பொறுப்புடன் எழுதுவோம்

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

திண்ணை ஆசிரியர் குழு


நேர்ப்பேச்சில் ஒருவர் என்ன சொன்னார் என்று ஒருவர் இன்னொருவருக்கு எழுதி, அந்த மூன்றாமவர் கடிதத்தை மேற்கோள் காட்டி, எழுத்தில் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்புவதும், மூன்றாமவர் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றி அவதூறு செய்வதும், எந்த விதத்திலும் பொறுப்பான விவாதத்திற்கு வழி வகுக்காது. எவை எழுத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறதோ அதுவே விவாதத்திற்கும் , விமர்சனத்திற்கும் பொருளாக வேண்டும்.

இது போன்ற அவதூறுகளைத் தவிர்ப்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருப்பது வழக்கம். இருந்தும் எங்கள் கவனத்திற்குத் தப்பி இப்படி நேர்ந்துவிட்டது. இந்த அவதூறுகள் நிரந்தரப் பதிவு பெறலாகாது என்று உடனடியாக நாங்கள் இதனை நீக்கிவிட்டோம். இவற்றைத் தவிர்க்க ஒரே வழி திண்ணைக்கு எழுதுபவர்கள் பொறுப்புடன் எழுதுவது தான். தயவு செய்து, பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் பற்றி மட்டுமே எழுதுங்கள். அவதூறைத் தவிர்க்கவும்.

வ ஐ ச ஜெயபாலன் சிறந்த கவிஞர். மனிதாபிமானி.அவர் தன்னைப் பற்றியும் சரி தன் கருத்துகளையும் சரி முன்வைக்கத் தயங்கியதில்லை. தீம்தரிகிட முதல் இதழில் அவருடைய நீண்ட பேட்டியும் வெளியாகியுள்ளது. அவர் கருத்துக் கூற விரும்பினால் அதில் பதிவு செய்திருக்க முடியும். நேர்ப்பேச்சில் ரகசியமாய்ச் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஒருவர் தன் நண்பரிடமோ ,சிஷ்யர்களிடமோ பரிமாறிக் கொள்ளும் கடிதம் தனிப்பட்ட வாசிப்புக்கானது( for private consumption). அதை வெளிப்படுத்தும் போது, சம்பந்தப் பட்ட அனைவரின் அனுமதி பெறவேண்டும் என்பது ஒரு நாகரீகம். அப்படிப் பட்ட நாகரீகம் பின்பற்றப் படவில்லை. தற்பெருமையை முன்வைத்து மற்றவர்களை இழிவுபடுத்தும் போக்கில் எழுதுவது இப்போது தமிழில் ஒரு புதிய போக்காய் தலையெடுத்துள்ளது. எவரும் விமர்சிக்கத் தக்கவர்களே. ஆனால் அந்த விமர்சனங்கள் அவர்கள் தாங்களே முன்வந்து, பதிவு செய்த கருத்துகளின் மீது தான் செய்யப் படவேண்டும். திண்ணை ஜெயபாலன் மீது முழு நம்பிக்கையும், மதிப்பும் கொண்டுள்ளது. அவருக்கு நிகழ்ந்த இந்த அநீதிக்குத் திண்ணை , தன்னை அறியாமலே , காரணமாய் அமைந்த அசந்தர்ப்பம் பற்றி மிகவும் வருந்துகிறோம்.

திண்ணை ஆசிரியர் குழு

Series Navigation