பீடம்

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

எஸ். ஷங்கரநாராயணன்(சுவாமிஜி நிசப்தமான ஓர் இரவில் ஆசிரமத்தைத் துறந்து வெளியேறினார்.)

சுவாமிஜியின் சொற்பொழிவில் சிறுபகுதி –

ஆத்துக்காரிக்குப் பிரசவம் ஆனதும், ‘நமக்கு’ கொழந்தை பொறந்திருக்குன்னு சொல்லி சந்தோஷப்படறோம். வாஸ்தவத்ல, இந்தப் பிரபஞ்சத்ல எது நம்மளோடது சொல்லுங்கோ? (புன்னகை.) நம்மளோடதுன்னு நாம நினைச்சிண்டிருக்கற இந்த ஸ்தூல சரீரம், இதுவே நம்மளோடது இல்லை. (சுவாமிஜி ஜனங்களை நாலாபக்கமும் அருட்பார்வையால் வருடுகிறார்.) அப்பதான் பொறந்திருக்கு பச்சைமண். பசிச்சா உடனே அழணும். அப்பதான் தாயாகப்பட்டவள் எடுத்து மடில வெச்சிண்டு அதுக்கு ஸ்தனபானம் குடுப்பள்னு எப்பிடி அதுக்கே தெரியறது? சுவாமியில்லியோ அதுக்கு அந்த ஞானத்தைக் குடுக்கறார்.

குழந்தையோட கண்ணை மெதுவா வருடி, அதைத் தூங்கப்பண்ணி, அதோட கனவுல பகவான் தாமரைப்பூ காட்டறார். தூக்கத்லியே அதுக்கு அப்டியொரு சிரிப்பு. திடீர்னு ‘காக்கா ஓஷ்’னு அதை மறைச்சினூட்டா? முகம் சூம்பி அது அழறது…

சுவாமி போற திக்கையே பாத்து சட்டுனு குப்புறக் கவிழ ஆரம்பிக்கறது அது. பகவான் அதை ‘வா வா’ன்னு கூப்பிட தத்தக்கா பித்தக்கானு நடை பழக ஆரம்பிக்கறது. அப்பபோயி நாம அதைப் பிடிச்சிண்டாக் கூடஅது ஆவேசமா தட்டிவிட்டுப் பிடறது.

சதா பகவானோட திளைக்கிறதுதான் இந்த சரீரம் எடுத்ததோட தாத்பர்யமே. ஐம்புலன்களையும் நமக்கு அவர் குடுத்துருக்கறதே, நாம அவரை தர்சனம் பண்ணத்தானே? நாம அவர் கிட்டத்ல போகப்போக நம்மளோட அனுபவ விஸ்தீரணத்தை அவர் ஜாஸ்தி பண்ணிண்டே போறார். அதுதானே விஸ்வரூப தர்சனம்?

குழந்தையா இருக்கச்ச அவரோட எத்தனை நெருக்கமா இருந்தோமோ, வளர வளர நாமே அதைச் சுருக்கினுட்டோம். ஐம்புலன்களையும் திசைதிருப்பி விட்டு லோகாயத லெளகிக செளகர்யங்களில் சம்பிரதாயங்களில் சுவாமியை மறந்துடறோம். சிலபேர் கல்யாணம்னு ஆனதுமே, தாயார் தோப்பனாரை மறந்துடறாளோல்யோ… அத மாதிரி!… (கூட்டத்தில் எல்லாரும் வெட்கத்துடன் சிரிக்கிறார்கள்.)

>>>
இரு தினங்களாகவே அவருள் சிறு படபடப்பு இருந்தது. ஏன் தெரியவில்லை. உடல்நலக் குறைவோ. சர்க்கரை அதிகமாகி, ஏதாவது… என நினைத்துக் கொண்டார். திடீர் திடீரென்று இதயத்துடிப்பு அதிகமாகி விட்டது. மூச்சு திணறகிறாப் போலிருந்தது. உட்கார இடமேயில்லை என மயங்கித் திகைக்கும் பேதலித்த பூச்சிபோல… என்ன ஆயிற்று எனக்கு?

பூஜை புனஸ்காரங்களில் மனம் ஸ்திப்படவில்லை. தண்ணீர் குடிக்க, தாகம் அடங்காத மாதிரி. நியம நிஷ்டைகள் குறைவுபடாமல் தன்னியல்பில் நடந்தேறின. அம்பாளுக்கு பூஜை பண்ணுகையில் கண்ணுக்குள் தகதகவென்று தங்கப்பாளமாய் ஜ்வலிக்குமே அம்பாளின் பாதம், அந்த தர்சனம், அந்தப் பரவசச் சிலிர்ப்பு, அந்தத் திகட்டல் சித்திக்கவில்லை… என்பதே ஏமாற்றமாய் இருந்தது. நழுவ விட்டாப்போல…

உள்ளுக்குள் சுடரின் சிறு தவிப்பு. தலைதூக்கிய பாம்பு நடனமாடுகிறாப் போல.

மூத்த திருவடி அவரும் கவனிக்கவே செய்தார். இளையவர் உள்ளுக்குள் உழல்கிறார், என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப சூட்சுமமானவர் அவர். கவலையாய் இருந்தது அவருக்கு. என்றாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இளையவர் தானாகவே சொல்வார், என்று எதிர்பார்த்தார். இளைய திருவடியிடம் எப்போதுமே அவருக்கு தனிப்ரீதி உண்டு. தனக்குப் பின், என்று இளையவருக்கு பட்டாபிஷேகம் செய்வித்த அன்றைக்கு எவ்வளவு மனநிறைவாய் உணர்ந்தார் பெரியவர். கிரகஸ்தாஸ்ரமத்தில் பிள்ளையைக் கரையேற்றும் போது தகப்பனார் எய்தும் நிறைவு அது.

>>>
மனக் குறுகுறுப்பை சுவாமிஜி கடிவாளம் போட முயன்றார். வேதபாராயண வகுப்புகளை அவர் மேற்பார்வையிடச் செல்வதுண்டு. பக்தகோடிகளுக்கு தர்சனம் தருவதுண்டு. மதியநேர சிறு சிரமபரிகாரத்துக்குப் பின், பல சிரேஷ்டர்கள், சிஷ்யர்கள் எல்லாரும் அவரிடம் பல கேள்விகள் கேட்டு, சந்தேக நிவர்த்தி பெற்றுக் கொள்வதுண்டு. சிலசமயம் பிரபல வித்வான்களின் சாஸ்திரிய சங்கீதக் கச்சேரிகள் நடக்கும். சுவாமிகளின் வியாக்கியான உரையும் இருக்கும்… எல்லா நித்யப்படி நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, சுவாமிஜி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தியானம் செய்ய அமர்ந்தார்.

தனிமை. அதன் சுருதியில் மனம் லயித்துதான், தியான அனுபவங்களில் திளைத்துத்தான் அவர் இந்தப் பீடத்துக்கு வந்தது. அதற்கான அவரது அதிகாரமே அதுதான். தனித்தன்மை. தன்னை வருத்திக் கொண்டு, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, தீயில் வாட்ட வாட்ட புடம் போடப்படும் தங்கம் போல, உண்டி சுருக்கி உணர்வு சுருக்கி தீட்சண்யத்தை அதிகப்படுத்திக் கொள்வதால் கிடைக்கிற அங்கீகாரம்… ஆனால் அந்த அங்கீகாரம்தான், அந்தத் தனிமையையே தக்கவைத்துக் கொள்ள சிரமப்பட வைக்கிறது.

எதிர்த்திசையில் இருந்து சமூகம் எப்படியோ எனக்கு முன்னால் வந்துநின்று வழிமறித்து என்னை இணைத்துக் கொள்கிறது. அதன் விளைவாய் நான் என் திசைகளைத் தொலைத்துவிடக் கூடாது.

வாஸ்தவத்தில், முற்றும் துறத்தல் இயலுமா? வள்ளுவரே பற்று விடற்கு, பற்றற்றான் பற்றைனைப் ‘பற்றுக!’ என்கிறார். துறத்தல் எக் கட்டத்திலும் இல்லை. உயிர் துறத்தல் கூட. அதுகூட துறத்தல் ஆகாது…

>>>
சுவாமிஜியிடம் ஒரு சிரேஷ்டர் கேட்ட கேள்வியும், அதற்கு சுவாமிஜி அளித்த பதிலும் –

– சந்தியாவந்தனத்தைப் பெண்கள் செய்யலாமா?

– செய்யலாம். ஆனால் ஆண்கள் செய்யும் சந்தியாவந்தனத்துக்கும், ஸ்திரீகள் செய்வதற்கும் நிறைய வித்யாம் இருக்கிறது. புருஷாளுக்கு சூர்யாக்கியம், காயத்ரி மந்திரம், திக்தேவதைகளின் நமஸ்காரம் இவைகள் சந்தியாவந்தனம். அதேபோல ஸ்திரீகளுக்கு சூர்யாக்கியம், கிருஷ்ண மந்திரம். பிறகு அச்சுதா நம: கோவிந்தாய நம: என்னும் நாமத்ரய மந்திரம் இவைகள்தான் சந்தியாவந்தனம். காயத்ரி மந்திரத்தைப் பெண்கள் சொல்ல அதிகாரம் கிடையாது.

>>>
ஆகாகா… திரும்பவும் உள்ளே சுடர் குதிக்க ஆரம்பித்தது. என் சூட்சும ஞானத்துக்கும், உணர்வுபூர்வமான இந்த தேகத்துக்கும் இடையே மனம் தள்ளாட்டம் காணுகிறது. என் சரீரம் மூலமாய் என் ஞானம் எதையோ எனக்கு முன்னறிவிக்கிறது. ஏதோ சொல்ல வருகிறது. அது என்ன?

மனசை அலம்பிவிட்டு, கோலம் போட்டு, விளக்கு வைத்து, அம்பாளிள் திருவாக்குக்காகக் காத்திருக்கிறேன்.

தானாடா விட்டாலும் சதையாடும், என்பார்கள். வெளியே எனக்குள் சிறு பதட்டம். இது எதன் சமிக்ஞை?

சுவாமிஜி தனது புறவுலக அனுபவங்களை மூடிக்கொண்டார். வெளியுலகக் கதவுகளைச் சார்த்திப் பூட்டிக்கொண்டு, புலன்களை ஒடுக்கி, துல்லியமாக உள் ஒலிகளுக்கு என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, ஒருமுகப்படுத்திக் கொண்டு காத்திருந்தார். அம்பாள் விடைதருவாள். குறிப்பு தருவாள். சிறு கடைக்கண் சிமிட்டல். அந்தத் தருணத்தைப் பிடித்துக்கொள்ள அவர் காத்திருந்தார்.

இருந்த சலித்தெடுத்த மெளனத்தில், வெளியே ஆசிரம சிரேஷ்டர்கள் பேசும் சிற்றொலிகளை, நடையை, செய்கைகளையெல்லாம் அவரால் கிரகிக்க முடிந்தது. அவர்கள் என்றில்லை, அவரது சிறு அசைவும் மிகப்பெரும் சமூகம், அவரையே நம்பி, அவர்பின்னால் வரத் தயாருடன் காத்திருக்கும் சமூகத்தால் கவனிக்கப் படுகிறது என்று அவருக்குத் தெரியும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி. உடலின் நரம்புகளில் தேன்தடவலாய் ஓர் அமைதியை அவர் ஸ்தாபித்துக்கொள்ள முனைந்தார். நட்சத்திரங்களை வானத்தில் இருந்து அழிப்பது போல, கரும்பலகையில் இருந்து எழுத்துகளை அழிப்பது போல. அமைதி – நீராவியாய் மேலே சென்றிருந்தது. அதை மேகத்தில் சுருட்டி பசுமடியாய் கனக்கச் செய்து, மழைநீராய்த் தனக்குள் விழச்செய்து, சிலிர்ப்புடன் பனிக்கட்டியாய் கெட்டிப்படுத்திக் கொள்ள முயன்றார்.

தனியே அமர்ந்து, மனதின் மூலைகளையெல்லாம் டார்ச் வெளிச்சம் போன்று, ஞானத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ப்பார்வையால் துழாவிப் போனார். பழைய ஆவணங்களைத் தேடிப் போவது போல, அடைந்து கிடந்த பல்வேறு அறைகளை, அதன் இரகசியங்களைத் தேடி ஒவ்வொன்றாய் அவர் திறந்து பார்த்துக்கொண்டு போனார். எந்த அறையிலோ எனக்குள் ஒரு கேள்வி காத்திருக்கிறது. முதலில் கேள்வி. அது தெரிந்தால் பதில் தன்னைப்போல வந்துவிடும். கண்ணாமூச்சி போல, குழந்தையாய் ஒரு கேள்வி, எங்கோ கதவுபின்னே ஒளிந்துகொண்டு, கண்டுபிடிக்கப் படக் காத்திருக்கிறது.

சிறு வயதில் அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டபோது கேட்ட அதே குரலை, பரிதவித்தபடி வீதியெங்கும் அலைந்து திரிந்து தேடும் ஒரு தாய்ப்பசுவின் நீண்ட ஏக்கக் குரலை… ம்..மா… என்ற அவல இழுவையை அவர் காதில் கேட்டார்.

உடம்பெங்கும் விர்ரென்று உணர்ச்சி. ஆளைத் தூக்கிப் போடுகிறது.

ஒரு பிள்ளைத்தாய்ச்சி பிரசவ வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள், தரையில் தூக்கிப்போட்ட மீனைப்போல. ஈர நெஞ்சுக்காரி. பிரசவம் சிரமமாய் இருக்கிறது. வலி தாள முடியவில்லை. வெளியேவர பாடாய்ப் படுத்துகிறது சிசு. இதென்னடாது, அபூர்வமாப் பிள்ளையாண்டிருக்கேன்… அதும் திக்குமுக்காட வைக்கிறதே… வாய்விட்டு அவள் ‘ஈஸ்வர…’ என மனமுருகக் கூப்பிடுகிறாள். ‘ஈஸ்வரா, எம் பிள்ளையைக் காப்பாத்து…’ என்று மானசிகமாய்க் கைகூப்பித் தொழுகிறாள். அந்த வலியிலும் வேதனையிலும் அவளுக்குப் பிள்ளைதான் பெரிதாய் பிரதானமாய்த் தெரிகிறது, தன் வேதனையை விட.

வயிற்றுள் பிள்ளைதான் என்பதிலும் அவளுக்கு சம்சயம் இல்லை.

– ஈஸ்வர ப்ரபோ எம் பிள்ளையக் காப்பாத்து…

”அது உன் பிள்ளை இல்லை… என் பிள்ளை!”

அசரீரி காதில் கேட்கிறது.

துடித்துப்போய்க் கண்ணைத் திறந்து பார்க்கிறாள். பிரவச வலி கூட அப்போது பெரிதாய் இல்லை. அந்த அசரீரி தந்த வேதனை மார்பெங்கும் ஈட்டிகளாய்க் குத்துகிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறாள். யாரும் இல்லை. ஒரு அதட்டலுடன், ”யார் அது?” என்று கேட்கிறாள் ஆவேசமாய்.

அடாடா அடாடா, இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. அது சாட்சாத் பரமேஸ்வர மூர்த்தி அல்லவா? என்ன தேஜஸ், அந்த அறையே தகதகவென்று பொலிகிறது. அவளுக்குக் கண்ணெல்லாம் புல்லரிக்கிறது. வயிறு, உடம்பு, மனசு எல்லாம் நிறைந்து வழிகிறது.

”உன் வயிற்றுப்பிள்ளை, அது… உன் பிள்ளை இல்லை. என் பிள்ளை.”

”பிரபு, என்ன இது? இந்த லோகமே உங்களுடையது. இதில் நீங்கள்… என்னிடம்…”

”மாதாதான் முன்னறி தெய்வம். பிறகுதான் நாங்கள். லோகநியதி அப்படி. உன்னிடம் நான் உன் பிள்ளையை எனக்குத் கேட்கிறேன்…”

வயிற்றில் பிள்ளை பிறக்கப் போராடிக் கொண்டிருக்கையில் இதென்ன விளையாட்டு, என்றிருக்கிறது அவளுக்கு. வலியுடன், ”சரி, முதலில் பிள்ளை பிறக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்…” என்று கண்ணைமூடிக் கொள்கிறாள்.

”அப்புறம் வார்த்தை மாறக்கூடாது…” என்று ஈஸ்வரன் மறைந்துவிட்டார்.

>>>
மடியில் உட்காரவைத்து அமுதூட்டியபடி அம்மா சொன்ன கதைகள் எத்தனை அழகாய் இருக்கும். தவிர்க்க முடியாமல் இந்தக் கட்டம் வருகையில் எப்போதுமே அவள் உடம்பு பதறும். குழந்தை அம்மாவையே பார்த்துக் கொண்டிருக்கும்.

பின்னொரு நாளில் ஒரு நிறைந்த பொழுதில், பாடசாலை கிளம்புமுன், குழந்தை காவிரியில் அதிகாலையில் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கையில், ”சோமு, வேளை வந்துவிட்டது” என்று குரல் கேட்டது. காதோடு இவ்வளவு கிட்டத்தில் இரகசியம் போல… கூட ஜலக்கிரீடை யாடிக்கொண்டிருந்த பிற பிள்ளைகளுக்கே தெரியாமல் யார் பேசுவது, என்று திகைப்பாய் இருந்தது. விறுவிறுவென்று கரையேறி துவட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.

வீட்டு வாசலில், ஐயோ! யாரது, அம்மாவா? தலைவிரி கோலமாய், ”சோமு, இங்கிருந்து போய்விடு,” என்று வழியை மறித்துக்கொண்டு உள்ளே போகவிடாமல் பேரழுகை அழும் அவள். பார்க்கவே கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கல்லும் உருகிவிடும் அவளைப் பார்க்க. குழந்தை ”அவால்லாம் வந்தாச்சா?” என்று மட்டும் கேட்டது.

அந்தக் கேள்வியை ஈட்டியாய்ச் சுமந்து தடுமாறுகிறாள் பெற்றவள். மாரைப் பிடித்துக் கொள்கிறாள். கர்ப்பப்பையே தீப்பற்றி எரிகிறாப் போல இருக்கிறது. உள்ளிருந்து ஆவேசமாய் அக்னி கொழுந்துவிட்டு எரிவதைப் பார்க்க முடிகிறது.

குழந்தை உள்ளேபோய், அங்கே காத்திருக்கிற பெரிய திருவடியை நமஸ்கரித்து, கைகுவித்து வணங்கி, குருவே சரணம், என்கிறது.

”ஜெயதேவா…”

”குருதேவா…”

”ஜெயதேவா…”

”குருதேவா…”

பக்தகோடிகள் புடைசூழ அவர்கள் கிளம்பிப் போகிறார்கள். அம்மா வாசலில் முந்தானையால் வாய்பொத்தி கல்லால் அடித்த சிலையாய்ச் சமைந்து நிற்கிறாள். அவள் கண்பூராவும் கொதித்து தீக்கொப்புளங்கள்… திரும்பிப் பார்க்கவில்லை என்றாலும், குழந்தையின் மனம் பின்னோக்கிச் சென்று அவள் பாததூளிகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறது. கிணறு அல்ல அம்மா, நான் கடலோடு சங்கமிக்கப் போகிறேன். என்னைப் பெற்றது உன் கர்ப்ப மகிமை, உன்னை அடைந்தது என் தவப் பயன் என்றால், அம்மா நீதான் எத்தனை பெரியவள்.

கைகூப்பிக் கொண்டே, அம்மாவைப் பார்த்தபடி பின்னடி வைத்து குழந்தையின் மனம் போகிறது.

சின்ன வயசில், தீட்சை பெற்ற புதுசில், அடிக்கடி கேட்ட அந்தக் குரல், தாய்ப்பசுவின் பாச ஆவேசம் மிக்க தேடலை இப்போது மிக அருகேபோலத் திரும்பவும் இளையவர் கேட்டார்.

சுவாமிஜி அம்மாவின் திருவுருவத்தை மெல்ல வரைந்துகொண்டே வந்தார். அ… ம்… மா… அம்மாவுக்கு என்னாயிற்று? என்னக் கூப்டறாளா அவள்? அதோ படுக்கையில் அம்மா படுத்திருக்கிறாள். கண் மூடியிருக்கிறது. சர்வாங்கமும் ஒடுங்கி அடங்கி சுருட்டிப் படுத்திருக்கிறாள் அம்மா. அவள் கண்கள் நீரைப் பொழிந்தவண்ணம் இருக்கின்றன.

உள்ளே பூஜையறையில் விளக்குத்திரி படபடவென்று உதறுகிறது. பெற்றவள் கண்ணைத் திறந்து பார்க்கிறாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிகின்றன… அடாடா, சோமு, எந் தங்கமே, நீதானா அது. வா என் பக்கத்தில் வா… (அம்மா!) – இப்பதான் உன்னை நினைச்சிண்டேன். நான் கூப்பிட்டது நோக்குக் காது கேட்டதா? என் செல்லமே வந்திட்டியா நீ…

சுடரிலிருந்து இறங்கி வந்தேன் அம்மா… சுவாமிஜி அவள் கையைப் பிடித்துக் கண்ணில் ஒற்றிக் கொள்கிறார். அம்மா, அது போகும் முகூர்த்தம். போய்விட்டேன்… இது வரும் நேரம். உனக்கு இருக்கிற உரிமை யாருக்கு இருக்கிறது அம்மா? நீ பரிதவித்துக் கூப்பிட்டாய், வந்துவிட்டேன்.

– சோமு இப்போது நீ பெரிய மகான்.

– இல்லையம்மா, எப்போதும் நான் உன்னுடைய மகன்.

– மகனே, மகனே… பெற்றவள் கண்ணிலிருந்து ஆனந்தபாஷ்பம் சொரிகிறது. மகனே, நீ வரும் முகூர்த்தம், நான் போகும் முகூர்த்தமாகி விட்டதே.

>>>
ஆசிரமத்தில் சுவாமிஜிக்கு ஸ்தூல சரீரம் தூக்கிப் போடுகிறது. தன் தேகத்தின் பகுதி கழன்று போகிறாப்போல. கைகூப்பித் தொழுகிறார். பக்கத்தில் கிண்டியில் இருந்து தீர்த்தம் எடுத்துத் தரையில், அம்மா வாய்க்குள் போலச் சொரிகிறார். கண்கள் தானறியாத அயற்சியில் கண்ணீரில் தத்தளிக்கின்றன.

வெளியே தொலைபேசி ஒலிக்கிறது. அது என்ன செய்தி, அவருக்குத் தெரியும். நடையை வைத்து, போய் எடுப்பது கிருஷ்ணப்ரேமி என்று புரிகிறது. பரபரப்பாகிறார்கள். யாரோ ஒருவருடன் கிருஷ்ணப்ரேமி பேசுகிறது கேட்கிறது.

– சுவாமிஜி, நிஷ்டையில் இருக்கிறார். இப்போது எப்படித் தகவல் சொல்வது? அதுவும் ‘இந்தத்’ தகவலை?

கூட யக்ஞராமன். அவன் பேசுகிறான் – பரவாயில்லை. சுவாமிஜி ஒரு மகான். செய்தி அவரை பாதிக்கும் என நான் நம்பவில்லை. பற்றுகளைக் கடந்தவர் அவர். அவர் அழமாட்டார் என்று எனக்குத் தெரியும்…

>>>
சுவாமிஜி ஆசிரமத்தைத் துறக்க முடிவு செய்தார்.

storysankar@gmail.com
நன்றி – தினமணி கதிர் வார இதழ்

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்