புரியாத முரண் ( குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன் – எனக்குப்பிடித்த கதைகள் -48)

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

பாவண்ணன்


நண்பர் ஒருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். விருந்து முடித்துத் திரும்பும் சமயத்தில் ஏஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொள்கிறீர்கள். இந்த ஆசை ஒருநாளும் குறையக் கூடாது. எந்தப் பிரச்சனை வந்தாலும் இந்த ஆசையை மனத்தில் நினைத்து மறந்து சேர்ந்து சமாளித்துப் பல்லாண்டு காலம் வாழுங்கள்ஏ என்று கைகுலுக்கி விட்டுச் சொன்னேன். கூட இருந்த நண்பர் ஏஏன் அப்படி வாழ்த்தினீர்கள் ? ஏ என்று கேட்டார். நான் விளக்கிச் சொன்னேன். ஆசையில் இருவகை உண்டு. ஒன்று ஆசைப்பட்ட இன்பம் கிட்டியவுடன் பட்டென்று தீர்ந்து விடும் ஆசை. மற்றொன்று தீராத ஆசை. மிகப்பெரிய நதியில் படகுப் பயணம் செய்வது போல ஒருவர் மனநதியில் மற்றொருவர் செய்யும் தீராத பயணத்தைப் போன்ற ஆசை. பலரிடமும் தீர்ந்து விடுகிற ஆசைகளே அதிகம். வேகவேகமாகத் தீர்த்துக் கொண்டு கவனம் செலுத்தத்தக்க மற்ற துறைகளில் நாட்டம் செலுத்தும் அவசரத்தில் தாவிச் செல்லும் ஒன்றாக ஆசையை நினைத்து விடுகிறார்கள். இங்குதான் எல்லாப் பிரச்சனைகளும் முளைக்கின்றன என்றேன். எடுத்துக்காட்டாகச் சொல்ல நான் பங்கேற்ற ஒரு சம்பவத்தையும் சொன்னேன்.

அவரும் நண்பர்தான். திடாரென ஒருநாள் வந்து அலுவகத்தில் வேலை செய்கிற ஒரு பெண்ணை விரும்புவதாகச் சொன்னார். எனக்கு முதலில் அதிர்ச்சி. அந்தப் பெண்ணின் நளினத்துக்கும் அவனுடைய முரட்டுத் தனத்துக்கும் எப்படிப் பொருந்திப் போயிற்று என்று குழம்பினேன். தொட முடியாத மன ஆழத்தை இருவரும் வெவ்வேறு வகைகளில் தொட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். எப்படியாவது நான்தான் அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பேசித் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றார். ஒரே ஒரு முறை அப்பெண்ணிடம் பேசிப் பார்த்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகச் சொன்னேன். குறிப்பிட்டபடி அப்பெண்ணைச் சந்தித்தேன். அவளும் அவன்மீது இருந்த காதலை நாணிக்கோணி ஒரு வழியாகச் சொன்னாள். பிறகு எல்லாப் பாரமும் என்னுடையதானது. தொடர்ந்து செய்த முயற்சிகளின் விளைவாகத் திருமணம் முடிந்தது.

முதல் மாதம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அடுத்த மாதம் முதல் ஒவ்வொன்றாகக் கிளைக்கத் தொடங்கியது. படுப்பதற்கு நல்ல கட்டிலோ துணிமணிகளை வைத்துக் கொள்வதற்கு ஒரு நல்ல அலமாரியோ கூட இல்லாமல் என்ன வாழ்க்கை வாழ்வது, போய் உன் அப்பாவிடம் சொல்லி வாங்கி வா என்று மனைவியை அனுப்பி விட்டான் அவன். மறுபடியும் பஞ்சாயத்துக்கு நான் அழைக்கப்பட்டேன். நண்பன் பேச்சு விசித்திரமாக இருந்தது. ஒரு மாத இல்லற வாழ்வில் அவன் மனத்திலிருந்த ஆசை வெள்ளம் வடிந்து வறண்டு போயிருந்தது. கறாரான தொனியில் வியாபாரியைப் போலப் பேசினான். ஏஆசையை வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்குக் குடும்பத்தை நடத்துவது நண்பா, பொருள்களும் தேவையப்பாஏ என்று எனக்குப் புத்திமதிகள் சொல்லத் தொடங்கினான். அவன் கோரிக்கைகள் அத்துடன் நிற்கவில்லை. வாகனம், நகைகள் எனத் தொடர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு முறையும் குத்தலான பேச்சுகள். கொடுப்பது நின்ற போது மனைவியை மணவிலக்கு செய்யவும் அவன் தயங்கவில்லை. ஏஎன் பதவிக்கும் படிப்புக்கும் இதைவிட இரண்டு மடங்கு கொடுத்து திருமணம் செய்துதர ஆட்கள் தயாராக இருக்கும் போது நான் ஏன் நண்பா இவளுடன் மல்லுக்கட்டி நிற்க வேண்டும்ஏ என்று நியாயம் பேசவும் தயங்கவில்லை. ஓங்கி அறையலாம் போலப் பொங்கிய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறவும் அவன் உறவைத் துண்டித்துக் கொள்ளவும் மட்டுமே என்னால் முடிந்தது.

காதலின் தோற்றப்புள்ளி ஆசைதான். ஆனால் அந்த ஆசை ஊற்றுப் போலப் பொங்கிக் கொண்டே இருப்பது. அதற்கு எல்லையே இல்லை. எல்லையில்லாத ஆசையில் திளைப்பவர்களால் மட்டுமே இல்வாழ்வின் இன்பத்தைத் துய்க்க முடியும். மற்றவர்களுக்கு அது எட்டாக்கனியே. ஆசை வடிந்ததும் மனத்தில் ஆசை இருந்த இடத்தில் வேறொன்று வந்து உட்கார்ந்து கொள்கிறது. பொருளியல் நாட்டம் வருகிறது. அல்லது கைப்பிடித்தவளையே கண்காணிக்கிற புத்தி உருவாகிறது. ஒரு சொத்து போல அவள்மீது ஆதிக்கம் செலுத்த விழைகிறது. சந்தேகம் முளைக்கிறது. வாழ்வைப் பாழாக்க என்னென்ன வழிகள் உண்டோ அவை எல்லாவற்றிலும் ஈடுபட்டுக் குலைத்துக் கொள்கிறது. பிறகு எல்லாக் குலைவுகளுக்கும் காரணம் பெண்களே என்று சித்தாந்தம் படிக்கிறது. பொருத்தமான கணவனாக வாழத் தெரியாமல் பொருத்தமற்ற மனைவியைப் பற்றிப் புகார்ப்பட்டியலைப் படிக்கிறது.

இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் குஜராத் மொழிக்கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கதையின் பெயர் வண்டிக்காரன். அது குஜராத்தி மொழிக் கதையானாலும் பஞ்சாப் மாநிலத்தில் நடப்பது போலவே விவரிக்கப்படுகிறது. எந்த மாநிலமானாலும் எந்த மொழி பேசுகிற ஆணாக இருந்தாலும் அவனுடைய பார்வையில் படிந்திருக்கும் கசடுகள் ஒன்று போலவே இருப்பதை நிகழ்த்திக் காட்டுவதாலேயே இக்கதை முக்கியமான ஒன்றாகிறது.

குலாம்தீன் ஒரு வண்டிக்காரன். ராவல்பின்டியில் மிக இளைய வயதிலேயே குதிரை வண்டியை ஓட்ட வந்தவன். தந்தை வழியாக இத்தொழில் அவனிடம் படிந்து விட்டது. அழகான குதிரை, பளபளப்பான வண்டி, நீளமான சாட்டை எப்போதும் வேண்டும் அவனுக்கு. குதிரையின் அழகிலோ வண்டியின் பளபளப்பிலோ சிறு குறை கண்டாலும் மாற்றி விடத் தயங்காதவன். தற்செயலாக வண்டியில் ஏறி உட்கார்ந்த ஒரு குடும்பத்தாரிடம் தன் கதையைச் சொல்வதைப் போல கதை நகர்கிறது.

வாடிக்கைக்காரர்களோடு குதிரை வண்டியில் வரும்போது தற்செயலாக அழகான இளம்பணெ¢ ஒருத்தியைத் தெருவில் கண்டு வண் டியை நிறுத்தி விட்டுப் பேசச் செல்கிறான் குலாம்தீன். அவள் முன் குழைந்து குழைந்து பேசுகிறான். மறுநாள் வருவதாகச் சொல்லி விடை பெறுகிறான். வண்டிக்குத் திரும்பிய பிறகு அப்பெண் விவாகரத்து செய்யப்பட்ட தன் முன்னாள் மனைவி என்று சொல்கிறான். வாடிக்கைக்காரர்களுக்கு அதிர்ச்சி. அவர்கள் அதிர்ச்சி விலகும் வண்ணம் நடந்த கதையைச் சொல்கிறான் வண்டிக்காரன்.

இளைஞனாக இருந்த குலாம்தீன் பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாடிக்கை வண்டிக்காரனாக அமர்த்தப்படுகிறான். அப்பெண்ணுக்கும் அவனுக்கும் நாளடைவில் காதல் அரும்பி விடுகிறது. இருவரும் போதிய நகை பணத்தோ ஊரை விட்டுச் சென்று விகிறார்கள். எங்கோ சென்று வாழ்கிறார்கள். பணம் கரையக் கரையச் சிரமங்கள் அதிகரிக்கின்றன. அவனுக்கு எங்கும் ஒழுங்காக வேலை கிடைக்கவில்லை. ஊருக்கே திரும்புகிறார்கள். அவளைப் பெற்றவர்கள் அவளை மன்னிக்கத் தயாராக இல்லை. மீண்டும் பழைய வண்டிக்காரனாகிறான் இளைஞன்.

குடும்பம் நல்லவிதமாக நடக்கிறது. குழந்தை பிறக்கிறது. ஒருநாள் ஆயிஷா யாரோடோ நின்று பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் குலாம்தீனிடம் சொல்கிறான் ஒருவன். அவன் மனத்தில் சந்தேகத்தீ பற்றிக் கொள்கிறது. அதற்கப்புறம் அத்தீ அவனைச் சதா காலமும் பொசுக்கிக் கொண்டே இருக்கிறது. தற்செயலாகத் தனக்குத் தெரிந்த யாரோ ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்க நேர்ந்ததையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து மணவிலக்கு செய்து விடுகிறான்.

கதையைக் கேட்ட வாடிக்கைக் காரருக்கு அதிர்ச்சி. விலக்கு கொடுத்து அனுப்பியவளிடம் இப்போது மட்டும் ஏன் நின்று பேசி விட்டு வருகிறாய் என்று கேட்கிறார். அதற்கு அவன் அவள் இப்போது வெறும் அழகிமட்டுமே, அழகான பெண்ணுடன் நின்று பேச யாருக்குத்தான் ஆசையாக இருக்காது என்று சொல்கிறான். அவனது மதிப்பீடு அவரைக் கலக்குகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று இந்தப் பெண்களே இப்படித்5தான் ஐயா, காலில் போட்டுக் கொள்ளும் செருப்புப் போல, முதல்தரம் போடும் போதே சரியாக இருந்தால் நல்ல விஷயம். நன்றாக வாய்க்கவில்லை என்றால் ஆயிரம் தரம் போட்டுப் பார்த்தாலும் பொருந்துவதில்லை. துாக்கி எறிய வேண்டியதுதான் என்றும் சொல்கிறான்.

மறுதரப்பு என்பது என்ன என்று அறிய சற்றும் ஆவலைக் காட்டாத ஒரு ச்முகம் எல்லாவற்றைப்பற்றியும் மூர்க்கமான முன்முடிவுகளையே வைத்திருக்கும். அன்போ கரிசனமோ துளியும் அற்றிருக்கும். எல்லாவற்றைப் பற்றியும் துடுக்கான அபிப்பிராயம் வைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் காரணங்களையும் வைத்திருக்கும். ஆனால் இதே காரணங்களால் தானே குற்றவாளியாக நேர இருக்கும் சந்தர்ப்பங்களில் எதையாவது சொல்லிச் சமாளித்துத் தப்பித்து விடவே தருணத்தைப் பார்க்கும். இச்ச்முகத்தின் பெண்களைப் பற்றிய முன்முடிவும் இதே வகையைச் சேர்ந்ததுதான். பெண் அழகாக இருக்க வேண்டும். மனைவியான பிறகு தன்னோடு மட்டுமே பேச வேண்டும், பிறரிடம் பேசக் கூடாது என்று எதிர்பார்க்கிற மனம் பிறரிடம் தானும் பேசக்கூடாது என்று முடிவெடுப்பதில்லை. மாறாக, அப்படி கிட்டுகிற வாய்ப்புக்காக அங்காந்து கிடக்கிறது. காலுக்குப் பொருந்தும் செருப்பு , பொருந்தாத செருப்பு என்று பெண்களை வகைப்பத்துகிற ச்முகம் அதே உதாரணங்களால் ஆண்களை வகைப்படுத்திப் பார்ப்பதில்லை.

இக்கதையில் இது ஒரு அங்கதமாக வெளிப்படுகிறது. ஆயிஷாவுக்கு முற்றிலும் பொருந்தாதவன் வண்டிக்காரன். ஆனாலும் ஆசையின் காரணமாக இருவரும் ஊரைவிட்டே ஓடிச் சென்று இணைகிறார்கள். ஆயிஷாவின் நகையும் பணமும் இருந்த வரைதான் வெளியூர் வாழ்வு. இல்லாமலானதும் சொந்த ஊருக்கே வண்டி ஓட்டிப் பிழைக்கத் திரும்புகிறான். பொருந்தாத ஒருவன், பொருத்தமில்லாத வகையில் வாழ்க்கையைத் தொடங்கி விட்டு, பொருத்தமற்ற முறையில் நடந்து விவேகமின்றி மணவிலக்குச் செய்கிற ஒருவன் பெண்களின் பொருத்தப்பாட்டைப் பேச முன்வரும் போது, அது தன் பொருத்தமின்மையைத் தானே சொல்லிக் கொள்வதாக அமைகிறது.

பொருத்தத்தைப் பற்றிக் கொக்கரிக்கிறவர்களின் பிடியில் அகப்பட்டு வீடு, பெண், நாடு எல்லாமே பொருத்தமற்ற வகையில் சிதைந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய புரிந்து கொள்ள முடியாத முரண். இந்த முரண்புள்ளியில் என் கவனம் குவிய ஏதோ ஒரு வகையில் துாண்டுதலாக இருந்ததாலேயே இக்கதை நெடுநட்களாக மனத்தில் பதிந்து கிடக்கிறது.

*

குஜராத் மொழியின் சிறுகதையாசிரியர்களுள் முக்கியமானவர் குலாப்தாஸ் ப்ரோக்கர். 1969 ஆம் ஆண்டில் கலைமகள் காரியாலயம் ஏகுஜராத்திச் சிறுகதைகள்ஏ என்னும் தலைப்பில் 15 பிரபல எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டது. மொழிபெயர்த்தவர் டி.கே.ஜயராமன். ‘வண்டிக்காரன் ‘ என்னும் கதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்