பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


பெரியாரின் படைப்புகள் மீதான பதிப்புரிமை குறித்த வழக்கில் நீதிபதி திரு.சந்துருவின் தீர்ப்பினை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் இப்போதுள்ள நிலை நீடிக்கும் எனவும், நீதிபதி சந்துருவின் தீர்ப்பினை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச உத்தரவிட்டுள்ளது. வீரமணி தரப்பு மேல்முறையீடு செய்யும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதுபோல் அவர்கள் இப்போதுள்ள நிலை தொடரவேண்டும் எனக் கோருவர் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதுதான். அது போல் இடைக்கால தடை கிடைக்கவும் வாய்ப்புண்டு என்றே நான் யூகித்தேன். அதனால்தான் அவசரப்பட்டு எதுவும் எழுதவில்லை.

ஆனால் நீதிபதி சந்துருவின் தீர்ப்பினால் பெரியாருக்கு ‘விடுதலை’ கிடைத்தது போல் சிலர் எழுதினார்கள். இவ்வழக்கு உச்சநீதிமன்றம் வரை
செல்லும் என்று தோன்றுகிறது. ஆகவே உடனே தீர்ப்பு வந்துவிடும், பெரியாருக்கு ‘விடுதலை’ கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க
வேண்டாம். இந்தப் பிரச்சினையில் பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்கக் கூடாது, பெரியாரின் எழுத்துக்கள் தொகுதிகளாக
தொகுக்கப்பட்டு கொண்டுவரப் பட வேண்டும் என்று நான் எழுதியிருக்கிறேன். இப்போதும் என் கருத்து அதுதான். பெரியார் எழுத்துக்களை யார் வேண்டுமானாலும் தடையின்றி வெளியிடலாம் என்ற நிலை வருமானால் பெரியார் எழுதியவை என்று பல வெளியாகும். அதில் அசல் எது,
போலி எது என்று கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் பெரியாரின் எழுத்துக்கள் காலவாரியாக திரட்டப்பட்டு தொகுக்கப்படாதபோது அவர்
என்ன எழுதினார், இப்போது என்ன வெளியாகியுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்பது இயலாது. இந்தப் பிரச்சினை இருப்பதை உணராதவர்கள்
பெரியாருக்கு விடுதலை வேண்டும் என்றெல்லாம் எழுதுகிறார்கள். நீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கிய பின், யாருக்கு பதிப்புரிமை
இருக்கிறது என்பது தெளிவான பின் நாட்டுடமை குறித்து அரசு முடிவெடுப்பதே பொருத்தமாக இருக்கும்.

பெரியாருக்குப் பின் மணியம்மை, அதன் பின் வீரமணி என்று தலைமை பொறுப்பு தொடர்ந்துள்ளது. பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக வெளியிடப்பட்ட நூல்களையே எடுத்துக் கொள்ளலாம்.பல தொகுதிகளாக பல தலைப்புகள் பெரியாரின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. வேறு யாரும் நாங்களும் தொகுப்பு நூல்களை கொண்டுவருவோம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு பதிப்புரிமை இல்லை என்று வழக்குத் தொடர்ந்து அவற்றின் வெளியீட்டை சர்சிக்கவில்லை. எனவே வீரமணி தரப்பிற்கு அனுபவ பாத்தியதை இருக்கிறது, இதை வைத்து அவர்களுக்கு பதிப்புரிமை இருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். பெரியார் தி.கவினர் ஒரு காலத்தில் தி.கவில் இருந்தவர்கள். அப்போதும் பெரியார் எழுத்துக்களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்தான் வெளியிட்டது. அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.பதிப்புரிமை இல்லை என்று கூறவில்லை. இப்போது தனி இயக்கமாக இருப்பதால் பதிப்புரிமையை கேள்விக்குட்படுத்துகிறார்கள். பெரியார் மறைவிற்குப் பின் கிட்டதட்ட 20 ஆண்டுகள் அவர்கள் திகவில்தான் இருந்தார்கள். ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதியுடன் அது வெளியானது. 1973ல் அவர் மறைவிற்குப் பின் அதன் அடுத்த பதிப்பு வெளிவரவில்லை. ஆனைமுத்து ஏன் கொண்டுவரவில்லை. பெரியார் கொடுத்த அனுமதி ஒரு தொகுப்பு நூலிற்கு. அதன் இரண்டாம் பதிப்பினை கொண்டுவர முயன்று, அப்போதே வழக்கு தொடரப்பட்டிருந்தால் 1970களிலேயே பதிப்புரிமை யார் வசம் என்பது தெளிவாகியிருக்கும். 30 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கேள்வி எழ வேண்டிய தேவை இருந்திராது.

இந்த பிரச்சினையை உணர்ச்சிவசப்பட்டு அணுகுவதை விட சட்டரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அணுகுவதே மேல். இது தொடர்பான என் கருத்துக்களை இங்கு வாசிக்கலாம்(1)

(1). http://docs.google.com/View?docid=dfxcv6vs_1hhp5m9q8

http://ravisrinivas.blogspot.com
ravisrinivas@rediffmail.com

Series Navigation

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்