புன்னகையை மறந்தவன்

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சத்தி சக்திதாசன்


கிழிந்த மேகங்களாயின
அவன் நினைவுகள்
மறைந்த நிலவாயிற்று
அவன் மகிழ்ச்சி

நான் பார்த்தபோது அவன்
சிரிக்கத்தான் செய்தான்
அந்தச் சிரிப்பை அப்போது
அலங்கரித்தது ஓர்
வெறுமைதான்

இளம் உள்ளத்திலே ஏதோ
இல்லாதது போல

கவலைக்கு காரணம்
அந்த நெஞ்சில்
நிச்சயமாய் நிதர்சனமாய்
நீந்திக் கொண்டு
தானிருக்கிறது

அன்று அவனுடன் இருந்த
சொந்தம் ஒர் நொடியில்
வெகுதூரம் தள்ளி
எப்படி நடந்தது ?

சோகத்தை நெஞ்சில் புதைத்து
சொந்தம் கொடுத்த
சோதனையைத் தங்கியபடி
பாவம் அவன்
ஒரு வாலிபன் தான்

விளக்கமில்லா விடயங்களை
விளங்கிக் கொள்ள
விலையில்லா அனுபவம்
விளையவில்லை இன்னும்

அவன் ஒரு வாலிபன் தான்
அடக்கிக் கொண்டது
அணையாத சோகம் தான்

அமைதியான நதியாக
அழாகாக ஓடியது
அவன் வாழ்க்கை நதி

எங்கிருந்து வந்தது
எமகாதக மழை ?

ஆற்றுவெள்ளம் கரையுடைத்தது
ஆனந்தம் தடம் புரண்டது
ஆடிப்போனான் ஆயினும்
அழுத்திக் கொண்டான் துயரத்தை

புன்னகையை மறந்தவன்
புரிவது
புதிதான ஓர் சிரிப்பு

காலம் மாறும் என்றொரு
கனவு
துயரம் விலகும் என்றொரு
துணிவு
பிரிந்த சொந்தம் கூடுமென்று
ஆறுதல்

புன்னகையை மறந்தவன்
பூமியில்
புதுவாழ்வு நோக்கி
புரிவதும் தவம் தான்

000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation