பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

பாவண்ணன்உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாவலாசிரியராகத் தொடங்கிய அவருடைய இலக்கிய பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவ முகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது. இருத்தலியல், உளவியல், மார்க்ஸியம் என எல்லா தளங்களிலும் நிலவும் பெண்கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன் அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடயங்களை அடையாளம் கண்டு முன் வைத்தார் அவர். அவருடைய ‘இரண்டாம் இனம்’ என்னும் நூல் உலக அளவில் வாசிக்கபட்ட முக்கிய புத்தகம். கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழி பெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையைப் அடையாளம் காட்டும் விதமாக இச்சிறு நூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளித்திருக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச் சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாத விவாதங்களில் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்புலமையும் உதவியிருக்கிறது.

ஓர் அறிமுக நூலில் நாம் எதிர்பார்க்கிற எல்லா அம்சங்களும் இந்த நூலில் உள்ளன. தொடக்கத்தில் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சுருக்கமான் அறிமுகம் இடம்பெறுகிறது. பிறகு அவருடன் வாழ்நாள் முழுதும் நெருக்கமாகப் பழகிய ழான் போல் சார்த்ரு; நெல்சன் அல்கிரென் ஆகிய இருவருடனானா வாழ்க்கைச் சுருக்கம் இடம் பெறுகிறது. பொவ்வாரின் படைப்புலகம், அரசியல், வாழ்க்கை என மூன்று தளங்களிலும் இத்தொடர்புகளால் நிகழ்ந்த தாக்கங்களும் சிறிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து ‘இரண்டாம் இனம்’ நூலின் இரண்டு பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. பிறகு இந்த நூலுக்கு பொவ்வார் எழுதிய உயிரோட்டம் மிகுந்த இருபது பக்க முன்னுரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இறுதிப்பகுதியாக பொவாருடைய நேர்காணல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

உயிரியலாலும் உளவியலாலும் பெண் என்னும் கருதாக்கம் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை எந்த ஒரு சிறு அம்சத்தையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் தொகுத்து, ஒவ்வொன்றும் சுட்டுகிற உட்பொருளையும் அதன் நீட்சியையும் இணைத்து, தர்க்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவை நிறுவுகிறார் பொவ்வார். எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம். நுரையீரல், மூச்சுக்குழல், குரல்வளை மூன்றுமே அளவில் ஆணைக்காட்டிலும் பெண்ணுக்குச் சிறியவையாக இயற்கையிலேயே அமைந்திருக்கிற பேதத்தை முதலில் சுட்டிக்காட்டுகிறார் பொவ்வார். பெண்ணின் குரல் மாறுபட்டு மென்மையாக ஒலிப்பதற்குக் காரணம் குரல்வளை அமைப்பில் உள்ள பேதமே என்று அவர் முன்வைக்கும் முடிவைப் படித்த கணத்தில் சீவாளியின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் நாதஸ்வரத்தின் ஓசையையும் துளைகளின் அளவுக்குத் தகுந்தபடி மாற்றமடையும் புல்லாங்குழலின் ஓசையையும் நினைத்துக்கொள்கிறது மனம். அதேபோல பெண்களின் கன்னம் சிவப்பிறகு காரணம் குறைவான ரத்த புரதத்தால் நேரும் இரத்த சோகை என்றும் நிறுவுகிறார் பொவ்வார். இப்படி உயிரியல் கட்டமைப்பில் உள்ள பல விஷயங்களை ஒவ்வொன்றாக அடுக்கி அதற்கான காரணத்தையும் விளக்குகிறார் மனித மனபோக்குக்கு நனவிலி மனநிலையைக் காரணமாகச் சொல்கிற பிராய்டின் உளவியல் பார்வையை ஏற்க மறுக்கிறார் பொவ்வார். அதற்கான மற்ற காரனங்களை தர்க்க அடிப்படையில் முன்வைக்கவும் அவர் தவறவில்லை. குறியீடுகளாகக் கனவிலி நிலையென்னும் புதிர் படைத்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. குறியீடென்பது வானிலிருந்து குதித்ததுமில்லை. பூமியிலிருந்து முளைத்ததுமில்லை. மொழியைப்போல அவ்வபோது தன்னை செறிவூட்டிக்கொண்டு வளர்ந்து, கூட்டத்தோடும் தனித்தும் வாழப்பழகிய மனிதரின் இயல்பானப் பண்பாக வடிவமைக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையிலேயே கோட்பாடுகளை அணுக வேண்டியிருப்பதால் உளப்பகுப்பாளர்களின் கருத்தியல்களில் சிலவற்றை ஏற்கவும் நிராகரிக்கவும் வேண்டியிருக்கிறதென்பதே பொவ்வாரின் பார்வை. பொருள்வாதமும் பெண்களும் என்னும் பகுதியில் பெண்களின் மீதான ஒடுக்குதலுக்கான காரணங்களாக பொருளாதார வரலாற்றில் தேடிய மார்க்ஸியச் சிந்தனையாளர் முன் வைத்த கருத்துக்களை விரிவான ஆய்வுக்குள்ளாகிறார் பொவ்வார். இவையனைத்தும் ‘இரண்டாமினம்’ நூலின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாம் பகுதியில் வரலாறும் பழங்கதைகளும் முன் வைத்த பார்வைகளை, தனிதனிப்பகுதிகளாக வகுத்துக்கொண்டு ஆய்வை நிகழ்த்துகிறார் பொவ்வார். அவற்றுடன இன்றைய நிலைகளும் வாழ்க்கை முறைகளும் சூழல்களும் கணக்கில் எடுத்துகொள்கிறார். அவருடைய முடிவுகள் தெளிவாகவும் மறுக்க முடியாதவைகளாகவும் உள்ளன.

‘இரண்டாம் இனம்’ நூலுக்கு பொவ்வார் எழுதிய முன்னுரைப் பகுதியையும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் நாகரத்தினம். அதில் ‘இரண்டாம் இனம்’ நூல் எழுதுவதற்கான தன் மன உந்து தலையும் சூழலையும் தெளிவாக முன் வைக்கிறார் பொவ்வார். பல இடங்களில் புராணங்களிலும் மக்களிடையே நிலவுகிற வாய்மொழி கதைகளிலும் இடம்பெற்றுள்ள பெண்களின் சித்திரங்களைக் கண்டெடுத்து அவற்றில் மறைந்துள்ள படிமத் தன்மையைக் கண்டறிய முற்படுகிறார் பொவ்வார். ஒவ்வொன்றும் மேல் தளத்தில் சுட்டுகிற கோணத்தையும் மறை தளத்தில் அடங்கியுள்ள வேறொரு கோணத்தையும் முன்வைத்தபடி வாதங்களை அடுக்கிச்செல்லும் வேகம் ஒரு சிறுகதையைப் படிப்பதற்கான அனுபவத்தை வழங்குகிறது. வரலாற்றின் தடங்களில் மானுட மனம் முன் வைத்ததையும் மறைத்துவைத்ததையும் இன்று யாரோ ஒருவர் அடையாளம் கண்டுபிடித்து அம்பலமாக்குவதைப் போன்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த முன்னுரையில் தனக்கு முன்னோடியாக பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூலென் தெ லா பார் என்பவரைப் பற்றி பொவ்வார் முன் வைத்துள்ள குறிப்புகள் மிக முக்கியமானவை. பூலென் தெ லா பாரின் கருத்தாக சொல்லப்பட்டுள்ள வரிகள் கூர்மையாக உள்ளன. பெண்களைக் குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நமபகத்தன்மை அற்றவை. ஏனெனில் அங்கே நீதிபதி, வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் அனைவருமே ஆண்களாகவே இருக்கிறார்கள் என்று ஓங்கி வலிக்கிறது அவர் குரல். நான் பெண்ணாகப் பிறக்காதது தெய்வச்செயல் என்ற வாசகம் இடம் பெறும் யூதர்களின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாகப் பிறக்க வைத்ததற்காக முதலாவதாகவும் தன்னைப் பெண்ணாக இல்லாமல் ஓர் ஆணாகப் பிறக்க வைத்தற்காக இரண்டாவதாகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிற பிளாட்டோவின் கடவுள் வாழ்த்துப் பாடலையும் முன்வைத்து அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் தடங்கள் போகிறபோக்கில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்கும் கணங்களில் நம் மனத்தில் புரளும் எண்ண அலைகள் ஏராளம்.

இறுதிப்பகுதியில் இடம் பெற்றுள்ள நேர்காணல் பொவாரின் ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஜெர்மானிய பத்திரிகையாளரும் பொவ்வாருடன் இணைந்து பணியாற்றியவருமான அலிஸ் ச்வார்ஸெருடைய கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் மிக விரிவான அளவில் தன் விடைகளை அளிக்கிறார் பொவ்வார். வாசிப்பின் வழியாக கடந்தகாலபெண்ணின் நிலைகளை அறிந்தவராகவும் எதார்த்த வாழ்வின் சங்கடங்களை அறிந்தவர் என்கிற நிலையில் நிகழ்காலபெண்களின் நெருக்கடிகளை உணர்ந்தவராகவும் பொவ்வார் இருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்துகின்றன. பெண்களுக்கான தீர்மானிக்கப்பட்ட உலகிலிருந்து விடுபட்டு மானுட வாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கிற பெண்ணுக்கான நிகழ்கால துன்பங்களையும் இன்றைய பெண்களின் நிலைமைகளையும் கனிவோடும் கரிசனத்தோடும் வெளிப்படுத்தும் பொவ்வாரின் குரல் வரலாற்றைத் துளைத்து மேலெழவேண்டிய ஒன்று.

ஒரு சமூக அடையாளமாகத் திகழும் சிமொன் தெ பொவ்வாரின் சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தின் நல்ல விளவுகளை உருவாக்க முடியும். தமிழ்ச் சிந்தனை வரலாற்றில் பெண்கள் பற்றிய பார்வையைத் தொகுத்துக்கொள்ளவும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டங்களை அடையாளம் காட்டவும் தேவையான உந்துதலை இந்த மொழிபெயர்ப்பு நூல் வழங்குகிறது. விமர்சன பார்வையை உருவாக்கி வளர்த்தெடுக்க இத்தகு பயிற்சிகள் நிச்சயம் உதவும். அதற்கான விதையை இந்த மொழிபெயர்ப்பு நூல் தன்னளவில் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை.
——————————————————
நூல்: சிமொன் தெ பொவ்வார்.
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
விலை: ரூ.70
எனி இந்தியன் பதிப்பகம்
102. பி.எம்.Jஇ. காம்ப்ளெKஸ்
எண் 57, தெற்கு உஸ்மான் சாலை. தி. நகர்.
சென்னை-17 போன் 24329283

Series Navigation