பி. வி. காரந்த்

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

வெளி ரெங்கராஜன்


அண்மையில் மரணமடைந்த (செப்டம்பர் 1, 2002) கன்னட நாடகக் கலைஞர் பி.வி காரந்த் நாடக இயக்குனராகவும், நடிகராகவும், இசை வல்லுனராகவும் நவீன இந்திய நாடகத்தையும், கன்னட நியூவேவ் சினிமாவையும் வழிநடத்திச் சென்றவர் என்று கூற முடியும். கன்னட இலக்கியத்தின் நவீனப் போக்குகள் புதிய வடிவங்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் தேசிய நாடகப் பள்ளியிலிருந்து பயிற்சி பெற்று பெங்களூர் வந்த பி.வி.காரந்த் இயக்கிய பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித் ‘ நாடகம் பெரும் வெற்றி பெற்றது. அதுவே பின்னர் பி.லங்கேஷின் ‘சங்கராந்தி ‘ மற்றும் சந்திர சேகர கம்பாரின் ‘ஜோகுமாரசாமி ‘யின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

இந்த மூன்று நாடகங்களும் கன்னட நாடகம் மற்றும் திரைப்பட அணுகுமுறைகளிலும் பெரும் பாதிப்புகளை உருவாக்கியவை. அவர் இயக்கிய ஞானபீடப்பரிசு பெற்ற ‘சோமனதுடி ‘ என்ற திரைப்படம் தேசிய விருதையும், கவனத்தையும் பெற்றது. இந்திய சமூக நிலைமைகளின் யதார்த்த மற்றும் அழகியல் சித்தரிப்புக்கு இந்தப் படம் பெரும் உத்வேகமாக அமைந்தது. கன்னட சினிமா உலகின் பெரும் சக்திகளான ஜி.வி.ஐயர் மற்றும் ராஜ்குமாரை உருவாக்கிய குப்பி நாடகக் கம்பெனியில்தான் காரந்த் தம்முடைய ஆரம்பக் நாடகக் கல்வியைக் கற்றவர்.

ஒரு நாடகத்துக்கான பிரத்யேகமான நாடகம் மொழியையும் இசை பின்புலத்தையும் உருவாக்குவதில் பெரும் கவனம் செலுத்திய பி.வி.காரந்த் ஒரு நாடகத்தை உருவாக்குவதில் இயக்குனரைவிட நடிகனின் பங்கு அதிகம் என்பதை உணர்ந்தவராக நடிகனின் உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தினார். ஒரு இசைக் கலைஞராக ஜி.வி.ஐயரின் ‘வம்ச விருட்சா ‘ திரைப்படத்தில் அவர் நடிப்பு இந்தியாவின் புதிய சினிமாவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. இந்திய சினிமாவுன் சிறப்பான இயக்குனர்களான மிருணாள்சென், ஜி.வி.ஐயர், எம்.எஸ்.சத்யூ, கிரிஷ் கர்னாட். கிரிஷ் காசரவல்லி ஆகியோருடைய படங்களுக்கு இசைப்பின்னணியை உருவாக்கியவர் காரந்த்.

தம்முடைய கடைசி நாட்களில் தேசிய நாடகப்பள்ளி போன்று கர்நாடகாவில் ரங்காயன் அமைப்பை நிறுவி நடிகர்களுக்கான பயிற்சிக்களனாக அதை உருவாக்கியவர். ஒரு கலைஞனாக வட இந்தியாவிலும், போபாலிலும், கர்நாடகத்திலும் சுற்றி அலைந்த பி.வி.காரந்த் சம்பிரதாயங்களைக் கடந்த ஒரு நாடோடி வாழ்க்கையிலும், மனநிலையிலும் சஞ்சரித்தவர்.

***

rangarajan_bob@hotmail.com

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்