பதை ஜகந்நாதன் அவள் விழிகளைப் பார்த்த கணத்திலேயே புரிந்துகொண்டார்.

அவர் காட்டிய நாற்காலியில் உட்காரவே சூர்யாவுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. குளிர்விக்கப்பட்டிருந்த அந்த அறையிலும் அவளுக்கு வேர்க்கலாயிற்று.

“உக்காரும்மா.”

“இருக்கட்டும், சார்.”

“அட, உக்காரும்மா. எவ்வளவு நேரம் நிப்பே? உக்காரு, உக்காரு.”

நாற்காலியின் முன்னடியில் அவள் பட்டும் படாமலும் அமர்ந்தாள். ஜகந்நாதனின் கம்பீரத் தோற்றம் அவளுள் ஒரு மரியாதையை மட்டுமின்றி ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அவள் கால்கள் தரையில் சரியாகப் பாவாது அதிர்ந்துகொண்டிருந்தன.

“சாப்பிட்டியாம்மா?”

“ஆச்சு, சார்.”

“சகஜமா இரும்மா. நானென்ன, சிங்கமா, இல்லே புலியா! . . . இப்ப நான் உங்கிட்ட மனசு விட்டுப் பேசப்போறேன். நான் கேக்கப்போற கேள்விகளுக்கெல்லாம் நீ உண்மையான பதிலைச் சொல்லணும். நீ பயப்படவே கூடாதும்மா. ராஜாதிராஜன் உன்னைப் பத்தி எல்லாத்தையும் எங்கிட்ட உள்ளது உள்ளபடி சொல்லிட்டான். அவன் சொன்னதும் நீ சொல்றதும் ஒத்துப்போறதான்னு இப்ப நான் பாக்கப் போறேன்! உண்மையைச் சொல்லணும்னா, சோதிக்கப் போறேன்! நீ உண்மையே பேசினா, உன் வருங்காலம் சிறப்பாயிருக்கும். அதுக்கு என்னோட ஒத்துழைப்பு உனக்குக் கட்டாயம் உண்டு. அவன் பொய் சொல்லியிருந்து, நீ உண்மை சொன்னதா தெரிய வந்தாலும் என்னோட ஆசிகள் உனக்கு உண்டு. அதனால, ‘ராஜாதிராஜன் இவர் கிட்ட என்ன சொல்லியிருப்பானோ, தெரியலியே’ அப்படின்னு குழம்பி, நீ ஒரு பயத்துலே பொய்யா எதுவும் பேசிடக்கூடாது. உனக்கு எப்படி அவனோட பழக்கமாச்சு?”

அவரது இதமான பேச்சால் சூர்யாவின் அச்சமும் தயக்கமும் சற்றே குறைந்தன. முதன் முறையாக அவள் அவரை நன்றாகப் பார்த்தாள். ராஜாதிராஜன் அந்தத் தங்க நிறத்துக்கு அவரைத்தான் கொண்டிருந்தான் என்பது புரிந்தது. வயதானால், ராஜாதிராஜன் அவரைப் போலவே இருப்பான் என்று நினைத்துக்கொண்டாள். எதிராளியைக் கட்டிப்போடும் ஒரு கூர்மை அவர் பார்வையில் இருந்ததை அவள் புரிந்து கொண்டாள். அந்தப் பார்வையைச் சந்தித்தவாறு பொய் சொல்லுதல் கடினம் என்பதும் அவளுக்குப் புரிந்தது.

“பஸ் ஸ்டாப்லே நான் பஸ்ஸ்¤க்காக நின்னுட்டிருந்தப்ப ஒரு வாரம் போல அந்த வழியாக் கார்லே போனாரு. ஒரு நாள் காரை நிறுத்தி, என்னை என்னோட ஆ·பீஸ்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிக் கூப்பிட்டாரு. நான் சம்மதிச்சுக் கார்லே ஏறினேன். அதுலேர்ந்து பழக்கம். “

‘அபரிமித அழகு குடிகொண்டிருக்கும் இடத்தில் அசட்டுத்தனமும் இருக்குமோ?’ என்று ஜகந்நாதனுக்குத் தோன்றியது. புன்னகை செய்து, “அப்புறம்?” என்றார்.

“அன்னைக்கே சாயத்திரம் என்னை எங்க ஆ·பீசுக்குப் பக்கத்திலே சந்திச்சு, கார்லே பீச்சுக்குக் கூட்டிட்டுப் போனாரு. ஆனா கார்லேயே இருக்கலாம், இறங்கவேணாம்னுட்டாரு. . .”

அவரது துளைத்த பார்வையை எதிர்கொண்ட சூர்யா, “ நான் பின் சீட்லதான் இருந்தேன். அவரு முன் சீட்ல இருந்தாரு. கொஞ்ச நேரம் பேசினோம். அப்பதான் .. . அவரு. . ” என்றபின் தயங்கி, நிறுத்தி, முகம் சிவந்து, தலை குனிந்தாள்.

“ஏம்மா நிறுத்திட்டே? நான் உங்கப்பா மாதிரிம்மா. நான் உனக்கு நல்லதுதான் செய்யப்போறேன். வெக்கப்பாடாம பேசும்மா.”

குனிந்த தலை குனிந்தபடியே இருக்க, “அப்பதான் என்னை லவ் பண்றதாச் சொன்னாரு. . .” என்ற சூர்யா எச்சில் விழுங்கினாள்.

ஜகந்நாதனுக்கு மகனின் மீது ஏற்கெனவே அவநம்பிக்கை இருந்தாலும், சூர்யாவின் இந்தச் செய்தி அவருக்குப் பேரதிர்ச்சியை அளித்தது.

“ம். . . மேலே சொல்லு. நீயும் சம்மதிச்சே! இல்லையா?”

சூர்யா கூச்சத்துடன் அரையாய்ப் புன்னகை புரிந்தாள். அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

“ நாங்க ரொம்ப ஏழைகள்னு சொன்னேன். ஆனா, என்னோட குடும்பத்தைப் பத்தி எல்லாமே தனக்குத் தெரியும்னு அவரு சொன்னாரு. என் பேரைக் கூட அவரே விசாரிச்சுத் தெரிஞ்சு வெச்சிருந்தாரு. எனக்கு ஆச்சரியமா யிருந்திச்சு. ‘நீ சம்பாதிச்சு உன் குடும்பம் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறதாலே, உங்கப்பா கையிலே கணிசமான ஒரு தொகையைக் குடுத்துட்டு அவருக்குச் செலவே வைக்காம உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ னாரு. ‘ஆனா, எங்கப்பாகிட்டேர்ந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பும். அதனால அவருக்குத் தெரியாமதான் நாம கல்யாணம் பண்ணிக்கணும். அப்பாலே சொல்லிச் சமாதானப் படுத்திடலாம்’ னாரு.”

ஜகந்நாதனுக்கு எக்கச்சக்கமான அதிர்ச்சி ஏற்பட்டது. ‘இந்தப் பெண்ணுடைய அழகு அவனை அந்த அளவுக்கு மயக்கி யிருக்கிறது!’

“அப்புறம். . . இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேக்கப் போறேன். நீ உண்மையான பதிலைச் சொல்லணும். உன்னை லாட்ஜ் கீட்ஜ்னு கூட்டிட்டுப் போய்த் தப்பான வழியிலே நடந்துக்கிட்டானா?”

“அய்யோ ! அதெல்லாம் இல்லே. அப்படியே கூப்பிட்டிருந்தாலும் நான் போயிருந்திருக்க மாட்டேன், சார்! தயவு செய்து நம்புங்க. நாங்க சந்திச்சதுக்கு அப்புறம் ஒரே ஒரு வாரம்தான், சார், ஆயிருக்கு. ஒரு வருஷமே ஆனாலும் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே, சார்.”

“முன்னே பின்னே பழக்கம் இல்லாத ஒரு ஆம்பளை கூப்பிட்டான்னா உடனே கார்லே ஏறப்பட்ட பொண்ணு மட்டுந்தானாக்கும்!”

சூர்யாவின் கண்கள் நொடிக்குள் கண்ணீரால் நிறைந்துவிட்டன.

“அடாடா! அயாம் சாரிம்மா. கண்ணைத் துடைச்சுக்க. பழக்கமே இல்லாத எவனோ ஒருத்தன் கூப்பிட்டா – அவன் அழகாயிருக்கான்கிறதால மட்டும் – அவனோட கார்லே ஏறிக்கிறதா? ஒரு படிச்ச பொண்ணு செய்யிற காரியமா அது? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? . . . ஜெயகாந்தனோட அக்னிப்பிரவேசம் கதை படிச்சிருக்கியாம்மா நீ?”

“படிச்சிருக்கேன், ” என்ற சூர்யா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“என்ன பிரயோசனம்? ஒரு பொண்ணுக்கு ஆகக் கூடாதது ஆயிட்டா, அதுக்காக அவளோட வருங்காலம் பாழாகக் கூடாதுங்கிறது ஒரு நியாயம். நான் ஒத்துக்கறேன். ஆனா, அப்படி எதுவும் தனக்கு ஆகாதபடி ஒரு பொண்ணு ஜாக்கிரதையா இருக்கணும்கிறது புத்திசாலித்தனம்! இல்லியா? அது ஒரு பொண்ணை எவ்வளவு பாதிக்கிற விஷயம்! கற்பழிப்புன்றது எப்படிப்பட்ட அருவருப்பான கொடுமை! அதுக்கு ஆளாகுற பொண்ணோட மனசும் உடம்பும் என்னாமாத் துடிக்கும்! நான் ஒரு ஆம்பளைதான். இருந்தாலும், என்னை ஒரு பொண்ணாக் கற்பனை பண்ணிப் பாக்கிறப்ப அந்த அருவருப்பை ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடியுது. . .”

“சத்தியமா அப்படி எதுவும் நடக்கல்லே, சார்.”

“அவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சுன்ற உண்மை உனக்குத் தெரியுமா?”

சூர்யாவின் விழிகள் அவற்றின் முழுப் பரப்புக்கு விரிந்தன. அளவு மீறிய அதிர்ச்சியில் மிடறு விழுங்கினாள்.

“நான் கார்லே அவரோட போறதைப் பாத்த என் தங்கையோட சிநேகிதி ஒருத்தி அப்படி ஒரு செய்தியை என் தங்கை மூலமா எனக்குச் சொல்லியனுப்பினா. . நானும் இவர் கிட்ட கேட்டேன். தான் ரெட்டைப் பிள்ளைங்கள்ளே ஒருத்தர்னு சொன்னாரு. தனக்கு ரெண்டு நிமிஷம் முந்திப் பிறந்த தன் அண்ணனுக்குத்தான் கல்யாணம் ஆகியிருக்குன்னாரு. ‘அவனை நான்னு அந்தப் பொண்ணு நினைச்சிருக்கு’ ன்னு சொல்லிச் சிரிச்சுட்டு மத்தா நாளே தான் சொன்னதை நிரூபிக்கிறதுக்கு ஒரு ·போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாரு. அது எங்கிட்டதான் இருக்கு,” என்ற சூர்யா தன் கைப்பையிலிருந்து அந்தப் புகைபடத்தை எடுத்து அவரிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்த ஜகந்நாதன், ‘அடப்பாவி!’ என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். அவரது முகம் சிறுமையில் கறுத்தது.

jothigirija@vsnl.net –
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா