பூ ஒன்று (இரண்டு) புயலானது – இரண்டு

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

ச.ஜயலக்ஷ்மி


இனி அடுத்த பூ புயலானதைப் பார்க்கலாம்.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. பூம்புகார் நகரில்,மாநாய்கனின் குலக்கொடியான 12வயது கண்ணகிக்கும், மாசாத்துவானின் 16 வயது கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. கண்ணகியை,
”போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள், பெயர் மன்னும் கண்ணகி”

தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் வடிவம் கண்ணகியின் வடிவத்தைப் போன்றது.அருந்ததியின் கற்பு இவள் கற்பைப் போன்றது.மாதர்கள் வணங்கும்படியான பெருங்குணத்தவள் இக்கண்ணகி என்று அவள் பெருமையை அடுக்குகிறார் இளங்கோவடிகள்.கோவலனும் கண்ணகியும் தாரும் மாலையும் முயங்க இன்பம் நுகர்கிறார்கள். ”மாசறு பொன்னே,! வலம்புரி முத்தே! காசறு விரையே!கரும்பே தேனே!” என்றெல்லம் கண்ணகியை நலம் பாராட்டுகிறான் கோவலன்.கண்னகி மிகவும் நாணமடைகிறாள்.சில ஆண்டுகள் கழிகின்றன.

மாதவியோடு வாழ்க்கை
புகார் நகரத்திலிருந்த நடன மணியான மாதவியின் மாலையை வாங்குபவர் அவளை அடையலாம் என்று கூறி கூனி விற்ற அம்மாலையை வாங்கிய கோவலன் மாதவியுடனே தங்கி விடுகிறான்.கண்ணகி சோகத்தாளாய நங்கையாகி, மங்கல அணியைத்தவிர வேறு அணி£கலன்களையும் நீக்கி விடுகிறாள்.தன்னைப் புறக்கணித்து விட்டு,அதே புகரில் மாதவியோடு வாழ்வதைப் பற்றிச் சினந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறாள். தன் துயரத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், கோவலனின் பெற்றோரிடமும் இயல்பாகவே நடந்து கொள்கிறாள். இது கண்ட கோவலனின் பெற்றோர் வருந்துகிறார்கள். ஒரு நாள் தீக்கனவு கண்ட கண்ணகி மனம் துயருற்ற நிலை யில் தோழி தேவந்தி வருகிறாள்.கண்ணகியின் தீக்கனவைக் கேட்ட தேவந்தி,சோமகுண்டம்,சூரியகுண்டம் என்ற பொய்கையில் நீராடி காமதேவனை வழி பட்டால் கணவருடன் கூடிப் பிரியா வாழ்வு வாழலாம்.நாம் சென்று நீராடி வழிபடுவோம் என்கிறாள். ஆனால் கணவனைத் தொழும் கண்ணகி அது பெருமை தராது என்று மறுத்து விடுகிறாள்.

மாதவியை நீங்குதல்:
ஊழ்வினை உருத்து வந்ததால் மாதவி பாடிய கானல்வரியைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன அவளை விட்டு நீங்குகிறான்.நேராகக் கண்ணகியிடம் வருகிறான் கண்னகியின் வாடிய மேனியையும் கோலத்தையும் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போகிறான். ”நம் முன்னோர் தேடிவைத்த குன்றமன்ன செல்வத்தையல்லாம் மாதவியின் பின் தொலைத்தேன்.அதனால் வந்த வறுமை எனக்கு நாணத்தைத் தருகிறது.”, என்று வருந்துகிறான் மாதவிக்குக் கொடுக்க ஒன்றும் இல்லையே ,என்று மனம் வருந்துகிறரோ என்று நினைத்த கண்ணகி புன் முறுவலோடு ”சிலம்புள கொண்ம்” என்று கொடுக்கிறள்.இன்னொரு பெண்ணாக இருந்தால் எப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள்!

திருநீலகண்ட நாயனாரின் மனைவி பரத்தை வீடு சென்று வந்த கணவரிடம் ”எம்மைத் தீண்டுவீராயின் திருநீல கண்டம்” என்று ஆனையிடுவதைப்பார்க்கிறோம்.ஆனால் கண்னகியோ பொறுமை காக்கிறாள். சிலம்பைப் பெற்றுக் கொண்ட கோவலன் அச்சிலம்பையே முதலாகவைத்து, மதுரை சென்று இழந்த பொருளை மீட்பதாகச் சொன்னதும், அவன் எழுக என்றதும் என்ன ஏது என்று கேட்காமல் மறுப்பேதும் சொல்லாமல் அந்த இரவிலேயே கோவலனோடு புகாரை விட்டு மதுரைக்குக் கிளம்பி விடுகிறாள்.

வழிப் பயணம்
வெளிஉலகை அறியாத கண்ணகி இடையும் சிற்றடியும் நோக வழி நடக்கிறாள்.வழியில் சமணத்துறவியான கவுந்தியடி
களைச் சந்திக்கிறார்கள். போகும்பொது காமுகன் ஒருவனும் வம்பப்பரத்தையும் இவர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.இதைக்கேட்ட கண்ணகி நடுங்குகிறாள். அடிகள் அந்த இருவரையும் நரிகளாகும்படி சபிக்கிறார். ஆனால் கண்னகியோ அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறாள். வருந்துகிறாள்.செல்லும் வழியில் தெய்வம் ஏறப்பெற்ற சாலினி கண்ணகியை ”இவளோ கொங்கச்செல்வி,குடமலையாட்டி,தென்தமிழ்ப்பாவை செய்தவக்கொழுந்து,ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி” என்றெல்லாம் போற்றுகிறாள்.இதைக்கேட்ட கண்ணகி பெருமையோகர்வமோ அடையாமல் நாணமடைந்து கோவலன் பின்னால் சென்று மறைந்து கொள்கிறாள்.மதுரைப் புறநகரை அடைந்ததும் கவுந்திஅடிகள் கண்ணகியை மூதாட்டியான மாதரியிடம் அடைக்கலமாகத் தந்து
”என்னோடு போந்த இளங்கொடி நங்கை தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்.

என்று கண்ணகியைத் தெய்வமாகவே போற்றுகிறாள்.இந்தப் பூங்கொடி,மண்மகள் அறியா வண்ணச் சீரடிகளை உடைய கொடி.இதுதான் மதுரையிலே புயலாக வீசப் போகிறது!

கோவலன் கொலை:
மதுரை ஆயர்சேரிப்பெண்கள் கொடுத்த பலவகையான காய்களை அரிந்து கண்ணகி சமைக்க ஆரம்பிக்கிறாள்.
காய்களை அரிந்ததால் அவளுடைய மெல்லிய விரல்கள் சிவந்து போகிறது ,என்றாலும் கோவலனுக்காகச் சமைக்கிறோம் என்பதால் அவள் மகிழ்ச்சியோடு சமைக்கிறாள். உண்டு முடித்த கோவலன் சிலம்போடு மதுரை செல்கிறான்.பாண்டிய மன்னனின் பொற்கொல்லன், பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிவிட்டுப் பழியை,சிலம்பு விற்கச் சென்ற கோவலன் மீது சுமத்துகிறான்.தேவியின் ஊடலைத் தீர்க்கச் சென்ற மன்னன் ஆராயாமல் சிலம்பு கள்வன் கையிலிருந்தால்”கொன்றச் சிலம்பு கொணர்க” என்று ஆணையிட கோவலன் கொல்லப் படுகிறான்.

கண்ணகியின் சீற்றம்
இதைக்கேட்ட கண்ணகி ”பொங்கி எழுந்தாள்,விழுந்தாள், செங்கண் சிவக்க அழுதாள்.” பிரிந்த கணவனோடு சேர்ந்து
மீண்டும் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையோடு மதுரை வந்தவளுக்குப் பேரிடி!இதுவரை அவளுள் அடங்கியிருந்த துயரம் பீரிட்டுப் புயலாக உருவெடுக்கிறது.தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம், கடமை அவளுக்கிருப்பதை உணர்கிறாள்.கதிரவனையே விளித்து நியாயம் கேட்கிறாள்.
”பாய் திரை வேலிப் படு பொருள் நீயறிதி
காய் கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்?

வானத்திலிருந்து ஒரு குரல் பதிலாக வருகிறது, ”கள்வனோ அல்லன், ஒள்ளெரி உண்ணும் இவ்வூர்”. இதோடு அமைதியடையாத கண்னகி [ப் புயல்] எஞ்சிய சிலம்போடு வேகமாகச் செல்கிறாள்.ஊர் புதிது,மக்கள் புதியவர்கள்,வேற்று நாடு,தான் தனியொருத்தியாக இருப்பதையெல்லாம் அவள் எண்ணவேயில்லை.தன் கணவன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அவளிடமிருந்தது! அவ்வூரிலிருந்த பெண்களையெல்லாம் விளித்து”என் காதல் கணவனைக் காண்பேன்.கண்டு அவன் வாயிலிருது நல்லுரை கேட்பேன்.அவ்வாறு கேட்காவிட்டால் இவ்வுலகம் என்னை இகழட்டும்” என்று சூளுரைக்கிறாள்.

கோவலன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்ததும் துயரமும் கோபமும் பொங்குகிறது.”இது என்ன நாடா?காடா?
இம் மதுரையிலே பெண்டிரும் உண்டு கொல்?சான்றோரும் உண்டு கொல்?ஏன் தெய்வமும் உண்டு கொல்?” என்று கதறிக் கொண்டே
மதுரை வீதிகளின் வழியாகச் செல்கிறாள்.இக் கொடுமை செய்தமன்னனைக் கண்டு கொலைக்குரிய காரணத்தைக் கேட்பேன், என்று
புயலெனச் செல்கிறாள்.வேற்று நாட்டு அரண்மணை என்ற பயமும் அவளுக்கில்லை.வாயிலிருந்து வார்த்தைகள் தீக் கங்குகளாக வெளி வருகின்றன.”வாயிலோயே! வாயிலோயே! அறிவரை போகிய பொறியற்று நெஞ்சத்து,இறை முறை பிழைத்தோன் ”வாயிலோயே! என்று வாயிற் காப்போனிடம் தன் வருகையைத் தெரிவிக்கிறாள். மன்னனுக்குத்தான் எத்தனை விதமான அடை மொழிகள்!
” இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனையிழந்தாள்,கடையகத்தாள்
என்று அறிவிப்பாயே,அறிவிப்பாயே

என்று வாயில் காப்போனுக்குக் கட்டளையிடுகிறாள்.கண்ணகியின் தோற்றத்தைக் கண்ட வாயில் காப்போன் அவளைக் காளியோ,துர்க்கையோ,மஹிஷாசுரமர்த்தனியோ என்று அஞ்சி மன்னனிடம் தன் கருத்தைச் சொல்கிறான்.மஹலக்ஷ்மி,அருந்ததி, நப்பின்னையோடு ஒப்ப்பிடப்பட்ட கண்ணகி இப்பொழுது போரின் அதி தேவதையான காளி, துர்க்கையோடு ஒப்பிடப்படுகிறாள். அவ்வளவு பயங்கரத் தோற்றம்!

அவைக்கு வந்த கண்ணகியை பாண்டிய மன்னன்
”நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய்?”

என்று கேட்ட அளவிலேயே கண்ணகியின் சீற்றம் மேலும் அதிகரிக்கிறது.தன்னை நேரிலே பார்த்தபின்பும் தன்னை யார் என்று கேட்கும் மன்னனை எப்படி அழைப்பது?கோவலன் கொலையுண்டது காலை நேரம்.கொலை செய்யப்பட்டதை அறிந்து இவள் ஓடி வந்து கதறி அழுவதை இம்மன்னன் இன்னமும் அறியவில்லையா? இவள் கதிரவனையே விளித்து நியாயம் கேட்டு அவன்.கோவலன் குற்றமற்றவன் என்று பதில் அளித்ததையும் இவன் அறியவில்லை!இவள் மதுரை வீதியிலே பெண்டிரும் உண்டு கொல்?என்று அரற்றிய படியே அலைந்ததும் இவனுக்குத் தெரியவில்லை!கோவலன் உயிர் பெற்று விண்ணுலகடைந்ததையும் யாரும் இவனிடம் சொல்லவில்லை!இப்பொழுது மாலையும் போய் இரவு சூழும் நேரம்.இவ்வளவுக்கும் மேலாக வாயில் காப்போனிடம்” கணவனையிழந்தாள், இணையரிச் சிலம்பொன்று ஏந்தியகையள்” என்றெல்லாம் விபரமாகச் சொன்ன பின்னும் இவனால் ஊகிக்க முடியவில்லை!நேருக்குநேர் தன்னை தலைவிரி கோலமாக,இரத்தக்கறை படிந்த ஆடையோடும், கையில் சிலம்போடும் பார்த்த பின்னரும் இன்னாரென ஊகிக்க முடியாத மன்னனின் ஆட்சி நன்று என எண்ணி ”தேரா மன்னா! செப்புவதுடையேன்” என்று மன்னனை விளிக்கிறாள்.என்ன ஒரு தைரியம்!

”தேவர்கள் வியக்க,தன்னைச் சரணடைந்த ஒரு புறாவுக்காகத் தன்னையே தியாகம் செய்து தராசுத் தட்டில் ஏறினானே சிபிச் சக்கரவர்த்தி,அவன் வமிசத்தவள் நான்.எங்கள் மன்னர்கள் ஒரு புறாவுக்காகத் தன்னையே தியாகம் செய்தவர்கள்.இங்கோ?புது வாழ்வு வேண்டி வந்தவனுக்குக் கிடைத்ததோ கொலைத்தண்டனை! இன்னும் கேள்
ஆவின்கடை மணி உகுநீர் நெஞ்சு சுடத்தன் அரும்பெறற் புதல்வனை
ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் என் பதி”

ஒரு பசுவின் துயரம் பொறாத மன்னன், தன் ஒரே மகனைத் தேர்க் காலில் இட்டுத் தானே தேர் ஓட்டினானே அப்படிப்பட்ட மனுநீதிச்
சோழன் ஆண்ட புகார் நகரமே என் ஊர்.அவ்வூரில் புகழ் பெற்ற பெருங்குடியில் மாசாத்துவானின் மகன் கோவலனின் மனைவி கண்ணகி என் பெயர், என்று தன் பிறந்த நாட்டையும், ஊரையும் குடிப் பெருமையையும் எப்படிப் பேசுகிறாள்! சாலினி புகழ்ந்ததைக் கேட்டு நாணமடைந்து கோவலனின் பின் போய் ஒளிந்து கொண்ட கண்ணகி எங்கே?அரசனிடமே புயலாகச் சீறும் இந்தக் கண்னகி எங்கே?

”’பெண்ணே! கள்வனைத் தண்டிப்பது கடுங்கோலன்று.அது அரச நீதியாகும் என்கிறான் மன்னன்.கள்வன் என்ற சொல்லைக் கேட்டதும் கண்னகியின் கோபம் கொழுந்து விட்டெரிகிறது.வார்த்தைகள் முன்னை விடச் சீற்றமாக வருகிறது.”நல் திறம் படராக் கொற்கை வேந்தே! என் சிலம்புகள் மாணிக்கப் பரல்களை உடையது,என்றாள்.”என் தேவியின் சிலம்புகள் முத்துக்களை உடையவை” என்ற மன்னன் கோவலனிடமிருந்து கைப்ப்ற்றி¢ய சிலம்பைக் கண்ணகியிடம் கொடுக்க அவள் அதை வீசி எறிகிறாள்.அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறி மன்னன் வாயில் பட்டுத் தெறிக்கிறது.அது கண்ட மன்னன் ”யானோ அரசன்?யானே கள்வன்!”என்று உயிர் விடுகிறான்.இதைக்கண்ட கோப்பெருந்தேவியும் உயிர் துறக்கிறாள்.
”பட்டாங்கி யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன்,அரசோடொழிப்பென் மதுரையுமென்
பட்டிமையும் காண்குறுவாய்”

என்று ஆவேசமாக வெளியேறுகிறாள்.

”நான் மாடக் கூடல் மக்களே,சான்றோர்களே, கடவுள்களே,என் காதல் கணவனைக் கொன்ற இந்நகரத்தை எரிக்கப் போகிறேன்.நான் குற்றமில்லாதவள்’ என்று மதுரை நகரை வலம் வந்து தன் இட முலையைத் திருகி எறிகிறாள். தீவினையாளர் பக்கமே தீ பரவட்டும் என்று தீக்கடவுளுக்குக் கட்டளை யிடுகிறாள்.பின் நெடுவேள் குன்றம் ஏறி தேவேந்திரன் மலர்மாரி பொழிய கோவலனோடு வான ஊர்தியில் ஏறுகிறாள்.”

”மண்ணக மாந்தர்க்கு அணியான கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்தானாள்

இரு காப்பியத் தலைவிகளுமே ஆரம்பத்தில் பூப் போன்று மென்மையாக இருந்தாலும் தன் கற்புக்குப் பங்கம் வரும்போதும் தன் கணவன்மேல் அடாத பழி வந்த போதும் புயலாக மாறி தனியாகவே பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளும்,சவால்களும் வரும்போது முடங்கிப் போய் விடாமல் சீதை, கண்ணகி, மணலூர் மணியம்மாள் போல் வீறு கொண்டு எழவேண்டும்.

( குறிப்பு : எனது இக்கட்டுரை ”பாரத மணி” என்ற மாத இதழில் பிரசுரமாகி உள்ள்து.அதன் ஆசிரியரின் அனுமதி பெற்று இக் கட்டுரையை திண்ணை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இப்படிக்கு
ச.ஜயலக்ஷ்மி)


Series Navigation

ச.ஜயலக்ஷ்மி

ச.ஜயலக்ஷ்மி