பொறியில் சிக்கும் எலிகள்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

பா.பூபதி


எலி பிடிப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று விஷம் வைத்து பிடிப்பது மற்றொன்று பொறிவைத்து பிடிப்பது. எலிக்கு பிடித்தமான தின்பண்டங்களில் விஷம் கலந்துவைத்துவிட்டால் அதை உண்ணும் எலியின் உடலில் விஷம் ஏறி இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு மூலையில் உயிருக்கு போரடிக்கொண்டு, நடக்க இயலாமல் ஒரே இடத்தில் இருந்து இறந்துபோகும். இரண்டாவது முறையான பொறிவைத்துப் பிடிப்பதில் தனக்கு பிடித்தமான உணவை உண்ண வரும் எலி அதற்காக வைக்கப்பட்டுள்ள பொறியில் சிக்கிக் கொள்ளும். அப்படி சிக்கிக்கொள்ளும் எலி உயிர் வாழ்வதும் சாவதும் பொறி வைத்தவரின் விருப்பத்தில்தான் உள்ளது. இதை படிக்கும் போது இதில் தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது என்று தோண்றும். ஏன் அப்படி தோண்றுகிறது என்றால், இந்த எலி பிடிக்கும் வித்தையை நம் சக மனிதர்கள் நம்மை பிடிக்க பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் இதுவரை உணர்ந்ததில்லை.

விஷம் வைத்துக் கொல்லப்படும் எலியின் மன நிலையானது ஒரு வகையில் மன உளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில் தான் சாகப் போகிறோம், கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம் என்ற மன நிலையில்தான் அந்த எலி இருக்கும். ஆனால் பொறி வைத்து பிடிக்கப்பட்ட எலியின் மன நிலையானது மிக அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும். ஏனெனில் அந்த எலி சாகாது, அது சாக வேண்டுமா அல்லது வாழ வேண்டுமா என்பதை பொறிவைத்தவர்தான் தீர்மானிப்பார். மிகத் தெளிவான, ஆரோக்கியமான மன நிலையில் இருப்பதால் தன்னுடைய சூழ்நிலை தற்போது எப்படியிருக்கிறது என அந்த எலிக்கு நன்றாக தெரியும். இதனால் மன பதட்டமும், மன உளைச்சளும் அதிகமாக இருக்கும். தன்னுடைய செயலை நினைத்து நினைத்து தன்னைத்தானே நொந்துகொள்ளும். தெரியாமல் இங்கே வந்து மாட்டிக்கொண்டேனே, கொஞ்சம் யோசித்து செயல்பட்டிருக்கலாம், என்ன நடக்கப்போகிறதோ…என்ற பதட்டத்தில் இருக்கும்.

பொறியில் சிக்கிய எலிபோல நீங்கள் என்றாவது பதட்டப்பட்டது உண்டா? இல்லை என்று நீங்கள் சொன்னால் சற்றி யோசித்துப் பாருங்கள் நிச்சயம் நீங்களும் பொறியில் அகப்பட்டு இருப்பீர்கள். தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க கடைக்கு செல்லும் மக்கள் விற்பனையாளர்களின் வார்த்தை ஜாலத்தை நம்பி பொருட்களை வாங்கி வந்துவிடுவார்கள். வீட்டுக்கு வந்து அந்த பொருளை பயன்படுத்தும் போதுதான் தாங்கள் ஏமாற்றபட்டதை உணர்வார்கள். இது ஒரு வகையில் பிடித்தமான பண்டத்தில் விஷம் வைத்து எலி பிடிப்பது போன்றது. நம்மை ஏமாற்றிவிட்டார்களே என பொருள் வாங்கியவரின் மனதிற்கு தெரிந்துவிடுவதால், ”வாங்கியாச்சு, வேறுவழியில்லை அப்படியே பயன்படுத்துவோம்” என்று சமாதானம் அடைந்துவிடுவார்கள்.

மக்களை பொறி வைத்து பிடிக்கும் முறையான மிக வித்தியாசமானதாக இருக்கும். அதில் மிக அதிகமாக நடைபெறும் சில விசயங்களை மட்டும் இங்கே பார்ப்போம். இரண்டு சக்கர வாகனத்தில் முக்கிய வேலைக்காக அவசரமாக சென்று கொண்டிருக்கும் நபரின் இரண்டு சக்கர வாகணத்தில் இரண்டு சக்கரங்களில் ஏதாவது ஒன்று பஞ்சர் ஆகிவிடும்போது அருகில் உள்ள நபர்களிடம் இங்கே ஏதாவது பஞ்சர் ஓட்டு கடை இருக்கிறதா என விசாரிப்பார். அருகில் கடை எதுவுமில்லை கொஞ்ச தூரம் போனால் ஒரு கடை இருக்கிறது என்ற பதில் கிடைத்ததும் வேறு வழியில்லாமல் வேகமாக வண்டியை தள்ளிக்கொண்டு அந்த கடைக்கு சென்றால், வாங்க சார் – என்னாச்சு – பின்னாடி சக்கரமா – அந்த ரோட்டில் வரும்போதா – அங்க ஆணி, கம்பி எல்லாம் ரோட்டில் கிடக்கும் சார் நாம தான் பார்த்து வரனும் – என்று சினேகமாக பேசிக்கொண்டே ஒரு நொடியில் பழுதான சக்கரத்தை கழற்றி, அதிலிருக்கும் டயர், டியூப் என அனைத்தையும் கழற்றி குடல் உருவிப்போட்டதுபோல் செய்து விட்டு “சார் இதோ ஒரு நிமிசத்தில் வந்துடறேன் பக்கத்தில் அந்த கடைக்குத்தான் போகிறேன்” என்று சொல்லி விட்டு கடைக்காரர் போய் விடுவார். அவ்வளவு சீக்கிரம் திரும்பி வர மாட்டார். ஏனெனில் வண்டியை கொண்டுவந்தவர் வண்டியை இனிமேல் எடுத்துக்கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்பது அவருக்கு தெரியும். அந்த நிலையை ஏற்படுத்திவிட்டுத்தான் அவர் சென்றிருக்கிறார். அவருடைய வியாபாரத்தை அவர் உறுதி செய்து விட்டார். இப்போது வண்டியை கொண்டுவந்தவரின் நிலமையை நினைத்துப்பாருங்கள் போக வேண்டிய இடம் அவசரம் ஆனால் முடியாது. வண்டி உடனடியாக தயார் ஆக வேண்டும் ஆனால் சாத்தியமில்லை, அவரால் எதுவும் செய்ய இயலாது. மன உளைச்சலுடன் அங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டியதுதான். அடுத்த கட்ட நிகழ்வை அவர் தீர்மானிக்க இயலாது.

அலுவலகத்தில் பணியாற்றும் போது எந்த வேலையையும் முழுமையாக முடிக்கவில்லை என்றால் “திருப்பதியில் மொட்டையடிக்கிற மாதிரி வேலை செய்யாதீங்க” என்று திட்டுவது வழக்கம். இந்த மாதிரி சொல்ல காரணம் திருப்பதியில் மொட்டையும் அடிப்பவர்களும் இந்த பொறிவைத்து பிடிக்கும் முறையை கையாளுபவர்கள்தான். ஒருவருக்கு மொட்டையடிக்கும் வரை மற்றவர்கள் பொறுமையாக அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. தாமதமானால் வேறு ஒரு நபரிடம் மொட்டையடிக்க சென்றுவிடுவார்கள். இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்க மொட்டையடிப்பவர்கள் ஒரு பழக்கம் வைத்திருக்கிறார்கள். மொட்டையடிக்க உள்ளே வருபவர்களையெல்லாம் உள்ளே அழைத்து பாதி மொட்டையடித்துவிட்டு அடுத்த நபருக்கு மொட்டையடிக்க சென்று விடுவார்கள் இப்படி பாதி பாதி மொட்டையாக அடித்து அனைவரையும் அங்கேயே அமரச்செய்துவிடுவார்கள். பாதி மொட்டை தலையுடன் நீங்கள் எழுந்து சென்றுவிட முடியாது. அவருடைய வியாபாரத்தை அவர் உறுதி செய்து விட்டார். மொட்டையடிக்கச் சென்றவரின் நிலமையை யோசித்துப்பாருங்கள். மொட்டையடிபவர் திரும்பிவந்து மீதி மொட்டையை அடித்தால்தான் உண்டு. அல்லது கத்தி கூச்சல் போட்டு மக்கள் தங்கள் மனநிலையை மோசமாக்கிக் கொள்ளலாம், வேறுவழியில்லை.

மேற்கண்ட இரண்டு சூழ்நிலையிலும் மக்களால் எதுவும் செய்ய இயலாவிட்டாலும்கூட தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த இயலும். ஆனால் மேற்கண்ட இருவரையும் வீட மிக புத்திசாலித்தனமாக நடந்துகொள்பவர் ஒருவர் உண்டு. அவரிடம் மக்களால் தங்களுடைய கோபத்தைக்கூட வெளிப்படுத்த முடியாது, அவர் பிரசவ மருத்துவர். ஒன்னும் பிரச்சனையில்லை எல்லாம் சரியாக இருக்கிறது – தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் – குழந்தையின் வளர்ச்சி நன்றாக உள்ளது – ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எந்த பிரச்சனையுமில்லை – வலி வந்ததும் கூட்டிட்டு வாங்க நல்லபடியா பிரசவம் பார்த்திடலாம் என்பார்கள். மருத்துவ மனையில் அனுமதித்து பிரசவ நேரம் நெருங்கியதும் திடிரென்று மருத்துவர் ஓடி வருவார். குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்திட வேண்டும் “என்ன செய்யலாம்” என்று ஒரு அருமையான கேள்வி கேட்பார்கள். சரி அறுவை சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்வதைத்தவிர வேறு என்ன பதிலை சொல்லிவிட முடியும் அந்த குடும்பத்தினரால்! மருத்துவ மனையில் அனுமதிக்கும் வரையில் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திப்பார்த்துவிட்டு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்வி விட்டு இப்போது பிரச்சனை என்ன செய்யலாம் என்று திருப்பிக்கேட்டால் குழந்தையை அறுவை சிகிச்சை மூலமாக எடுக்க வேண்டாம் என்று யாராவது சொல்லிவிடமுடியுமா, அல்லது உட்கார்ந்து யோசிப்பதற்குத்தான் அங்கே நேரம் இருக்குமா? உண்மை நிலவரம் என்னவென்று யாருக்கு தெரியும்.

சக மனிதர்களுக்கே பொறி வைக்கும் இவர்களை நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. நம்முடைய சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. இதற்கு தீர்வு! எதுவுமில்லை அவர்களாக உணர்ந்து செயல்பட வேண்டும் எப்படி என்றால் வள்ளலார் சொன்னது போல “எவ்வுயிரும் தம்முயிபோல் எண்ணி…”

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி