போர் நாட்குறிப்பு – 29 மார்ச் 2003

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

இரா முருகன்


இராக்கை ஆக்கிரமித்துப் போர் தொடங்கிப் பத்து நாளாகி விட்டது.

சதாம் உசைனை விரட்டி, துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் மூன்றே நாளில் வேலையை முடித்து ஏறக்கட்டி விட்டுக் கிளம்பிவிடுவோம் என்று நம்பிக்கையாகப் புறப்பட்டவர்கள் பத்து நாளில் அழித்தது பாக்தாத் சந்தைகளில் நடமாடிய நூற்றுக்கணக்கான அப்பாவி ஜனங்களை. மற்றபடி, ‘friendly fire ‘ என்று தப்பும் தவறுமாக முடிவெடுத்துத் தங்களுக்குள்ளேயே குண்டுமழை பொழிந்து சக அமெரிக்க, பிரிட்டாஷ் ராணுவ வீரர்களை.

டொனல்ட் ரம்ஸ்ஃப்லெட் இன்னும் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்களைப் போர்முனைக்கு அனுப்பத் திட்டமிட்டுக் கொண்டிருக்க, படையோடு நடக்கும் டெலிவிஷன் செய்தியாளர்கள் பாஸ்ரா விழப்போகிறது, பாக்தாத்துக்கு இன்னும் நூறே மைல் என்று இந்தப் பத்து நாளும் சளைக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரின்ஸ் சார்லசுக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் நடந்த செய்தியைக் கூடப் பின்னால் தள்ளி, கொடூர ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இராக்கில் கண்டுபிடிக்கப்பட்டன என்று பரபரப்பாக ஒருநாள் பிபிசி அலறியது. நாலு நாள் கழித்து எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் யாரோ அதைப்பற்றி மறக்காமல் கேட்க, போர்க்காலத்தில் ஆயிரம் செய்தி வரும் போகும். எல்லாவற்றுக்கும் பின்னால் போய்க் கொண்டிருக்க முடியுமா என்கிறார் அமெரிக்கத் தளபதி.

இரண்டு இங்கிலாந்து வீரர்களைப் பிடித்து வதைத்து இராக் கொடூரமாகக் கொன்றது என்று டோனி பிளேர் பேட்டி கொடுத்தார். அடுத்த நாள் ‘இங்கிலாந்து வீரர்கள் இராக் படையோடு துப்பாக்கிச் சூடு நடத்தி மோதியபோது மடிந்தார்கள் ‘ என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு. ‘executed ‘ என்பதற்கும் ‘killed in action ‘ என்பதற்கும் ஒரே அர்த்தம் தான் என்று இனி ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி திருத்தப்படலாம்.

சானல் நாலு தொலைக்காட்சி இங்கிலாந்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. பாரபட்சம் இல்லாத அதன் செய்தியாளர் ஜான் ஸ்நோ தான் அதற்கு முக்கிய காரணம்.

சிறைபிடித்த அமெரிக்க வீரர்களை இராக்கியத் தொலைக்காட்சியின் காட்டியது ஜெனிவா கோட்பாடுகளுக்கு எதிரானது என்ற அமெரிக்க அரசியல் பிரமுகரிடம் ஜான் ஸ்நோ கேட்டார் – ‘அப்போ செப்டம்பர் பதினொண்ணுக்கு அப்புறம் ஏகப்பட்ட பேரை விசாரணை இல்லாமல் பிடித்து க்யூபா பக்கம் ஒண்ணரை வருடமாக வச்சிருக்கீங்களே ..அது ? ‘

‘நீ யார் அதைக் கேட்க ? நீ என்ன பெரிய வக்கீலா ? சொல்லுய்யா .. நீ என்ன பெரிய வக்கீலா ? ‘

பிரிட்டனில் முன்னாள் அமெரிக்கத் தூதுவரான அந்த அமெரிக்கர் எகிறியதில் அமெரிக்காவின் ஒருமித்த குரல்தான் கேட்டது. டேய்ய்ய் என்று குரல் விட்டுக் கொண்டு வரும் பேட்டை வஸ்தாதின் குரல் அது.

இராக் தொலைக்காட்சி நிலையம் குண்டுவீசித் தாக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் அழிக்கப்படுகின்றன. எல்லாம் இராக்கியர்களை சதாம் உசைனிடமிருந்து விடுவிக்கத்தானாம்.

‘திரும்பத் திரும்ப இராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிறைப்பிடிக்கப் பட்டதைக் காட்டாதே .. ‘ என்று அல் ஜசீரா டிவிக்காரர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

‘இராக்குக்கு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தாவிட்டால் உங்களையும் கவனிக்கற விதத்துலே கவனிச்சுக்க வேண்டி இருக்கும் ‘

ரம்ஸ்ஃப்லெட் சிரியாவை மிரட்டி இருக்கிறார். ராத்திரியில் தெளிவாகப் பார்க்க வைக்கும் கண்ணாடிகளை சிரியா இராக்குக்கு ஏற்றுமதி செய்ததாம். போகிற போக்கில் இராக்குக்கு குண்டூசி, சேஃப்டி பின் கொடுத்தால் கூட ‘படுவா .. வெப்பன்ஸ் ஃஓப் மாஸ் டெஸ்ட்ரக்ஷன் சப்ளை செய்யறியா ‘ என்று உலகத்தில் எந்தக் கோடியிலும் யாரையும் குற்றம் சாட்டி அமெரிக்க அரசு கைது செய்ய முற்படலாம்.

செப்டம்பர் பதினொன்று அமெரிக்காவில் அழித்தது உயிர்களையும் உலக வர்த்தக மையக் கட்டிடங்களையும் மட்டும் இல்லை. அமெரிக்கர்கள் இதுவரை உயர்த்திப் பிடித்த தனி மனித சுதந்திரத்தையும் தான் என்று தோன்றுகிறது.

அரசாங்கம் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு கண்மூடித்தனமாக ஆதரிக்க ஒரு பெரிய ஜனக்கூட்டமே தயாராகிவிட்டது இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம்.

பைஜாமா அணிந்த தாடி வைத்த தீவிரவாதி அரேபியர்கள் இரண்டாயிரம் அமெரிக்கர்களை வாஷிங்டனில் அழித்த பிறகு நாடு முழுக்க எழுந்த பயத்தின் அடிப்படையிலானது இந்த ‘தாசில்தார் சொன்னா சரியாத்தான் இருக்கும் ‘ நம்பிக்கை.

போர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் சாமானியர்களைக் கைது செய்கிற ஒரே நாடு அமெரிக்காவாகத்தான் இருக்கும். காலம் சென்ற சோவியத் யூனியனைப் பற்றி அமெரிக்கர்கள் சொன்ன ‘அண்ணாச்சி பாத்துக்கிட்டு இருக்கார் .. உஷார் ‘ பயம் இப்போது அமெரிக்கர்களையும் பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ, போர் எதிர்ப்பு சத்தங்கள் பிரபலங்கள் மத்தியிலும் சாமானியர் மத்தியிலும் மங்கித்தான் கேட்கின்றன. மீறிச் சத்தம் போட்டவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும், தீவிரவாதத்துக்குத் துணைபோகிறவர்கள் என்றும் வசைபாடப்படுகிறார்கள்.

‘Willing Executioners of Hitler ‘ என்று இரண்டாம் உலகப் போர் நாட்களில் யூதர்களை வதைக்க நாஜி அரசுக்குத் துணைபோன ஜெர்மானியப் பொதுஜனத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் போல் இன்னொன்று எழுதப்படும் நாள் அதிகத் தொலைவில் இல்லை.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் ஊரோடு ஒத்துப் போகிறார்களா என்று தெரியவில்லை. போரை எதிர்த்துக் குறைந்த பட்சம் புதுக்கவிதையாவது எழுதியிருந்தால் சரிதான்.

***

eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்