மகாகவி பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ : மதுமிதாவின் தமிழாக்கம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

தேவமைந்தன்


இராமகாதையை வடமொழியில் பாடிய மூவரையும் அவருள்ளும் ஆதிகவியாகிய வான்மீகியையும் சிறப்பாகக் கூறும் கம்பன், மூவரையும் ஒப்புநோக்கி அவருள் வான்மீகியையே தான் பின்பற்றியிருப்பதாகக் கூறுவான். மலையாளத்தில் உள்ள ராம சரிதம்தான், அம் மூவரானவர் – வான்மீகி, வியாசர், அகத்தியர் என்பதைத் தெளிவாக்குகிறது. இராமகாதையின் ‘நகர் நீங்கு படல’த்திலே இராமனைப் பற்றி முதன்மையாகக் கம்பன் குறிப்பிடும் செய்தி –
“தென்சொற் கடந்தான் வடசொற் கலைக்கு
எல்லை தேர்ந்தான்”
என்பதேயாகும். இதற்குக் காரணம் கம்பனுடைய இருமொழி நோக்கே என்பது கலாநிதி கைலாசபதியின் முடிபு. எத்தனையோ இடங்களில் வான்மீகியின் கதையமைப்பு, கதைமாந்தர் உரு வார்ப்பு முதலியவற்றில் கம்பன் வேறுபடுவார். அதற்கு ஏதுஆதி காவியத்தைத் தன் மனத்தில் இருத்தியமையே ஆகும்.(1) வடமொழியிலிருந்து தமிழுக்கு மெய்யான, ஆகுமான மொழியாக்கம் செய்பவரும் அதே மனநிலையில் இருப்பார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

த.நா.குமாரஸ்வாமி அவர்கள் ‘பிரமாதம்’ ‘அபிமானம்’ முதலான வடசொற்களை நம்மவர்கள் தவறாக ‘அபிமானித்து’ மொழியாக்கம் செய்வதுடன் மக்களையும் – ‘அபிமான நடிகர்’ ‘அபிமான நடிகை’ என்று (‘அபிமான ஸ்த்ரீ’ என்றால் என்ன பொருள் என்பதை வடமொழியறிந்தோர் உணர்வர்) தவறான பொருள் வரும்படி எழுதவும் பேசவும் செய்கிறார்களே!” என்று மெத்தவும் வருத்தப்பட்டார்.(2)

மகவுக்குப் பாலூட்டும் தாய் தன் ஒரு மார்பகத்திலிருந்து மறுமார்பகத்துக்குக் குழந்தையை மாற்றுவதுபோன்ற பக்குவத்துடன்(3) மொழியாக்கமானது இருமொழிகளுக்கிடையே மூலப்பிரதியை(original text) மாற்றுவதாக அமைய வேண்டும் என்பதே மொழியாக்கத்துக்கு உரிய – எழுதப்பெறாத விதி ஆகும்.

இவற்றையெல்லாம் இயல்பாகவே புரிந்து வைத்துக் கொண்டோ என்னவோ, மதுமிதா இருபது ஆண்டுக்காலம் முழுமூச்சாக வடமொழியை முறையாகப் பயின்ற பின்புதான் ‘சுபாஷித’த்தைத் தமிழாக்கியிருக்கிறார். அப்படியும் மெய்யான மொழியாக்குநரின் பணிவுடன் தன்னுரையில் பின்வருமாறு சொல்கிறார்:
“..மூல நூலில் உள்ள எழில், கருத்துச் செறிவு, சொல்லாடல் திறன், கம்பீரம், ஒயில் ஆகியவற்றை மொழிபெயர்ப்பில் முழுமையாகக் கொண்டுவர என்னால் முடியவில்லை என்பதை உணர்கிறேன்.
எனது அறியாமையினால் இந்தத் தமிழாக்கத்தில் குறைகளும், தவறுகளும் இருக்கலாம்.
[தமிழாக்குவதற்கான] ஆறு வருட உழைப்பிற்குப் பின்பும் பர்த்ருஹரியின் எழுத்தாளுமைக்கருகில் இது தவிர்க்க முடியாததாகியிருப்பது தவிர்க்க இயலா உண்மை.

ஆனால் உலகில் இதுவரை வந்துள்ள எந்த மொழியாக்கமும் முழுமையானது என்ற சான்றிதழ் பெற இயலாது என்பதுதான் தவிர்க்க இயலா உண்மைஆகும். மொழியாக்கம் மட்டும் அல்ல, மூலப்பிரதியின் படைப்பாளி எவராயினும் அவரும் முழுமையற்றவரே ஆவார். அதனால்தான் –
“முதல்,வழி, சார்பு-என நூல்மூன் றாகும்.”
“அவற்றுள்,
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”
என்று பவணந்தி முனிவர் மொழிந்தார்.(4) பொற்சங்கிலி இரும்புச் சங்கிலி போன்ற நல்வினை தீவினை எதனாலும் தளையுறாத அறிவுதான் ஒளியுடைய தூய அறிவு. அந்த அறிவைக் கொண்டவனே முழுமையானவன். அவன் தனக்கு இயல்பேயான ‘காட்சி'(5)யால் கண்டு படைத்ததே முதல்நூல்.[‘காட்சி’யை வடநூலார் ‘தர்சனம்’ என்பர். ‘முதல்நூல்’ ஆங்கிலத்தில் ‘Prime Text’ எனப்படும்.] இதனால்தான் குறிஞ்சிவேலன் ‘முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்’ என்று தானெழுதிய மலையாளப் படைப்பாளர் வரலாற்றுக்கு அருமையாகப் பெயரிட்டார்.

ஆகவே, பிறப்பு – வளர்ப்பு – இருப்பு ஆகியவற்றினூடு விளைய வல்ல அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்(6) நோக்கோடும் போக்கோடும் -‘அகண்ட காவிரியில் ஒரு துளி'(7)யே போன்று ‘அத்வைத’ நிலை எய்தி, பர்த்ருஹரியின் மூன்று (நீதி, சிருங்கார, வைராக்கிய)சதகங்களையும் ஆழ்ந்து கற்று அவற்றைத் தமிழாக்கி மதுமிதா இந்நூலைத் தமிழ்கூறு நல்லுலகுக்குத் தந்துள்ளார் என்றால் என் கருத்து மிகைக்கூற்று ஆகாது.

‘சுபாஷிதம்’ குறித்து ‘வித்யா ரத்னம்’ ‘பண்டித ரத்னம்’ நவாலியூர் நடராஜன் தன் ஆய்வு நூலில் நவின்றுள்ள இலக்கணத்தை நூலுக்குள் செல்லுமுன் முன்வைப்பது பொருத்தம்.

“நீதிப்பாடல் என்ற துறையில் இந்திய இலக்கியம் அடைந்த சிறப்பு வேறெந்த நாட்டு இலக்கியத்துக்கும் கிடையாது. நீதிப்பாடலும் காதல் பாடல்களோடு தொடர்புடையது. தமிழிலே குறள் வெண்பாவில் யாக்கப்பட்டது போல, வடமொழியிலே சூத்திரத்தில் மிகச் சுருக்கமாக உயர்ந்த அறநெறிச் சாரங்கள் யாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அறநெறியைக் கூறும் போதும், இயற்கையிலமைந்த அழகிய பொருள்களிலிருந்து பொருத்தமானவும் சில சமயம் நூதனமானவுமான உவமைகளைக் கூறுகிறார்கள். சுபாஷிதம் என்ற நல்லுரையை இந்தியக் கவிகள் பெரிதும் விரும்பிப் பாடினர்…….வாழ்க்கையில் பட்ட அநுபவம், சுபாஷிதமாகப் பாடப்படுகிறது. நீதியுரைகளில் சிலவற்றையேனும் அறியாதவர், கல்வியற்ற மூடர் எனக் கருதப்பட்டனர். சுபாஷிதத்தில் ஒரு ஸ்லோகம் இதை வலியுறுத்துகிறது. “சுபாஷிதமறியாத நா, நாவன்று; அது காக்கைக்குப் பயந்து வாயிலே ஒளித்து வைத்திருக்கும் மாமிசத்துண்டு போன்றதே…. சுபாஷிதங்களுள் மிகப் பிரபலமானது சாணக்கியர் பெயரால் வழங்குவது……நீதிப்பாடல் துறையில் மிக்க புகழ்பெற்ற மற்றொரு புலவர் பர்த்ருஹரி. இவர் சிருங்கார சதகம், நீதி சதகம், வைராக்கிய சதகம் என முந்நூறு பாடல்களைப் பாடியுள்ளார்… பர்த்ருஹரியின் இந்தச் சதகங்கள் தொகை நூலெனவும் கர்ண பரம்பரையாய் வந்த இப்பாடல்கள் பர்த்ருஹரியின் தலையில் சுமத்தப்பட்டனவென்றும் ஒரு கருத்துண்டு. இது தவறான கருத்து. இச்சதகங்களிலே ஒரு புலவரால் இயற்றப்பட்ட தனித்தன்மை காணப்படுகிறது. காதலும் துறவும் இன்பத்தையடைவதற்கு இரண்டு வழிகள் என்பதே பர்த்ருஹரியின் சித்தாந்தம். ஒன்று பிரவிருத்தி மார்க்கம். மற்றது நிவிருத்தி மார்க்கம். இந்தப் பர்த்ருஹரி அநேகமாக கி.பி.600-க்கு முன் இருந்திருக்கலாம்… ஐரோப்பாவில் முதல் முதல் பிரசித்தமான சமஸ்கிருதப் புலவர் பர்த்ருஹரியே.(8)

“கி.பி.1200இல் மற்றொரு பர்த்ருஹரியைப் பற்றியும் கேள்விப் படுகிறோம்” என்று மட்டுமே நவாலியூர் நடராஜன் கூறியிருக்கையில், பலவிதமாகக் குறிப்பிடப்படும் பர்த்ருஹரிகளைப் பற்றி ‘பர்த்ருஹரி’ என்ற தலைப்பிலான தன் ஆறுபக்கத் தொகுப்பில்[பக்.13-18] மதுமிதா குறிப்பிட்டுள்ளார். ஔவையார் அறுவர், அகத்தியர் பதினெழுவர் என்ற ஆய்வுமுடிபு போன்றதுதான் இதுவும்.

பன்மொழியறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா, திருக்குறளுடன் ‘பர்த்ருஹரியின் சுபாஷித’த்தை ஒப்பிட்டு, திருக்குறளைப் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலுரைக்கும் சிறந்த நூலென்றும், திருக்குறளைப் போன்றே ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்து சுலோகங்கள் கொண்டுள்ளமை வியத்தகு ஒற்றுமை என்றும் நவின்றுள்ளமை(9) அவர்தம் நடுநிலைப்பட்ட உயரறிவுநிலையை வெளிப்படுத்துகிறது.

இம் மொழியாக்கத்தில் முதற்பகுதியாகிய நீதி சதகத்தில் ‘மங்கலம்’ முன்வைப்பாக, ‘மூர்க்கர் இயல்பு’ முதல் ‘வினைப்பயன்’ ஈறாக அதிகாரங்கள் பத்தும்; இரண்டாம் பகுதியாகிய சிருங்கார சதகத்தில் ‘பெண்ணின் கீர்த்தி’ முதல் ‘பனி மழைக் காலம்’ ஈறாக அதிகாரங்கள் பத்தும்; வைராக்கிய சதகத்தில் ‘ஆசையைப் பழித்தல்’ முதல் ‘பற்றறுத்தல்’ ஈறாக அதிகாரங்கள் பத்தும் பொதியப்பெற்றுள்ளன. நூலிறுதியில் ‘பாடல் பொருள் விளக்கத்’தையும் தந்துள்ளார் மொழியாக்குநர். அதில் இரண்டு இடங்களில்(நீதி:பா.14-க்கும், பா.27-க்கும்) அறிவியல் நோக்கிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே பொழுது, நீதி சதகத்தின் பாடல் 17-க்குத் தரப்பட்டுள்ள விளக்கம் பொருந்துமாறில்லை. வைராக்கிய சதகத்தின் 17ஆம் பாடலின் பொருள் விளக்கம் இங்கும் இடம்மாறி இடம்பெற்றிருக்கக்கூடும்.(ப.39xப.327)

‘ஆனந்த மயமான அறிவு என்னும் மூர்த்தி’யை வழிபட்டு மொழியாக்கம் தொடங்குகிறது. நீதி சதகத்தில், மொழியாக்கம் என்று கருத முடியாத அசலான பகுதிகளுக்குச் சான்றுகள் சில தருகிறேன்:

அறிவுடையவர்கள்
பொறாமை நிறைந்து இருக்கிறார்கள்

செல்வந்தர்கள்
செருக்கு மிகுந்து
நிந்தனை செய்கிறார்கள்

மற்றவர்கள்
அறியாமையால் தாக்குண்டதால்
புரிந்து கொள்ள இயலாதவர்கள்

அதனால்

நான் சொல்ல வந்த
இனிய நல்மொழிகள்
என்னுள்ளேயே
ஜீரணமாகிவிடுகிறது.
**
மெல்லிய தாமரைத் தண்டினால்
மதம் பிடித்த யானையைக் கட்ட
நினைப்பதும்

அனிச்சமலரின் மெல்லிதழால்
வைரத்தை அறுக்க
முயல்வதும்

கடல்நீரின்
உப்புக் கரிப்பை
தேன் துளிகளால்
இனிப்பாக மாற்ற நினைப்பதும்

அமிர்தமான
நற்சொல்லினால்
முட்டாளை
நல்வழிப்படுத்த விரும்புவதும்

வீண்வேலை.

**

ஜாதி
பாதாளத்தில்
தள்ளப்படலாம்

நற்குணங்கள்
அதற்கும் கீழே சென்றுவிடலாம்

ஒழுக்கம்
மலை முகட்டிலிருந்து
கீழே வீசி எறியப்படலாம்

உயர்குலம்
நெருப்பில் எரிந்து போகலாம்

வீரம்
வஜ்ராயுதத்தால் வீழ்த்தப்படலாம்

நஷ்டமில்லை
செல்வத்திற்கு முன்
இவையனைத்தும்
துரும்புக்குச் சமானம்.

**

தமது அறியாமையை
மறைத்துக் கொள்வதற்காகவே
மௌனம் என்னும்
மறைக்கும் திரையை
மூடர்களுக்கு
பிரம்மன்
கருணையுடன் அளித்துள்ளான்.

அறிஞர்கள் நிறைந்த சபையில்
மூடர்களுக்கு
இந்த மௌனம்
சிறந்த அணிகலனாய் அமைகிறது.

[கட்டுரையாளர் குறிப்பு: அப்படியென்றால் மௌனம் உயர்ந்ததல்லவா என்ற வினாவுக்கு விடை – மூடர்களுக்கு மௌனம் அணிகலன்(ornament); மௌனயோகிகளுக்கு மௌனம் இயல்பு(nature) என்பதாம்.]

இனி, அத்தகைய பகுதிகள் மட்டும்:

அரை குறையாகக் கற்று
ஆணவத்துடன் இருப்பவனை
பிரம்மனாலும்
மகிழ்விக்க முடியாது.

***
ரத்தினத்தின் தரத்தை
குறைவாக மதிப்பதனால்
நிந்திக்கப்படுவது
மதிப்பாளர்களே
மாணிக்கங்கள் அல்ல.
[கட்டுரையாளர் குறிப்பு: ‘மதிப்பாளர்களே’ என்பதற்கு மாற்றாக ‘மதிப்பீட்டாளர்களே’ என்று அடுத்த பதிப்பில் ஆக்கிக்கொண்டால் பொருட்குழப்பம் அகலும். மதிப்பீட்டாளர் = appraiser; antiques appraiser போல gems appraiser. ‘மதிப்பாளர்’ என்பது ‘ஆட்சியாளர்’ போல் பொருள்தரும்.]

***
பணிவு இருந்தால்
அணிகலன் தேவையா?

புலமை இருந்தால்
ராஜ்ஜியம் தேவையா?

***
எவர் எவரால் எவர் எவரும்; எவை எவற்றால் எவை எவையும் அழிந்து விடுகின்றன என்பதை விளக்கும் நீதி சதகம் 33ஆம் பாடலும்; இழப்புகளுக்குப் பின்னும் தனி அழகுடன் மிளிர்பவர்களும், மிளிர்வனவும் குறித்து எடுத்துரைக்கும் 35ஆம் பாடலும் உட்கிடையால் அழகானவை. பா.35இல் வரும் “உடலுறவுக்குப் பின் களைப்படைந்திருக்கும் இளம்பெண்,” ‘சதகத்ரய’த்தில் நீதி-சிருங்காரம்-வைராக்யம் மூன்றும் ஒன்றுடனொன்று அவ்வப்பொழுது உறழ நேர்வதற்கொரு சான்று. சிருங்கார சதகத்தின் 62,64ஆம் பாடல்களும் இவ்வாறே.(‘காதலர் மனநிலை’ என்னும் அதிகாரத் தலைப்புக்குப் பொருந்தாதவை; வைராக்கியம் சார்ந்தவை.)

வாளின்மேல் நடப்பது போன்ற விரதங்களை நல்லவர்களுக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்ற வினாவே விடையாக, உரிய விரதங்கள் ஐந்து, பாடல் 57இல் எடுத்துரைக்கப்படுகின்றன. நீதி சதகத்தில் ‘நல்லோர் இயல்’பிற் சொல்லப்படும் ‘புண்ணியம்'(பா.59) சிருங்கார சதகத்தில் பாடல்கள் 18,30,68,70 சொல்லும் ‘புண்ணியம்’ என்பதிலிருந்து மிக நுட்பமாக வேறுபடுகிறது. இவற்றுள்ளும் பாடல் 18 சொல்லும் புண்ணியம் மட்டுமே சிருங்கார சதகத்துக்குப் பொருந்தும். மற்றவை மூன்றும் வைராக்கியத்துக்குப் பொருந்தும். இவற்றுள்ளும் பாடல் 70 சொல்லும் புண்ணியம் விந்தையானது: “மை எழுதிய/ மான் விழியாளின்/ பார்வைச் சுழலில்/ சிக்காத வரையில்/ தூய ஞானதீபம் ஒளிரும்/ புண்ணியம் செய்தவனிடத்தில்” என்றால் என்ன பொருள்? வைராக்கியம் என்பது, சிருங்காரம் விட்டுவைக்கும் வரையில்தான்
– அவன் செய்த புண்ணியம் அது. நிபந்தனைக்குற்பட்டது.

ஆக்கத்துக்கும் அழிவுக்கும் விதியே முதன்மைக் காரணம் என்பது மிகவும் பொருத்தமான பாம்பு – எலி கதைப்பாடலாக (பா.82) விரிகிறது. அடுத்த பாடலில், பந்து – களிமண்ணுருண்டை பற்றிய செயலுவமை இடம் பெறுகிறது. பந்து – நல்லவர்; வாழ்க்கையில் விழ நேர்ந்தாலும் உடனே கீழிருந்து மேலெழுந்துவிடுவர். களிமண் ணுருண்டை – தீயவர்; வாழ்க்கையில் விழுந்துவிட நேர்ந்தால் எழ முடியாமல் கீழேயே விழுந்து கிடப்பர். உவமை உணர்த்தும் பொருள் அருமை. இந்தப் பாடல் 83க்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கமான முழுப்பாடலும் (ப.329) சிறப்பாகவுள்ளது.

‘ஜடதெய்வ’த்தை விடவும் சான்றோர் மேலானவர்கள் என்ற அந்தக் காலத்திய புரட்சிக் கருத்து பாடல் 89இலும்; விதியை வரையறுக்கும் வினை(karmA)யின் பெருமை, பாடல்கள் 91, 93களிலும் நவிலப்பட்டுள்ளன.

சிருங்கார சதகத்தில் பர்த்ருஹரி பெண்ணின் மார்பையும்(payO-dhara:)# பின்பக்கத்தையும்(prstha:)## ஆணியநோக்கில் பெண்ணுடலில் மையப்படுத்துகிறார். பர்த்ருஹரியின் காலச் சமூகச் சூழல் – ஆண்உளவியல் அவ்வாறு இருந்திருக்கக் கூடும். தமிழில் ‘காமம்’ என்பதுதான் பழங்காலத்தில் ‘நிறைவானதும் முழுமையானதுமான காதல்’ உணர்வைக் குறித்தது. “காமம் நிறைந் தியலும்”(10) என்பது தொல்காப்பிய நூற்பா. காமம் என்பது நிறைவாகிய பொருளுற்று நிகழும் என்பது அதன் பொருள். காதல் என்ற சொல், பக்தி இலக்கிய காலத்துச் சொல். திருக்குறளில் மூன்றாவது பாலாகிய காமத்துப்பாலை இன்பத்துப்பால் என்று மு.வ. மாற்றியபோது ஏற்பட்ட எதிர்ப்பு, மொழித்திறனையும் மொழிக்கட்டுமானத்தையும் பொருத்தவரை சரியானதே.

பர்த்ருஹரி பாடுகிறார்(பா.36):

பூஜிக்கத் தகுந்தவர்களே!

அசூயை விடுத்து
ஆலோசித்து

மரியாதையுடன் செய்ய வேண்டிய
செயல்கள் இதுவென
உறுதியாகச் சொல்லுங்கள்

பூமியினைப்
புகலிடமாகக் கொள்வதா?

அல்லது

மென்சிரிப்புடன்
மன்மத கேளிக்கை சுகமளிக்கும்
மங்கையின் பிருஷ்டங்களைச்
சரணடைவதா?

**
‘மென்மையானவளே!’ என்று தொடங்கும் 12ஆம் பாடல் மிக மென்மையாகவும் மேன்மையாகவும் பெண்ணழகைச் சித்திரிப்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பெண்ணை யோகியுடன் உருவகிக்கும் பாடலிது. மொழியாக்குநர்வழி விளக்கம்:
பெண் யோகி
கச்சிதமாய் வாரப்பட்ட கூந்தல் புலன்களின் வெற்றி
காதுவரை நீண்ட கண்கள் வேத வேதாந்தங்களில் தேர்ச்சி
தூய பல் வரிசை நன்னடத்தை
முத்துமாலையணிந்த மார்பகங்கள் முக்தி பெற்ற நிலை
**
“பார்க்காத போது/அவளைப்/பார்ப்பது மட்டுமே/ஒரே ஆசை” என்பது பாடல் 22இல் தலைவன் நிலை. திருக்குறளில், “நோக்காக்கால் /தான்நோக்கி மெல்ல நகும்” (1094) – என்பது தலைவியின் நிலை.

‘குலப் பெண்ணிற்கு உரிய’ காமத்தை பர்த்ருஹரி பதிவு செய்திருப்பதை பாடல் 24இல் உணரலாம்.

பாடல் 19, ‘மன விகாரத்தின்/முதன்மையான குரு’ யார் தெரியுமா? என்று கேட்டு மறுமொழியாக ‘வெகு காலமாய்/மனதைத் திருடுபவள்’ என்று தெரிவிக்கிறது.

பெண் எவ்வாறு கோள்கள் எனப்படும் கிரகங்களாய் ஜொலிக்கிறாள் என்னும் 17ஆம் பாடலுக்கு மொழியாக்குநர் கொடுத்துள்ள விளக்கம்(ப.330) சிறப்பு. கிரகமயமாய் என்று சொல்லிவிட்டு ‘நட்சத்திரமாய்’ என்றும் ஏன் சொல்லியிருக்கிறார் என்று புரியவில்லை.(ப.330)

27ஆம் பாடலில் மன்மதன் தாக்குதல் எந்த வயது – எந்த உடல்நிலை வரை என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பர்த்ருஹரி வரையறுத்திருப்பது கொஞ்சம் முரணானது. பாடலின் மொழியாக்கத்தில் இரண்டாம் மூன்றாம் பத்திகளின் நடுவில் “…..பெண்களுக்கு” “மங்கையரின்” என்ற தொடர்ச்சி குழப்பம் தருகிறது. அதேபோலத்தான் கணிகை(பா.58), வேசி(பா.59) என்று சொல்லிவிட்டு அதே பொருள் தொடர்பில் ‘மங்கை'(பா.60) என்று சொல்லுவதும். 60ஆம் பாடலின் கடைசிப்பகுதி, நேரடி மொழிபெயர்ப்புப் போலவுள்ளது. அல்லது அச்சுப்பிழையோ?

“பெண்ணின்/கன்னம் போல் சற்றே/வெளுத்த வெற்றிலைக்கொடி இலை”(பா.34), அழகிய உவமை. ‘திறமை மிக்க குரு’ குறித்த விளக்கத்தில்(பா.37) கற்றறிந்த ஆடவருக்கு அன்றிருந்த வழிகள் இரண்டை(ஞானவழி, மோகவழி) பர்த்ருஹரி வெளிப்படுத்துகிறார். இதுவே வேறுவிதமாகப் பாடல் 38இல், பாபம் போக்கும் இரண்டு வழிகளாக(கங்கை நதிக்கரையில் வசிப்பு, மார்பகங்களில் வசிப்பு) புலப்படுத்தப் படுகிறது.

பொதுவாகவே இந்திய இலக்கியத்தில் நீதிநூல்களுள் பாடல்களை மட்டுமே, படைத்தவர்கள் புனைந்திருப்பார்கள். அதிகார வகுப்பைப் பின்வந்தவர்களோ உரையாசிரியர்களோதாம் செய்திருப்பார்கள். சிருங்கார சதகத்தில் அதற்குச் சான்றுகள்:

உயிரானவள்
குவளைக் கண்ணழகி
பருத்த பிருஷ்டங்கள்
பருத்த முலைகள்
தாமரை முகம்
அழகிய புருவங்களுடையாள்
என
இம் மங்கையரை
பண்டிதர்கள் புகழ்கின்றனர்

சுத்தமில்லாத
தோல்பையாலான சரீரமென
உண்மையை அறிந்திருந்தும்
மோகத்தின் தீச்செயலால்
இவ்விதம் போற்றி
மகிழ்கின்றனர்
(‘பெண்ணில் இருமை,’ பா.41)

……………………
அறிவின்மையால் மனிதர்கள்
தோல்,தசை,எலும்புகளாலான
மான் விழியாளைப்
போற்றுகின்றனர்.
(‘பெண்ணில் இருமை,’ பா.46)

…………………….
அழகிய பெண் நதி
குரூரமானது.
அதிலிறங்கி
சம்சாரக் கடலில் மூழ்காதிருக்க

விட்டு விலகியிரு
(‘பெண்ணில் இருமை,’ பா.49)

ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?
(‘பெண்ணில் இருமை,’ பா.50)

இச்சதகத்தில் ‘காதலர் மனநிலை’ என்ற தலைப்பில் வரும் பா.62 வைராக்கிய சதகத்தில் இருந்திருக்க வேண்டும். முதல்முதலாகப் பாடல்களை ஏட்டில் பதித்தோரும், பின்வரும் உரைகாரரும்தான் இவ்வாறு செய்திருக்கின்றார்கள். “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்!’ என்று இதனால்தான் வந்திருக்கும் என்பர் அறிஞர் சிலர்.

இதே ‘காதலர் மனநிலை’ பா.64, பிறைசூடியின் ‘பாதாரவிந்தங்களின் தியானாமிர்தம் அருந்துவதில் (தற்சமயம்) மனம் மூழ்கியுள்ள’ அடியார் மனநிலை பற்றியதும் இப்படிப்பட்டதே. பாடல்கள் 67,68,69 போன்றனவும் வைராக்கியம் எய்திய நிலையையே சுட்டுகின்றன. ‘சதக த்ரயம்’ என்பதனால் ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல்கள் சரியாக வகுக்கப்பெறல் வேண்டும் என்று கருதி இவ்வாறு செய்திருக்கலாம். பாடல்கள் சில காணாமல் போயிருந்தாலும் இவ்வாறு நிகழும்.

பா.78இல் வரும் – உடைந்த மண்சட்டியை மாலையாய்க் கழுத்தில் அணிந்த நிலையை உடைய நாய், சித்தர் பட்டினத்தார்தம் சீடர் பர்த்ருஹரி கதையில்வரும் நாயின் தோற்றத்தை நினைவுறுத்தும்.

நிர்வாணமாகவும் மொட்டையடித்துக் கொண்டும் குடுமி தரித்தும் ஜடாமுடியுடனும் கபாலமேந்தியும் சிலர் ஏன் திரிகின்றார்கள்? மீன்கொடியோன் மன்மதனின் ‘ஸ்த்ரீ முத்திரை’யைப் புறக்கணித்ததால் தானாம்.(பா.79) விந்திய மலை கடலில் மிதக்குமா? மிதக்கும். எப்பொழுது? காற்று, நீர், மர இலைகளை மட்டுமே உண்டு உயிர்த்த விசுவாமித்திரர், பராசரர் ஆகிய முனிவர்கள் கூட – தாமரைமுகமுடைய அழகு மங்கையரைக் கண்டதும் மோகம் கொண்டிருக்க, பால்-தயிர்-நெய்யுடன் சம்பா அரிசியுணவுண்ணும் மனிதர்கள் புலனடக்கம் மேற்கொண்டால் அப்படியும் நடக்கத்தான் செய்யுமாம்.(பா.80)

இன்னும் வசந்தகால வரவு, வசந்தகால இரவு, கோடை காலத்திலும் பாக்கியவான்கள் சுகத்துக்குக் காரணம், மழைக்காலம்(“மேலே கனத்த/மழைமேகக் கூட்டம்/மலைச் சரிவுகளில்/மகிழ்வுடன்/மயில் கூட்டத்தின் ஆட்டம்/புதுமலர் மொட்டுகளால்/வெண்மையாகியுள்ளது/ பூமி -பா.92), ‘பரிபூர்ண வளர்ச்சியுடன் அழகிய ப்ரியங்குக் கொடி’ விளங்கும் குளிர்காலம்(மான்விழியரைப் பெறாதோர்க்கு இரவில் நொடிப்பொழுதும் நீண்டு ‘யமனின் மாளிகைக்கு இணையாக இருக்கும்’-பா.98), காமமிக்க காதலன் போலவும் நங்கையிடம் நாயகன் போலவும் நடந்துகொள்ளும் குளிர்காலக் காற்று(பாடல்கள் 99,100) முதலானவற்றை முப்பரிமாண ஒலி-ஒளி-மணம்-உணர்வுக் காட்சிகள் ஆக்கும் சிருங்கார சதகப் பாடல்களும் அவற்றை அவ்வாறே வர வழிவிட்ட மொழியாக்கமும் பாராட்டத் தக்கவை. ஆணிய மொழிபெயர்ப்பில் வந்த சிருங்கார சதகம்(11) படித்தவர்களுள் நயம் மட்டும் எதிர்நோக்குவார்க்கு இவ்வாக்கம் ‘மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று'(12) ஆகும்.

வைராக்கிய சதகம் (அழகு,இளமை,செல்வம்,யாக்கை) நிலையாமையை மிகவும் வயணமாக எடுத்துரைக்கிறது. இதில் ‘நிந்தாஸ்துதி’ போல சிவபெருமான் இயம்பப்படும் பாடல் தொன்மச் செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே பெற்றுள்ளது.(பா.17) பாடல் –

சிவன்
பிரியமானவளைத் தன் உடலின்
பாதி பாகமாகக் கொண்டு
காமுகர்களின் ஒரே தலைவனாய் உள்ளான்

பெண் இன்பம் துறந்த
வைராக்கியசாலிகளுக்கும்
சிவனை விடுத்து வேறு தலைவனில்லை

மீதி மனிதர்கள்

மன்மத அம்பெனும்
பாம்பின் விஷத்தால் தாக்கப்பட்டு
மோகம் கொண்டதால்

அவர்களால் இன்பங்களை
முழுமையாக அனுபவிக்கவும் இயலவில்லை
முழுமையாகத் துறக்கவும் இயலவில்லை

**
என்ன நயமான பாடல்! இதற்கு மொழியாக்குநர் தந்துள்ள விளக்கம் – “சிவன் பார்வதியை மணப்பதற்கு முன் பெண்ணின் அழகிலிருந்து விடுபட்டிருந்தான். காதல் உணர்வினைத் தூண்ட விரும்பி மலர்க்கணை தொடுத்த மன்மதனையும் எரித்து சாம்பலாக்கினான். ஆனால், இதயத்தில் இந்த அழகியைத் தன்னுடையவளாக ஏற்றுக் கொண்டதும், அவளைச் சிறு நொடி கூடப் பிரிய இயலாமல் அர்த்தநாரீஸ்வரனாகத் தன் பாகமாக்கிக் கொண்டான். ஆகையால் சிவன் ஒருவனே உலக இன்பத்தில் நாட்டம் உடையவர்களுக்கும், உலக இன்பத்தில் நாட்டம் இல்லாதவர்களுக்கும் ஒப்பில்லாத் தலைவனாயுள்ளான்.(ப.331)

குழம்புபவன், கலங்குபவன் யோகி அல்லன்(பா.92):

பிரம்மாண்ட உலகம்
குழப்பாது
யோகியை
**
சிறு மீனின் துள்ளலால்
கலங்காது கடல்.

வைராக்கியமெனும் வாளால் பற்றறுத்த யோகியோ பரிபக்குவ மனதுடன் மகிழ்வாக உள்ள பாக்கியவான்களோ அடைய விரும்பும் புண்ணிய நாள் எது? விடை, பாடல் 98இல்:
கங்கையின் கரையில்
இமயமலையின் கல்லில்
பத்மாசனத்தில் அமர்ந்து
தியானத்தில் ஆழ்ந்து

யோக சமாதி நிலையைப்
பெற வேண்டும்.

அந்நிலையில்
என்னுடைய உடலில்

சிறிதும் பயமின்றி
வயதான மான்கள்
தங்கள் உடல்
அரிப்பிற்காக
உரசிக் கொள்ள வேண்டும்

அந்தப் புண்ணிய நாள்
விரைவில் வருமா?

**

சுபாஷிதமென்னும் முப்பெருங்கடல்களுள் ஒன்றான வைராக்கிய சதகத்தில் மேலும் சிலவற்றைத் துளிகளாகத் தருகிறேன்:

விஷய சுகங்களெனும் பெண்யானையின் மேல் ரகசியமாய் வேரூன்றிய பிரியத்துடன் ஆசை கொண்டுள்ள ஆண்யானை(பா.81); கண்களில் நீர் ததும்ப, கோபத்தில் ஒளிரும் பிரிய மனைவியின் அழகான முகம்(பா.79); விளக்கின் ஒளிதேடி சுற்றிவரும் விட்டில் பூச்சியின் சிறு இறகசைவினால் வீசும் காற்றில் அலையும் தீப ஒளி(பா.80); குதிரையின் மனம் போன்று சஞ்சலம் கொண்ட கோவேந்தர்கள்(பா.77); தூய கங்கைக் கரையில் செய்யும் தவமா? குணமும் அழகுமுடைய மனைவிக்குச் செய்யும் பணிவிடையா? பல காவியங்களின் அமிர்த சாற்றைப் பருகுவதா? நிலையற்ற வாழ்வில் எதைச் செய்வது?(பா.76); பாழ்ங்கிணற்றை விட்டு விலகிச் செல்வது போல், முதுமை எய்தும் ஆடவரை விட்டு விலகிச் செல்லும் மகளிர்(பா.74); யானையின், சதா அசையும் காதுகள் போன்ற நிலையில்லா இவ்வுடலின் நிலை(பா.72); மன்னனின் புருவத்தில் குடியிருக்கும் காரியவாதியான விலைமகளைப் போன்ற நிலையில்லாத செல்வம்(பா.65); மனவேதனையளிக்கும் புலன்களெனும் வனம்(பா.63); பிறர் மனத்தை மகிழ்விக்கும் பொருட்டு நாளும் துன்புறாமல், தான் தன் உள்மனதில் மகிழக் கற்றுக் கொண்டால், நினைத்ததை அளிக்கும் சிந்தாமணியை ஒத்த குணம் தானாகவே உதித்து, விடுபட்ட எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி விடாதா?(பா.61);எல்லையற்ற ஆசைகளுடனிருப்பவன் ஏழை(பா.53); நீரலை போன்ற நிலையில்லா வாழ்வு(பா.49); நதிக்கரையின் மணற்பரப்பில் வளரும் மரங்களைப் போல் தினமும் மரணத்தை நெருங்கி உள்ள நிலை(பா.48); பிறரின் உணவை எதிர்பார்க்கும் காகம் போல் கழியும் [சார்பு] வாழ்க்கை (பா.46); பாழடைந்த வீட்டில் எரியும் விளக்காக(பா.46), இளமை வனத்தை வீணாக அழிக்கும் கோடரியாக(பா.45), அறியாமையால் கவனக்குறைவு எனும் மதுவைக் குடித்து(பா.43) மகிமை வாய்ந்த இளமைக்காலம் வீணாதல்; புலியைப் போல் பயமுறுத்தும் முதுமை, விரோதியைப்போல் உடலைத் தாக்கும் வியாதி, உடைந்த பானையிலிருந்து வழியும் நீர் போல் ஒழுகும் ஆயுள்(பா.38); மேகங்களிடையே மின்னி மறையும் மின்னல் போல் நிலயற்ற உலக இன்பம், காற்றின் வேகத்தால் சிதறும் தாமரை இலை நீர் போல் நிலையற்ற ஆயுள்(பா.35); உயரும் அலை வீழ்வது போல் நிலையற்று வீழும் சுகங்கள்(பா.34); எங்கே செல்வம் உள்ளதோ, அங்கே திறந்த வாயிலில் நுழைவது போல் நுழையும் அழிவு, பிறக்கப் பிறக்க ஆயுளைத் தன் வசமாக்கிக் கொள்ளும் யமன்(பா.33); அழகிய நகரம், அரசாண்ட மன்னன், அகிலம் பரவிய ராஜ்ஜியம், அறிஞர்கள் நிறைந்த அவை, நிலவுமுக நங்கையர், கர்வத் துடுக்கு நிரம்பிய இளவரசர்கள், துதிபாடிகளின் கதையாடல்கள் – இத்தனையையும் தன் வசமாக்கிக் கொண்டு நினைவுச் சின்னங்களாக மாற்றும் காலம்(பா.41); நூற்றுக்கணக்கான ஆசைகளை அழித்து விடும் சுய அனுபவ அறிவுச் சுடரொளி(பா.39); சிறு செல்வம் பெற்றதனால் கர்வம் கொண்டு புருவங்களை உயர்த்தும் தீயவனின் [திருந்தாத] முகம்(பா.25); நிரப்பவே இயலாத பானைபோல் வலிந்து மோசம் செய்யும் வயிறு(பா.22); (தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விடுமோ என்று பயந்தபடி) எழுத்துக்களைத் தனித்தனியே உச்சரிப்பதுபோல் வாய்குளறி, தழுதழுத்த குரலில் வயிற்றுக்காகத் “தா!” என்னும் இரத்தல்(பா.21); குளிர்ந்த ருசியான நீர், மாமிசத்துடன் கலந்துண்ணப்படும் சுவையாகச் சமைக்கப்பட்ட சம்பா அரிசிச் சோறு, காம நெருப்பை அணைக்க அணைக்கும் இளம்பெண் – நோய்க்குப் பரிகாரங்களே இவை, சுகங்களல்ல(பா.19); ருசியில்லாப் பிச்சையுணவு ஒருவேளை மட்டும், பூமியே படுக்கை, தன்னுடலே உறவினன்,நூற்றுக்கணக்கான கிழிசல்களாலான நைந்த கந்தல் துணி உடை – ஆனாலும் உலக ஆசைகளை விட்டு விட இயலா விருப்புடையோன்(பா.15); மலைக்குகைகளில் வசித்துப் பரமாத்மாவைத் தியானம் செய்யும் பாக்கியசாலிகளான வைராக்கிய சித்தர்களின் மடிமேல் சிறிதும் அச்சமின்றி அமர்ந்து அவர்களின் விழிகள் பொழியும் ஆனந்தக் கண்ணீரை அருந்தும் பறவைகள்(பா.14); தைரியம் எனும் மரத்தை அடியோடு அடித்துச் சாய்த்துவிடும் ஆசை என்னும் ஆற்று வெள்ளத்தில் விருப்பம் என்னும் நீர் பெருகிப் பேராசை என்னும் பேரலைகளாய்க் கொந்தளிக்கும், காதலெனும் முதலை கள்ளமாய் நீந்தும், சந்தேகமெனும் பறவைகள் சலசலத்துப் பறக்கும், மோகமெனும் சுழல் தாண்ட விடாது, ஆழமானது, சிந்தை என்னும் கடினமான உயர்ந்த கரைகள்…இத்தனையையும் கடந்து அக்கரை சென்று ஆனந்தம் அடைபவர்கள் தூயமனமுடைய யோகிகளே(பா.10); இன்னும் இன்னும் வளர்ந்து பாவம் சேர்ப்பவள் – ஆசை (பா.2); நன்மை நல்கும் மங்கலத்திற்கு இருப்பிடம் – மனத்தை மயக்கும் அடர்ந்த அறியாமை இருளை விரட்டி அகற்றும் ஞானம் பிரகாசிக்கும் விளக்கு, யார்? யோகிகளின் மனக்கோவிலில் வெற்றியுடன் வீற்றிருக்கும் சிவன்(பா.1)

வைராக்கிய சதகத்தின் இறுதிப் பாடல், ஐம்பெரும் பூதங்களிடமிருந்து விடைபெறுவதாகவும் இறுதி அஞ்சலியாகவும் விளங்குகிறது.(பா.100)

தாயான நிலமே
தந்தையான காற்றே
நண்பனான நெருப்பே
உறவினனான நீரே
சகோதரனான ஆகாயமே

உங்களுடனான உறவால்
உண்டான புண்ணியத்தால்
சிறப்பாக விளங்கும்
தெளிவான ஞானம்
கிடைக்கப் பெற்றேன்

மோகங்களை
இழந்து
பரப்பிரம்மத்தில்
ஆழ்ந்து விட்டேன்.

உங்கள் அனைவருக்கும்
இதோ
எனது கரங்குவித்த
இறுதி அஞ்சலி.

**
தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணி(13)போல் வாசிக்க வாசிக்க, கற்கக் கற்க ‘ஞானானந்தம்’ தந்து ‘விட இயலா விருப்பத்'(14)தையும் நல்கக் கூடியது இந்தச் சுபாஷித மொழியாக்கம் என்பது என் வாசிப்பினால் நான் புரிந்துகொண்ட உண்மை.

*********************
அடிக்குறிப்புகள்:

ஒலிப்பு: # yO=யோ. : = ம். ## r,s,t-களின் கீழ் புள்ளியிட வேண்டும். அவ்வசதி, இக்கணினியில் இல்லை. : = ம்.
1. கைலாசபதி, கலாநிதி க. ஒப்பியல் இலக்கியம், சென்னை புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை, மூன்றாம் பதிப்பு, செப்.1982, ப.4.
2. சென்னைத் தொலைக்காட்சியின் தொடக்க ஆண்டுகளில் வடமொழி – தமிழாக்கம் குறித்து உரையாற்றிய பொழுது த.நா.கு. இவ்வாறு சொன்னார்.
3. இரவீந்திரநாத் தாகூர் கருத்து.
4. நன்னூல், 5-6.
5. புறநானூறு:192, கணியன் பூங்குன்றன் பாட்டு.
6. குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பா.62.
7. மரத்தடி.காம் கவிதை
8. நவாலியூர் நடராஜன், வடமொழி இலக்கிய வரலாறு, கலைஞன் பதிப்பகம்(வி.உ.), சென்னை.17. 1979. பக்.213-214; 216-217.
9. சுபாஷிதம் அணிந்துரை.
10. தொல்காப்பியம், 838.
11. கண்ணதாசன், ராஜா பர்த்ருஹரியின் சிருங்கார சதகம்.
12. திருவருட்பா.
13. திருக்குறள், 396.
14. சுபாஷிதம், வைராக்ய சதகம், இரண்டாம் தலைப்பு.

***

புத்தகம்:

சுபாஷிதம்
(நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்ய சதகம்),
சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில்:
மதுமிதா

பதிப்பு:
சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 332. விலை: ரூ. 150/-
தொ.பே: 044 -24896979, 55855704

****
karuppannan.pasupathy@gmail.com
http://httpdevamaindhan.blogspot.com

Series Navigation