பேச்சிழப்பு, ஹிம்ஸினி

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

மாலதி


_________
பேச்சிழப்பு

பேச்சு முறிந்த இந்த மெள்னம்
நிம்மதியும் நிரந்தரமும்
பூசிக்கொண்டது

பேசிக்கொள்ள இன்னமும்
ஏதுமில்லை என்பதால்.

மேலும் மேலும் சத்தச் செய்திகள்
இதன் வழு வழு பரப்பை
நெருடிக் கிழித்து விடக்கூடும்

இந்த மெளனத்தில் அப்பிக்கொண்ட
நினைவுகளின் வண்ணக்கலவையை
அந்தர்யாஹம் அனுபவிக்கிறது

ஹோலி முடிந்தும்
குளிக்க மனமில்லாத
குழந்தை போல.

இதன் துக்க பாரத்தை
நுகத்தடி மாடு போல
மனசும் பொறுத்துக் கொள்கிறது

மெளனமே நிலவிடட்டும்
இனிமேலும் நீ பேசவேண்டாம்
—————————————
ஹிம்ஸினி
————
ஹிம்ஸினி அவள் பெயர்.
எட்டு மணிக்குச் சந்தித்தால்
ஏழுமணிக்கு என்ன செய்தே என்பாள்.

பார்த்தால் குறைப்பார்வை
முழுக்கப்பார்க்கவில்லை என்பாள்.

பேசினால் போதாது என்பாள்
பேசுவதற்கா வந்தாய் என்பாள்

சொக்கி நின்றால் மக்கு என்பாள்
தொட்டிழுத்தால் முரடு என்பாள்

மென்மை காத்தால்
அன்பே இல்லையென்று
அநியாயப் பழி சொல்வாள்

திரட்டுப் பாலாய் திகட்டி எடுப்பாள்

முக்குளித்து முக்குளித்து மூழ்கினபின்பும்
நனையவில்லை பார் என்பாள்

நான் நிரம்பி வழிந்த அன்றைக்கும்
என் நேற்றைய தப்புக்கு அழுவாள்.

ஒரு நிமிடம் இரு
மூச்சு விடுகிறேன் என்றேன்

அவ்வளவு தான்
மூச்சடங்கிப்போய் விட்டாள்.

மிருத்யுஞ்சய ஜெபத்தில் மீட்டு
மடியில் போட்டுக்கொண்டேன்

முப்பதே நாள் பழக்கத்தில் இவளிடம்
முப்பது வருடம் கூட வாழ்ந்த ஹிம்ஸை.

எனினும் இவள் என் ஜீவ நிழல்.
என்னைப் புரட்டிபுரட்டிப்போடும்
இவள் காதலுக்கு மூன்று நிலகள்.
உச்சம் அதி உச்சம் உன்னத உச்சம்

கொடுமையதில் என் திணறல்
எப்பொதைக்குமாக.
——————————————-
(தணல் கொடிப்பூக்களிலிருந்து மாலதி கவிதைகள்)
malti74@yahoo.com

Series Navigation

மாலதி

மாலதி