புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

சுப்ரபாரதிமணியன்



உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்களும் உள்நாட்டுக்கலவரங்களும் மக்களை வெவ்வெறு நாடுகளுக்கு இடம் பெயரச் செய்து கொண்டிருக்கிறது. அகதிகளாக வெளிநாடுகளில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள். உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்களால் விவசாயம், புராதனத் தொழில்களை விட்டு இந்த கிராமமக்கள் தொழிற்சாலைகள் சார்ந்த பெரும் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருவது சாதாரணமாகிவிட்டது. புலம் பெயரும் மக்களைப் பற்றியத் திரைப்படங்களும் அவ்வகைப் பதிவுகளாக அமைந்துள்ளன.

பல ஆப்ரிக்க நாடுகளில் தண்ணீ£ர் பிரச்சனை காரணமாக இனக்குழுக்களின் இடம் பெயர்வும் சாதாரணமாகிவிட்டது. ” சவுண்ட்ஸ் ஆப் சேண்ட் ” என்ற படம் சகாராவைச் சார்ந்த ஆப்ரிக்க கிராமத்தினரை பற்றிதனாக அமைந்துள்ளது. பெல்ஜியம் பிரான்ஸ் தயாரிப்பான இப்படத்தை மரியன் ஹென்செல் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருக்கிறார். ஆப்ரிக்க கிராமத்து ரஹெனே என்ற படித்த இஞைனனுக்கு இடம் பெய்ரதல் அவசியம் என்று பட்டு விடுகிறது. நீர்நிலைகள் வற்றிப்போய் விட்டன. கால்நடைகள் வாழத்தகுதியற்றதான நிலமாகி விட்டது. ரஹேனேயின் இனக்குழுவினர் தெற்கு திசைக்கு இடம் பெயர நினக்கிறார்கள். ரஹேனே கிழக்கு திசையில் இருக்கும் நீர் பகுதியை நோக்கிச் செல்கிறான். தன்னிடம் இருக்கும் ஆடு, மாடு, மற்றும் ஒரு ஒட்டகம் , முக்கியமானப் பொருட்களுடன் கிளம்புகிறான். இரு மகன்கள், ஒரு மகள். ( மகள் பிறந்த போது பெண் குழந்தையின் இருப்பு தேவையில்லாததாகக் கருதப்பட்டு கொன்று விடலாம் என்ற யோசனை முன் வைக்கப்படுகிறது. இதை அறிந்த அவன் மனைவி குழந்தையுடன் தப்பித்து விடுகிறாள். பின்னர் குழந்தையுடன் திரும்பி சமாதனமடைகிறாள். ) தண்ணீரைத் தேடின சுட்டெரிக்கும் வெயிலில் பயணம். இருக்கும் உணவுப் பொருட்கள் காலியாகின்றன. வழித்தடங்களில் தங்கல். பெரும் பணம் கொடுத்து ‘காம்பஸ் ‘ வாங்கி கிழக்கு நோக்கி பயணம், ஒரு இடத்தில் சுற்றி வளைக்கும் ஒரு கொள்ளைக்ககார கும்பல் ஒரு நாளைக்கு ஒரு கால் நடை பிராணி என்ற வகையில் கொடுத்தால் தண்ணீர் விநியோகம், அப்பகுதியில் இருக்கும் வரை மற்றவர்கள் தாக்காமல் இருக்கப் பாதுகாப்பு என நிபந்தனை விதிக்கிறார்கள். ரஹேனே அதை ஒத்துக் கொண்டு சில நாட்கள் தங்கி சில ஆடுகளையும் மாடுகளையும் இழக்கிறான். தொடர்ந்த பயணத்தில் தென்படும் ஒரு தீவிரவாதக்குழுவொன்று தங்கள் படைக்கு குழந்தையைக் கேட்கிறது. பெண் குழந்தையை எடுத்துக் கொள் என்கிறான். மறுத்து அவனது ஒரு மகனை தராவிட்டால் கொன்று விடுவோம் என்கிறார்கள் ஒரு மகனைக் கொடுத்து விடுகிறார்கள். வழியில் ஆயுதம் தாங்கிய குழுவிடம் அகப்பட்டுக் கொள்கிறார்கள். கன்னிவெடிகள் புதைக்கப்ட்ட அப்பகுதியில் கன்னி வெடிக¨ளி பரிசோதிக்க பெண் குழந்தையை நிர்பந்த்ததால் அனுப்ப வேண்டி இருக்கிறது. ( இன்னொரு மகனும் முன்பு சுடப்பட்டு இறந்து விட்டான். ) இருப்பது மகள் மட்டிடுமே. கன்னி வெடி பரிசோதனையில் அவளை இழப்பதா, எல்லோரும் குண்டுகளுக்கு இரையாவதா என்ற கேள்வியில் அவள் கன்னி வெடி சோதனைக்கு அனுப்பப்படுகிறாள். குழந்தை மீண்டு விடுகிறாள். ரஹேனேயின் மனைவி உடல் உபாதையால் சுய நினைவு இழ்க்கிறாள். அவளின் கட்டாயத்தால் அவளை விட்டு விட்டு ஓரிரு ஆடுகள், ஒட்டகம், பெண்குழந்தையுடன் பயணத்தைத் தொடர்கிறான்.பணம் பறித்துக் கொண்ட கும்பல்கள் நீர் இருக்கும் இடம் நோக்கி தவறாக வழிகாட்டியதை உணர்கிறான். தொடர்ந்து கடும் வெயிலில் பயணம். குடிநீர் இல்லாதது, உணவு இல்லாததால் அவனை நடக்க முடியாமல் வீழ்த்துகிறது. இறுதியில் தன்னார்வத் தொண்டர்களால் மீட்கப்பட்டு அகதி முகாமில் கண் விழிக்கிறான். மகள் பத்திரமாக இருக்கிறாள். அவள் மற்றவர்களிடம் சொல்கிறாள் : ” அப்பாவுக்கு வருத்தம் அவரின் ஒட்டகம் இல்லாமல் போய் விட்டதே என்பது தான் ”

சாய் மிங் லியாங் என்ற தைவான் இயக்குனரின் ” அய் டோண்ட் வாண்ட் டு சிலிப் அலோன்” என்ற படம் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதிக்கு வந்து வாழும் கட்டிடத்தொழிலாளர் பற்றியது. இதில் வரும் முக்கிய பாத்திரம் தன்னிடமுள்ள பொருட்களை இழக்கிறான். அடிபட்டுக் கிடக்கிறான். புலம் பெயர்ந்த தொழிலாளிகள் அவனை எடுத்துப் போய் உயிர் பிழைக்க உதவுகிறார்கள். உயிர்
பிழைப்பவன் கீழே இருக்கும் உணவு விடுதிப் பெண்ணுடன் நட்பு கொள்கிறான். இது அவனைக் காப்பாற்றி உதவி செய்தவனை பொறாமையால் கொலை செய்யத் தூண்டுகிறது. முக்கிய கதாபாத்திரத்தின் இரட்டை ரோலில் இன்னொருவன். உடல் அசைவில்லாத இன்னொருவன். அவனைக் காப்பாற்ற பல முயற்சிகள். இந்த இரட்டை நபர்களின் உடம்பும் அவர்களுக்குரியதல்ல. புலம் பெயர்ந்தவனின் உடல் வேலை வாங்குபவனுக்குச் சொந்தமானது. உணர்வின்றிக் கிடப்பவனும், உடலும் அவ்வாறே. அந்த நபருக்குச் சொந்தமானதாக இல்லாமல் போய்விட்டது.

மலேசியாவில் பரவும் புகை மனிதர்களை முகமூடிகளுடன் உலவச் செய்கிறது. முகமூடிகளூடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறது. இந்தப் படத்தில் கோலாலம்பூரில் கட்டிட வேலை செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை பல கோணங்களில் காட்டப்படுகிறது. சிவா என்ற பாத்திரமும் லுங்கி அணியும் நபர்களும் “சொல்ல மறந்த கதை”., “அய்யா” படப்பாடல்களும் பாடல் காட்சிகளும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாகிய தமிழர்களை அடையாளப்படுத்துகிறது.
அவர்கள் படுக்கையொன்றைச் சுமந்து வெவ்வேறு இடங்களுக்குப் போவது குறியீடாக அமைந்து விட்டிருக்கிறது.

” தி காஜ்” என்ற ஈரானியப்படம் புலம்பெயர்ந்து வேலை செய்பவர் ஒருவர் தன் நாட்டிற்குத் திரும்பிய பிறகு தன் சொந்த நாட்டிலிருந்து அந்நியமாகிப் போனதை சித்தரிக்கிறது. பாரிசில் வேலை செய்யும் நாற்பது வயது கதாநாயகன் ஈரான் திருப்புகிறான். அவனின் கண் மங்கலாகி தொந்தரவு தருகிறது. தந்தை அவன் வந்த நாளில் இறந்து போகிறார். இறுதிச் சடங்குகள்
நடக்கின்றன. அவனால் ஈடுபாட்டோடு குடும்பத்தினருடன் பழக முடிவதில்லை. தனது காதலியுடன் இறந்து போன தந்தை அவன் பாரிசில் இருந்த போது நெருக்கமாக இருந்ததை உணர்கிறான். தூரம் என்பது அவன் வேலை செய்ய்யும் நாட்டுடன் சம்பந்தம் கொண்டது மட்டுமல்ல மனங்களுடையதும் என்பதை உணர்கிறான். பார்ஸி என்ற பெண் இயக்குநரின் இரண்டாவது ஈரான் படம் இது.

கமலின் இயக்கத்திலான ” கருத்த பட்சிகள் ” என்ற மலையாளப்படம் கேரளாவில் குடியேறிய சில தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது.தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய முருகன் என்ற தமிழன் துணிகளை இஸ்திரி செய்யும் வேலையைச் செய்கிறான். கலவரம் ஒன்றில் அவனின் இஸ்திரி வாகனம் தீக்கிரையாக்கப்பட துணி துவைக்கும் வேலைக்குச் செல்கிறான். அதிலிருந்து
மீண்டு இஸ்திரி வண்டியொன்றை வாடகைக்கு எடுத்து வேலையைத் தொடர்கிறான். அவனது மூன்று குழந்தைகளில் ஒரு பெண் பார்வையில்லாதவள் பிறர் கண்களைப் பொருத்துவதன் மூலம் பார்வை பெற முடியும். பணக்கார கேன்சர் வியாதிப் பெண் ஒருத்தி தன் சாவிற்குப் பின் கண்களைத்தர ஒப்புக் கொள்கிறாள். அதுவும் நிறைவேறுவதில்லை. கத்திக்குத்தால் பாதிக்கப்படுகிறான் முருகன்.
பிச்சையெடுத்துப் பிழைக்கும் பெண், சலவைத்தொழிலாளிகள் , பிச்சைக்காரர்களை வைத்துப் பிழைக்கும் தமிழன், சேரி மக்கள் என்று பல தமிழ் பாத்திரங்கள் தமிழ் வசனங்களுடன் உலவுகிறார்கள். பாண்டி என்பது வசவுச் சொல் போன்று தமிழர்களை அழைக்கும் முறை மற்றும் தமிழர்களின் சாதாரண நிலைவாழ்வை இப்படம் சித்தரிக்கிறது. மம்முட்டி முருகன் பாத்திரத்திலும் பிச்சைக்காரப் பெண்ணாக நவ்யா நாயரும் நடித்திருக்கிறார்கள். விவசாயத்தைப் பெரும் அளவில் நம்பியுள்ள கேரள மாநிலத்து மக்கள் உலகின் பல பாகங்களிலும் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தமிழன் ஒருவனின் வாழ்க்கையை இப்படம் சித்திகரிக்கிறது. புலம் பெயர்ந்த மலையாளிகளின் வாழ்க்கையையும் அவர்கள் சொந்த நாட்டில் அந்நியமாவதையும் பல படங்கள் முன்னர் சித்தரித்துள்ளன. கமல் இயக்கிய சென்றாண்டின் படமான “பெருமழைக்காலம் ” அவ்வகையிலான ஒரு படமாகும்.


srimukhi@sancharnet.in

Series Navigation