பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

பா.சத்தியமோகன்


1237.

அர்ச்சனை முன்பு அங்கு முன்நாளில் செய்த தொடர்ச்சியால்

பொங்கும் அன்பால் மண்ணி ஆற்றின் மணல் திடலில்

ஆத்தி மரத்தின் அடியில்

சிவந்தகண் கொண்ட காளை வாகனம் உடைய திருமேனியாக லிங்கத்தை

மணலால் உருவாக்கி கோவிலும் பெரிய நீண்ட கோபுரமும்

சுற்று ஆலயமும் அமைத்தார்.

1238.

ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலாக

அருகருகில் வளரும் முல்லைக்காட்டில்

பூத்தமலர்கள் தாம் தெரிந்து

புனிதரான சிவபெருமானின் சடையுடைய திருமுடிமேல்

சாத்துதற்ற்குரிய திருப்பள்ளி தாமங்கள் பலவும்

தாம் கொய்து இலைகளால் கோத்து

பூங்கூடையில் கொணர்ந்து வாசனை தங்கிட வைத்தார்.

1239.

நல்ல நவகுடும்பங்கள் பெறுவதற்காக நாடிக்கொண்டு

அழகான கொல்லையிலும் ஆற்றிடைக்குறை மறைவிலும்

மேய்கின்ற பசுக்களுடன் விரைவில் சேர்ந்து

பால் தருகின்ற பசுக்கள் ஒவ்வொன்றும் ஒருமுறையாக

எதிரே செல்கின்றன அவையும் கனைத்து

முலை தீண்ட செழும்பால் பொழிகின்றன

1240.

குடங்கள் நிறையும்படி கொண்டுவந்த பாலைக்கொண்டு

விரும்பும் கொள்கையினால்

அண்டத்துக்கே பெருமானான இறைவரின்

வெண்மணலால் ஆன ஆலயத்துள் அவற்றை வைத்து

வண்டுகள் மொய்க்கும் பூக்களால்

வரன் முறையால் முன்னைத் தொடர்ச்சியான அன்பினால்

பாலினால் திருமஞ்சனம் ஆட்டி-

1241.

மீண்டும் மீண்டும் இவ்விதமாக

வெண்மையான பால் சொரிந்து மஞ்சனம் செய்ய

ஆட்கொண்டு அருளுதற்கு உடையரான சிவபெருமான்

தம்முடைய அன்பரது அன்பால் உளதாகி

மென்மேலும் பெருக விரும்பிய ஆசை முதிர்ந்து

அன்பு முதிரச் சூழ்ந்த சிவபெருமானாகிய கோளத்தில்

உள்ளே நிறைந்து நின்று

அவர் குறிப்பில் கொண்ட பூசையை ஏற்கின்றார்.

1242.

பெருமையுடன் சேய்ஞலூரில் பிள்ளையாரின் உள்ளத்தில்

ஒன்றுபட்ட எண்ணத்தால்

தேவர்களின் தலைவர் சிவபெருமான் மகிழும் பூசை அது

அப்பூசையின் உறுப்பானது திருமஞ்சனம் முதலியவற்றில்

எதைத்தாம் தேடிக் கொள்ளவில்லையோ

அதனை அன்பால் நிரப்பினார்

அம்முறையில் அர்ச்சனை செய்து வணங்கி மகிழ்கின்றார்.

{ அன்பால் நிரப்புதல் – கற்பனையாய் நிரப்பிக்கொள்தல்} }

1243.

சிவபெருமான் திருவடிகளில்

விசாரதருமர் செய்யும் திருமஞ்சனமாகிய நிறைந்த பூசைக்கு

குடங்கள் நிறைய பால் சொரிந்தன பசுக்கூட்டங்கள்

குறைபாடின்றி மடி பெருகி முலைப்பால் குவித்தது

அந்தணர் வீடுகளின் முன்பு தரூம் வளங்கள்

இவற்றால் விளங்கி நின்றன.

1244.

இத்தகைய செய்கை பலநாளும் சிறந்தது

பூசை செய்வதற்கு முயன்று அதுவே திருவிளையாட்டானது

முந்நூல் அணிந்த மார்புடைய விசாரதருமர்

இயல்பாகச் செய்யும் இதனைக்கண்டு

இதன் உண்மைத்திறம் அறியாத மற்றொருவன்

அவ்வூரில் வாழும் அந்தணர்க்கு அறிவித்தான்.

1245.

அச்சொல்லைக் கேட்ட அந்தணர்கள்

ஆயன் பசுக்களை மேய்க்கத் தெரியாதவன்

ஆதலால் அவற்றின் விருப்பப்படி நான் மேய்க்கிறேன் என்று கூறி

பசுக்களை கறந்தனர்.

?வஞ்சனையால் ஒழுகும் சிறுவனின் பொல்லாங்கைக் கூற

அவன் தந்தை எச்சதத்தனை அழையுங்கள் ? என்றும் கூறினார்.

1246.

அங்கு பக்கத்தில் நின்றவர்கள்

அந்த அந்தணன் வீட்டிற்குச் சென்று

எச்சதத்தனை அழைத்து வந்தனர்

அந்தச் சபையினர் அவனைப் பார்த்து

?ஊராரின் பசுக்களை மேய்த்து

உன் மகன் செய்யும் தீமையைக் கேட்பாயாக ? என்று நிகழ்ந்ததைச் செப்புவார் –

1247.

யாகத்துக்கு பால் கறக்கும் பசுக்களையெல்லாம்

சிந்தை மகிழ்ந்து அன்பினால் கொண்டு சென்று மேய்ப்பவன்போல

மலர்கள் பொருந்திய நீர் மிக்க

மண்ணியாற்றங்கரை மணலில் கறந்து

பாலைக்கீழே ஊற்றி தன் உள்ளப்படி செய்கிறான் என்று

அந்தணர்கள் வாய் மொழிந்தனர்.

1248.

மறையோர் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி-

?சிறுவன் செய்து வரும் இச்செயலை நான் முன்பு அறியேன்

நிறையும் பெருமையுடைய அந்தணர்காள் !

பொறுக்க வேண்டும் நீங்கள் என வணங்கிக் கேட்டான்

? இனி இச்செயல் நிகழ்ந்தால் குற்றம் எனதே ஆகும் ? என்றான்.

1249.

எச்சதத்தன் அந்தணர்களிடம் விடைபெற்று

சந்திக்கடன் முடித்து வீட்டுக்குள் புகுந்தான்.

?இம்மகனால் வந்த பழி இது ? என நினைந்தான்

ஆனால் மகனிடம் இதைச் சொல்லவில்லை

?இந்நிலைமை நாளை நேரில் கண்டு அறிவேன் ? என நினைத்து

இரவு நீங்கிய பின்பு

மைந்தனார் பசுக்கூட்டங்களை மேய்க்கப் போனதும்

அவன் பின்னால் மறைவாகச் சென்றான் மறைமுதியோன்.

1250.

அவ்வாறு சென்ற வேதியனான எச்சதத்தன்

சிறந்த ஊரின் பசுக்கூட்டத்தைக் கொண்டு சென்று

மணம் கமழும் காட்டில் மேய்ப்பவராக அன்று

திரட்டிக் கொண்டு போன செயலை அறிந்து மறைந்து கொண்டான்

அருகில் நின்ற குறுமரம் மேல் ஏறி நிகழ்வதறிய ஒளிந்திருந்தான்.

1251.

அன்பு புரியும் பிரம்மசாரியான விசாரத்தருமர் நீரில் மூழ்கி

சிவபெருமானுக்கு முன் நாட்களில் செய்தது போல

மணற்கோயில் செய்தார்

மலரும் அரும்புகளும் மென்மலர்களும் கொய்தார்

பின் வரும் பசுவின் மடி பொழிகின்ற

பால் நிரம்பிய குடங்களைப்

பேணும் இடத்தில் நிறுவினார்

வேண்டுவன பிறவும் செய்து கொண்டார்.

1252.

நின்ற விதியின் விளையாட்டினால்

நிறைந்த அரிய பூசனை தொடங்கியது

சிவபெருமான் மீது உள்ளத்தை ஒன்றுபடுத்தி

தன்னை உடைய நாதன் திருமுடி மேல்

மணம் பொருந்திய திருப்பள்ளி மலர்கள் (தாமம்) சாத்தினார்

நன்கு நிறைந்த தீஞ்சுவைப் பாற்குடங்கள் எடுத்து

நயந்து திருமஞ்சனம் எடுத்து ஆட்டும்போது –

1253.

அன்பு மேன்மேலும் பரவுமாறு பரிவு மேலும் மேலும் எழுமாறு

முன் பிறவியின் பண்பு பொருந்த

விசாரசருமரின் பெருமை வெளிப்படுவதற்காக

அரவம் மேவும் சடைமுடியரான சிவபெருமானின் அருளேயாகும்

எனக்கூறும்படி அறிவிழந்து எச்சதத்தன் எனும் முதுமறையோன்

குராமரத்தின் மீதிருந்து சினம் பொங்க அதனைப் பார்த்தான்.

1254.

கண்டபோதே விரைந்தார் எச்சதத்தர்

விரைந்து சென்று கையிலுள்ள தண்டால்

மகனார் திருமுதுகில் அடித்துப் புடைத்தார்

கொடிய சொற்கள் கூறினார்

தம் பெருமான்மேல் மண்டும் காதலினால்

தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார்

மற்றொன்றும் அறியாதவர் ஆனார்.

1255.

மேலோராகிய பெரியோராகிய எச்சதத்தன்

பலதடவையும் வெகுண்டு அடித்தான்

அதை உணராமல் பாலால் திருமஞ்சனம் ஆட்டும் பணியில்

சலியாமல் ஈடுபடுவது கண்டான்

அறிவிழந்து மிக மயக்கமடைந்து மிகவும் சினம் கொண்டு

செயலால் கீழோனாக மாறிய அம்மறையவன்

அங்கு வைத்திருந்த குடப்பாலை காலால் இடறிக் கவிழ்த்தான்.

1256.

குடம்பாலையும் சிந்திக் கவிழ்த்த பொழுதில்

அது நோக்கும் சிறுவராகிய விசாரதருமர்

இறைவர்க்குரிய பாலைச் சிந்தியவன்

தீயோனாகிய தந்தை என அறிந்த கணமே

அவன் கால்களைச் சிந்தவைக்கும் தகுதி கொண்டார்

தண்டிக்க

முன்பு அருகில் கிடந்த கோல் எடுத்து

அதனை மழு என்ற படைக்கலம் போல் பயன்படுத்தி

கால்களை வெட்டிட மறையோன் மண்மேல் வீழ்ந்தான்.

1257.

எறிந்து வீசிய அதுவே

இடையூறு அகற்றும் படை என ஆனது

மறித்த தந்தையின் இருகால்களும் துண்டித்தார் மைந்தர்

பூசனையில் தோன்றிய இடையூறு அகற்றியவராக

முன் போல் புகழ்ந்து அர்ச்சித்தார்

நெருங்கிய நீண்ட சடைமுடி கொண்ட சிவபெருமான்

உமையம்மையுடன் காளை மீதேறி –

1258.

பூதகணங்கள் புடை சூழவும்

புராணமுனிவரும் தேவர்களும்

வேத மொழிகளால் துதித்து ஏத்தியபடி

விமல மூர்த்தியான சிவபெருமான் திருவுள்ளம்

காதல் கூர்ந்து வெளிப்பட்டதும் பாலகனார்

கண்டார் தொழுதார் மணங்களித்து

இறைவரின் பாதமலர்கள் மேல் விழுந்தார் பக்தியுடன்.

1259.

தொடுக்கப்பட்ட இதழ்களால் ஆன

கொன்றை மாலை தரித்த சிவபெருமானார்

தம் திருவடி நிழலின் கீழ் விழுந்தவரை எடுத்து நோக்கினார்

எம்பொருட்டாக ஈன்ற தந்தை விழும்படி எரிந்தாய்

இனி உனக்கு அடுத்த தந்தை நாமே என்று அருள் செய்து

அணைத்து அருளினார்

நிறை கருணையால் தடவினார் உசி மோந்து மகிழ்ந்தார்.

1260.

சிவந்த செங்கண் உடைய காளையூர்தியினரான சிவனாரின்

திருமலர்க்கையால் தீண்டப் பெற்றார் விசாரசருமர்

அங்கு தமது மாய உடல்மேல்

அளவில்லாமல் உயர்ந்த

சிவமயமாய் பொங்கி எழுந்த திருவருளில் மூழ்கி

தாமரை மேல் வீற்றிருக்கும் நான்முகன் முதலான

பெரும் தேவர்கள் துதி செய்ய சிவ ஒளியுள் கலந்து தோன்றினார்.

1261.

தேவர்பிரானாகிய சிவனும் விசாரசருமரைத்

தொண்டர்களுக்கெல்லாம் அதிபனாக்கினார்

நாம் உண்ட பரிகலமும் உடுக்கும் உடைகளும்

சூடும் மாலைகள் முதலியனவும் உனக்கே உரிதாகட்டும் எனும்படி

சண்டாசனாகும் பதவி தந்தோம் என

அங்கு சண்டாசரது அழகிய பெரிய திருமுடிக்கு

கொன்றைமலர் மாலை சூட்டினார்

பிறைச் சந்திரன் இருக்கும் தம் சடையிலிருந்து எடுத்து.

1262.

எல்லா உலகும் ஆர்ப்பெடுத்தனர்

எங்கும் மலர்மாரிகள் பொழிந்தன

பல்லாயிரக்கணக்கான சிவகண நாதர்கள்

பாடினர் ஆடினர் களி பயின்றனர்

மறைகள் சொற்களால் துதித்தன

நான்கு புறமும் சூழ்ந்த பலவகை வாத்தியங்கள் ஒலித்தன

சைவ நன்னெறி ஓங்கி வளரும்படி

சிவபெருமானாகிய நாயகத்தை வணங்கி

சண்டாசர் பதவியில் விசாரசருமர் அணைந்தார்.

1263.

உலகம் அறியப் பிழை புரிந்தும் சிவனார் அருளால்

நான்கு மறையின் நல்லொழுக்கம் திகழ்கின்ற

சேய்ஞலூர் பிள்ளையாரின் திருக்கையில் ஏந்திய

அழகான மழுவால் எறியப்பட்டதால்

குற்றம் நீங்கி சுற்றத்தாருடன்

மூலமுதல்வரின் சிவலோகம் எய்தப்பெற்றான்

எச்சதத்தனாகிய முதுமறையோன்.

1264.

தன்னிடம் வந்து தகாத செயலைச் செய்த

தந்தையின் கால்களை மழுவினால் வெட்டிய அந்தணச் சிறுவர்

அந்த உடம்புடனே சிவனார் மகனார் ஆயினார்

யாவரே இந்த நிலைமை அறிந்தார் ?

சொல்லப் புகுந்தால் ஈறு இல்லாத சிவபெருமானுக்கு

அன்பு தந்த அடியார்

செய்தவை எவை எவையோ அவையே தவமாகும் அல்லவா.

சண்டேசுர நாயனார் புராணம் முற்றுப்பெற்றது.

(இறையருளால் தொடரும்)

sathiyamohan@sancharnet.in

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்