பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

பா. சத்தியமோகன்


951.
இசையில் உள்ள புகல் நான்கிலும்
கொடிப்பாலைக்கு அமைந்த திறம் எடுத்து சுரம் எழுப்பும்
ஏழுதுளைகளில் விரல்களை மூடுவதும் எடுப்பதுமான செயல்களால்
இசையின் செவ்விய ஒளி இடையிலே சஞ்சரித்து விளங்க
சிவபெருமானின் திரு ஐந்தெழுத்தும்
தூய இசையின் ஏற்ற பகுப்பைக் கொள்ளும்
ஐந்து துறைகளின் ஏற்ற முறை விளைவித்தவராக –
952.
மெலிவு ,சமன், வலிவு என்ற மூன்று வகை சுருதியிலும்
சுரதானத்துக்குரிய துளைகளை முறையே
மென்மையாக – சமமாக – வன்மையாக – மூடி
இடையிட்ட துளைகள் உரிய அளவு பெற அசைத்து இயக்கி
சிவந்த களி போன்ற உதடும்
குழலின் துளை வாயும் ஒன்று கூடி இயங்க –
953.
இசைநூல்களில் அளவு படுத்தியபடி
பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம்
என்ற இசை வகைகள் யாவும்
மதுரமுடைய ஒலியில் அமைந்த
தாளம், இசை, தூக்கு நடை முதலிய கதிகளோடு
பண் பொருத்தமுற எழும் ஓசையை எப்புறமும் பரப்பினார்.
954.
பசுக்கூட்டங்கள் அருகில் வந்து அசைபோடாமல் நின்றன
தாய்முலையில் பற்றி நிற்கும் இளம் கன்றின் இனமும்
புல் மேய்வதை மறந்தெழிந்தன
கொம்புடைய எருதுக் கூட்டமும் மான் முதலிய காட்டு விலங்குகளும்
மயிர்க்கூச்செறிந்து அருகில் வந்தன.
955.
முன்பு புல்லை மேய்ந்த பசுக்கள்
அசைபோடாமல் இவர்பக்கம் அயர்ந்து மறந்து நின்றன
தாய்முலை பற்றிப் பாலருந்தும் வாயுடைய பசுங்கன்றின் கூட்டமும்
பால் குடிக்கும் செயலை மறந்தன
கொம்புகளுடைய மான் முதலிய காட்டு விலங்குகளும்
மயிர்க்கூச்செறிந்து பக்கத்தில் சேர்ந்து நின்றன
956.
ஆடும் மயில் இனமும் அசைவிலாது அங்கு பக்கம் வந்தன
செவி வழியே ஊடிச் சென்ற இசை கேட்டுப்
பறவை இனமும் உணர்விழந்து அருகில் வந்தன
புரிந்து வந்த ஏவல் தொழிலை
முழுசும் செய்யாமல் ஆனாயர் இசை கேட்டு நின்றன.
957.
ஆனாயர் இசை கேட்டு நாகர் உலகத்துக்காரர்கள்
தாம் முன் வந்து பழக்கமான பாதலப்பிலங்கள் வழியே
இங்கு வந்து சேர்ந்தனர்
அழகிய மலைகளின் தெய்வ மகளிர் மயங்கினர்
குறைவற்ற ஒளியுடைய வித்தியாதரர், சாரணர்
கின்னரர், அமரர் யாவரும் தம்மை மறந்து
புறப்பட்டு விமானங்களில் வந்து சேர்ந்தனர்.
958.
தேவமகளிர் கற்பகப்பூஞ்சோலைகளின் பக்கமிருந்து
தாமரை மலர் போன்ற கரங்களால் அமுதூட்டுகின்ற
கனி உடைய வாய் பெற்ற கிளிகளுடன்
நறுமணம் மிக்க தம் கூந்தல் காற்றில் அலைய
விமானங்கள் விரைந்தேறிப் பரவிய
ஏழிசை அமுதம் செவிமடுத்துப் பருகினார்.
959.
துன்பத்தினால் நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாகினர்
நயமான இசை விரும்பியதால்
வாயில் பற்கள் கொண்ட பாம்பு மயங்கி மயில் மேல் விழும்
சலியாத நிலையுடைய சிங்கமும் யானையுடன் உடன் செல்லும்
புலி வாயின் பக்கத்தில்
புல் வாயுடன் மானும் நிற்கும்.
960.
கண்ணால் காண இயலாக்காற்று
விசையுடன் மரங்கள் மேல் வீசவில்லை
மலர்களும் கிளைகளும் அசையவில்லை
கரிய மலைவிட்டு வீழும் அருவிகளும் காட்டாறுகளும் ஒலித்து ஓடவில்லை
பெருமுகிலின் குலங்கள் இயக்கமற்று மழை நீர் சொரியவில்லை
வானில் ஒலி இடிக்கவில்லை
எழுகின்ற கடல்களும் தளும்பவில்லை.
961.
இவ்விதமாக இயங்கும் உயிரும் இயங்கா உயிரும் இசைமயமாகியது
மெய்யில் வாழும் புலன்களும் கரணங்களும் ஒன்றாகின
நறுமணமுடைய கொன்றை மலர் முடிச்சடையாரின் அடித்தொண்டர்
சிவந்த வாயில் வைத்த திருக்குழல் ஒலி இசையால்.
962.
மெய்யன்பரான மனத்தன் விளைவித்த இசைக்குழல் ஓசை
வையம் முழுதும் நிறைந்து
வானையும் தன் வயமாக்கி
பொய் அன்புக்கு எட்டாமல்
பொன் அம்பலத்தில் நடம்புரியும் ஐயனது
திருச்செவிக்கு அருகில் அணையுமாறு பெருகியது.
963.
ஆனாயர் குழலோசை கேட்டு
அருள் பொதிந்த திருவுள்ளம் கொண்ட
தவவல்லியான உமையுடன்
இசைக்கெல்லாம் காரணரான நெற்றிக் கண்ணர்
காளையூர்தியில்
சடைதாழ வான் வீதி வழியே வந்தணைந்தார்.
964.
திசை முழுதும் சிவகணநாதங்கள்
தேவர்களுக்கு முன்பே நெருங்கி வரும்போது
குழலின் ஓசைக்கு மாறான ஓசைகள் புகுந்து கலக்காமல்
ஒலி அலையாக அசைவதால் எழுகின்ற
குழலின் இசையில் அமைத்த திரு ஐந்தெழுத்தால்
தம்மைப்பரவித் துதிக்கின்றதால்
அருக்கூத்தரான சிவபெருமான்
எழுந்தருளி நின்றார் – மேற்சொன்னவாறு.
965.
முன் நின்ற இளமையாகிய விடைமீது முதல்வனார் சிவபெருமான்
எப்போதும் செம்மையுடைய மனப்பெரியோர் ஆனாயரின்
குழல் வாசனை எப்போதும் கேட்க
?இங்கு நின்ற நிலைமையிலேயே நம்பால் அணைவாய் ? என்றார்
அங்கு நின்ற நிலையிலிருந்து பெயர்ந்து
இறைவன் அருகில் சேர்ந்தார்.
(வாசனை – வாசித்தல்)
966.
வானவர்கள் மலர்மழை பொழிந்து உலகத்தில் விளங்க
எண்ணிலாத அரிய முனிவர்குழாம்
மறைகளால் துதிக்க
ஆனாயர் குழலிசைத்தார் அருகில் சென்றார்.
புண்ணியரான சிவபெருமான் பொன்னம்பலம் புகுந்தார்.
967.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
நிலவின் கதிர்கள் போன்று இருள் போக்க
செவியில் அணிந்த குழைகள் கொண்ட
சிவந்த சடையுடைய சிவபெருமானின்
பரவை நாச்சியாரின் திருமாளிகைக்கு
இருமுறை தூது செல்லுமாறு ஏவல்கொண்ட
ஆளுடை நம்பியான சுந்தரர் நம்மை சூடி கொள்ள
உரிமை செய்வார் ஆதலால்
தீமையுடைய வினையுள் யாம் சேரமாட்டோம்.
ஆனாய நாயனார் புராணம் முற்றிற்று.
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்