புலமையும் வறுமையும்

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

முனைவர் சி.சேதுராமன்



“கொடிது கொடிது வறுமை கொடிது“ என்பார் ஔவையார். பாலைநிலத்தின் கொடுமையைப் புலப்படுத்த எண்ணிய புலவர் “வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்“ என்று வறுமைவாய்ப்பட்டவனின் இளமையைக் குறிப்பிடுகிறார். பாலைநிலத்தைவிட வறுமை கொடியதாக இருந்ததை அவ்வரிகள் தெளிவுறுத்துகின்றன. பண்டைக்காலத்தில் புலவர்கள் வானம்பாடிகளாய்த் திரிந்தனர். அவர்களது வாழ்க்கை வளமானதாக இருக்கவில்லை. வறுமையாளராகவே புலவர்கள் இருந்தனர். வறுமையைத் தொலைக்க வள்ளல்கள் எங்குள்ளனர் என்று தேடிஅலைந்து, அவர்களைப் பாடிப் பரிசில் பெற்றனர். இப்புலவர்கள் பிறரை அண்டி வாழ்ந்தனர். வறுமையின் கொடூரத்தால் பாதிப்புற்ற இப்புலவர்கள் அதன் கோரத்தினை பலகோணங்களில் வளமான இலக்கியங்களாக்கினர். சில புலவர்களைத் தவிர பெரும்பான்மையான புலவர்கள் வறுமையில் வாடினர். அவர்களின் அவலக் குரல்களினை எதிரொலிப்பவையாகப் புறநானூற்றுப் பாடல்கள் திகழ்கின்றன. பசியின் கொடுமை பசியினால் உடல் வற்றி சுற்றத்தாருடன் கேட்போர் பலர், உதவுபவர் சிலர் என யாழை மீட்டிப் பாடி தங்கள் சுற்றத்தாரின் பசியைப் போக்குபவர் யார்? என வருந்துகின்ற பாணரை, ‘‘உடும்பு உரித்து அன்ன என்புஎழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து ஈங்குஎவன் செய்தியோ பாண?“ (புறம்.68)என விளித்து அவர்களை ஒரு வள்ளலிடம் கோவூர்க்கிழார் ஆற்றுப்படுத்துகிறார். பசியானது துரத்த அதனைப் போக்குவதற்கு ஆய்அண்டிரனைப் போய்ப்பார்த்த துறையூர்ஓடைக்கிழார் என்ற புலவர், “ஆய்வேளே உன்னையே நம்பி வந்திருக்கின்றேன். என் கிழிந்த அழுக்கடைந்த கந்தல் துணியில் ஒட்டிய ஈரும் பேனும் பகையா? என்னை வருத்தும்பசி பகையா? என்று வேதனையுடன் வினவி, வள்ளளே நீ எமக்கு உதவுவதே உண்மையான ஈகையாகும். நீதரும் செல்வத்தைக் கொண்டு நான் உண்டு உயிர் வாழ்வேன் (புறம். 136) என்று தனது பசிபோக்க பொருள் தருமாறு யாசிக்கிறார். தனது பசிக்கு உணவிடுவோரைத் தேடி புலவர்கள் சுறத்தாருடன் அலைந்தனர். பசியே அவர்களைத் துரத்தியது. “பசிவந்தால் பத்தும் பறந்துபோகும்“ என்பதற்கேற்ப தங்களின் தன்மானத்தை விடுத்து, வள்ளல்களிடம் தங்களின் பசித் துன்பத்தைக் கூறி அதனைப் போக்குமாறு வேண்டுகின்றனர். மருதன் இளநாகநானார் என்ற புலவர் பசியால் வருந்தி, தன் துயர் போக்க ஆய்அண்டிரனைப் பார்க்கச் செல்கிறார். அவனைப் பார்த்து, சுமைகளைச் சுமந்து சுமந்து தோள் வடுப்பட்ட இளைஞர்களே பலர். எமது விறலியர் நீண்ட நேரம் நடந்ததால் களைப்புற்றனர். வள்ளலே நான் உண்மையையே கூறுகிறேன். எனது வறுமைநிலையைப் போக்க உன்னையே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன். நீ போருக்குப் புறப்பட்டுப் போய்விட்டால் நானும் என் சுற்றமும் பசியால் வாடி அழிந்து போவோம். ஆதலால் நாங்கள் பசியால் துன்புற்று அழியாமல் இருக்க உதவி செய்க என்று வேண்டுகிறார். எங்கே தாங்கள் பசியால் பொய் கூறுவதாக அரசன் நினைத்து உதவாதிருந்துவிடுவானோ என்று அஞ்சி புலவர், “வாழ்தல் வேண்டி பொய் கூறேன் மெய்கூறுவல்“ (புறம், 139) என்று உரைக்கின்றார். அதனைக் கேட்டு ஆய்அண்டிரன் அவர்களது பசியைப் போக்குகிறான். உணவு சமைக்க அரிசி கேட்டல்உணவு சமைப்பதற்குப் புலவர்கள் வள்ளல்களிடம் அரிசியைத் தருமாறு கேட்டுள்ளனர். அவ்வரிசியை வாங்கி உணவு சமைத்துத் தங்களது பசியைப் போக்கிக் கொண்டனர். இச்செய்தியை ஆய் அண்டிரனைப் பற்றிய பாடலில் ஔவையார்,“வளைக்கை விறலியர் படப்பைக் கொய்தஅடகின் கண்ணுறை ஆக யாம் சிலஅரிசி வேண்டினெம்“ (புறம், 140)என்று குறிப்பிடுகின்றார். பொற்காலம் என்று புகழாரம் சூட்டப்படுகின்ற அக்காலத்தில் ஒரு பிடி அரிசிக்காகப் புலமையுடையோர் அரண்மனை வாயிலில் கையேந்தி நின்றதை இதன் வாயிலாக நாம் உணரலாம். குடும்ப வறுமைஎந்நிலையிலும் தனது இல்லற வறுமைநிலையை யாரும் அறிதல் கூடாது என்று விரும்புவர். “தேழைமையோடும் ஏழைமை பேசேல்“ என்பது பழமொழி. ஆனால் குடும்ப வறுமை நிலையை தனது தன்மானத்தை விடுத்து கூறும் அவலநிலையையும் புறநானூற்றில் காணமுடிகிறது. குடும்பத்தின் வறுமையைத் தாங்க இயலாத பெருஞ்சித்திரனார் என்ற புலவர் குமண வள்ளலைத் தேடி வருகிறார். குமணனைப் பார்த்து, “குமணனே! உணவின்றி வயது முதிர்ந்த என் தாயனவள் நூல் போன்று மெலிந்து விட்டாள். பசியால் வாடிய எனது மனைவி வற்றி உலர்ந்துபோன மார்புடன் மிக வருந்தியிருக்கிறாள். பிள்ளைகள் என் மனைவியின் வற்றிய மார்பில் பாலருந்த, பால் இன்றி அதனைப் பிசைந்து உண்ண மென்று வருந்துகின்றன. எனது மனைவியோ குடும்பத்தினரின் பசியைப் போக்க கீரையின் இளந்தளிரைப் பிடுங்கி வந்து அவிக்கின்றாள். அதில் போடுவதற்கு உப்பின்றி அதனைத் தின்றோம். மேலும் நான் உடுத்தியுள்ள துணி அழுக்கடைந்து கிழிந்து விட்டது. நீ குன்றிமணியளவு சிறிது பொருள் மட்டும் தந்து எனது குடும்ப வறுமையைப் போக்கவேண்டும். அதனாலேயே நான் உன்னைத் தேடிவந்தேன்“ என்று இறைஞ்சுகிறார் (புறம்.,159). இப்பாடலில் உணவும், உடையும் இன்றி வாடும் புலவரின் வறுமையின் உச்சநிலை எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. இஃது படிப்போரின் கண்களில் கண்ணீரையும் வரவழைப்பதாக உள்ளது.மேலும் தனக்குப் பொருள் தர சற்று காலதாமதம் ஆனதைக் கண்டு எங்கே தனக்குப் பரிசில் தராது குமணன் அனுப்பிவிடுவானோ எனக் கலங்கி,“நீஅனைவருக்கும் இன்முகத்துடன் பொருள் தரக்கூடியவன் என்று அறிந்து வந்தேன். என் வீட்டிலோ சோறில்லை. என் புதல்வன், தாயின் பாலற்ற மார்பைப் பவியால் சுவைத்துச் சுவைத்துப் பால்பெறாத்தால், தனது பசியைப் போக்கச் சோற்றுப்பானையைத் திறந்து பார்த்தான். அதில் எதுவும் காணாத்தால் அழுதான். அவனைப் புலிவருகிறது அழாமல் இரு என்று கூறி அச்சுறுத்தினாலும், அதோ நிலைவைப் பார் என்று காட்டி அவனது கவனத்தைத் திருப்பினாலும் அவன் தனது அழுகையை நிறுத்தவில்லை.இதனால் என் மனைவி வருந்தினாள். பின்னர் அவள் எனது மகனைப் பார்த்து நீ உனது தந்தையை எப்படி வெறுப்பாய் காட்டு?எனக்கேட்க அவனும் முகம் சுளித்துக் காட்டினான். அதனைக் கண்டு எனது மனைவி மிகவும் வருந்தினாள். அவள் முகமலர்ந்து மகிழ்ச்சியாக வளமுடன் இருக்கவேண்டும். அதனால் எனக்கு விரைவாகப் பரிசில் தந்து அனுப்புவாயக“ (புறம்.,160) என்று இறைஞ்சுகிறார். பசியினால் வாடும் தனது புதல்வன் தன்னை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறுமையின் உச்சத்தை இதில் புலவர் சுட்டியுள்ளார்.அடுப்பிலே பூத்த காளான் காளான் குப்பைமேட்டில், பட்ட மரத்தில் இதுபோன்ற இடங்களில் வளரும். ஆனால் அது வீட்டில் பூத்துவிட்டது. காரணம் நீண்ட நாள் சமைப்பதற்கு உணவுப் பொருள் இன்மையால் அடுப்பே பற்றவைக்கவில்லை. அவ்வாறு பற்றவைக்காத அடுப்பில் காளான் பூத்தது. சமைக்க ஏதுமில்லாததால் பசி வருத்தியது. பசியால் வருந்திய குழந்தை தாயின் மார்பைச் சுவைத்துப் பார்த்தது. பால் இன்மையால் தாயின் முகத்தைப் பார்த்து அழுதது. தாயோ நீர் நிரம்பிய கண்களுடன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவளின் கண்ணீரைத் துடைப்பதற்காக கணவன் தனக்கு உதவக்கூடிய குமண வள்ளலின் முகத்தைப் பார்த்தார். இத்தகைய குடும்ப வறுமை குறித்த மனதை உருக்கும் காட்சியைப் பெருந்தலைச் சாத்தனார், ‘‘ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழூஉம் தன் மகத்துமுகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈர்இதழ்மழைக்கண் என் மனையோள் எவ்வம் நோக்கிநினைஇ நிற்படந்திசினே –நற்போர்க் குமண! (புறம்., 164) என்று படைத்துக் காட்டுகின்றார். கரையாத வறுமை உலகில் மண், கல், பொன், இரும்பு,உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் கரையும். ஆனால் கரையாத பொருள் உலகில் ஏதும் உண்டா? எனில் உண்டு எனலாம். அப்பொருள் ஒன்றால் மட்டுமே கரையும். அது பொருள் என்பதால் மட்டுமே கரையும். அவ்வாறு கரைவது வறுமையாகும். ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் சென்று , “சேய்த்துக் காணாது கண்டனம் அதனால் நோயிலர் ஆகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின்றன்ன என்நல்கூர் வளிமறை நாணலது இல்லாக் கற்பின் வாணுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வம் அத்தை சிறக்க நின் நாளே“ (புறம். 196)யாசித்தும் அவன் பொருள் வழங்காததால், கரையாத வறுமையோடு, எனது மனைவியை நினைந்து நான் போகின்றேன் என மனம் நொந்து வாழ்த்திவிட்டுச் செல்கின்றார். தனது வறுமையை, என் மனைவியிடம் நாணத்தைத் தவிர வேறு பொருள் இல்லை என்று கூறுவதிலிருந்து வெளிப்படுத்துகிறார். தான் இவ்வாறு வேண்டியும் அவன் பொருள் தராத நிலையிலும் அவனைப் பழிக்காது உனது புதல்வர்கள் வாழட்டும் நினது செல்வமும் சிறக்கட்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்கின்றார். தாம் வறுமையில் உழன்றாலும் பிறர் நன்கு வாழ வேண்டும் என்று கருதிய சான்றாண்மையை இப்பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவதோடு புலவரின் பண்பாட்டையும் புலப்படுத்துகிறது. வறுமை முன்னே! நான் பின்னே! புலவர்கள் தமது தன்மானத்தை விட்டு இறைஞ்சியும் சில மன்னர்கள் புலவர்களுக்கு எதுவும் கொடுக்காது அவர்களை நீண்ட நேரம் காக்கவைத்தனர். அதனைப் பொறுத்தலாற்றாத புலவர்கள் செய்வதறியாது வேதனையுற்ற நிலையில் மன்ன்னை வாழ்த்திவிட்டு வெறுங்கையுடன் தம் இல்லம் நோக்கிச் சென்றனர். வறுமையினால் உந்தப்பட்டு சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறையைப் பார்த்து பரிசில் கேட்கச் சென்ற பெருங்குன்றூருக்கிழார் அவன் பரிசில் தராது காலம் நீட்டித்தபோது, ‘‘….வாழியர் குருசில் உதுக்காண் அவல நெஞ்சமொடு செல்வல் நிற்கறுத்தோர் அருங்கடி முனையரண் போலப் பெருங்கை யற்ற என்புலம்புமுந் துறத்தே“ (புறம். 210)என்று பாடிவிட்டுச் செல்கிறார். மன்னனே வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்லுகின்றேன்! என்கிறார். யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே! என்பதைப் போன்று புலவர் பின்னே வர அவரது வறுமை முன்னே சென்றது.அப்படியும் மன்னன் பொருள் தரவில்லை. பொருள் தருவதைப் போன்று பாசாங்கு செய்கின்றான். புலவரும் தமக்குப் பொருள் கிடைத்துவிடும் என்று அவனைப் புகழ்ந்து புகழ்ந்து பாடுகிறார். இவ்வளவு நேரம் தன்னைப் பலவாறு புகழ்ந்து பாடுகிறாரே என்று அரசனும் பொருள் தரவில்லை. மனம் நொந்த புலவர், மன்னனே!‘‘முன்னாள்கையுள்ளதுபோல் காட்டி வழிநாள்பொய்யொடுநின்ற புறநிலை வருத்தம்நாணாய் ஆயினும் நாணக் கூறி என்நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்பாடப்பாடப் பாடுபுகழ் கொண்டநின்ஆடுகொள் வியன்மார்பு தொழுதென்ன் பழிச்சிச்செல்வல் அத்தை யானே வைகலும்வல்சி இன்மையின் வயின்வயின் மாறிஇல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்துமுலைக்கோள் மறந்த புதல்வனோடுமனைத்தொலைந் திருந்தவென் வாள்நுதற் படர்ந்தே” (புறம்.211)
என்று பாடிவிட்டுச் செல்கின்றார். பரிசில் கிடைக்காத நிலையில் பால்குடிப்பதை மறந்து பசியால் தவிக்கும் புதல்வனையும், புதல்வனின் பசியைப் போக்க என்னை எதிர்பார்த்து நிற்கும் மனைவியையும் பார்ப்பதற்காக உன்னை வாழ்த்திவிட்டுச் செல்கிறேன் என்று மனத்துயரத்துடன் புலவர் பாடுகின்றார். ‘பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வன்‘ என தனது குடும்ப வறுமையை எடுத்துக் கூறும் புலவரின் கண்ணீர் வழியும் முகம் இவ்வரிகளில் வெளிப்படுவதை நன்கு உணரலாம். மன்ன்ன் தமக்குப் பொருள் கொடாதபோதும் அவனை வாழ்த்திவிட்டுத் திரும்பும் பண்பாளராகப் புலவர் விளங்குகின்றார்.அறிவைக் கெடுத்த வறுமை விருந்தோம்பல் பண்பிற்குச் சிறப்பு வாய்ந்த தமிழகம். ஆனால் விருந்தினர் வர அவர்க்கு விருந்தூட்ட இயலாத வறுமை நிலை. அதனால் அவரைக் கண்டும் ஒளிந்து வாழக்கூடிய அவல நிலை. விருந்தினரைக் கண்டு அகமும் முகமும்மலர வரவேற்க இயலாத கொடிய வறுமை இல்லில் இருக்க அதனால் ஒளிந்து வாழ்வது கொடுமையிலும் கொடுமையானது. விருந்தினரைக் கண்டு ஒளியும் அத்தகைய நிலை பெருங்குன்றூர் கிழார் வாழ்க்கையிலும் ஏற்பட்டது. அதனைக் கண்டு வருந்திய புலவர், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் காண்பதற்காகச் செல்கின்றார். அவனைப் பார்த்து, அறிவுடையோர் அவையில் அறிவிலான் ஒருவன் சென்று யான் உற்ற துன்பத்திற்கு நீரே துணை என்று கூறினால் அவர்கள் விரைந்து சென்ற அவனது துன்பத்தினைப் போக்குவர். அதனைப் போன்று எனது துன்பத்தை நீ களைதல் வேண்டும். எனது ஐம்பொறியினால் கொள்கின்ற பயனை அடையாதவாறு இவ்வறுமை என்னைத் தடுப்பதோடு மட்டுமல்லாது எனது அறிவையும் கெடுக்கின்றதே! ‘‘விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப் பொறிப்புணர் உடம்பில் தோன்றி என் அறிவுகெட நின்ற நல்கூர்மையே!“ (புறம்.266)அதனால் என்பால் நிலைத்துவிட்ட இந்த வறுமையைப் போக்கி எனக்கு அருள்வாயாக என்று இறைஞ்சுகிறார். வறுமை அறிவையும் கெடுக்கும் என வறுமையின் உச்சநிலையைப் புலவர் காட்டுவது மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. வீடுதோறும் சென்று இரந்துண்டநிலை “ஈயென இரத்தல் இழிவானது“ எனப் பாடிய புலவர்களே வறுமையின் கொடுமையினால் பசி தாளமுடியாது, பசியைப் போக்க உழவர்களின் வீடுகள் தோறும் சென்று இரந்து உண்கின்றனர். இக்கொடுமையைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது. உறையூரைச் சேர்ந்த ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் ஆதரிப்பார் யாருமின்மையால் ஆய்அண்டிரனைப் பார்க்கச் செல்கின்றார். அவனைப் பார்த்து, ‘‘ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்வை“ (புறம்.37)என உழவர் வீடுதோறும் இரந்துண்ட தமது வறுமை நிலையை எடுத்துக்கூறி தம்மை ஆதரிக்குமாறு வேண்டுகிறார். பகல் நேரத்தில் மட்டுமல்லாது இரவிலும் வள்ளல்களின்இல்லம் சென்று புலவர்கள் வறுமையின் காரணமாக உணவை இரந்து உண்டு வாழ்ந்துள்ளனர். சூரியன் மறைந்து சிலபோது சென்றபின்னர், ஓய்மான் நல்லியாதனுடைய வீட்டின் நெற்கரிசையின்(வைக்கோர் போர்) அடியிலே நின்று, தடாரிப் பறையை இசைத்துப் பாடுகிறார் புலவர் புறத்திணை நன்னாகனார். நிலவும் கிழக்கே எழுகிறது. புலவரின் நிலையை அறிய முடியாதவாறு மாறியிருந்த அவரது உருவத்தையும், நைந்து கிழிந்த என் கந்தல் உடையையும் நல்லியாதான் கண்டான். அவரது நிலையைக்கண்டு இரங்கி அவரை அழைத்துச் சென்று அவர் கைகளில் உள்ள கைத்தாளத்தைத் தான் வாங்கிக் கொண்டு கள்ளும் சூடான இறைச்சியையும் கொடுத்து அவரது பசியை முதலில் தீர்க்கின்றான். பின்னர் அப்புலவரின் வறுமை தீரச் செல்வமும் தருகிறான். இதனை, ‘‘விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்சிதாஅர் வள்பின்என் தடாரிதழீஇப்பாணர் ஆரும் அளவை யான்தன்யாணர் நல்மனைக் கூட்டுமுதல் நின்றனென்“ (புறம். 376)என்ற பாடலில் புலவர் எடுத்துரைக்கின்றார். இன்றைய இரவுப் பிச்சைக்காரர்களின் நிலையைப் போன்று அக்காலப் புலவர்களின் நிலை இருந்ததை மேற்கண்ட பாடல் தெளிவுறுத்துகிறது. வள்ளல்கள் இரவலர்களின் பசியையே முதலில் போக்கி உள்ளனர். அதன்பின்னரே அவர்கள் இரவலர்கள் வேண்டிய பரிசினைக் கொடுத்துள்ளனர் என்பது இப்பாடல்வழிப் புலப்படுவது நோக்கத்தக்கது. பெரும்பாலும் புலவர்கள் தங்களது குடும்ப வறுமைக்காகவே தங்களது நிலையை மறந்து வள்ளல்களிடம் இரந்துள்ளனர். அனைத்துப் புலவர்களும் வறிஞராய் வாழ்ந்த நிலையைப் புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பசி போக்க அரிசி வேண்டி வள்ளல்களின் அரண்மனைகளின் வாயில்களில் புலவர்கள் காத்திருந்த அவலநிலையையும் இப்புறநானூற்றுப் பாடல்கள் வாயிலாக அறியமுடிகிறது. பரிசில் நல்காதாரை பழிக்காது தங்களது நிலையைஎண்ணி வருந்துகின்றனர். பரிசில் கொடாதாரைப் பழிக்க வில்லை. மாறாக அவர்களையும், அவர்களது புதல்வர்களையும், செல்வத்தையும் வாழ்த்துகின்ற பெருந்தண்மையான குணத்தோடு புலவர்கள் வாழ்ந்த்தையும் இப்புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. ஆகவே செம்மொழி இலக்கியமான புறநானூறு பண்டைத் தமிழர்களின் பன்முகத்தன்மை கொண்ட வாழ்வியலைக் கூறும் வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது எனலாம்.


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.E.Mail. sethumalar68 yahoo.com

Series Navigation