புத்தர் ஏவிய தூதுப் புறாக்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அங்கிங் கெனாதபடி எங்கும்
குப்பெனப்
பொங்கி எழுந்தது புகை மண்டலம்!
கருமுகில் பரிதியைக் குடையால் மறைத்து
இருட்டடிப்பு ஆனது!
பரம்பரையாக
அரக்கர் மடியில் பதுங்கிய
பிளாஸ்டிக் வெடிகள் பல்லிளித்து
நடுப்பகலில்
இடுப்பணியைப் பிளந்து இடிநகை புரிந்தன!
பாரெங்கும் பட்பட்டென
கார் வெடிகள், ரயில் வெடிகள், விமான வெடிகள்
கண்ணிமைப் பொழுதில்
எரிமலையாய்க் குமுறி வெடித்தன!
சிதறிய உடல்கள்,
சின்னா பின்னமாகி துண்டித்துப் போய்
செந்நீர் வெள்ளம்
மடை திறந்தோடி
புத்தரின் பாத மலர்களைக் கழுவின!

மூச்சுவிட முடியாமல் முக்கித் திணறிய
புத்தரின்
கண்கள் பொங்கின! விழிகள் மங்கின!
கங்கை நீரைச் சிந்திச் சிந்தி
கரை புரண்டன!
புண்பட்டு எரியும் நெஞ்சைப் பிளந்து
கூடுகளில் தூங்கும்
வெண்பட்டுப் புறாக்களை
தூதாய்
விண்வெளி நோக்கிப் பறக்க விட்டார்!
மனித இனத்துக்கு
அமைதி அறிக்கையை
எட்டுத் திக்கிலும் ஏந்திக் கொண்டு
பட்டுப் புறாக்கள்
நூற்றுக் கணக்கில் மல்லிகை மலர்போல்
காற்றில் பறந்தன!

விண்சிமிழில் பல்லாயிரம் மைல் பறந்து
பண்பாக இறங்கி
கரிய நிலவில் கால் வைத்து, பொங்கிவரும்
வெண்ணிலவைத் தேடினார்!
அண்டவெளியில் மேலும் பயின்று
அடுத்து
நூதன வாகனத்தின் மீதமர்ந்து
செவ்வாயை முத்தமிடச்
செல்கிறார்! அங்கே
இல்லாத
தண்ணீரைத் தேடிப் போகிறார்!
ஆறறிவு மாந்தரின் அடங்காப் பசிக்குச்
சோறு பரிமாறும் அறிவியல்
முன்னேற்றம் ஒருபுறம்!
மதத்தின் அழுக்குப் புழுதியில் புரண்டு
மதம் பிடித்தோடும்
மனக்குரங் கானது
பிளாஸ்டிக் வெடித்தீயில் குளிப்பாட்டி
மனிதரைக் கரியாக்கும்!
புனித உடலைத் துண்டுகளாய்ப் பிளக்கும்!
இவ்விதம்
கற்காலப் பரம்பரைக்
குரங்குகளை உருவாக்கும்
கலியுக
அரங்கேற்றம் மறுபுறம்!

நேரு பிறந்த காஷ்மீர் பூங்காவில்
விடுதலை மூர்க்கர் தொடுத்த வெடிகள்
வானைப் பிளந்தன!
மோனப் புறாவின்
வாலைப் பற்றின தீப்பொறி!
நாகரீகக் குடியாட்சி தலை விரித்தாடும்
நவீன பாரதத்தில்
மனிதர் இனத்தை மனிதர் வேட்டையாடும்
அனுமார் படையின்
புனிதத்
திருவிளையாடல்கள்!
அயோத்திய புரியில்
இராம பிரானுக்குப் புதுக்கோயில் கட்ட
இராப் பகலாக பஜனை பாடி
ரயிலில் சென்ற ராம பக்தர்களை
உயிருடன் எரித்தனர்
பாப்ரி பக்தர்கள்!
காந்தி பிறந்த கத்தியவார் களத்தில்
பாப்ரி மசூதி பக்தர்களை
பலி வாங்கி
உயிருடன் எரித்து
நரபலி செய்தனர் இராமரின் சீடர்கள்!
நெருப்பின் பரிதி
செந்நிற பிம்பமாய்
செவ்வாய்க் கோளில் பட்டொளி வீசும்!

புத்தரின் திலக பூமியான
இலங்கா புரியில்
ஆகாவென்று எழுந்தது பார்
ஈழப் புரட்சி!
இருபது ஆண்டுகள் இனப்போர் வெடித்து,
சல்லடைக் கண்களாய்ப் போன
இல்லச் சுவர்கள்
என்றும் கதை சொல்லும்!
விடியாத முடிவாய்
முடியாத புதிராய்ப் போன
விடுதலைப் போரில்
உடலையும் உயிரையும் ஒருங்கே அளித்த
உத்தமர் ஆயிரம்! ஆயிரம்!
உரிமைக்குப் பலியான
கணவரை இழந்த கண்ணகி மார்கள்
ஆயிரம்! ஆயிரம்!
வாயால் கதறும் வேதனைக் குரல்
தீயாய்ச் சுட்டது நெஞ்சை!
திருமா பத்தினி ஒரு கண்ணகிக்கு
சிலப்பதிகாரச் சிற்பக் காவியம்
உருவாக்கிய
அருங்கவி இளங்கோ போல் இயற்ற
இலங்கா புரியில்
புலவர் கோடி
பூத்தெழ வேண்டும்!

அரக்கர் வம்ச
பரம்பரையான
அல்கெய்டா வர்க்கம் பள்ளி கொள்ளும்
தூயவர் தேயம் பாகிஸ்தான்! அந்த
நாகப் புற்றுக்கு அருகே
நகர்ந்தது, வெண்புறா!
தீவினைத் தேசங்களுக்கு இரகசியமாய்
அணு வெடி
ஆயுதங்களை ஆக்கி
பணம் கறக்கும் வணிகக் கூட்டம்!
பாலூற்றிப் புற்றுகளில்
பாம்புகளை வளர்த்து
படமெடுக்கப் பயிற்சி அளித்து
காஷ்மீரில்
நடமிட விடும் நட்பு நாடு இது!
கார் வெடியும், போர் வெடியும்
காலில் சுற்றி
கழுகுகளைப் பறக்க விட்டு,
ஆயிரம் ஆண்டுப் போர் நடத்தும்
ஆங்காரப் படை
அனுதினமும்
காஷ்மீரை
யுத்த களமாக்கும்
புனிதப்போர் பூமி இது!

துப்பாக்கி வேலியிட்டு
அப்பாவி மாந்தர் வாயடைத்து
தப்பாக ஆண்டு வந்த
தாலிபான்
போலிப் பூமியில் கால்வைக்கும் வெண்புறா!
பல்லாண்டு காலமாய்
வல்லரசு வேட்டு வெடிகளால்
தொல்லைப்பட்டு
சல்லடை ஜன்னல்கள் இட்ட,
கூரையற்ற குடிசை கோடி! கோடி!!
தாடியை உருவிடும்
தாலிபான்
கூலிப்படையின் ஏவுகணை
ஓங்கி உயர்ந்து
ஒளியூட்டும்
புத்தச் சிலைமேல் வெடித்தது!
போதி சத்துவன்
பொன்முகம் தெறித்தது!
புன்னகை மறைந்தது!
அணைந்தது, ஆசிய ஜோதி!

பாஸ்னியாவில் காணாது போன ஆயிரம், ஆயிரம்
மண்டை ஓடுகள்,
கை, கால் எலும்புக் கூடுகள்
தோண்டும் போது
புதைபொருள் களஞ்சியமாய் மண்ணுக்குள்ளே
கண்டெடுக்கப் பட்டன!
புத்தர் பின்னே தோன்றிய
உத்தமர் ஏசுவின்
சுத்த பாலஸ்தீன் களத்தை
ரத்த களமாக்கின யூதரின் கணைகள்!
ரத்த களமான இஸ்ரேலை
செத்த களமாக்கின பிளாஸ்டிக் வெடிகள்!
நித்தம் நித்தம் மாந்தர்
சித்திரவதை யாகி
செத்துச் செத்துப் புதைபடும்
பித்த களம் ஈராக்கை
யுத்த களமாக்கிப்
பற்றிக் கொண்டது வெள்ளை மாளிகை!

விமான வெடிகள்
வேகமாய்ப் பாய்ந்து அடித்தன!
நிமிர்ந்து ஓங்கிய இரட்டைக் கோபுரங்கள்
நியூ யார்க்கில் தலை குனிந்து
மூவாயிரம் உயிர்களை மூடி
தரை மட்ட மாயின!
மாட்டிரிட் நகர் தண்டவாளத்தில்
துடித்தன ரயில்கள்!
வெடித்தன உடல்கள்! வெந்தன இதயம்!
படிக் கணக்கில்
குருதி வெள்ளத்தை, வாரிக்
குடித்தன ரயில் வெடிகள்!
விழியில் ஒளிமங்கி
அல்லாவை வழிபடும், ஆயுதம்
இல்லாத
வீல்சேர் இஸ்லாம் குருவைக் குறியாக்கி
கட்டளைக் கணை ஏவி
பிட்டுத் தூளாக்கினர் யூதப் பிடாரிகள்!

புனிதர் காந்தி, புத்தர், ஏசு
கனிவைக் காட்டும் உலகிலே
மனிதர் தலையை மனிதர் அறுக்கும்
மரபு உதித்ததடா!
மதப் போரும், இனப் போரும்
நிதப் போராய்
நிரந்தர மானதடா!
இராமர், துருக்கர், சீக்கியர், கிறித்துவர், யூதர்,
கருப்பர், வெள்ளையர்,
கீழ் மக்கள், மேல் மக்கள் என்னும்
குழுப் போர்வைக்குள் இன்னும்
கொலை ஆயுதங்கள் கோடி
கூர்மையாய்
ஒளிந்திருக்குமடா!

புத்தர் அனுப்பிய தூதுப் புறாக்கள்
இறக்கையில் தீப்பற்றி
பித்துப் பிடித்து
மீண்டும்
புத்தரை அடைந்தன!
எடுப்பாரற்று
செய்திச் சுருள் சுற்றிக் கிடந்தது
ஒரு காலில்!
பிளாஸ்டிக் வெடி
மாட்டி யிருந்தது மறு காலில்!
சித்திரவதை வித்தையில் மனிதரை மனிதர்
நித்தமும் கொன்று
யுத்தக் கருவிகள்
புத்துயிர் பெற்றன! புதுப்பிக்கப் பட்டன!
அலை அலையாய்ப் போகும்
தற்கொலை வெடியும்
படை படையாய் அடிக்கும்
பிற்கொலைக் கணையும்
நிற்கா தென்றும்
கற்கால உலகில்!
தலை சுற்றி
நிலை தடுமாறி, நிற்க முடியாது,
சித்தம் வெந்து,
பொத்தென சாய்ந்தார் போதி சத்துவர்!

****
jayabar@bmts.com

Series Navigation