புதிய வடிவத்தை¢ தேடி (தழும்பு – கன்னடச் சிறுகதைத் தொகுதியின் அறிமுகம்)

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

பாவண்ணன்


மொகள்ளி கணேஷின் சிறுகதைகளைப்பற்றிய வாசக அனுபவத்தை முன்வைப்பதற்கு முன்னர் கன்னட தலித் சிறுகதைகளின் பொதுவடிவத்தைப்பற்றிச் சில விஷயங்களை முன்வைக்க வேண்டியிருக்கிறது. சம்பிரதாயமான எதார்த்தச் சிறுகதை முன்னோடிகளின் வடிவத்தையே தம் வடிவமாக வரித்துக்கொள்வதும் அதன் அடிப்படையில் தம் கூறுமுறையை உருவாக்கிக்கொள்வதும் ஒரு புதிய எழுத்தாளனுக்கு எளிதான காரியமென்றாலும் அம்முயற்சியில் கன்னடத் தலித் படைப்பாளிகள் இறங்கவில்லை. இதனால் மாஸ்தி, ஆனந்த, அ.ந.கிருஷ்ணராவ் போன்றவர்களுடைய எழுத்துப்போக்குகளின் பாதிப்புகள் இவர்களிடம் நிகழவில்லை. இன்னொரு கோணத்தில் கன்னட மொழியில் நவீனத்துவம் மலர்ந்ததன் தொடர்ச்சியாகவே தலித்துகள் படைப்பாக்கத்தில் இயங்கத் தொடங்கினார்கள் என்றாலும் நவீனத்துவப் படைப்புகளின் முன்மாதிரி வடிவங்களையும் தலித் படைப்பாளிகள் வரித்துக்கொள்ளவில்லை. நவீனத்துவத்தின் சிறுகதை வடிவம் கறாரான கட்டமைப்பைக் கொண்டது. பிசிறில்லாதது. எய்யப்பட்ட அம்பைப்போல வேகமும் இலக்கும் கொண்டது. யு.ஆர். அனந்த்முர்த்தி, யஷ்வந்த சித்தாள், சாந்திநாத் தேசாய் போன்ற உதாரணப் படைப்பாளிகள் முன்வரிசையில் இருந்தபோதும் அவர்களுடைய படைப்பு வடிவங்களை உள்வாங்கித் தேறும் முயற்சிகளிலும் தலித் படைப்பாளிகள் இறங்கவில்லை. இவ்வாறே முற்போக்குப் படைப்புகளின் பாதிப்பும் இவர்களுடைய படைப்புகளில் நிகழவில்லை. மாறாக, தொடக்கம் முதலாகவே தனித்தன்மை மிகுந்த ஒரு வடிவத்தைக் கண்டடையும் முயற்சியில் இறங்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது. பல முனைகளிலிருந்து விஸ்தாராமாக மீண்டும்மீண்டும் கதையைச் சொல்லிவந்து மையத்தோடு இணைகிற ஒருவித நாட்டார் மரபின் நீட்சியாகத் தன் வடிவத்தை அடைய முயற்சி செய்யும் வடிவமாக இவர்களுடைய கதைவடிவத்தைச் சொல்லலாம்.

தேவனுாரு மகாதேவரின் எழுத்து முயற்சிகள் இவ்வடிவத்ததை ஒட்டியே அமைந்தன. இவருடைய ‘பசித்தவர்கள் ‘ குறுநாவலையும் சிலசிறுகதைகளையும் நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். (பசித்தவர்கள் – நேஷனல் புக் டிரஸ்டு வெளியீடு,1999) இவருடைய மற்றொரு நாவலான ‘குஸூமபாலை ‘ நஞ்சுண்டன் மொழிபெயர்ப்பில் ‘தலித் ‘ சிற்றிதழில் தொடராக தற்சமயம் வெளிவந்துகொண்டிருக்கிறது. தலித் அல்லாதவரென்றாலும் தலித் படைப்புகளுக்கு அருகே வைத்துப் பார்க்கத் தக்கவரான லங்கேஷின் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நாட்டார் மரபின் நீட்சியான குணமே படிந்திருப்பதைக் காணலாம். இவருடைய சிறுகதைகளை ‘கல் கரையும் நேரம் ‘ என்கிற தலைப்பில் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். ( சாகித்திய அகாதெமி வெளியீடு, 1998) இதன் நீட்சியே மொகள்ளி கணேஷின் கதைகளின் படைப்பாக்கத்திலும் காணப்படுகிறது. இவருடைய ‘பம்பரம் ‘ என்னும் சிறுகதை என்னுடைய மொழிபெயர்ப்பில் ‘புதைந்த காற்று ‘ என்ற தலைப்பில் வெளிவந்த கன்னட தலித் எழுத்துகள் அறிமுக நுாலில் இடம்பெற்றது. (விடியல் வெளியீடு, 1996, 2002). இம்மொழிபெயர்ப்பை வாசித்த நவீனத்துவத்தின் நிழல் படிந்த தமிழ்ச்சிறுகதையாசிரியர்கள் பலரும் ஒருவித அதிருப்தியையே தெரியப்படுத்தினார்கள். நவீனத்துவம் உருவாக்கிக் கொடுத்த கறாரான பிசிறில்லாத வடிவப் பார்வையை அவர்கள் அக்கதைகளின்மீதும் போட்டுப் பார்த்து அக்கதைகள் தம்மை வசீகரிக்கவில்லை என்று புறக்கணித்தனர்.

கவிதைத்துறையில் என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் வெளிவந்ததும் அதைத் தமிழ்க் கலாச்சாரத்தில் மறைந்திருக்கும் ஆதி மாந்தரிக உச்சாடனக் குரலாக உணர்ந்து, அதை நம் பரப்புக்குள் உள்ளடக்கிக்கொள்ளத் தெரிந்த மனங்களுக்கு தலித் கன்னடக்கதைகளை வாசித்து வகைப்படுத்தி உள்வாங்கிக்கொள்வதில் சிரமிருந்தது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் பல நாள்களாக யோசித்ததுண்டு. தமிழில் எழுதத் தொடங்கிய தலித் படைப்பாளிகள் எந்தத் தயக்கமுமின்றி நவீனத்துவத்தின் வடிவ ஒழுங்குடன் இயங்கத் தலைப்பட்டதால் மற்ற மொழிகளின் தலித் படைப்புகளிலும் இதே வகையிலான வடிவ ஒழுங்கு எதிர்பார்க்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். வடிவம் ஈர்க்காததாலேயே இப்படைப்புகளுக்கு வாசக தளம் உருவாகவில்லை என்றும் புரிந்துகொண்டேன். கன்னட தலித் படைப்பாளிகளுக்கும் தமிழ் தலித் படைப்பாளிகளுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இது. நாட்டார் கதைகளின் சொல்முறையிலிருந்து கன்னட தலித் கதைகள் திரண்டு வந்த சூழலில், அதேவிதமான சொல்முறை பின்நவீன எழுத்துமுறையாக தமிழில் திரண்டெழத் தொடங்கியுள்ளது. ( ரமேஷ் பிரேமின் சிறுகதைகள் பரதேசி, மகாமுனி, வியாசகுலம் ) தனித்த சிறுகதையாக மொகள்ளி கணேஷின் ‘பம்பரம் ‘ வெளிவந்தபோது உருவான புறக்கணிப்பு, அவருடைய கதைகளை மட்டுமே கொண்ட தனித்த தொகுப்பாக ‘தழும்பு ‘ வெளிவந்திருக்கும் சூழலில் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்கிற எண்ணமே இந்த நீண்ட குறிப்பை எழுதத் துாண்டியது.

மொகள்ளி கணேஷ் கன்னடத்தில் மூன்று சிறுகதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சிறந்த கதைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தி.சு.சதாசிவம் இத்தொகுதியை உருவாக்கியிருக்கிறார். இத்தொகுப்பின் முக்கியமான சிறுகதை ‘நெல்லு ‘. கதையில் ஏரியொன்று இடம்பெறுகிறது. நீர்வறண்ட ஏரிக்குள் மேல்சாதியைச் சேர்ந்த கெளடர்கள் காலம்காலமாக விவசாயம் செய்துவருகிறார்கள். சட்டமீறல் என்று தெரிந்தும் இந்த விவசாயத்தில் அனைவருமே ஈடுபடுகிறார்கள். ஒன்றிரண்டு தலித் குடும்பங்களும் அந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. நெல் அறுவடைக்குத் தயாராக இருக்கும் தருணம். ஏரிக்குள் பயிரிட்டதே சட்டப்படி குற்றம் என்று சொல்கிறார் தாசில்தார். சட்டத்தை மதிக்காதவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக நிலங்களை வசப்படுத்தி அரசே எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவிக்கிறார். நெல்லை அறுக்கச் சேரிக்காரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். கொண்டுவரப்போகும் கூலி நெல்லைச் சேமிப்பது எப்படி என்று இரவெல்லாம் பற்பல கனவுகளில் திளைக்கிற சேரிமக்களின் நடவடிக்கைகளிலிருந்து கதை தொடங்குகிறது. அறுத்து, அடித்துக் குவித்த நெல்லிலிருந்து அனைவரும் தம்மால் இயன்ற அளவு நெல்லை வாரிச்சென்று வீட்டுக்குள் பதுக்குகிறார்கள். மனம் பொறுக்காத கெளடர்கள் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து கையோடு அழைத்து வந்துவிடுகிறார்கள். தம் சட்ட மீறலை மறைப்பதற்காக தாசில்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலித் மக்களுக்கு நன்மை விளையும்படி நடவடிக்கைகளில் இறங்கியதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். அதை நம்பத் தொடங்குகிறது மேல்சாதிக்காரரான ஆட்சியரின் மனம். அதனால் தாசில்தார் மீதே நடவடிக்கைகளை எடுக்கிறார். சேரிக்காரர்கள் எடுத்துச் சென்ற நெல்லைப் பறிமுதல் செய்துவருமாறு ஆணை பிறப்பிக்கிறார். காவலர்கள் சேரிக்குள் புகுந்து வீடுகளை நாசப்படுத்தி நெல்லைப் பறிமுதல் செய்கிறார்கள். கோபத்தால் திருப்பித் தாக்கும் தோபம்மா என்னும் பெண்மணிக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று கதைகட்டுகிறார்கள். சேரிமக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கின்றன.

இக்கதையில் சட்டம் செயல்படும் விதம் முக்கியமானது. மேல்சாதிக்காரர்கள் சட்டத்தை மீறி விவசாயம் செய்கிறார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சென்ற தாசில்தாருக்குச் சாதிசார்ந்து உள்நோக்கம் இருக்கக்கூடும் என்கிற காரணத்தால் அவரே தண்டிக்கப்பட வேண்டியவராகிறார். யாராக இருந்தாலும் தாக்கப்படுவது எதிர்ப்பைக் காட்டுவது சகஜம். ஆனால் அதையே காரணமாக்கித் தோபம்மாவைத் தீவிரவாதப் பின்னணியுடையவளாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது சந்தேக மனம். மேல்சாதிக் காரர்களின் ஒரே ஒரு சின்னச் சந்தேகம் கூட தலித் மக்களின் வாழ்வை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கும் நிலை கொடுமையானது. வயலில் விளைந்துநிற்கும் நெல்லை அறுத்துக் குவியலாக்கிக் கொண்டுவந்துவிடலாம். ஆனால் மேல்சாதிக்காரர்களின் மனமென்னும் வயலில் வளர்ந்து மண்டிக்கிடக்கும் சந்தேகம் என்கிற நெல்லை அறுத்து அப்புறப்படுத்துவது எப்படி ? அதுவே கதையின் மையம். மரணம் நிகழாத வீட்டிலிருந்து எள் வாங்கிவரச் சென்றவளைப்போல சந்தேகமே இல்லாத மேல்சாதிக்காரர்கள் நடுவில்தான் தலித்துகள் நிம்மதியாக வாழ முடியுமென்றால், அது இந்தத் தேசத்தின் அவலத்தையே காட்டும். இப்படி பல வாசிப்புகளை நிகழ்த்தும் வகையில் கதைத்தளத்தை அமைத்த மொகள்ளி கணேஷ் பாராட்டுக்கு உரியவர். தொகுப்பின் மற்ற சிறந்த சிறுகதைகளாக் கறிச்சோறு, சண்டைச்சேவல், பொழப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். இந்த உச்சப்புள்ளியைத் தொடவே மற்ற கதைகள் முயன்றாலும் சற்றே சரிந்திருக்கின்றன.

தொகுப்பில் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் பற்பல தளங்களில் இயங்கும் தன்மையுள்ளதாக இருக்கின்றன. நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுப்பவையாக உள்ளன.

மொகள்ளி கணேஷ் அடைய முற்படும் சுயவடிவத்தை நோக்கிய பயணமாகவே இக்கதைகள் உள்ளன.

சிறுகதைகளுக்காக பற்பல பரிசுகளைப் பெற்றவர் இவர். இளம்படைப்பாளிகளுக்காக வழங்கப்பெறும் சம்ஸ்கிருதி விருதினைப் பெற்றவர். மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதியவர். இக்கதைகளை மொழிபெயர்த்த தி.சு.சதாசிவம் தமிழுலகம் நன்கறிந்த மொழிபெயர்ப்பாளர். அர்ஜூன் டாங்ளேயின் தலித் இலக்கியம் என்னும் அறிமுக நுாலை ஏற்கனவே மொழிபெயர்த்தவர். கன்னடத்திலிருந்து ஏராளமான படைப்புகளைத் தமிழுலகம் அறியச் செய்தவர். சம்ஸ்கார, சந்திரகிரி ஆற்றங்கரையில் ஆகியவை இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த முக்கிய நுால்கள். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். மொகள்ளி கணேஷின் சிறுகதைகளை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். அவர் தமிழ் வாசகர்களின் பாராட்டுக்குரியவர். அருந்ததி நிலையம் மிக நல்ல முறையில் இந்த நுாலைக் கொண்டுவந்திருக்கிறது. அந்நிறுவனமும் பாராட்டுக்குரியது.

(தழும்பு – தலித் சிறுகதைகள் -கன்னடத்தில்: மொகள்ளி கணேஷ், தமிழில் : தி.சு.சதாசிவம். அருந்ததி நிலையம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. விலை. ரூ100)

—-

paavannan@hotmail.com

Series Navigation